Published : 09 Jan 2017 09:28 AM
Last Updated : 09 Jan 2017 09:28 AM
“ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் இயற்கையின் அடிப்படை விதி. (மனிதர்கள் போன்ற) உயர் ரக உயிரினங்கள் மட்டுமன்று; மதம், கல்வி, சட்டம் எதுவும் அறியா புழு பூச்சிகள் கூட, கூடி வாழ்கிற அவசியத்தை உணர்ந்து இருக்கின்றன. கடல்கள், மேகங் கள், காடுகள், மலர்கள் எல்லாமும் இந்தத் தத்துவத்தையே முன் நிறுத்துகின்றன. சார்ந்து வாழ்தலில் தான் மனித இனத்தின் இருப்பு அடங்கி இருக்கிறது.” இது 14-வது தலாய் லாமாவின் பொன்மொழி.
ஒரு பழமொழி உண்டு. ‘மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'.
சீன நாட்டின் அணுகுமுறை அப்படித்தான் இருக்கிறது. பொருளாதாரம், ராணுவம்; மக்கள் தொகை எனப் பல வகைகளில் வலிமையான நாடு சீனா. ஆனாலும், ‘தலாய் லாமா, என்று யாரும் உச்சரித்தாலோ, ‘ஜூன் 4' என்கிற தேதியைக் கேட்டாலோ, சீனாவுக்கு உச்சந்தலையில் ஆணி அடித்தாற் போல் ஆகி விடுகிறது.
அது என்ன ஜூன் 4 என்கிறீர் களா..? 1989 ஜூன் 4-ம் தேதி, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில், சீன அரசுக்கு எதிராகப் போராட அந்த நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மீது ‘புல்டோசர்' ஏவி நூற்றுக்கணக்கான இளைஞர்களை அவர்களின் சொந்த நாட்டு அரசாங்கமே ஈவிரக்கமின்றி படுகொலை செய்து போராட்டத்தை நசுக்கியது. இப்போதும்கூட எங்கே தங்கள் மக்களுக்கு அந்த நாள் நினைவுக்கு வந்து விடப் போகிறதோ என்று சீனா அஞ்சிக் கொண்டு இருக்கிறது.
தியானன்மென் சதுக்கத்துக்கு இணையான அதை விடவும் நூறு மடங்கு அதிகம், கலவரத்தை உண்டு பண்ணுகிற இன்னொரு சொல் -
‘தலாய் லாமா'. திபெத் நாட்டை ஆக்கிரமித்த சீனா, அந்த நாட்டு ஆன்மிகத் தலைவரான ‘தலாய் லாமா' (14) என்கிற புத்த மதத் துறவியைக் கண்டு குலை நடுங்குகிறது.
பௌத்தர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிமுறை களை விளக்கிச் சொல்லும் ‘காலசக்ரா போதனைகள்' எனும் நிகழ்ச்சி பிஹாரின் புத்த கயாவில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்ற இருப்பதை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தலாய் லாமா உறுதி செய்தார்.
எனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகிற திபெத்திய மக்களை சீனா மிரட்டுகிறது. நேபாளம் செல்கிற திபெத்திய மக்கள், அவர்களின் பயணங்களை ஜனவரி 10 வரை ரத்து செய்யு மாறு கேட்டுக் கொண்டு இருப்ப தாக நேபாள ஊடகங்கள் தெரி விக்கின்றன. 2016 நவம்பர் மாதம் முதலே பல திபெத்தியர்களின் பாஸ்போர்ட்டுகள் சீன அரசால் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. சீன அரசின் மிரட்டல் காரணமாக 7000-க்கும் மேற்பட்ட திபெத்தியர், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் திரும்பிவிட்டனர்.
உலகம் முழுதும் அங்கீகரிக்கிற, பெரிதும் மதிக்கிற ஒரு துறவி, பகைமையை வளர்க்கிறார் என்று குற்றம் சுமத்துகிற சீன அரசு, அதே வேளையில் வேறு ஒரு செயலிலும் இறங்கி இருக்கிறது.
பாகிஸ்தானில் (பதுங்கி) உள்ள மசூத் அசார் என்கிற தீவிரவாதிக்கு எதிரான விவாதம் கூட நடைபெறா வண்ணம், ஐ.நா. பாதுகாப்பு சபையில் தடுத்து நிறுத்தி இருக்கிறது. புத்த மதத் துறவி தலாய் லாமாவை எதிர்க்கிற சீனாவுக்கு, உலகமே அஞ்சுகிற தீவிரவாதியை ஆதரிக்கிற வக்கிர மனப்பான்மை ஏன் தோன்றியது...?
இரண்டுக்குமே காரணம் - இந்தியா. நம் மீதான அடிப்படை யற்ற காழ்ப்புணர்வு தான், சீனாவை தடம் புரள வைத்து இருக்கிறது. திபெத்தியர்களின் உரிமைகளை மதித்து, அவர்களின் ஆன்மிக வழிகாட்டியான தலாய் லாமாவுக்கு நாம் புகலிடம் தந்துள்ளதால் நம் மீது சீனாவுக்கு உள்ள கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
‘நல்லதுக்குக் காலம் இல்லை..' என்பதற்கு சாட்சியம் கூறிக் கொண்டு இருக்கிறது - திபெத்திய மக்களின் போராட்டம். அவர்கள் சந்திக்கிற மற்றும் ஒரு சவால் -புத்தகயாவில் நடைபெறும் ‘காலசக்ரா போதனைகள்'. காலச் சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கிறது. என்றேனும் ஒரு நாள் விடியாமலா போய்விடும்...?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT