Last Updated : 04 Sep, 2018 09:06 AM

 

Published : 04 Sep 2018 09:06 AM
Last Updated : 04 Sep 2018 09:06 AM

ஜுர்கென் ஹெபர்மாஸ்: அறிவுஜீவியின் இலக்கணம்

என்னுடைய தலைமுறையைச் சேர்ந்த அறிவுஜீவிகளுக்கு எட்வர்ட் சய்யீத் பெரிய கதாநாயகர். கிழக்கு நாடுகளை விமர்சித்து எழுதிய மேற்கு நாடுகளின் அறிவுஜீவிகளைத் தாக்கி அவர் எழுதிய கட்டுரைகளால் நாங்கள் பூரிப்படைந்தோம். மூன்றாவது உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் - இஸ்ரேலின் குற்றச்செயல்களை அவர் கண்டித்த விதத்தையும், பாலஸ்தீனர்களுக்குக் காட்டிய பரிவையும் மிகவும் மெச்சினோம்.

என்னுடைய நண்பர்களில் சிலர் வளர்ந்த பிறகும் சய்யீத் மீது கொண்டிருந்த பக்தி குறையாமல் இருந்தனர். எனக்கோ லேசான அலுப்புத் தட்டியது. கீழ்த்திசை நாடுகளின் இலக்கியங்களைப் படிக்கப் படிக்க நல்ல புரிதல் ஏற்பட்டது. பலரைக் கண்டித்தும், சிலரை எப்போதாவது கேலிச்சித்திரம் வரைந்தும் விமர்சித்த அவர், பலரை ஒரு பொருட்டாகவே கருதியதில்லை. காலனி ஆட்சியின்போது இங்கு வந்த பாதிரியாரின் மகனான வெர்ரியர் எல்வின், காந்திஜியின் சீடராகவும் நேருவின் நண்பராகவும் விளங்கினார். அவரைப் பற்றிய வரலாற்றை நான் எழுதத் தொடங்கியதாலும் சய்யீதிடமிருந்து விலகினேன். மத்திய இந்தியாவில் வாழும் பழங்குடிகளின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபட்ட எல்வின் அவர்களிடையே வாழ்ந்தார்.

அறிவுஜீவிகள் எதைச் செய்யக் கூடாது?

அதிகாரத்தில் இருப்பவர்களிடத்திலேயே உண்மையைப் பேசினார் என்று என் நண்பர்கள் எட்வர்ட் சய்யீதை முன்மாதிரி அறிவுஜீவி என்று கொண்டாடுகின்றனர். அவருக்கு வரலாற்றுப் புரிதல் போதாது என்பது என்னுடைய கருத்து. அவருடைய அரசியல் கட்டுரைகளாலும் நான் மனநிறைவு பெற்றுவிடவில்லை. அவருடைய எழுத்து பகட்டானது, சுயத்தை மையமாகக் கொண்டது என்பதும் என் எண்ணம். சாமியார்களைப் போல அவருக்கும் ஒரு சீடகோடிகள் உருவாவதை நான் ரசிக்கவில்லை. ஜனநாயகத்தில் அரசியல் தலைவர்களும் அந்த வகையில் இறங்கினால் அது நல்லதல்ல. அதிலும் அறிவுஜீவிகள் விஷயத்தில் இப்படி ஏற்படவே கூடாது. இப்படி முகத்துதிக்கும் வெற்றுப் பாராட்டுகளுக்கும் அறிவுஜீவிகள் இரையாகிவிடக் கூடாது.

சய்யீத் பற்றியும் அவருடைய சீடர்கள் பற்றியும் பத்தாண்டுகளுக்கு முன்னர், அவர் இறந்தவுடனேயே எழுதியிருக்கிறேன். ஜெர்மானிய மெய்யியலாளரும் சமூகக் கோட்பாட்டாளருமான ஜுர்கன் ஹெபர்மாஸ் பற்றிய புதிய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது எனக்கு சய்யீத் பற்றிய நினைவுகள் மீண்டும் வருகின்றன. நவீன மேற்குலகில் ஹெபர்மாஸும் பெரிய அறிவுஜீவி. “அறிவுஜீவி ஒரு நிகழ்வு நடக்கும்போது வினையாற்ற வேண்டும். அதே சமயம், அளவுக்கு மீறி அதில் வேகம் காட்டிவிடாதபடிக்கு அரசியல் முதிர்ச்சியும் வேண்டும். நியாயமற்ற, சமத்துவமற்ற, நேர்மையற்ற உலகில் அறிவுஜீவிகள் அடிக்கடி வினையாற்றிவிட முடியாது. அடிப்படையான விஷயத்துக்குக் குரல்கொடுப்பதற்கு அறிவுஜீவிகள் மறக்கக் கூடாது. அரசியல் பிரச்சாரகர்கள்போல நடக்கக் கூடாது. பேச வேண்டிய தருணங்களில் உண்மையை வெகு நுட்பமாகப் பேச வேண்டும். வசைபாடல்களில் ஈடுபடக் கூடாது” என்கிறார் ஹெபர்மாஸ். ஆனால், இந்திய இடதுசாரி அறிவுஜீவிகள் இதைக் கடைப்பிடிக்கத் தவறுகிறார்கள். மார்க்சிஸ்ட்டுகள், சய்யீதர்கள் – சமீபகாலமாக அம்பேத்கரிஸ்ட்டுகளும் இதில் அடக்கம்.

ஹெபர்மாஸ் பற்றிய வாழ்க்கை வரலாற்றை அவருடைய முன்னாள் மாணவர் ஸ்டிஃபான் முல்லர்-டூம் எழுதியிருக்கிறார். அவர் ஓல்டன்பர்க் பல்கலைக்கழகச் சமூகவியல் பேராசிரியர். 1929-ல் பிறந்த ஹெபர்மாஸ், இரண்டாவது உலகப் போர் முடிந்தபோது 16 வயதுச் சிறுவனாக இருந்ததால், நாஜிப் படையில் சேர்க்கப்படவில்லை. ஆனால், நாஜிக்கள் நிகழ்த்திய பேரழிவை நேரில் பார்த்த சாட்சியாக இருந்தார். கோட்டிங்கென், பான் நகரங்களில் படித்தார். பிறகு தியோடார் அடோர்னோ, மேக்ஸ் ஹோர்கிமைய்ர் ஆகியோரிடம் பிராங்க்பர்ட்டில் உயர் கல்வி பயின்றார். மூனிக் நகரில் உள்ள ஆய்வுக் கழகத்தில் சிறிதுகாலம் இருந்துவிட்டு, பிராங்க்பர்ட் நகருக்குத் திரும்பி ஆசிரியராகப் பணியாற்றினார்.

நகர்ப்புற நக்ஸல்கள்?

அவர் எழுதிய முக்கிய புத்தகங்கள் குறித்து இந்நூலில் விவரித்து எழுதப்பட்டிருக்கிறது. அவருடைய உரைகளும் செய்தித்தாள்களில் எழுதிய கட்டுரைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. படித்தவர்கள் மட்டுமல்லாமல் பாமரர்களிடையேயும் பேசியிருக்கிறார் ஹெபர்மாஸ். அவர் நடத்திய விவாதங்கள் இன்றும் ஆய்வு செய்யப்படுகின்றன. ஹெபர்மாஸ் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களும் அவருடைய மனைவி உடே வெஸ்ஸல்ஹாப்டின் பங்களிப்பும் நூலில் நன்கு எழுதப்பட்டுள்ளது. சிறுவனாக இருந்தபோது உதட்டுப் பிளவைச் சரிசெய்ய சிலமுறை அறுவைச் சிகிச்சைக்கு ஆளான அவருக்கு, மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்துதான் வாழ வேண்டும் என்பது அனுபவத்தில் தெரிந்திருந்தது. இதுவே, அவருடைய மெய்யியல் சிந்தனையிலும் எழுத்திலும் பேச்சிலும் எதிரொலித்தது.

உலகப் போருக்குப் பிறகு மிகுந்த செல்வாக்கு மிக்க சமூகக் கோட்பாட்டாளராக ஹெபர்மாஸ் திகழ்ந்தார். அவருக்குப் பெரிய போட்டியாளர் பிரான்ஸைச் சேர்ந்த மைக்கேல் ஃபவ்கால்ட். 2004-ல் 75-வது பிறந்த நாளின்போது - மார்க்ஸ், நீட்ஷே, ஹைடெகர் ஆகியோருக்குப் பிறகு - மிகச் சிறந்த மெய்யியலாளராக ஹெபர்மாஸ் பாராட்டப்பட்டார்.

அவர் தீவிர தேசியவாதம் பேசாத நாட்டுப் பற்றாளர். போருக்குப் பிறகு மேற்கு ஜெர்மனி ஜனநாயக நாடாகத் திகழ வேண்டும் என்பதில் அக்கறையாக இருந்தார். தேவைப்பட்ட நேரங்களில் மட்டுமே அரசின் கொள்கைகளையும் அரசியல்வாதிகளையும் விமர்சித்தார். இடதுசாரிகளில் மிதவாதியான அவரை, தீவிர இடதுசாரிகள், தீவிர வலதுசாரிகள் என்று இருதரப்பாரும் சாடிவந்தனர். இடதுசாரிகளைத் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி, 1970-களின் பின்பகுதியில் அவர்களைப் பொதுவெளியில் தாக்கினர் ஜெர்மனி மக்கள். பழமைவாத விமர்சகர்கள் சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்களையும் ஹெபர்மாஸையும் மாவோயிஸ்ட்டுகளுடன் ஒப்பிட்டுக் கண்டித்தனர். “இடதுசாரி அறிவுஜீவிகளை உள்நாட்டுப் பகைவர்கள் என்று அறிவித்து, அவர்களை அவதூறாக ஏசி, பேச முடியாமல் வாயடைத்துவிட்டால், நம் அரசியலின் குடியரசு அடையாளத்துக்கு ஆபத்து வரும்போது அதை எதிர்த்துப் போராட ஆளில்லாமல் போய்விடும்?” என்று எச்சரித்தார் ஹெபர்மாஸ். அது இன்றைய இந்தியாவுக்கு மிகவும் பொருந்தும். சுயேச்சையான அறிவுஜீவிகளைத் ‘தேச விரோதிகள்’ என்றும் ‘நகர்ப்புற நக்ஸல்கள்’ என்றும் இழிவுபடுத்த மோடி பக்தர்கள் தயாராகிவிட்டனர். இந்த நோக்கத்தில் நல்ல கல்வித்தரம் வாய்ந்த சில பொது பல்கலைக்கழகங்களையும் ஆய்வு மையங்களையும்கூட தூற்றத் தொடங்கிவிட்டனர்.

இத்தாலிய வாரப் பத்திரிகையான எல்’எக்ஸ்பிரஸோ ஒரு முறை ஹெபர்மாஸைப் பேட்டி கண்டது. “ஒரு ஜெர்மானியராக இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டது. “சோவியத் ஒன்றியம் சிதறிய 1989, நாஜிகள் இறுதியாகத் தோற்கடிக்கப்பட்ட 1945 ஆகியவற்றை நம்மால் மறக்க முடியாமல் போய்விட்டது” என்று பதில் அளித்தார். இரண்டும் உலக வரலாற்றின் முக்கியமான ஆண்டுகள். இந்தியர்களுக்கு அப்படிச் சொல்ல வேண்டும் என்றால், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்ட நெருக்கடி நிலை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த 1977-ம், எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மீண்டும் இந்திரா காந்தியே ஆட்சிக்கு வந்த 1980-ம் முக்கியமான ஆண்டுகள்.

ஹெபர்மாஸும் சென்னும்

இந்தப் புத்தகத்தைப் படித்த உடனேயே, இதே போல அமர்த்தியா சென் பற்றியும் யாராவது வாழ்க்கை வரலாற்று நூல் எழுத வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஹெபர்மாஸ், அமர்த்தியா சென் இருவருக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இருவருமே தங்களுடைய துறை மட்டுமல்லாமல், பிற துறைகளிலும் புலமை மிக்க அறிவுஜீவிகள். இருவரும் துடிப்பாகச் செயல்படும் பொதுச் செயல்பாட்டாளர்கள். மக்களை வாட்டும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதில் ஆர்வம் மிக்கவர்கள். இருவருமே தொடக்க காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அடிப்படையில் பக்குவம் பெற்றவர்கள். ஹெபர்மாஸுக்கு உதட்டுப் பிளவும் நாஜிக்களின் வீழ்ச்சியும் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் என்றால், அமர்த்தியா சென்னுக்குப் புற்றுநோயும் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையும் முக்கிய நிகழ்வுகள். இருவரும் சொந்த நாடுகளில் விரும்பப்படுவதுடன் உலக அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட பெரிய ஆளுமைகள். இருவருமே இடது, வலது சிந்தனாவாதிகளில் தீவிரவாதப் பிரிவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்கள்.

இருவருக்கும் இடையில் வேறுபாடுகளும் உண்டு. ஹெபர்மாஸ் மெய்யியலாளராக இருந்து சமூகவியலாளராக மாறியவர். சென் பொருளாதார அறிஞராகத் தொடங்கி மெய்யியலாளராக மாறியவர். ஹெபர்மாஸ் ஜெர்மனியிலேயே எப்போதும் வாழ்ந்து பணி செய்தவர். சென் தனது இள வயதில் மட்டுமே இந்தியாவில் அதிகம் வாழ்ந்தவர். ஹெபர்மாஸ் நோபல் விருதை வாங்கவில்லை. அவர் மேதையாக விளங்கிய துறைகளை நோபல் பரிசுக் குழு பரிசுக்குரியதாகத் தேர்வுசெய்வதில்லை.

ஹெபர்மாஸ் பற்றிய நூல் அவரைத் தெய்வமாகப் போற்றிவிடவில்லையே தவிர, மிகுந்த மரியாதையுடன் எழுதப்பட்டிருக்கிறது. அமர்த்தியா சென் வாழ்க்கையும் பயனுள்ள ஆராய்ச்சிகளில் ஈடுபட்டது. பொருத்தமான ஒருவர் அவரைப் பற்றிய வரலாற்று நூலை எழுத வேண்டும். அவர் பொருளாதாரத்திலோ மெய்யியலிலோ தேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால், அவர் சென்னுடைய மாணவராகவோ, வங்காளியாகவோ இருந்துவிடக் கூடாது!

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x