Published : 11 Feb 2014 12:00 AM
Last Updated : 11 Feb 2014 12:00 AM

தேசத்தின் அடையாளமா பாகுபாடுகள்?

மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் அல்லது இவற்றுள் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் குடிமக்கள் பாகுபாடு காட்டப்படுவதை இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளைப் பற்றிய பகுதி தடை செய்கிறது. ஆனால், இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்து 64 ஆண்டுகள் கழிந்தும் மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம், மொழி, நிறம், வர்க்கம் ஆகியவற்றில் ஏதோ ஒன்றின் அடிப்படையில் அரசாலோ சக குடிமக்களாலோ பாகுபாட்டுக்கு ஆளாவது என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு அன்றாட நிகழ்வாக இருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்களுள் ஏதோ ஒன்றின் அடிப்படையில் பாகுபாட்டுக்கு ஆளாகும் ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினரை வேறொரு அம்சத்தின் அடிப்படையில் பாகுபாட்டுக்கு ஆளாக்குவது என்பதும் அன்றாட யதார்த்தமாக இருக்கிறது.

மஞ்சள் நிறத் தலைமுடி, குற்றமா?

டெல்லியில் சில நாட்களுக்கு முன்னர் அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் நிடோ தானியா ஒரு தகராறில் அடித்துக் கொல்லப்பட்டது இந்தப் பாகுபாட்டுப் பிரச்சினையின் தீவிரத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறது. இவரது தந்தை அருணாசலப் பிரதேசச் சட்டசபை உறுப்பினர். இந்தக் கொலை இனவெறி அல்லது இனப் பாகுபாட்டின் அடிப்படையிலானது அல்ல என்பது சிலரின் வாதம். தானியாவின் மெல்லிய மஞ்சள் நிறத் தலைமுடி ஏளனம் செய்யப்பட்டதுதான் தகராறுக்குக் காரணமாக அமைந்தது. அந்த ஏளனத்துக்கு அடிப்படை யாக அமைந்தது அவரது மங்கோலியத் தோற்றம் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய தோற்றம் கொண்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர் கள் டெல்லியில் ‘சிங்க்கி’ (சீன வம்சாவளியினர்) என்று ஏளனமாகக் குறிப்பிடப்படுகின்றனர்.

மேலும், இவர்களது சில உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆடை அலங்காரங்களின் காரணமாக வெளிப்படையாகவே பாகுபாட்டுக்கு ஆளாக்கப் படுவதும் கேலிக்குள்ளாக்கப் படுவதும் அடிக்கடி நடக்கிற விஷயங்கள். வேறு எந்தப் பகுதியைச் சேர்ந்த இந்தியர்களையும்விட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் டெல்லியில் அதிகப் பாகுபாட்டுக்கு ஆளாகின்றனர். இந்தப் பொதுப்போக்கி லிருந்து டெல்லி காவல் துறையினர் விதிவிலக்காக இல்லாதிருப்பது பிரச்சினையை மோசமாக்குகிறது. தானியா மீதான தாக்குதலை இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இது இனவெறி அடிப்படையில் நிகழ்ந்த தாக்குதல் என்று கருதுவதற்கே நிறைய இடமிருக்கிறது. சாதிவெறியால் நடக்கும் தாக்குதல்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

‘நாம்’, ‘பிறர்’

‘நாம்’, ‘பிறர்’என்ற இருமை நிலை உலகளாவிய ஒரு பிரச்சினை. ஏறக்குறைய எந்த நாடும் அல்லது சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் நிலவும் சாதியப் பாகுபாடு, மேற்கத்திய நாடுகளின் நிறம், இனம் அடிப்படையிலான பாகுபாடு, இஸ்லாமிய நாடுகள் பேணும் மதப் பாகுபாடு எனப் பல உதாரணங்களைக் காட்ட முடியும். இந்த நாடுகளில் இந்தப் பாகுபாடுகளைத் தவிர்த்து, வேறு விதமான பாகுபாடுகள் பல நிலவுவதையும் ஒருவர் சுட்டிக்காட்ட முடியும். வேற்றுமைகள் மற்றும் பன்மைத்தன்மை என்பது மனிதர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. அது இயற்கையின் நியதியும்கூட. ஆனால், இத்தகைய வேற்றுமைகளின் அடிப்படையில் ஒரு தனிமனிதனோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரோ பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுவதை ஒரு நவீன குடிமைச் சமூகம் முற்றிலுமாக நிராகரித்தாக வேண்டும். (இங்கு பாகுபாடு என்று சொல்லப்படுவது எதிர்மறையான பாகுபாட்டையே தவிர, சமூக முன்னேற்றத்துக்கு மிக அவசியமான பாகுபாடான இடஒதுக்கீடு போன்ற விஷயங்களை அல்ல).

ஆனால், பாகுபடுத்துவதை முற்றிலுமாக மீறிவருவது என்பது ஒரு சமூகத்துக்கு மட்டுமல்ல; தனிமனிதனுக்கே பெரும் சவால் என்பதற்கு காந்தியின் தொடக்க கால வாழ்வே ஓர் உதாரணம். தனது தென்னாப்பிரிக்க வாழ்வின் தொடக்க காலத்தில் அங்கு வாழ்ந்த தென்னிந்தியர், வடஇந்தியர் என இந்திய வம்சாவளியினர் அனைவரையும் தன் மக்களாகச் சமமாகப் பாவித்து, வெள்ளையர்களுக்கு இணையான உரிமைகளைப் பெற போராடிய காந்தியால், கருப்பின மக்களை அவ்வாறு சமமாகப் பாவிக்க முடிய வில்லை. கருப்பினத்தவரைக் கீழானவர்களாகப் பார்க்கும் மனநிலையிலிருந்து வெளிவர காந்திக்கே சில ஆண்டுகள் ஆயின. அப்படியிருக்க, இந்தியா இன்னமும் பாகுபாடுகளின் தேசமாக நீடிப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

இந்திய அரசின் எதிர்ப்பு

இத்தகைய பாகுபாடுகள் அனைத்தையும் தடை செய்யப்போவதாக இந்திய அரசியலைமைப்புச் சட்டம் அறிவித்தபோதிலும் இந்திய சமூகத்தில் நிலவும் அமைப்பு ரீதியான பாகுபாட்டின் காரணமாக தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், முஸ்லிம்கள் போன்றோர் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்தச் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தானியா சந்தித்ததைப் போன்ற அவமதிப்பை, தாக்குதலை தினம்தினம் சந்திக்கின்றனர். பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது தற்செயலானதல்ல. சில சட்டங்களை இயற்றியதைத் தவிர, இத்தகைய அமைப்புரீதியான பாகுபாடுகளை ஒழிக்க இந்திய அரசு இதுவரை பெரிதாக எந்த அரசியல், பொருளாதார நடவடிக்கையையும் எடுத்ததில்லை. சாதி, இனம் ஆகிய இரண்டும் வேறுவேறானவை என்றபோதிலும் இவற்றின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாட்டில் அநேகமாக எந்த வித்தியாசமும் கிடையாது. இதன் காரணமாகவே, 2001-ல் டர்பன் நகரில் நடந்த இனவெறிக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் உலக மாநாட்டில், இந்தியாவில் நிலவும் சாதியப் பாகுபாடு ‘தொழில் மற்றும் பரம்பரை அடிப்படையிலான பாகுபாடு’என்ற பெயரில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

ஆனால், இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இனவெறியும் சாதிவெறியும் ஒன்றல்ல என்பதே இந்திய அரசின் வாதம். இரண்டும் வேறுவேறானவை என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்க முடியாது. அதைப் போலவே, இரண்டும் பிறப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுபவை என்பதிலோ, இரண்டின் விளைவாக உருவாகும் பாகுபாட்டின் சாராம்சத்தில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதிலோ யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. இந்தியாவின் தொடர்ந்த ‘முயற்சிகளின்’விளைவாக டர்பன் மாநாட்டின் அடுத்த கட்டமாக 2009-ல் ஜெனீவாவில் நடந்த இந்த மாநாட்டில் ‘தொழில் மற்றும் பரம்பரை அடிப்படையிலான பாகுபாடு’ என்ற பகுதி கைவிடப்பட்டது. இனவெறி, நிறவெறி, சாதிவெறி, தேசியவெறி ஆகியவற்றுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது. இவை அனைத்தும் சமூகத்தின் ஒரு பிரிவு மற்றொரு பிரிவைச் சுரண்டுவதற்கான, ஒடுக்குவதற்கான கருவிகளே.

தோலின் நிறம்குறித்த இந்தியர்களின் மனப்பாங்கு, இந்தியாவில் எந்த அளவுக்கு இந்தப் பாகுபாடு பாராட்டல் வேரூன்றியிருக்கிறது என்பதற்கான ஒரு சரியான உதாரணம். சிவந்த நிறம் கொண்ட மணப்பெண் வேண்டும் என்று கேட்காத திருமண விளம்பரம் அரிதிலும் அரிது. இந்தியா ஒரு துணைக்கண்டமாக இருப்பதால் நிறம், இனம், மொழி, சாதி, மதம் என எல்லாவிதமான பாகுபாடுகளின் இருப்பிடமாக அது இருக்கிறது. சாதாரண மக்கள் மட்டுமல்ல, தங்கள் அரசியல் எதிரிகளைத் தாக்க இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தாத அரசியல் கட்சிகள் குறைவு. திராவிடத்தைத் தன் பெயரில் கொண்டிருக்கும் தி.மு.க., எம்.ஜி.ஆரை மலையாளி என்று தாக்கியதும், தமிழ்த் தேசியவாதிகளில் ஒரு பிரிவினர் பெரியாரை கன்னடியர் என்று தாக்கியதும் இந்த மனப்பாங்கின் விளைவே. இந்தியக் குடிமகளாகவும், இந்தியாவின் ஆகப் பெரிய அரசியல் கட்சியின் தலைவியாகவும் இருந்தும்கூட சோனியா காந்தி பிரதமராவதற்கு பா.ஜ.க-வும் மற்ற பல கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்ததற்குக் காரணமும் இந்தப் பாகுபாட்டு மனப்பான்மையே. ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில், சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கலவரங்கள் வெடிப்பதும், அதை அரசு எந்திரங்கள் வேடிக்கை பார்ப்பதும் இந்த மனப்பாங்கின் விளைவே. ஓர் இந்தியக் குடிமகன்/ள் இந்தியாவில் தான் விரும்பும் எந்தப் பகுதியிலும் தொழில் செய்யலாம், வாழலாம் என்றிருந்தபோதிலும், பல மாநிலங்களில் பிராந்திய அரசியல் கட்சிகள், வேலையின்மை உட்பட தங்கள் மாநிலத்தின் பல பிரச்சினைகளுக்கு அங்கு வாழும் பிற மாநிலத்தவர்களைக் காரணம் காட்டி, அவர்களுக்கு எதிராக மக்களை எளிதில் தூண்டிவிட முடிவதற்குக் காரணம் இந்த மனப்பாங்கு மக்களிடையே வலுவாக வேரூன்றியிருப்பதுதான். ப்யூ ஆய்வு மையம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, மக்களிடையே மதரீதியான பகைமையுணர்வு மிக அதிகமாக உள்ள உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்தியா குடியரசாகி 64 ஆண்டுகளாகியும் நம்மால் குடிமை தேசியத்தை உருவாக்க முடியவில்லை என்பது ஒரு மாபெரும் தோல்வி. “மனிதகுலத்திலிருந்து தேசப்பற்றை ஒழிக்காத வரை அமைதியான உலகம் சாத்தியமில்லை” என்றார் பெர்னாட் ஷா. தேசப் பற்றுடன் இனப்பற்று, சாதிப்பற்று, மதப்பற்று ஆகியவை ஒழிக்கப்படாத வரை இந்தியாவில் அமைதி சாத்தியமில்லை.

- க.திருநாவுக்கரசு, எழுத்தாளர், அரசியல் விமர்சகர்,தொடர்புக்கு: kthiru1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x