Published : 12 Dec 2013 09:01 AM
Last Updated : 12 Dec 2013 09:01 AM
மார்லன் பிராண்டோ மறைந்தபோது, துயரம் தாங்காமல் ஒரு வாரத்துக்கு அழுத ரசிகர் அவர். இத்தனைக்கும் பிராண்டோ நடித்த ஒரு படத்தைக்கூட அவர் பார்த்தது இல்லை. பின் எப்படி இவ்வளவு நேசம் என்று கேட்டபோது, பிராண்டோவின் பேட்டி ஒன்றைப் பார்த்து அவருக்கு ரசிகரானதாகச் சொன்னார் அவர்.
‘‘உங்கள் கதாபாத்திரத்துக்கான உடைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று நிருபர் கேட்டபோது, “அமெரிக்கச் செவ்விந்தியர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார்கள்” என்று மணிக் கணக்கில் பதில் அளித்து நிருபரை பிராண்டோ வெறுப்பேற்றிய பேட்டி அது.
ஒரு சினிமா நாயகனை மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவை இல்லை. பிராண்டோ சொன்னதுதான்.‘‘நல்லவனோ, கெட்டவனோ… மக்களுக்குக் கொண்டாடுவதற்குக் கட்டாயம் ஒரு நாயகன் தேவை. அவனைப் பற்றிப் பேசுவதும் கொண்டாடுவதும் அவர்களுக்கு முக்கியம்.’’
ஆனால், ஒரு நாயகன் கொண்டாடப்படும் பின்னணி முக்கியமானது. அது சமூகத்தின் மனநிலையையும் சேர்த்து நாம் பார்க்க உதவுகிறது.
எம்.ஜி.ஆர். - ரஜினி
சுதந்திரத்துக்குப் பின் தேனாறும் பாலாறும் ஓடும் என்று உருவாக்கப்பட்ட மாயைகள் உடைந்து, பணக்காரர்களும் பண்ணையார்களும் கொட்டம் அடித்தபோது, திரைப்படங்களில் அவர்களைத் தட்டிக்கேட்ட நாயகர்கள் உச்சத்துக்குப் போனார்கள். திரையில் அறநெறிகளுடன் ‘வாழ்ந்து காட்டிய’ நாயகர்கள் மக்கள் தலைவர்க ளாகப் பார்க்கப்பட்டார்கள். எம்.ஜி.ஆர். அப்படித்தான் ஜெயித்தார்.
ரஜினி விஷயத்தில் நடந்ததோ தலைகீழ். இந்தியா கலாச்சாரப் பாய்ச்சலுக்குள்ளான காலகட்டம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மீறல் கனவுகளை, ஆழ்மன ஆசைகளைத் திரையில் அநாயசமாக நடத்திக்காட்டினார் ரஜினி. திரையில் அவர் சாமானியராக இருந்தார். சாமானியர்களின் முரட்டுத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் பிரதிபலித்தார். சாமானியராக இருந்துகொண்டே சாமானியர்களால் கற்பனைசெய்யக்கூட முடியாத அற்புதங்களை நிகழ்த்தினார். முக்கியமாக, சொந்த விஷயத்தில் தவறுகளோடும் ஒருவன் அடுத்தவர்களுக்கு நல்லவனாகவும் நாயகனாகவும் இருக்க முடியும் என்று காட்டினார். அவருடைய ஆரம்ப கால, பாசாங்கற்ற நடவடிக்கைகள் அவருடைய பிம்பத்துக்கு மேலும் வலுசேர்த்தன.
ரஜினி கோலோச்சத் தொடங்கிய 1980-கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிசுகிசு. ரஜினிக்குப் பெண் மோகம் அதிகம் என்று பத்திரிகைகள் எழுதியபோது, ரஜினி ஒரு பேட்டியில் சொன்னார். ‘‘ஆமாம், உண்மைதான். இதைச் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நான் யாரையும் தேடிப் போகலை. வற்புறுத்தலை. கஷ்டப்படுத்தலை. யாருக்கும் நான் பிராமிஸ் பண்ணலை... யாரையும் ஏமாத்தவும் இல்லை.’’
உதை விழும்
ரஜினியின் திருமணம் இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடியது. ரஜினி, லதா இருவரின் குடும்பங்களையும் சேர்ந்த சிலர் மட்டும் பங்கேற்ற நிகழ்ச்சி அது. திருப்பதி கோயிலில் நடந்தது. அதிகாலையில் திருமணத்தை முடித்தவர், காலை 10 மணிக்கு எல்லாம் படப்பிடிப்புக்குப் போய்விட்டார்.
திருமணத்துக்கு முன் பத்திரிகையாளர்களை வீட்டுக்கு அழைத்திருந்தார் ரஜினி. முன்கூட்டியே, அவரும் லதாவும் மாலையோடு இருக்கும் படம் ஒன்றை அவர்களிடம் கொடுத்து, ‘‘குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் அழைச்சு இருக்கேன்னு சொல்லி, திருப்பதி கோயில்ல கல்யாணத்துக்கு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கியிருக்கேன். என்னோட கல்யாணம் நடந்து முடிஞ்சதும் நீங்க இந்த போட்டோவைப் பயன்படுத்திக்கங்க. தயவுசெஞ்சு திருப்பதிக்கு யாரும் வந்துடாதீங்க’’ என்றார். அப்போது, ‘‘வந்தா?’’ என்றார் ஒரு நிருபர். ‘‘உதைப்பேன்’’ என்று சொன்னார் ரஜினி.
அருகில் இருந்த இன்னொரு நிருபர் ‘‘இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீங்க... அதை நாங்க பப்ளிஷ் செஞ்சுட்டா, பின்னால அசிங்கமா போயிடும்’’ என்று சொன்னபோது, ரஜினி சொன்னார். ‘‘உங்களோட ஓப்பன் அப்ரோச் எனக்குப் பிடிச்சிருக்கு. ஐ யாம் வெரி ஸாரி. ஆனா, இப்போ ஸாரி சொல்லிட்டேன்னு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க. அங்கே கேமராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கறதைத் தவிர எனக்கு வேற வழி இல்லை.’’
மலராத முட்கள்
நம்மில் பலரையும்போல, ‘முள்ளும் மலரும்’ ரஜினிதான் ரஜினிக்கும் பிடித்தமானவர். இயக்குநர் மகேந்திரன் இன்றைக்கும் அவரை இயக்கியவர்களிலேயே அவர் பெரிதும் மதிப்பவர். ஆனால், ஒருகட்டத்தில், ஒரு மாபெரும் பொழுதுபோக்குக் கலைஞனாக அவர் உருவெடுத்தபோது, தன்னுடைய படங்கள் முழுக்கப் பொழுதுபோக்குக்கானவை என்ற முடிவை அவர் எடுத்தார். தன்னுடைய படங்கள்குறித்துப் போலியான மதிப்பீடுகள் ரஜினியிடம் இல்லை.
‘‘ஆயிரக் கணக்கானவங்க வாழ்க்கை இதுல இருக்கு. என்னை நம்பிப் பணம் போடுறவங்களுக்கு, எனக்குப் பணம் கொடுக்குறவங்களுக்கு, திரும்ப நான் பணம் சம்பாதிச்சுக் கொடுக்கணும். அவங்க நடிக்கவைக்கிறாங்க… நான் நடிக்கிறேன். அவ்ளோதான். இதிலே எந்தக் குழப்பமும் இல்லை’’ என்றார்.
மாபெரும் சுதந்திரம்
ஒரு பேட்டியில் மோகன்லாலிடம் கேட்டார்கள்: ‘‘ரஜினிகாந்தைப் போல வழுக்கைத் தலையோடும் நரைத்த முடியோடும் உங்களால் வெளியே வர முடியுமா?’’
மோகன்லால் சொன்னார்: ‘‘ரஜினி எப்படி வேண்டுமானாலும் வரலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மக்கள் அவரை அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள். அவருடைய தனித்துவமே அதுதான்.’’
உண்மைதான். சமூக வாழ்க்கை சார்ந்து எவ்வளவோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும், திரையில் ரஜினியைப் பார்த்ததும் நாம் பரவசமாகிறோம். ஒவ்வொரு படத்திலும் ரஜினி நிகழ்த்தும் அற்புதங்கள் மேலும்மேலும் அதிகரிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அவருக்கு எவ்வளவு வயதானாலும், திரையில் இன்னும் இன்னும் இளமையாகப் பார்க்கவும் பறந்து பறந்து அடிப்பதையும் நாம் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், ரஜினி என்றால், எதுவும் செய்யலாம் என்ற மாபெரும் சுதந்திரத்தை நாம் அவரிடம் கொடுத்திருக்கிறோம்.
ஏனென்றால், ரஜினியிடம் நாம் பார்ப்பது நமக்குள் இருக்கும் ரஜினியை!
தொடர்புக்கு: samas@kslmedia.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT