Published : 27 Sep 2018 09:49 AM
Last Updated : 27 Sep 2018 09:49 AM
எழுவர் விடுதலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, தமிழக அரசின் பரிந்துரைக்குப் பின் முதல்வர் பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இருவரையும் சந்தித்து வந்திருக்கிறார் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள். விவகாரம் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்று அவரிடம் பேசினோம்.
முதல்வர், ஆளுநரைச் சந்தித்து வந்திருக்கிறீர்கள்…
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இவர்கள் விடுதலையில் மிகுந்த அக்கறை காட்டினார். அதன் தொடர்ச்சிபோல பழனிசாமி தலைமையிலான இந்த அரசு உடனடியாக இந்த விஷயத்தை அக்கறையோடு அணுகியது. முதல்வருக்கு நன்றி சொன்னேன். ஆளுநரைச் சந்தித்தபோது என் கோரிக்கையை மனுவாகக் கொடுத்தேன்.
ஆளுநரின் அணுகுமுறை எப்படி இருந்தது?
மனுவை என் முன்பாகவே ஆளுநர் முழுமையாகப் படித்தார். மொழிபெயர்ப்பாளரிடம் சில விளக்கங்கள் கேட்டார். எனக்கு ஆங்கிலமோ இந்தியோ தெரியாது என்பதால், மொழிபெயர்ப்பாளர் வாயிலாக விசாரணை அதிகாரி தியாகராஜன் அளித்த ஒப்புதல் வாக்குமூலம், கே.டி.தாமஸ் சொல்லியிருக்கிற சட்டச் சிக்கல்கள், பேரறிவாளன் சிறையில் எப்படி நன்னடத்தையோடு இருக்கிறார் என்றெல்லாம் எனது மனுவில் குறிப்பிட்டிருந்த விஷயங்களைச் சொன்னேன். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கிருஷ்ணய்யர் பல கடிதங்களை எழுதினார். அவர் உயிரோடு இருந்தவரைக்கும் இதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். அன்றைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி என்று பலருக்கும் கோரிக்கைக் கடிதங்களை அவர் எழுதினார். அந்தக் கடிதங்களின் தொகுப்பையும் ஆளுநரிடம் காட்டினேன். அதையும் ஆளுநர் கேட்டு வாங்கிக்கொண்டார். மொழிபெயர்ப்பாளரிடம் அதைப் பத்திரமாக வைக்கச் சொன்னார். ‘இது இருபத்தெட்டு வருட வேதனை. நீங்கள் ஒரு கையெழுத்துப் போட்டால் எனது பிள்ளையை விடுதலை செய்துவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். நீங்கள் கையெழுத்துப் போட்டு, எனது குழந்தையைக் காப்பாற்ற வேண்டும்’ என்று அவரைக் கேட்டுக்கொண்டேன். சிரித்துக்கொண்டே அவர் ‘ஓகே’ என்று சொன்னார். அதன் பிறகு, மொழிபெயர்ப்பாளர் என்னைக் கிளம்பலாம் என்று சொன்னார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உச்ச நீதிமன்றத்தில் தெளிவான ஒரு முடிவு சொல்லியிருக்கிறார்கள். ஆளுநர் ஒப்புதல் கொடுத்தால் எல்லாம் நல்லதாக நடக்கும். மனிதர்களின் நல்லெண்ணங்களைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன்.
இன்னமும் சட்டரீதியாக, தர்க்கரீதியாகப் பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. மனிதாபிமானக் கோணத்தில் இந்தப் பிரச்சினை அணுகப்படும் என்று நம்புகிறீர்களா?
ஐயா, ராஜீவ் காந்தி எனக்கும் பிரதமராக இருந்தவர். அவர் கொலையை யார் நியாயப்படுத்த முடியும்? எல்லா உயிரும் உயிர்தானே. இன்று என் பிள்ளைக்காக நான் துடிப்பதுபோல்தான் ஒவ்வொரு வீட்டிலும் துடித்திருப்பார்கள். ஆனால், இங்கே குற்றவாளிகள் ஆக்கப்பட்டிருப்பவர்கள் சூழ்நிலைக் கைதிகள். அதிலும் பேரறிவாளனுக்கு ஒரு மண்ணும் தெரியாது. அதனால்தானே விசாரணை அதிகாரி தியாகராஜன் மனம் உருகித் தன் தவறை அவராக வெளியிட்டார். இந்த வழக்கில் கைதுசெய்யப்படும்போது பேரறிவாளன் 19 வயது மாணவன். இருபத்தெட்டு வருட காலம் என் வாழ்க்கை, என் குடும்ப வாழ்க்கை, எனது பிள்ளையின் வாழ்க்கை எல்லாமே போச்சு ஐயா... எல்லாமே போச்சு. மனிதாபிமானத்தை நம்புவதைத் தவிர, வேறு எதை ஐயா நாங்கள் நம்புவது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT