Published : 04 Apr 2017 10:22 AM
Last Updated : 04 Apr 2017 10:22 AM

நெடுஞ்சாலை மதுக் கடைகளுக்கு பூட்டு... புள்ளி வைத்த புல்லா ராவ்!

மதுக் கடைகளை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் பரவலாகப் போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. நெடுஞ்சாலைகளில் பூட்டப்பட்ட கடைகளை ஈடுசெய்யும் நோக்கில், மாற்று இடங்களில் அமைக்கப்பட்ட மதுக் கடைகளுக்கு மக்களே பூட்டுப் போடுகிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தமிழக மக்கள் கொடுக்கும் வரவேற்பு இது!

கடந்த 2012 ஜூலை மாதம். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், வழக்கறிஞர் பாலுவிடம் அறிக்கை ஒன்றைக் கொடுத்தார். 2011 டிசம்பரில் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை அது. அதில், ‘மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 185-ன் படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுபானக் கடைகளால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கையும் விபத்துகளும் பெருகியிருக்கின்றன. எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுபானக் கடைகளை மாநில அரசுகள் உடனடியாக அகற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

தமிழக அரசுக்கு அந்தச் சுற்றறிக்கை ஒன்றும் புதிது அல்ல. கடந்த 2007-ல் தொடங்கி குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்தச் சுற்றறிக்கையை அனுப்பிக்கொண்டிருந்தது தேசிய நெடுஞ்சாலைத் துறை. தமிழக அரசு அதுகுறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

சரி, இந்தச் சுற்றறிக்கை உருவானது எப்படி? ஆந்திர பிரதேசத்தின் சாலைப் பாதுகாப்பு மன்றத்தின் தலைவராக இருந்தவர் பி.புல்லா ராவ். அந்த மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளால் விபத்துகள் அதிகரித்துக்கொண்டிருந்தன. 2003-ல் இதுதொடர்பான விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்த புல்லா ராவ், அதனை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரகத்துக்கு அனுப்பினார். 2004-ல் டெல்லியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்புக்கான ஏழாவது தேசிய மாநாட்டில் புல்லா ராவின் அறிக்கை பெரும் விவாதங்களை எழுப்பியது. தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகளை அமைக்க உரிமம் வழங்கக் கூடாது. ஏற்கெனவே இருக்கும் மதுக் கடைகளின் உரிமங்களையும் ரத்துசெய்ய வேண்டும் என்று அந்த மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டு, அவை மத்திய அரசுக்குப் பரிந்துரைகளாக அனுப்பப்பட்டன.

இதைத் தொடர்ந்துதான் 2007 அக்டோபர் 26-ல் மத்திய அரசு முதன்முதலாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்கிற சுற்றறிக்கையை அனுப்பியது. ஆனால், தமிழகம் உட்பட எந்த மாநிலமும் மேற்கண்ட சுற்றறிக்கையை மதித்ததாகத் தெரியவில்லை. ஒருமுறை மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘இனியும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக் கடைகளை அகற்றாவிட்டால், மாநிலங்களுக்கான தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு நிதியை இழக்க வேண்டியிருக்கும்’ என்றும் எச்சரித்தது. அதற்கும் பலன் இல்லை.

இதனால், 2009 பிப்ரவரி 26-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ராஜா, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த அன்றைய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா, ‘அதை நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் கையில்தான் இருக்கிறது.. மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது’ என்றார். பின்பு 2011-ம் ஆண்டு மீண்டும் அதே சுற்றறிக்கை மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையைத்தான் பாலுவிடம் கொடுத்திருந்தார் ராமதாஸ்.

அதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக 2012 ஆகஸ்ட்டில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் தலைவர் ஆகியோருக்குக் கடிதம் எழுதிய பாலு, மத்திய அரசின் மேற்கண்ட உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். இதற்கும் மாநில அரசிடமிருந்து எந்தச் சலனமும் எழவில்லை. இதைத் தொடர்ந்துதான் கடந்த 2012 ஆகஸ்ட் 27-ல் தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்று பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக் கடைகளை மூட வேண்டும் என்று தொடரப்பட்ட முதல் வழக்கும் இதுதான். பஞ்சாபைச் சேர்ந்த ஹர்மான் சித்து, பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது இதற்குப் பிறகுதான்!

தொடரும்...

- டி.எல்.சஞ்சீவிகுமார்

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x