Published : 20 Mar 2017 10:55 AM
Last Updated : 20 Mar 2017 10:55 AM

எதையும் பரபரப்பாக்க விரும்பும் உளவியல்!

சமீபத்தில், கர்நாடக மாநிலம் கொப்பல் என்ற ஊரில் 18 வயது இளைஞர் சைக்கிளில் சென்றபோது, அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தின் பின் சக்கரத்தில் சைக்கிள் சிக்கியது. இதில் படுகாயமடைந்து, ரத்த வெள்ளத்தில் விழுந்த நிலையில் உதவி கோரி பக்கத்திலிருந்தவர்களிடம் முறையிட்டுக்கொண்டே இருந்தார். அருகில் வந்த பலரும் தங்களுடைய செல்போனில் அவரைப் புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து, தங்களுடைய நண்பர்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர்.

அவருக்கு எப்படி உதவ வேண்டும் என்று தெரியாததாலோ வேறு காரணத்தாலோ யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. அங்கு வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸில் அந்த இளைஞர் சிறிது நேரத்துக்குப் பிறகு ஏற்றி அனுப்பப்பட்டார். ரத்த இழப்பு காரணமாகவும் மருத்துவமனைக்கு வர தாமதம் ஆனதாலும் அந்த இளைஞரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அடிபட்ட உடனே அவரை ஏதாவது ஒரு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்குக் அழைத்துவந்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரைச் சுற்றி நின்றவர்கள் அந்த விபத்தையும் அவரது ஓலத்தையும் காட்சிப்படுத்தலுக்குரிய ஒரு நிகழ்வாகத்தான் கருதியிருக்கின்றனர்.

வழக்கமான கதைதான்

வீதியில் எதையாவது வழக்கத்துக்கு மாறாகக் கண்டால், வேடிக்கை பார்ப்பது நம் வழக்கம். விபத்து நடந்தால், உடனே அங்கே வாகன நெரிசல் ஏற்படுகிறது. மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடம் இல்லாததால் அல்ல, வாகன ஓட்டிகள் அந்த இடத்துக்கு அருகில் தங்களுடைய வாகனத்தை நெருக்கி ஓட்டி, வேடிக்கை பார்த்தபடியே செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது. சைக்கிள்காரர்கள் ஒரு காலைத் தரையில் ஊன்றியபடி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். பாதசாரிகள் அருகில் செல்வார்கள்.

வெறும் ஆர்வம் காரணமாகப் பார்க்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. அந்தக் காட்சியைப் பார்த்தால் மட்டும் போதும் என்று நினைப்பதில்லை. அடுத்து ‘ஏதாவது நடக்க வேண்டும்’என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுவிடுகிறது. எப்படியும் போலீஸ்காரர்கள் வருவார்கள், பார்ப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்று நினைக்கின்றனர். நம்முடைய புராணங்களிலும் வரலாற்றிலும் இப்படிப் பல நிகழ்வுகள். நமக்குத் தொடர்பு இல்லாத ஒன்றில் ஈடுபடுவதையோ, முன்முயற்சி எடுத்து ஏதாவது செய்வதையோ நாம் விரும்புவதே இல்லை. தனியொரு ஆளாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கூட, கும்பல் கூடியதும் மற்றவர்களைப் போலவே நாமும் இருப்போம் என்று உதவாமல் ஒதுங்கிவிடுகிறார்.

செல்போன்களே கேமராவாகவும் இருப்பதால், எந்தக் காரணமும் இல்லாமல் பொது இடங்களில் கூடுகிறவர்கள் வெறுங்கண்ணால் உற்றுப்பார்க்கக் கூசி, கேமரா வழியாகப் பார்த்து வீடியோவாகவும் படம் பிடிக்கின்றனர். பிடித்ததை அப்படியே நண்பர்களுக்கு அனுப்புகின்றனர். என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்தை இப்படிப் படம் பிடித்து, எதையோ சாதித்துவிட்டதைப் போலப் போலியாகத் திருப்தி அடைகின்றனர். வித்தியாசமாக எது கிடைத்தாலும் அதைச் சமூக வலைதளத்தில் உடனே பகிர வேண்டும் என்பதும் பரவிவிட்டது. முன்பெல்லாம் கேமராக்களில் ஃபிலிம் போட்டுப் படம் பிடிப்பார்கள்.

அதை வீணாக்க விரும்ப மாட்டார்கள். இப்போது டிஜிட்டலாகிவிட்டதால், இடைவிடாமல் படம் பிடித்துக்கொள்கிறார்கள். சுற்றுலா செல்லும் மாணவர்கள் அந்த இடங்களை நன்கு சுற்றிப்பார்த்து அதைப் பற்றிய விவரங்களைக் கேட்பதைவிட, உடனுக்குடன் பல புகைப்படங்களை எடுத்து அனுப்புவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். புதிய இடத்தின் பசுமையும் வண்ணக் காட்சிகளும் கண்ணுக்கு இதமாக இருப்பதால், அந்தச் சூழலில் படம் எடுப்பதில் பரவசம் அடைகின்றனர்.

சட்டமும் மாற்றமும்

விபத்தின்போது நான் எடுத்த புகைப்படம் நாடு முழுக்கப் பரவியது என்பதே பலருக்கு அங்கு ஏதும் செய்யவில்லை என்ற உணர்விலிருந்து தப்பிக்க உதவுகிறது. வலியால் துடிப்பவரை நேரடியாகப் பார்ப்பதைவிட, கேமரா மூலம் பார்ப்பது அந்த பயங்கரக் காட்சியின் கொடூரத்தை ஓரளவுக்குக் குறைக்கிறது. இதனாலும் சிலர் குற்ற உணர்விலிருந்து விடுபடுகின்றனர்.

விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களைக் காவல் துறையினர் அலைக்கழிக்காமல் இருக்க, ‘ஆபத்து நேரத்தில் உதவுவோரைக் காப்பாற்றும் சட்டத்தை’கர்நாடக அரசு இயற்றியிருக்கிறது. வேடிக்கை பார்ப்பவர்களின் அச்சத்தை இது போக்கும். ஆனால், கொப்பலில் பார்த்ததைப் போல இனி நடக்காமலிருக்க, பார்வையாளர்களின் மனங்களில் நம்பிக்கை ஊட்ட இது போதுமானதல்ல. நம்பிக்கை மட்டும் போதாது, உதவ வேண்டும் என்ற முன்முயற்சி ஒருவரிடத்தில் தோன்ற வேண்டும். நாம் செய்யும் உதவியால் என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கவோ, ஊகிக்கவோ முடியாது. காவல் துறையினரின் நடவடிக்கைகளை நேரில் பார்த்தவர்களுக்கு அவர்கள் எப்படிக் கேள்விகளைக் கேட்பார்கள், நடத்துவார்கள் என்று தெரியும். எனவே, அஞ்சுவார்கள்.

கொப்பலில் விபத்தை வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர் ஒரு காரை நிறுத்தி, அந்த இளைஞரின் உடலை அதில் ரத்தம் சொட்டச் சொட்ட எடுத்துச் சென்றார் என்று கருதுவோம். அந்த காரிலும் ரத்தம் படியும். வேடிக்கை பார்த்தவரில் ஒருவர் இந்த காரின் நம்பர் பிளேட்டையும் செல்போனில் படம் பிடித்துவிடுவார். காரில் ஏற்றி அந்த இளைஞரைக் காயப்படுத்தியவரைக் கேள்வி கேட்பது போலவே, உதவியவரையும் போலீஸார் குடைந்து குடைந்து கேள்விகள் கேட்பர்.

அரசு மேற்கொள்ள வேண்டியவை

ஆபத்தில் சிக்கியவருக்கு உதவுபவரைக் காக்கும் சட்டம் இப்போதுதான் இயற்றப்பட்டிருக்கிறது. காவல் துறையினர் தங்களுடைய வழிமுறைகளை மாற்றிக்கொள்ள இன்னும் சில ஆண்டுகள் ஆகும். காவல் துறை பற்றிய அச்சத்தைவிட்டு மக்கள் உதவ வேண்டும் என்று நினைக்கும் அரசு, முதலில் காவல் துறையினரின் கண்ணோட்டத்தை மாற்ற உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். புலன் விசாரணையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை உடனே அமலுக்குக் கொண்டுவர வேண்டும்.

காவல் துறையினரை அதை கடைப்பிடிக்க வைக்க வேண்டும். புதிய சட்டத்தை கர்நாடகக் காவல் துறையினர் புரிந்துகொள்வார்களா, ஏற்பார்களா என்பது கேள்விக்குரியதே. அவர்கள் அதைப் புரிந்துகொண்டு, சில வழக்குகளில் அப்படிக் காப்பாற்றிய ஆபத்பாந்தவர்களின் பெயர்களைப் பிறர் அறிய வெளிப்படுத்தினால் மற்றவர்களுக்கு அச்சமும் அவநம்பிக்கையும் நீங்கிவிடும்.

கொப்பல் செய்தியைப் படித்தவர்கள் மனித நேயம் மாய்ந்துவிட்டதே, வாழ்வின் அறநெறிகள் மதிப்பிழந்துவிட்டனவே என்றெல்லாம் புலம்பினார்கள். ஒரு சிலர் இப்போதைய கல்வி முறையையும் குறைகூறினார்கள். சமூக நெறிகளைப் பற்றிப் பேசும்போது ஏன் கல்வியை அதில் இழுக்கிறார்கள்? அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கல்வியைப் பற்றி தட்டையான சிந்தனையுடனேயே இருக்கிறார்கள். கல்வி என்பது பாடம் படிப்பது மட்டுமல்ல, ஒரு அனுபவம். தான் யார் என்று உணரவும் மற்றவர்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடக்கவும் உதவும் சாதனம். இதில் முக்கியப் பங்காற்றக்கூடிய ஆசிரியர்களை எப்போதும் குறைத்து மதிப்பிடுகிறோம்.

இப்போதுள்ள ஆசிரியர்களுக்குக் கல்வியில் நாட்டமும் இல்லை, திறமையும் இல்லை. இவர்களுக்குப் பதிலாக கணினியைக் கொண்டு பாடம் நடத்திவிடலாம் என்றுகூடப் பொறுப்பின்றிக் கூறுகின்றனர். நல்ல மாண்புகளை மாணவர்களின் மனங்களில் பதியச் செய்ய ஆசிரியர்களை அன்றி மற்றவர்களால் முடியாது. இப்போதைய ஆசிரியர்களின் நிலையைச் சற்றே எண்ணிப் பாருங்கள். வகுப்பில் எத்தனை மாணவர்கள் இருக்கின்றனரோ அத்தனை செல்போன்களும் இருக்கின்றன.

செல்போன் வைத்துக்கொள்ள மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என்று பேசுவதைவிட அதைக் கொண்டு அவர்கள் பயனுள்ள செயல்களைச் செய்யப் பழக்க வேண்டும். இப்போது நல்ல ஆசிரியர் யார் என்றால், வகுப்பில் மாணவர்கள் செல்போன்கள் மூலம் தகவல்களைப் பெறுவதையும் அனுப்புவதையும் பார்த்தும் பார்க்காமல் இருப்பவர்தான்.

- கிருஷ்ண குமார், என்.சி.இ.ஆர்.டி.யின் முன்னாள் இயக்குநர்,
டெல்லி கல்வித் துறைப் பேராசிரியர்.
தமிழில்: சுருக்கமாக சாரி
©‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x