Last Updated : 08 Feb, 2017 10:15 AM

1  

Published : 08 Feb 2017 10:15 AM
Last Updated : 08 Feb 2017 10:15 AM

உங்களை மறக்க முடியாது சுர்ஜித் சிங் பர்னாலா!

ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்களில் மூழ்கிக் கிடந்தபோது, ஒரு தலைவரை நினைவுகூர மறந்துவிட்டது தமிழகம். அவர் நம் முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா. சிரோமணி அகாலி தளம் கட்சியில் குருசரண் சிங் டோரா, பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருடன் மூன்றாவது பெரும் தலைவராகக் கருதப்பட்டவர் சுர்ஜித் சிங். தமிழ்நாடு, ஆந்திரம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் ஆளுநராகவும் அந்தமான் - நிகோபர் தீவுகளில் துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தவர். நாட்டில் கித்வாய்க்குப் பிறகு, அதிக ஆண்டுகள் ஆளுநராக இருந்தவர்.

பஞ்சாப் மாநிலத்தில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் முதலமைச்சர் பதவி வகித்தவர் பர்னாலா (29.9.1985 - 11.6.1987). பொற்கோவிலில் நடந்த ‘நீல நட்சத்திர நடவடிக்கை’ என்ற ராணுவத் தாக்குதலால் சீக்கியர்கள் மன நிம்மதி இழந்திருந்த நாட்கள் அவை. தங்களின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்ற பஞ்சாபியர்களின் கோபமும் வருத்தமும் மேலும் அதனுடன் சேர்ந்துகொண்டது. மிகவும் கொந்தளிப்பான காலகட்டம் என்றால் அது மிகையில்லை.

கண்ணியத்துக்குரிய பர்னாலா

அரசியல் உள்நோக்கத்தோடு கருணாநிதி தலைமையிலான திமுக அரசைக் கலைக்க, ‘உரிய வகையில் அறிக்கை தருமாறு’ பிரதமர் சந்திரசேகர் கோரியபோது, அதை ஏற்க முடியாதென்று உறுதியாக மறுத்தவர் பர்னாலா. கண்ணியத்துக்கு உரிய பர்னாலாவைப் பதவி விலகுமாறு கேட்க முடியாமல், உடனடியாக அவரை பிஹார் மாநில ஆளுநராக இடம்மாற்றினார் சந்திரசேகர். போதும் இந்த அரசியல் அசிங்கம் என்று பதவியைத் துறந்தார் பர்னாலா.

திமுகவைப் போலவே சிரோமணி அகாலி தளமும் மாநிலக் கட்சிதான். ‘திராவிட நாடு’ என்ற கோரிக்கையை திமுக ஒருகாலத்தில் முன்வைத்ததைப் போல, ‘பஞ்சாபி சுபா’ என்ற கோரிக்கைக்காகப் போராடியது சிரோமணி அகாலி தளம். அத்துடன் “சண்டிகர் நகரத்தை பஞ்சாபுக்குத் தர வேண்டும்; பஞ்சாபி மொழி பேசும் பக்கத்து மாநில கிராமங்களைப் பஞ்சாபுடன் இணைக்க வேண்டும். ராவி - பியாஸ் நதிநீரில் பஞ்சாபுக்கு உரிய நீரைப் பெற்றுத் தர வேண்டும்” என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. திமுக வலியுறுத்திய ‘மாநில சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி’ என்ற கொள்கையையும் சிரோமணி அகாலி தளம் ஆதரிக்கிறது.

வரவேற்றது தமிழகம்

இவ்வாறு இரு கட்சிகளுக்கும் பொதுவான அம்சங்கள் பல தேசிய இனங்களின் உரிமைகளுடனும், மாநிலங்களின் உரிமை களுடனும் சம்பந்தப்பட்டது என்பதால், இரு மாநிலங்களுக்கும் இடையில் இயல்பாகவே ஒரு சகோதர உணர்வை உணர்ந்தார் பர்னாலா. இதனால்தான் சுர்ஜித் சிங் பர்னாலா இரண்டாவது முறையாகத் தமிழகத்தில் ஆளுநராக நியமிக்கப் படுவதைத் தமிழகமும் வரவேற்றது, அவரும் மகிழ்வுடன் பணியாற்றினார்.

ஹரியாணா மாநிலத்தில் இப்போதுள்ள அடேலி என்ற கிராமத்தில் 1925-ம் ஆண்டு பிறந்த சுர்ஜித் சிங், லக்னோவில் கல்லூரிப் படிப்பையும் சட்டப் படிப்பையும் முடித்தார். 1942-ல் ‘வெள்ளையனே வெளி யேறு’ இயக்கத்தில் பங்கேற்றார். முதல் முறையாக 1952-ல் போட்டியிட்டு, வெறும் 4 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். 1960-களில் அகாலி தளத்தில் தீவிரப் பங்கெடுத்துக்கொண்டார். குருசரண் சிங் டோரா, பிரகாஷ் சிங் பாதல், பர்னாலா மூவரும் கட்சியில் முப்பெரும் தலைவர்களாகத் திகழ்ந்தனர். 1969-ல் குர்நாம் சிங் முதலமைச்சராக இருந்தபோது அவருடைய அரசில் கல்வி அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது அமிர்தசரஸில் குருநானக் பெயரில் பல்கலைக்கழகம் ஏற்பட முக்கியப் பங்காற்றினார்.

ஃபராக்கா ஒப்பந்தம்

1975-ல் நெருக்கடி நிலை காலத்தில் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டார். 11 மாதங்கள் தனிமைச் சிறையில் இருந்தார். நெருக்கடி நிலை விலக்கப்பட்டு, 1977-ல் மக்களவைக்கு நடந்த பொதுத் தேர்தலில் சாங்ரூர் தொகுதியில் வெற்றி பெற்று, பிரதமர் மொரார்ஜி தேசாய் தலை மையிலான அரசில் வேளாண் அமைச்ச ராகப் பதவி வகித்தார். 1978-ல் வங்க தேசத்துடன் கங்கை நதி நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான வரலாற்றுப் புகழ் மிக்க ‘ஃபராக்கா’ ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் அவர்தான் கையெழுத்திட்டார்.

1979-ல் மொரார்ஜி தேசாய்க்கு எதிராக ஜனதா கட்சிக்குள் கலகம் பிறந்தபோது, அடுத்த பிரதமராகப் பரிசீலிக்கப்பட்டவர்களில் ஒருவர் பர்னாலா. குடியரசுத் தலைவராக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டியே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டதாகக் கூறுவார்கள்.

1986-ல் சீக்கியர்களின் மனப்புண்களை ஆற்றும் வகையில், பிரதமர் ராஜீவ் காந்தியும் அகாலிதளத் தலைவர் ஹர்சரண் சிங் லோங்கோவாலும் உடன்பாடு செய்துகொண்டனர். அந்த உடன்பாடு தொடர்பான பேச்சில் பர்னாலா முக்கியப் பங்கு வகித்தார்.

இந்திய ராணுவத்திலிருந்து விலக்கப்பட்ட சீக்கிய ராணுவ வீரர்களை, அவர்கள் அப்பாவிகளாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் பணியில் சேர்ப்பது, பஞ்சாபில் ராணுவச் சிறப்பு அதிகாரச் சட்ட அமலை முடிவுக்குக் கொண்டுவருவது, கலவரங்களிலும் பிற சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது, மாநிலப் பிரிவினையின்போது ஒப்புக்கொண்டபடி சண்டிகரை பஞ்சாபுக்குத் தருவது (இன்றுவரை இது நிறைவேறவில்லை), பஞ்சாப் மாநிலத்துக்கு உரிய பாசன நீரைப் பெற்றுத்தருவது உட்பட பல அம்சங்கள் அதில் இடம்பெற்றன. இந்த உடன்பாடு கையெழுத்தான பிறகு, தீவிர எண்ணப்போக்கு உள்ள சீக்கியர்கள் லோங்கோவாலையே கொன்றுவிட்டனர்.

மிதவாத நட்சத்திரம்

1996-ல் மீண்டும் பிரதமர் வேட்பாளராகும் வாய்ப்பு பர்னாலாவுக்கு வந்தது. அசாம் கணபரிஷத் தலைவர் பிரபுல்ல குமார் மகந்தா, தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு போன்றோர் பர்னாலாவைத்தான் பிரதமர் பதவிக்கான பொது வேட்பாளராக ஏற்க வேண்டும் என்று களத்தில் இறங்கினர். அப்போது அகாலிதளக் கட்சித் தலைவரான பாதல், பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து புதிய அரசியல் வியூகம் அமைத்தார். இதனால் மீண்டும் பர்னாலாவுக்கு அந்த வாய்ப்பு கைநழுவிப்போனது.

பர்னாலா ‘சஞ்சா மோர்ச்சா’ என்ற கூட்டணியைத் தொடங்கினார். அது நீண்ட நாளைக்குத் தாக்குப்பிடிக்க வில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால் மீண்டும் அகாலிதளத்தில் இணையவும் பர்னாலாவுடன் நெருங்கிச் செயல்படவும் விரும்பினார். அது கைகூடாமலேயே போய்விட்டது. பர்னாலா இறந்தபோது அவருக்கு வயது 91. இந்திய அரசியலில் மேலும் ஒரு மிதவாத நட்சத்திரம் மறைந்தது!

- வ.ரங்காசாரி,
தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x