Published : 09 Jun 2016 09:31 AM
Last Updated : 09 Jun 2016 09:31 AM
பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் வெளியே ஒரு குக்கிராமத்தில் இருக்கும் சாதாரண குடிமகனுக்கும் உலகளாவிய அறிவின் சாளரமாக இருக்க வேண்டிய இடம் நூலகங்கள். அவற்றுக்குச் செல்ல வேண்டிய நூல்கள் என்பதைத் தாண்டி, தமிழகத்தில் பதிப்புத் துறை சுவாசத்துக்கும் முக்கியமான உறுப்பாகயிருப்பது நூலக ஆணை. ஆனால், புதிய நூல்களை வாங்கும் நடைமுறையில் அடுத்தடுத்து வந்த அரசுகள் மேற்கொண்டுவரும் குளறுபடிகள் தமிழகத்தில் பதிப்புத் துறையையே முடக்கிப்போடும் சூழலை உருவாக்கியிருக்கிறது.
நாட்டுக்கே முன்மாதிரியாக 1948-ல் பொது நூலகச் சட்டத்தை அறிமுகப்படுத்திய மாகாணம் இது. இன்றைய நிலை, திராவிடக் கட்சிகள் தொடர்ந்து நூலகத் துறையில் அரசியலைப் புகுத்தியதன் விளைவாக ஏற்பட்டது என்கிறார் மூத்த கல்வியாளரான எஸ்.எஸ்.ராஜகோபாலன்.
“வட்டார நூலக ஆணைக் குழு என்ற ஜனநாயகபூர்வமான அமைப்பு மாவட்டம்தோறும் உருவாக்கப்பட்ட இடம் இது. ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் நூலகச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் யாவும் செதில் செதிலாகப் பெயர்க்கப்பட்டன.
ஆரம்ப காலத்தில் பொது நூலகச் சட்டத்தின் கீழ், வட்டார நூலக ஆணைக் குழு அமைப்பு, அந்தந்தப் பகுதிக்குட்பட்ட உள்ளாட்சி நிர்வாகிகள், கல்வியாளர்கள், பிரமுகர்களைக் கொண்டு தன்னதிகாரம் கொண்டதாக உருவாக்கப்பட்டது. நூல்களை வாங்கவும், உள்கட்டுமானங்களை உருவாக்குவதற்கும் அந்த உறுப்பினர்கள்தான் கூடிப்பேசி முடிவெடுக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைத் தொடர்ந்துவந்த திராவிடக் கட்சியினர், இந்த அமைப்பையே செயலிழக்கச் செய்து, அதிகாரிகளின் ராஜ்ஜியமாக நூலகத் துறையை மாற்றிவிட்டனர். மாவட்டவாரியாக நூல்கள் வாங்குவதற்கு முடிவெடுக்கப்பட்ட நிலை மாறி, புத்தகங்கள் கொள்முதல் மாநிலத் தலைநகரிலிருந்து அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுவதாக மாறியது. இப்படித்தான் நூலகத் துறை சீரழிந்தது” என்கிறார் ராஜகோபாலன்.
நூலக ஆணை மூலம் புத்தகங்களை அரசு வாங்கும் முறையில் நீண்ட காலமாகவே பிரச்சினைகள் இருந்தாலும், இப்போதைய தேக்கம் முந்தைய திமுக ஆட்சிக் காலகட்டத்திலேயே தொடங்கியதாகக் குறிப்பிட்டார் பாரதி புத்தகாலய பதிப்பாளர் நாகராஜன். “அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்ட 2008, 2009 ஆண்டுகளில் நூலக ஆணைக்குப் புத்தகங்கள் வாங்கப்படாமல் நிறுத்தப்பட்டது. நூலக வரியாக வீட்டு வரியிலிருந்து ஊராட்சி தொடங்கி மாநகராட்சி வரை வசூலிக்கப்படும் தொகை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்காகச் செலவிடப்பட்டது. ஆண்டுதோறும் ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை புத்தகக் கொள்முதலுக்காக ஒதுக்கீடுசெய்யும் நான்கரைக் கோடி ரூபாயையும் அப்போது அண்ணா நூலகத்துக்காக எடுத்துக்கொண்டார்கள்.
அடுத்து வந்த அதிமுக அரசில் கடந்த ஐந்தாண்டுகளில் மூன்று முறை நூலகத்துக்குப் புத்தகங்களைக் கொள்முதல் செய்துள்ளனர். நூலகத் துறை இயக்குநரகத்தில் இதற்காக பகிரங்கமாகவே பேரம் பேசப்பட்ட அவலம் அப்போதுதான் தொடங்கியது. விளைவாக, தகுதியற்ற புத்தகங்கள் நம் நூலகங்கள் மீதும் வாசகர்கள் மீதும் திணிக்கப்பட்டன” என்றார் நாகராஜன்.
முதல்வர் நேரடியாகத் தலையிட வேண்டிய பிரச்சினை இது என்கிறார் உயிர்மை பதிப்பாளர் மனுஷ்ய புத்திரன். “பொது நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதில் நடக்கும் ஊழல் முறைகேடுகள் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. அதை அவர் உடனடியாகத் தெரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப் பெரிய பண்பாட்டு இயக்கம் அழிந்துபோகும். ஆண்டுதோறும் பொது நூலகங்களுக்கு நூல்கள் வாங்க பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், இதில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. ராஜாராம் மோகன் ராய் அறக்கட்டளை நிதி உதவியில் வாங்கப்படும் நூல்கள் எல்லாம் யாரிடமிருந்து வாங்கப்படுகின்றன என்பதே மர்மமாக இருக்கிறது. அரசியல், அதிகார வர்க்கம் மட்டும் அல்ல; சில பதிப்பாளர்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது. சிண்டிகேட் அமைத்துக்கொண்டு அதிகாரிகளுக்கு 25% வரை லஞ்சம் கொடுத்து, ஒட்டுமொத்த பணத்தையும் சில பதிப்பாளர்கள் கபளீகரம் செய்துகொள்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட மிகச் சிறிய நூலக ஆணைகளுக்குக்கூட இன்றுவரை சில பதிப்பகங்களுக்கு முழுமையாகப் பணம் வரவில்லை. மாவட்ட நூலகங்களிடம் கேட்டால் பணம் இல்லை என்கிறார்கள். பணம் ஒதுக்காமல் எப்படி ஆணை பிறப்பிப்பார்கள்? ஒதுக்கப்பட்ட நிதி என்னவாயிற்று? பதிப்புத் தொழிலுக்கே சம்பந்தமில்லாத பல இடைத்தரகர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். பல நல்ல, சிறிய, நடுத்தரப் பதிப்பாளர்கள் அழிவின் விளிம்புக்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் மனுஷ்ய புத்திரன்.
நூலகத் துறைக்குச் செல்ல வேண்டிய நிதியைத் திசை திருப்புவது, குறைப்பது, நூலகத்துக்கு ஆண்டுதோறும் புத்தகங்களைக் கொள்முதல் செய்யாமல் இருப்பது, நூலகப் பணியாளர் காலியிடங்களை நிரப்பாமலே வைத்திருப்பது, போதிய அனுபவமும் கல்வித் தகுதியுமற்ற நபர்களை நியமிப்பது போன்ற செயல்பாடுகள் அனைத்துமே ஒரு சமூகத்தின் அறிவியக்கத்தின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதல்கள் என்கிறார் நீதிபதி சந்துரு. “ஒரு நாகரிகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பானதுதான் நூலகங்களைச் சிதைக்கும் காரியம்” என்று 2012-ல் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டவர் சந்துரு.
“நூலகத் துறை இயக்குநராக, நூலக அறிவியலில் முதுகலைப் பட்டம் படித்த, நூலகராக 15 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவரே பணியமர்த்தப்பட வேண்டும் என்ற விதியைக்கூட கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்துவந்த அரசுகள் புறக்கணிக்கின்றன. பள்ளிக்கல்வி இயக்ககத்தில் துணை இயக்குநர் நிலையில் உள்ள அதிகாரிகளின் பதவி உயர்வுக்கான இடமாக நூலகத் துறை பொறுப்பு ஆகிவிட்டது. ஒரு நூலகத்தைப் பராமரிப்பதற்கே சிறப்புத்தகுதி பெற்றிருக்க வேண்டும் என்றால், நூலகத் துறையின் இயக்குநராக இருப்பவருக்கு சிறப்புத் தகுதி வேண்டுமா, வேண்டாமா? சென்னையின் அடையாளங்களில் ஒன்றான கன்னிமாரா நூலகத்தில் காலியாக இருக்கும் நூலகர் பதவிக்குக்கூட நேரடியான நியமனம் இதுவரை நடக்கவில்லை” என்கிறார் சந்துரு.
கிராமப் பஞ்சாயத்துகளில் தொடங்கி மாநகராட்சி வரை மக்கள் கட்டும் வீட்டுவரியில் 10% நூலக வரியாக மக்களிடம் வசூலிக்கப்படுகிறது. பேரூராட்சிகளில் ரூ.20 லட்சம், நகராட்சிகளில் சுமார் ரூ.1 கோடி, மாநகராட்சிகளில் ரூ.20 கோடி என்று உள்ளாட்சி அமைப்புகள் கணிசமான அளவுக்கு நூலக வரி வசூலிக்கின்றன. சென்னை மாநகராட்சி வசூலிக்கும் நூலக வரி கிட்டத்தட்ட ரூ. 35 கோடி இருக்கும் என்கிறார்கள். இது மாநில நிதி ஒதுக்கீட்டுக்குள் இல்லாததால் கணக்கு கிடையாது. இந்தப் பணம் நூலக மேம்பாடு, நூலகப் பணியாளர்கள் காலியிடங்களை நிரப்புவது, நூலகப் பணியாளர் ஊதியம், திறன்மேம்பாடு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், முறையாக அத்தொகை நூலகத் துறைக்குப் பயன்படுத்தப்படுவதே இல்லை என்கிறார்கள்.
பொது நூலகத் துறை இயக்குநராக இருக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பனிடம் நூலக ஆணைக்காக ஒதுக்கப்படும் நிதியின் பயன்பாடு தொடர்பாகப் பேச முடிந்தது. “உள்ளாட்சி நிர்வாகங்கள் வசூலிக்கும் நூலக வரித் தொகை சிரமங்களின்றி எங்களை வந்தடைய தொடர்ந்து முயற்சிக்கிறோம். ஆண்டுதோறும் நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று விதியெல்லாம் இல்லை. நூலக ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்களும் இந்த நிதியிலிருந்தே மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பிரச்சினைகள் சீக்கிரம் தீர்க்கப்படும்”என்றார்.
நூலகங்கள் ஒரு நல்ல சமூகத்தின் ஆரோக்கியமான நுரையீரல்கள் போன்றவை என்று எழுத்தாளர் சுந்தர ராமசாமி தனது ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவலில் குறிப்பிட்டிருப்பார். தமிழக நூலகங்களின் நிலையைப் பொறுத்தவரை, அந்த நுரையீரல்கள் பழுதுபட்டுவருகின்றன. அதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டியது அரசின் முக்கியமான கடமைகளில் ஒன்று!
தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT