Published : 12 Jul 2015 10:56 AM
Last Updated : 12 Jul 2015 10:56 AM
துயரங்கள் விடிவின்றி நீளும்
கறை நம் எல்லோர் கைகளிலும்
என் கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும்
இன்று மனிதனாக இருப்பதே குற்றம்
- சுகுமாரன் கவிதையிலிருந்து...
ரயில்கள் செல்லாத நேரத்திலும் அதிர்ந்துகொண்டேயிருக்கின்றன தமிழகத்தின் சில பகுதிகளைக் கடந்துசெல்லும் தண்டவாளங்கள். எத்தனையோ மைல்கள் இணைந்தே சென்றாலும் தண்ட வாளத்தின் இரு கம்பிப் பாதைகளும் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ள முடியாதவாறு பார்த்துக்கொள்ளும் கப்பிக் கற்கள் நிறைந்த இடைவெளியாக இறுக்கத்துடன் கிடக்கிறது சாதியம். உயர் சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்த 'குற்ற'த்துக்காக 'தற்கொலை' செய்துகொள்ள இளவரசன் தேர்ந்தெடுத்த தண்டவாளத்தையே தானும் தேர்ந்தெடுத்ததுபோல், தலையில்லாத உடலாகக் கிடந்தது சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜின் உடல். இரண்டு சம்பவங்களும் வெவ்வேறு இடங்களில் நடந்திருந்திருக்கலாம். ஆனால், ரயில் தண்டவாளங்கள் இந்தியா முழுவதும் ஏதாவது ஒரு விதத்தில் இணைக்கப்பட்டிருப்பவைதானே.
வியாபித்திருக்கும் சாதி
தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் காதலிப்பதையோ, திருமணம் செய்துகொள்வதையோ அவமானமாகக் கருதுபவர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணையோ, அவரது காதலரையோ அல்லது இருவரையும் கொலைசெய்வதன் மூலம் தங்கள் 'கவுரவ'த்தைக் காத்துக்கொண்டதாகக் கருதுகிறார்கள். கவுரவக் கொலை என்ற பதம் ஊடகங்களில் வலம் வரத் தொடங்கியது அப்படித்தான். இந்தக் கொலைவெறி, சம்பந்தப்பட்ட குடும்பம் என்ற அளவில் மட்டும் நின்றுவிடுவதில்லை.
வட இந்தியாவைப் பொறுத்தவரை கிராமங்களில் காப் பஞ்சாயத்துகள்தான் இதுபோன்ற தருணங்களில் 'தீர்ப்பை' முடிவுசெய்கின்றன.
சாதியக் கட்டுமானங்களை மீறுபவர்கள் மீது 'நடவடிக்கை' எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் அமைப்புகள் அவை. கவுரவக் கொலையில் ஈடுபடும் குடும்பங்களுக்கு தார்மிக ஆதரவைத் தருவதுடன், உள்ளூர் காவல் துறையினரைச் சரிகட்டும் அளவுக்குப் பலத்துடன் இயங்கும் அமைப்பு அது. உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மிகுந்த செல்வாக்குடன் செயல்படும் இந்த அமைப்பு சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் 2011-ல் அறிவித்தது.
எனினும், காவல் துறை உட்பட அதிகார மட்டத்தில் சாதிய அடிப்படையில் காப் பஞ்சாயத்து அமைப்பின் தலைவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால், இந்த அமைப்புகள் மீது பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. தங்களுக்கு எதிராகப் புகார் கொடுக்கத் துணியும் தலித்களைக் குடும்பத்துடன் வேரறுத்த சம்பவங்கள் வட இந்தியாவில் சாதி வெறி எந்த அளவுக்கு வேரூன்றியிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.
தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் இவ்விஷயம் வேறு வடிவத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்குத் துணையாக தாய்மாமன், சித்தப்பா போன்ற நெருங்கிய உறவினர்கள் இருக்கிறார்கள். கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியைச் செவ்வனே செய்வதுடன், தந்திரமான வழிமுறைகளின் மூலம் அவர்களைத் தங்கள் பகுதிக்குக் கொண்டுவந்து கொலை செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் 'உறவினர்கள்'தான். சமுதாயம் என்ற அளவில் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு அழுத்தம் தருவது இவர்கள்தான். ஒருவேளை கலப்புத் திருமணத்தில் பெற்றோருக்குப் பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்றாலும், 'சாதிக்கே இழுக்கல்லவா?' என்று கொலைவெறியைத் தூண்டிவிடுபவர்களும் இவர்கள்தான்.
பொருளாதார பலம், அரசியல் தொடர்பு, காவல் துறையில் பணிபுரியும் உறவினர்களின் உதவி ஆகியவற்றைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட பெற்றோர்களைக் காப்பதிலும் இவர்கள் பங்கு முக்கியமானது. வெவ்வேறு பெயர்களில் இயங்கும் சாதிச் சங்கங்களும் இப்பட்டியலில் அடங்கும். கோகுல்ராஜ் கொலை தொடர்பாகத் தேடப்படும் யுவராஜ் என்பவர் மேற்கொண்ட 'சாதிக் காப்பு' நடவடிக்கைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லும் யுவராஜும் அவரது ஆட்களும், காதலர்களின் சாதிப் பின்னணியை விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டவர்களாம்.
சம்பந்தப்பட்ட பெண்ணை எச்சரித்து அனுப்புவதுடன், தலித் இளைஞர்களைத் தாக்குவதும் அவரது பாணி என்று செய்திகள் சொல்கின்றன. சம்பவம் நடந்த நாளில், சம்பந்தப்பட்ட பெண்ணுடன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்த கோகுல்ராஜைக் கடத்திச் சென்று யுவராஜ் கொன்றிருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. 'மாதொருபாகன்' நாவலில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைப் பற்றியும், அர்த்தநாரீஸ்வரர் கோயில் பற்றியும் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறிப் பெருமாள்முருகனை மிரட்டியது இவர்தானாம். தேர்தல் ஆதாயத்துக்காகக் குறிப்பிட்ட சாதியினரைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் கட்சியினரும் இந்தச் சம்பவங்களின் பின்னணியில் இருக்கிறார்கள்.
பெண் மனதில் சாதி?
கொலை, மிரட்டல் உள்ளிட்ட வன்முறைகளில் சாதி ஆண்கள் ஈடுபடுகிறார்கள் என்றால், மனதளவில் சாதிய வன்மத்தை நிலைநிறுத்துவதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் பல சம்பவங்கள் உணர்த்துகின்றன. கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பெண்கூட கோகுல்ராஜ் காதலித்த பெண்ணின் உறவினர்தான். நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது நாம் வாழும் பகுதி, உறவினர்கள் பற்றிய தகவல்களைக் கேட்டறிவதன் மூலம் நமது சாதியைத் தெரிந்துகொள்ளும் பழக்கம் பெண்களிடம் அதிகமாக இருப்பதைப் பார்க்க முடியும். 'நீங்க என்ன ஆளுகப்பா?' என்று கேட்கும் பாட்டிகளைக் கடக்காமல் யாரும் வந்திருக்க முடியாது. இங்கு குறிப்பிடப்படும் விஷயங்களில் விதிவிலக்குகள் நிச்சயமாக உண்டு என்றாலும் அவை விதிவிலக்குகள் என்பதுதான் யதார்த்தம்.
இணைய வெளியில் சாதி
கல்வியறிவு, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை மனிதர்களின் பார்வையை, சமூகம் குறித்த நிலைப்பாட்டை விசாலமாக்கும் என்று யாரேனும் நினைத்திருந்தால், இன்றைய நிலை அவரை அதிர்ச்சியடைய வைக்கும். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு 'க்ரூப்'. 'இனிய காலை வணக்கம்' எனும் நிலைத்தகவலுடன் சேர்த்தே சாதிப் பெருமையை, சாதி வெறியை வெளிப்படுத்துபவர்களை இணைய வெளியில் சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும். கோகுல்ராஜ் கொலை நடந்த சில நாட்களில் ஒரு ஃபேஸ்புக் பதிவின் 'ஸ்க்ரீன்ஷாட்' பலரால் பகிர்ந்துகொள்ளப்பட்டது. கொங்கு பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர் தலித் மக்களை அவமதிக்கும் விதத்திலும், தனது சாதியின் பெருமையைத் தூக்கிப் பிடிக்கும் வகையிலும் எழுதியிருந்த பதிவு அது. இளம் வயதிலேயே இத்தனை சாதி வெறியா என்று அதிர்ச்சியடைந்தவர்கள் ஏராளம். ஆனால், தென் மாவட்டங்களில் சாதிப் பட்டையைக் கையில் அணிந்து பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் பற்றி அறிந்திருந்தவர்களுக்கு அது பெரிய அதிர்ச்சியைத் தரவில்லை.
கவுரவக் கொலைகள் தொடர்பான செய்திகள் பகிரப்படும் சமயத்தில் சமூக வலைதளங்களில் நடக்கும் விவாதங்கள், சமுதாய அக்கறை கொண்டவர்களை மனம் நோகச் செய்துவிடுவதில் வியப்பில்லை. 'எங்க சாதிப் பொண்ண லவ் பண்ணா விட்ருவோமா?' என்று வன்மத்தைக் கக்கும் பலர், திரைப்படம், இசை போன்ற பொது விஷயங்களைப் பற்றிய உயர்ந்த ரசனையுடன் இருப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருப்பதையும் குறிப்பிட வேண்டும்.
பெரும்பாலும் 'கவுரவ'க் கொலைகள் தொடர்பான செய்திகள் வயிற்று வலியால் தற்கொலை, மனமுடைந்த நிலையில் தற்கொலை என்று திரிக்கப்பட்டு 'முடிக்கப்பட்டு'விடுகின்றன. மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், தலித் அமைப்புகள் ஆகியவை தலையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்திய பின்னரே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அப்படியே வெளியில் தெரியவரும் சம்பவங்களும் காலப்போக்கில் மறக்கடிக்கப்படுகின்றன. அந்த இடைவெளியில் குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள். அந்தந்த நேரத்தில் பரபரப்பாகப் பேசப்படும் செய்திகள், காலப்போக்கில் மறக்கப்பட்டுவிடும் என்பதை அறிந்திருக்கும் ஆதிக்க சாதி அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள்குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. மாறாகத் தங்கள் சமூகத்துக்குள் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள இச்சம்பவங்களைப் பயன்படுத்தவும் செய்கின்றன.
துரத்தும் கேள்விகள்
கவுரவக் கொலைகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் தரும் வலியைவிட, அந்தச் சமயங்களில் சம்பந்தப்பட்ட பெண் அவரது காதல் கணவர் அல்லது காதலரின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைக்கும்போது ஏற்படும் வலி தாங்க முடியாதது. தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத ஒரு நபர், சாதி எனும் ஒரே விஷயத்துக்காகத் தன்னைக் கொல்வதை கோகுல்ராஜ் எப்படி எதிர்கொண்டிருப்பார்? அந்த கணத்தில் அவர் மனதில் என்னென்ன தோன்றியிருக்கும்?
சில மாதங்களுக்கு முன்னர் சிவகங்கை அருகே வேறு சாதி இளைஞரைக் காதலித்து திருமணம் செய்த பெண் தனது தந்தை மற்றும் உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார். கொல்லப்படுவது உறுதி என்று தெரிந்த பின்னர், தனது தங்கைக்குத் தன்னுடைய நகைகளைக் கொடுக்குமாறு கழற்றிக் கொடுத்திருக்கிறார் அப்பெண். கொல்லப்படும் முன்னர் அப்பெண்ணின் மனதில் என்னென்ன எண்ணங்கள் ஓடியிருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.
இத்தனை நாட்கள் தன்னை அரவணைத்த கைகள் மூர்க்கத்தனமாகத் தன்னைக் கொல்லும் என்று அப்பெண் நினைத்திருப்பாரா? தனது குழந்தை பிறந்த தருணத்தில் தனக்கு இருந்த மகிழ்ச்சி, அப்பெண்ணைத் தோளில் சுமந்து வளர்த்தது என்று நெகிழ்வான எந்த தருணமும் அந்தத் தந்தையின் நினைவடுக்குகளில் தோன்றவில்லையா? சாதி மாறித் திருமணம் செய்த பெண்ணைக் கொலை செய்வதன் மூலம் கவுரவம் காப்பாற்றப்படும் என்றால், கொலைக் குற்றத்துக்காகச் சிறை செல்வது, அது தொடர்பான செய்தி உலகமெங்கும் பரவுவது போன்றவை அவமானப் பட்டியலில் சேராதா? 'சாதனைப்' பட்டியலில் சேருமா? கேள்விகள் முடிவின்றி நீள்கின்றன. குற்ற உணர்வின் சுமையை நம் அனைவர்மீதும் சுமத்தியபடி நம்மீது கவிகின்றன. பதில்களைக் காணாமல் தவிக்கிறது மானுடத்தின் மனசாட்சி.
தொடர்புக்கு:chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT