Published : 18 Oct 2013 10:20 AM
Last Updated : 18 Oct 2013 10:20 AM
கௌஹாத்தி நகரின் விமான நிலையத்திலிருந்து சிறிது தூரம்தான் சென்றிருப்பேன். என்னுடைய வாகனத்தைத் தாண்டி செங்கொடிகள் காற்றில் வேகமாக அலைபாய போலீஸ் வாகனம் ஒன்று சென்றது. பின்னால் தொடர்ந்து வந்த வாகனங்களிலும் செங்கொடி தாங்கிய போலீஸார். “என்ன, அஸ்ஸாமில் புரட்சி வெடிக்கிறதா?” என்று நண்பரிடம் கேட்டேன். “இல்லை, கிருஷ்ணன். இது இங்குள்ள பெரிய புள்ளி ஒருவருக்கு செக்யூரிட்டி. அபாயச் சங்கோடு இந்தக் கொடிப் பழக்கமும் இங்கு உண்டு. புரட்சியை மழுங்கடிப்பதற்கான உத்தியாகவும் இருக்கலாம்.”
அன்று மாலை நண்பர் வீட்டில் ஒரு தேநீர் விருந்து. பெரிய புள்ளிகள் சிலர் வந்திருந்தனர். அவர்களைப் பாதுகாக்க வந்த காவலர்கள். ஒருவருக்கு 10 பேர் என்ற வீதத்தில் இருந்தார்கள். விருந்தை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டவர்கள் அவர்கள்தான்.
“சமோசாவைத் தேடுகிறீர்களா? கிடைக்காது. எங்கள் போலீஸ்காரர்களுக்கு அதன் மீது மாளாத காதல். ஒருவருக்குக் குறைந்தது ஐந்து சமோசாக்களாவது தேவை. அஸ்ஸாமில் தொந்தியை அறிமுகம் செய்ததே எங்கள் போலீஸ்காரர்கள்தான்.”
இது நடந்தது திங்கட்கிழமை. அக்டோபர் 7, 2013.
ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அக்டோபர் மாதத்தில்தான் இரு அசாமிய முதல்வர்களைச் சந்தித்தேன். ஒருவர் சரத் சின்ஹா. ஏழு வருடங்கள் முதல்வராக இருந்தவர். பதவியைத் துறந்த அன்று கக்கத்தில் குடையை இடுக்கிக்கொண்டு பஸ் பிடித்து வீடு திரும்பினார் என்று சொல்கிறார்கள். அவருக்குப் பாதுகாப்பு என்றாலே வெறுப்பு. போகும் இடங்களுக்கெல்லாம் பஸ்ஸில்தான் சென்றுகொண்டிருந்தார். மற்றவர் ஹிதேஷ்வர் சைக்யா. அப்போது முதல்வராகவே இருந்தார். சந்திக்க நேரம் கேட்க அவரது அலுவலகத்துக்கு போன் செய்தேன். அவரே போனை எடுத்தார். அந்தரங்கச் செயலாளர் விடுப்பில் இருந்தாராம். நான் அவரைப் பல தடவை சந்தித்திருக்கிறேன். சைக்யா மீது உல்ஃபா தீவிரவாதிகள் குறிவைத்திருந்தார்கள். இருந்தாலும், அவரைச் சுற்றி அதிக பாதுகாவலர்களை நான் என்றுமே பார்த்ததில்லை.
50-களிலும் 60-களின் முற்பகுதியிலும் தமிழ்நாடும் வேறுவிதமாக இருந்தது.
எங்கள் மாவட்டத்தில் சங்கரன்கோவிலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் மஜீத் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, என் தந்தையுடன் பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறார். பஸ் நிலையத்தில் என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தது நன்றாக நினைவிருக்கிறது.
மற்றொரு சம்பவம் நாங்குநேரியில் நடந்தது. காமராஜர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்திருந்தார். எனது அத்தையின் வீட்டில்தான் காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது. நான் காமராஜரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு காத்துக்கொண்டிருந்தேன். இரவு 12 மணியளவில் பின்னால் ஒரு போலீஸ் வாகனம் தொடர, அழுக்கு ஜீப் ஒன்றில் வந்தார். தொண்டர் ஒருவர் அருகில் வந்து “ஐயா, இந்த வீட்டில் ஃப்ளஷ் அவுட் வசதியில்லை” என்றார். அவர் “நான் என்ன செய்யப்போறேன்? ஒண்ணுக்குதான இருக்கப்போறேன்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றுவிட்டார். அங்குதான் இரவைக் கழித்தார். கட்டில்கூட இல்லாத வீடு. காமராஜரும் பஸ்ஸில் பயணம் செய்யத் தயங்கியிருக்க மாட்டார்.
நாம் வெகுதூரம் வந்துவிட்டோம்.
அக்டோபர் 10 அன்று தில்லி திரும்பியதுமே கண்ணில் பட்டது வீரப்ப மொய்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் என்பதுதான். வாரம் ஒரு முறை பயணம் செய்வாராம். தொலைக் காட்சியில் ரயிலேறு படலத்தைப் பார்த்தபோது அவரைப் பரிவார தேவதைகள் சூழ்ந்திருந்தார்கள். வாராவாரம் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய மற்ற அமைச்சர்களும் நினைத்தால், இவர்களுக்காகத் தனி ரயில்தான் விட வேண்டும். இல்லையென்றால்,
பொதுமக்கள் பயணம் செய்ய முடியாது.
அமைச்சர் ரயிலைப் பயன்படுத்தியது செய்தியாக ஆனது, பொதுப் போக்குவரத்து நமது நாட்டில் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இன்னும் சில ஆண்டுகளில், ‘அமைச்சர் சாலையில் காலைப் பதித்தார்’என்பது செய்தியாக ஆனால், வியப்படைவதற்கு ஒன்றுமே இருக்காது.
நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், உங்கள் ஊரில் இருக்கும் முக்கிய கடைத்தெரு ஒன்றில் வாகனங்கள் நிறுத்திவைத்திருக்கும் இடத்துக்குச் சென்று எத்தனை அரசு வாகனங்கள் நிற்கின்றன என்பதைக் கணக்கெடுங்கள். இந்தியாவின் எந்த ஊருக்குச் சென்றாலும், அங்கு மக்கள் பொருட்கள் வாங்கும் இடத்தில் ‘பஞ்சாயத்துத் தலைவர்’‘தாளாளர்’‘ஆய்வாளர்’போன்ற சிவப்புப் பின்புலத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பலகைகளைத் தாங்கிய வாகனங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது.
அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் தொழிற்துறையில் முன்னணியில் இருப்பவர்களும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தாவிட்டால், சாலைகளும் பொதுப் போக்குவரத்தும் முன்னேற்றம் அடைய முடியாது. ‘அச்சுறுத்தல்கள் இருக்கின்றன, அதனால் பாதுகாப்பு தேவை’ என்பது மிகச் சில அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டுமே பொருந்தும். இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று வாதாடப்பட்டுவருகிறது. வரப்போகும் தீர்ப்பினால் பரிவார தேவதைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்தத் தீர்ப்பு வந்தவுடன் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்தைக் கூடுமானவரை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும். அரசு வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட வேண்டும். நம்மைப் போன்றவர்களும் கார்களைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும்.
இந்தியச் சாலைகள் எரிபொருளில் இயங்கும் தனியார் வாகனங்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஆனால், அந்த எண்ணத்தில்தான் பலர் இயங்குகிறார்கள். தில்லியைப் பொறுத்த அளவில், கார்களைப் பயன்படுத்துபவர்கள் மக்கள்தொகையில் 10 சதவீதம் இருப்பார்கள். ஆனால், 90 சதவீதச் சாலைகளை ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள். சென்ற 10 ஆண்டுகளில் இத்தகைய வாகனங்கள் வருடத்துக்கு 13 சதவீதம் அதிகரித்திருக்கின்றன. ஆனால், சாலைகள் அதிகரிப்பு 1 சதவீதம். நடந்துபோனாலே செல்லுமிடத்துக்கு வேகமாகச் சென்றுவிடலாம் என்ற நிலைமை வருவதற்கு வெகு நாட்கள் இல்லை. கார்களை விட, நமக்கு அதிக தேவை பஸ்கள் என்ற புரிதல் ஏற்படுவதற்கும் நாம் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டாம். தமிழக அரசுக்கு இந்தப் புரிதல் இருக்கிறது. இந்தியாவிலேயே மிகத் திறமையாக இயங்கும் மிகச் சில பொதுப் போக்குவரத்து நிறுவனங்களில் சென்னையில் இயங்கும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஒன்றாக இருக்க வேண்டும்.
நாமும் அரசோடு ஒத்துழைக்க வேண்டும்.
கார்களில் செல்வதைக் கூடிய மட்டும் குறைத்துக்கொள்ளுங்கள். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள். முடியுமானால், சைக்கிளில் அல்லது நடந்து செல்லுங்கள். அமைச்சர்களும் அதிகாரிகளும் நம்கூட வர வேண்டும் என்பதை வலியுறுத்திக்கொண்டே இருங்கள்.
பி. ஏ. கிருஷ்ணன், எழுத்தாளர், பொதுத்துறை நிறுவன நிர்வாக இயக்குனர் (ஓய்வு), தொடர்புக்கு - tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT