Published : 11 Oct 2013 12:09 PM
Last Updated : 11 Oct 2013 12:09 PM
அக்டோபர் 10.. உலக மனநல தினம். மனநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக அந்த நாள் ஒதுக்கப்பட்டாலும், அந்நோய் பற்றிய புரிந்துணர்வு நம்மிடையே இல்லை. இப்பிரச்சினை மேலை நாடுகளுக்கு உரித்தானது என்ற அலட்சியம் இங்கு உண்டு. மக்கள்தொகை லட்சம் பேருள்ள ஊர்களில் குறைந்தது 300க்கும் மேற்பட்டோர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனநோயை குணப்படுத்த ஏர்வாடி, குணசீலம் என்று அலைவதும் தப்பித்தவறி மனநோய் நிபுணரிடம் கலந்தாலோசனை செய்வோருக்கு பைத்தியப்பட்டம் கட்டுவதுமே நடப்பில் உள்ளது. கன்னியாகுமரியில் பிச்சை எடுத்தவர்களை அகற்ற நினைத்த ஆட்சியர் அவர்களை ஊர் கடத்தி, சென்னை மனநல மருத்துவமனையில் சேர்த்த சம்பவமும் இங்கு நடந்தது.
நம்மால் யாரது மனநலத்தையும் விசாரிக்க முடிவதில்லை. உடலும் உள்ளமும் நலந்தானா? என்று தில்லானா மோகனாம்பாக்கள் மட்டுமே கேட்க முடியும்.
காலனி ஆதிக்கத்தில் 1912ம் வருடம் கொண்டுவரப்பட்ட ‘இந்திய பைத்தியக்காரச் சட்டம்’ ரத்து செய்யப்பட்டு, 1987ம் வருடம் மனநலம் சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இச்சட்டம் மனநோயாளிகள் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை மனநல மருத்துவர் அடங்கிய மருத்துவக்குழுவிடம் ஒப்படைத்தது. அம்மருத்துவக் குழு அளிக்கும் சான்றிதழே இறுதியானது. மனநோய் என்பது பலவகைப்பட்டாலும், மனநோயாளி என்பவர் நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெறப்பட வேண்டிய நபர் என்றுதான் சட்டம் வரையறுத்துள்ளது.
தூத்துக்குடி கிராமம் ஒன்றில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றிய தமிழரசி என்ற பெண், மாவட்ட ஆட்சியரது உத்தரவின் பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டார். பட்டமேற்படிப்பு பெற்ற அவர் வேலை நேரம் தவிர தன் பகுதி ஏழைப் பிள்ளைகளுக்கு படிப்புதவி செய்தார். மாவட்ட திட்ட அதிகாரிக்கும், அவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் முரண்மூளைநோய் (Schizophrenia) அவருக்கு இருப்பதாகக் கூறி தற்காலிக பணிநீக்கமும் பின்னர் சட்ட அதிகாரம் பெறாத மருத்துவர் அளித்த சான்றிதழின் பேரில் வேலை நீக்கமும் செய்யப்பட்டார். உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட அவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மனநோய் பிரிவு தலைவரிடம் அவரது நோய் பற்றி விளக்கம் கேட்டது. உள்நோயாளியாக 4 வார கண்காணிப்புக்குப் பிறகு, ‘வேலை செய்ய முடியாத அளவுக்கு முற்றிப்போன நோய் அவரிடம் இல்லை. தக்க மருந்துகளை உட்கொண்டால், சாதாரண மனிதர் போல அவர் வேலை பார்க்க முடியும்’ என்று பிரிவுத் தலைவர் சான்றிதழ் வழங்கினார்.
உயர் நீதிமன்றம் 2007ம் ஆண்டு உலக மனநலத் தினத்தன்று ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. எவ்வித ஆதாரமும் இல்லாமலும், விசாரணையின்றி தமிழரசி நீக்கப்பட்டதைக் கண்டித்து மறுபடியும் வேலை, பின்சம்பளத்துடன் அவரை சேர்த்துக் கொள்ள உத்தரவிட்டது. மனநோய் பற்றிய புரிதலற்ற மாவட்ட ஆட்சியருக்கு ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டது.
அரசு ஊழியர் பதவியில் இருக்கும்போது மனநோய் ஏற்பட்டு தொடர்ந்து பணியாற்ற இயலாத நிலை (Mental disability) ஏற்பட்டாலும் அவரைப் பதவியிலிருந்து அரசு நீக்க முடியாது. ஏனெனில் 1995ம் வருடத்திய ஊனமுற்றோர் (சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழுப்பங்காற்றும்) சட்டத்தின் 47வது பிரிவின்படி மனநலம் குன்றியோரை பதவி நீக்கம் செய்யத் தடை உள்ளது என்பதும் தீர்ப்பில் முதன்முறையாக சுட்டிக்காட்டப்பட்டது.
இன்று தமிழரசி உயிருடன் இல்லை என்றாலும் அவர் நடத்திய சட்டப் போராட்டம் அதிகாரிகளின் கண்களை திறந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment