Published : 17 Sep 2013 03:44 AM
Last Updated : 17 Sep 2013 03:44 AM
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று பாரதிய ஜனதா கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. பிரதமர் வேட்பாளரை 1998-லிருந்தே ஒவ்வொரு மக்களவைத் தேர்தலின்போதும் இப்படி அறிவித்துவருவதாக அந்தக் கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார்.
இதற்கு முன்பு அறிவித்த எந்த அறிவிப்பும் இந்த முறை மோடியை அறிவிக்க அந்தக் கட்சி செய்த ஆயத்தங்களுக்கு நிகராகாது. ஏறத்தாழ ஓராண்டுக்கும் மேலாக மோடிதான் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று நிறுவுவதற்கு அக்கட்சியின் பல பிரமுகர்களும் ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகளும் விதவிதமான முயற்சிகள் செய்துவந்திருக்கின்றனர். மோடிக்கு எதிராக உங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று அறிவிக்க முடியுமா என்று காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து சீண்டியும் வந்துள்ளனர். காங்கிரஸ் இதுவரை அந்த வலைக்குள் சிக்கவில்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம்தான்.
ஏனெனில், பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிப்பது என்பதே இந்திய பாராளுமன்ற ஜனநாயக முறைக்கும் இந்திய அரசியல் சட்டத்துக்கும் விரோதமானதாகும். பெரும் அனைத்திந்திய கட்சிகளில் ஒரு கட்சி அப்படிச் செய்வது என்பது ஆபத்தான போக்கு.
இந்திய அரசியல் சட்டப்படியும் நாடாளுமன்ற, சட்டமன்ற நடைமுறைகள், மரபுகள்படியும், பிரதமர் வேட்பாளர் என்றோ முதலமைச்சர் வேட்பாளர் என்றோ ஒருவர் மக்களிடம் நேரடியாக வாக்குக் கேட்க இடமே கிடையாது. மக்களிடம் வாக்குக் கேட்டுத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் மக்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள் மட்டும்தான். நான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று சொல்லித்தான் தேர்தலில் நின்று ஜெயித்து வந்திருக்கிறேன். என்னைப் பிரதமர் பதவி ஏற்கும்படி குடியரசுத் தலைவர் அழைக்க வேண்டும் என்று எந்த மக்களவை உறுப்பினரும் தனியே அவரிடம் கோர முடியாது. “நீங்கள் மக்களவை உறுப்பினர் பதவித் தேர்தலில் ஜெயித்திருக்கலாம். ஆனால், உங்கள் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. தனிப் பெரும் கட்சியாகவும் ஜெயிக்கவில்லை. அப்படியே தனிப் பெரும் கட்சியாகவோ, அறுதிப் பெரும்பான்மையோ பெற்றிருந்தாலும்கூட, இப்போது உங்கள் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உங்களைத் தங்கள் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்தால்தான் நான் உங்களைப் பிரதமர் பதவிக்குப் பரிசீலிக்க முடியும்” என்றே குடியரசுத் தலைவர் பதில் சொல்ல முடியும்.
எனவே பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை ஒரு கட்சி அறிவித்து தேர்தலில் நிறுத்தச் சட்டத்தில் இடமே இல்லை. அப்படி அறிவித்து நிறுத்துவதன் பின்விளைவுகள் தேவையற்ற சிக்கல்களையும் ஏற்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, நரேந்திர மோடி ஜெயிக்கிறார், பா.ஜ.க-வுக்குத் தனிப் பெரும் கட்சி நிலைகூடக் கிட்டவில்லை என்று வைத்துக்கொள்வோம். மோடி பிரதமராக முடியாது. அவர் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி ஜெயித்திருந்தாலும் பிரதமராக முடியாது என்றால், என்ன அர்த்தம்? தனி நபர் வெற்றி அடிப்படையில் பிரதமர் பதவி தரப்பட மாட்டாது என்ற சட்டப்படியான நிலையை மறைத்துத் தேர்தலைச் சந்திப்பது எப்படி நியாயமாக முடியும்? அடுத்து, நாங்கள் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடங்களைப் பெற்றால் மோடியைப் பிரதமராக்குவோம் என்றுதான் சொல்கிறோம் என்று வாதாடலாம். இதுவும் தவறானது. தேர்வாகி வரும் சுமார் 252 பா.ஜ.க. உறுப்பினர்களில் பெரும்பாலோர் மோடி பிரதமராகக் கூடாது என்று, அத்வானியோ சுஷ்மாவோதான் ஆக வேண்டும் என்றும் அப்போதுகூட மாற்றி முடிவு செய்யலாம். அரசியலில் அப்படியெல்லாம் நடக்காது என்று எதையும் சொல்ல முடியாது.
அப்படிச் செய்தால், மோடி பிரதமராவார் என்று சொல்லித்தானே என் ஓட்டை வாங்கினீர்கள், அத்வானி, சுஷ்மா என்றால் நான் உங்கள் கட்சிக்கு ஓட்டே போட்டிருக்க மாட்டேனே என்றுகூட வாக்காளர்கள் கருதலாம். இன்னொரு சாத்தியமாக, கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தாலும், மோடி மட்டும் மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போய்விட்டால், வேறொருவரைத்தான் பிரதமராக்க வேண்டியிருக்கும். ஆறு மாதத்துக்குள் வேறு தேர்தலில் நிற்கவைத்து அவரை ஜெயிக்க வைக்கலாம் என்று தோற்றவரைப் பிரதமராக்க முயற்சித்தால் அது தார்மிகமாகாது.
இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை இப்போதுள்ள சட்டங்களின்படி தனிநபரை முன்னிறுத்துவதல்ல. கட்சியை முன்னிறுத்தியே விதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் கட்சிகளில் ஒரு கட்சியைப் பெரும்பான்மைக்குரியதாகத் தேர்வு செய்கிறார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தங்கள் தலைவரை அதன் பின் தேர்வு செய்யலாம் என்பதே இந்த நடைமுறை.
இதை மாற்றித் தனிநபரை பா.ஜ.க. முன்னிறுத்த முயற்சிப்பது ஏன்? பெருவாரியான மாநிலக் கட்சிகளும் இப்படித் தனிநபரையே மாநில அளவில் முன்னிறுத்துகின்றன. அதையே மத்திய அரசுக்கும் விரிவுபடுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. கட்சியைவிட தனி நபரே கவர்ச்சியானவர் என்று காட்டுவதுதான் பாசிஸத்தின் ஆதார வேர். தவிர மாநில அளவில் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் இந்திய அளவில் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் வேறுபாடுகளும் உள்ளன.
தனிநபரை முன்னிறுத்தும் போக்கு, இந்திய அளவில் அனைத்திந்திய கட்சிகளுக்கு மட்டுமே சாத்தியமானது. மாநிலக் கட்சிகள் தங்கள் தலைவர்களை இந்திய அளவிலான தலைவர்களாக முன்னிறுத்துவது கடினம். ஆனால் கட்சியின் கொள்கை அடிப்படையில் ஒரு மாநிலத்தில் என்னவெல்லாம் சாதித்தோம், மத்தியிலும் வாய்ப்பு வந்தால் என்ன செய்வோம் என்று கட்சியாக தன்னை முன்னிறுத்துவது சாத்தியமானது.
அது மட்டுமல்ல, பிரதமர் வேட்பாளர் என்று தனிநபர் சார்ந்த போக்கைச் சட்டவிரோதமாக மக்களவைத் தேர்தலின்போதே ஊக்குவிப்பது வேறு வகையிலும் ஆபத்தானது. இந்த அடிப்படையை எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டால், வி.பி.சிங், குஜ்ரால், தேவ கவுடா, சந்திரசேகர், நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகிய நபர்கள் ஒருபோதும் பிரதமராகியிருக்கவே முடியாது. பண பலம் உள்ள தனிநபர் வழிபாட்டை ஊக்குவிக்கும் சக்திகள் மட்டுமே வலிவடையும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முறையை இந்தியாவிலும் ஏற்படுத்த விரும்பும் கட்சிகளில் பா.ஜ.க-வும் ஒன்று. நாடாளுமன்றத்தில் போதுமான பலம் இல்லாவிட்டாலும்கூட, அதிபராகிவிட்டால், சில அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்பது அமெரிக்க அதிபர் அமைப்பின் விசித்திரங்களில் ஒன்று. அப்படிப்பட்ட தனிநபர் அதிகாரத்தை இப்போதுள்ள இந்திய முறைக்குள்ளேயே புகுத்தும் முயற்சியாகவே பிரதமர் வேட்பாளர் அறிவிப்பைக் கருத வேண்டும். இது நம் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல.
ஞாநி,மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர். தொடர்புக்கு: gnanisankaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT