Last Updated : 10 Oct, 2013 10:22 AM

 

Published : 10 Oct 2013 10:22 AM
Last Updated : 10 Oct 2013 10:22 AM

குழந்தைகளுக்காகப் பேசுவோம்

இந்த உலகம் நமது குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதா? நமது குழந்தைகள் நமது குடும்பங்களில், பள்ளிகளில், சமூகத்தின் பல மட்டங்களில் பாதுகாப்புடன் இருப்பதாகவே நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கை நியாயமானது. நமது குழந்தைகள் அவர்களுக்குத் தீங்கிழைக்கும் சக்திகளிடமிருந்து பாதுகாப்பாகவே உள்ளனர் என்பது பலரின் நம்பிக்கை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயம்பத்தூரில் உள்ள குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர்களின் சங்கம், குழந்தைகளுக்குத் தீங்கிழைத்தலைத் தடுக்கும் ஒரு விழிப்புணர்வை அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்த முடிவுசெய்து களமிறங்கியது. சில வழக்குரைஞர்கள் இந்த நிகழ்வில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அந்த சமயம் பள்ளி அரசுத் தேர்வு அறிவிப்பு வெளியாகியிருந்ததால் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே அந்த விழிப்புணர்வில் பங்கேற்றனர். பதினோரு வயதிலிருந்து பதின்மூன்று வயது வரை இருந்த மாணவர்கள் மத்தியில் பாலியல் தீங்கிழைத்தல் குறித்து உரையாடும் சூழலில் தயங்கியபடியே "குழந்தைகளுக்குத் தீங்கிழைத்தல் என்றால் என்ன?" என்ற கேள்வியைக் கேட்டோம். மாணவர்கள் பெரும்பாலும் "குழந்தைகளைக் கெடுப்பது" எனப் பதிலளித்தனர். அடுத்த கேள்வியாக "குழந்தைகளை யார் கெடுப்பார்கள்?" என்றபோது அவர்கள் "தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், திருடர்கள், கொள்ளைக்காரர்கள்" என்றே பதிலளித்தனர். வெவ்வேறு மாறுபட்ட சுழல்,வேறுபட்ட பகுதிகளில் இருந்த பள்ளிகளிலும் இந்த பதிலே பரவலாக வந்தது. குழந்தைகளின் மனநிலை சமூகத்தின் பொதுப்புத்தி மனநிலைதான். நாமும் இதைத்தான் நம்புகிறோம். குழந்தைகளுக்குத் தீங்கிழைக்கக்கூடியவர்கள் குற்றப் பின்புலம் உள்ள வெளி நபர்கள் என்றும் தீங்கிழைக்கப்படும் குழந்தைகள் பெண் குழந்தைகள் மட்டும் என்பதும் நமது நம்பிக்கை. உண்மையில் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்களால் நிகழ்த்தப்படுகின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடும் அந்த மனிதர்கள் குழந்தைகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும் உள்ளார்கள். குழந்தைகளின் குடும்ப உறவினர்கள், குடும்ப நண்பர்கள் என அவர்கள் நம்பும் ‘நல்ல’மனிதர்களாலும்கூட பாலியல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆண், பெண் இரு குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த 2007-ல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம், 12,500 குழந்தைகளை 13 மாநிலங்களில் சந்தித்து அவர்களுக்கு நிகழும் பாலியல் பாதிப்புகள் குறித்துக் கேட்டது. அதில் பாதிக்கப்பட்ட முக்கால்வாசிக் குழந்தைகள் தங்களின் பாதிப்பை வெளியே சொல்லவில்லை என்றும் வெறும் 3% குழந்தைகள் பாதிப்பைப் பெற்றோர் மற்றும் காவல்துறைக்குத் தெரிவித்ததாகவும் கூறினர். பாதிக்கப்பட்டதில் 31% குழந்தைகள் தங்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களால் பாதிப்படைந்ததாகக் கூறியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இந்தக் கொடுமைக்கு எதிராக குரல்கொடுக்காத அமைதியினால்தான் இந்தப் பாதிப்பு எழுவதாக மத்திய அமைச்சர் ரேணுகா செளத்ரி குறிப்பிட்டார்.

உலகில் அதிக குழந்தைகள் உள்ள நாடாக மட்டுமின்றி, குழந்தைகள் அதிக அளவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் நாடும் நம் நாடே. குழந்தைகளுக்கான தேசியச் செயல்திட்டம் 2005 ஒவ்வொரு 155 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாவதாகக் கூறுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசியக் குற்றப்பதிவுத் துறையின் கணக்கின்படி 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக 48,338 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இதில் தமிழகத்தின் பங்கு 1,486 என்றும் சொல்கிறது. இரண்டில் ஒரு குழந்தை ஏதேனும் ஒரு வகையில் பாலியல் வன்முறையைத் தனது குழந்தைப் பருவத்தில் எதிர்கொள்கிறது. பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் மூவரில் ஒருவர் குழந்தை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். பல சமயம் இந்த வன்முறை, வழக்காகப் பதிவாவதில்லை என்பதால், இந்த எண்ணிக்கை இன்னமும் கூடுதலாக இருக்கக்கூடும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய மனித உரிமை ஆணையமும், மத்தியக் காட்சி ஊடகத் துறையான பிரச்சார் பாரதியும், ஐ.நா. குழந்தைகள் நிதியமான யுனிசெஃப்புடன் இணைந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான பயிலரங்கை நடத்தியது. அதில் நாடு முழுவதுமிருந்து 20 பெண்களும் 22 ஆண்களும் பங்கேற்றனர். இவர்கள் காவல் துறை, நீதித் துறை, ஊடகம் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த, முக்கியமான நபர்கள். குழந்தைகளின் மீது நிகழும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள்பற்றி இவர்களுக்கு விளக்கப்பட்டது. இறுதியில் பங்கேற்பாளர்களிடம் அவர்களின் சிறு வயதில் இதுபோல ஏதேனும் ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலை அவர்கள் எதிர்கொண்டிருக்கின்றார்களா என்று கேட்கப்பட்டது. வந்திருந்த 42 பங்கேற்பாளர்களில் 32 பேர் சிறு வயதில் இதுபோன்ற ஒரு கசப்பான நிகழ்வை எதிர்கொண்டிருப்பதாகக் கூறினர். அவர்களின் உள்ளத்தில் ஆறாத வடுவாக உறுத்தும் பாதிப்பாகவே அது இருந்துவந்திருக்கிறது.

பாலியல் தீங்கினை எதிர்கொண்ட அனைவருக்கும், உரிய உளவியல் ஆலோசனை, சிகிச்சை போன்றவை இல்லாதபோது, அவர்களின் வாழ்நாள் முழுவதும் அந்தப் பாதிப்பு ஒரு முள்ளைப் போலத் தைத்துக்கொண்டே இருக்கும். இது சமூகத்தில் எங்கும் பரவியுள்ள தீமை. நமது சமூகத்தின் ஒழுக்கம் சார்ந்த கற்பிதங்கள் மற்றும் ஆன்மிகம், பழமையான சமூகக் கட்டமைப்புகள் இதை வெளிப்படையாகவும் ஆரோக்கியமான முறையிலும் விவாதிக்கத் தடையாகின்றன. ஆனால், குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை பெரும் பிரச்சினையாக மாறிவரும் சூழலில், இதுகுறித்த எச்சரிக்கை உணர்வைக் குழந்தைகளிடம் ஏற்படுத்தியாக வேண்டும். அவர்கள் உடலை, உடல்நலம் சார்ந்த காரணங்கள் தவிர, மற்ற காரணங்களுக்காக, பெற்றோரும் மருத்துவரும்கூட தொடக் கூடாத இடங்களில் தொடக் கூடாது என்பதைக் கூற வேண்டியுள்ளது. அப்படி யாரேனும் தொட முற்படும்போது ‘தொடக் கூடாது’என்று சொல்லக் கூடிய துணிவையும் அந்தச் சூழலிலிருந்து ஓடிவந்துவிடக் கூடிய தைரியத்தையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதுடன், பிறரை உதவிக்கு அழைப்பதையோ அல்லது அதுபற்றி தங்களின் நம்பிக்கைக்கு உரிய பெரியவர்களிடம் சொல்வதையோ குழந்தைகளுக்குப் பழக்கவும் வேண்டும். குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை வெளிப்படுத்த முற்படும்போது, பல சமயம் பெரியவர்கள் தங்களின் வேலைப்பளு மற்றும் அலட்சியத்தால் அவர்களை உதாசீனப்படுத்தி அவர்களை மெளனமாக்கிவிடுகிறோம். குழந்தைகள் பாதிப்படைவதைப் பெரியவர்கள் அறியும்போது, குழந்தைகளுக்குப் பாதுகாப்பும் நம்பிக்கையும் வழங்குவதற்குப் பதிலாக, குழந்தைகளைக் கோபப்படவோ அல்லது குற்றம்சாட்டவோ கூடாது. நமது நடவடிக்கைகள் குழந்தைகளைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

நாம் நம்புகின்ற அளவு குழந்தைகளுக்கு நமது சமூகம் பாதுகாப்பாக இல்லை என்பதை உணர்த்துபவைதான் அன்றாடம் நாம் கேள்விப்படும், குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை குறித்த செய்திகள். இதுகுறித்து ஆரோக்கியமான விவாதத்தைத் துவங்க வேண்டும். அந்த ஆரோக்கியமான, அறிவியல்பூர்வமான சில விவாதங்கள் குழந்தைகளுக்கு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துவதோடு குற்றவாளிகளுக்குத் தயக்கத்தையும் ஏற்படுத்தும்.

பள்ளிகள் ,குடும்பங்கள் என எங்கும் இதுநாள் வரை குழந்தைகளிடம் பேசக் கூடாத செய்திகள் என்று கருதி நம் மீது திணிக்கப்பட்ட மெளனத்தை நாம் உடைக்க வேண்டிய தருணம் இது.

ச. பாலமுருகன், எழுத்தாளர், மனித உரிமைகள் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x