Published : 19 Sep 2014 09:14 AM
Last Updated : 19 Sep 2014 09:14 AM
நீர்ப் பயணம் இன்றோடு நிறைகிறது. பயணத்தை எங்கே முடிப்பது? கொற்கை அழைக்கிறது. “கொற்கை பண்டைய தமிழரோட பெருந்துறைமுக நகரம். பாண்டியர்களோட கடல் தலைநகரம். முத்துக்குளிப்புக்குப் பேர் போன எடம். ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னாடியே தமிழ்க் கடலோடிங்க வெறும் மீன்பிடியில மட்டும் இல்ல; கடல் வாணிபத்துலயும் எவ்வளவு வல்லமையோட இருந்தாங்கங்கிறதுக்கான சாட்சியங்கள்ல ஒண்ணு” என்கிற நண்பர்களின் வார்த்தைகள் கொற்கையை நோக்கி மேலும் நகர்த்தின. கொற்கைக்குப் பயணமானேன்.
கடந்து வந்த பாதை
கொற்கை நோக்கி வண்டி முன்னேறுகிறது. நினைவுகளோ பின்னோக்கி ஓடுகின்றன. நம்முடைய கடலையும் கடலோடி களையும் புரிந்துகொள்வதற்கான இந்த நீர்ப் பயணத்தில், நாம் எந்த அளவுக்கு அவர்களைத் தெரிந்துகொண்டுவிட்டோம்? பெரியவர் சாமிப்பிள்ளை நினைவுக்கு வருகிறார். நம்முடைய கடலைப் பற்றியும் கடலோடிகளைப் பற்றியும் அவர்களுடைய சமகாலப் பிரச்சினைகளைப் பற்றியும் பிரமிக்கும் அளவுக்குப் பேசியவர். “ஐயா, நா சொல்லுற சேதிய மட்டும் வெச்சிக்கிட்டு எல்லாத்தயும் முடிவு செஞ்சிடாதீங்க. நமக்குக் கடலப் பத்தி தெரிஞ்ச சேதியெல்லாம் நம்ம முன்ன கெடக்குற கடலுல ஒரு துளி காணாது” என்றவர். காலமெல்லாம் கடலோடியவர். எந்த விஷயத்தைக் கேட்டாலும் தகவல் களைக் கொட்டுபவர். அவருக்குத் தெரிந்ததே ஒரு துளி காணாது என்றால், நாம் தெரிந்துகொண்டது எவ்வளவு இருக்கும்? ஏக்கமும் ஏமாற்றமுமே மிஞ்சுகின்றன. எனினும், ஒரு சின்ன சந்தோஷம் இருக்கிறது: நாம் அவர்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறோம். அவர்களுடைய பிரச்சினைகளின் மையத்தின் திசைகள் நமக்குப் புலப்பட ஆரம்பித்திருக்கின்றன.
ஒரு புயலால் பாதிக்கப்பட்டதாலேயே அரசாங்க அமைப்புகளால் வஞ்சிக்கப்பட்டு, அதிகார வர்க்கத்தால் புறக்கணிப்பட்டுக் கிடந்த தனுஷ்கோடி மக்களுடன் நாம் பேசினோம். நேற்றைக்கு அவர்கள் குரல் சட்டசபையில் எதிரொலித்தது. இன்றைக்கு, 50 ஆண்டுகளுக்குப் பின்பு, அங்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. சக மனிதர்களைப் புரிந்துகொள்ள ஆரம்பிப்பதன் தொடக்கப் புள்ளி இது. அவர்களுடைய பிரச்சினைகளைக் கரிசனத்துடன் அணுக ஆரம்பிப்பதன் தொடக்கப் புள்ளி. மாற்றங்கள் புரிதல்களிலிருந்தும் புள்ளிகளிலிருந்துமே தொடங்குகின்றன.
கொற்கையில் கடல் எங்கே?
நினைவுகள் அலைமோதிக்கொண்டே இருக்கின்றன. கொற்கைக்குள் நுழைகிறேன். இரு பக்கமும் நெல் வயல்கள், தென்னை - வாழைத் தோப்புகள், சாலையின் ஓரத்திலேயே நெல் கதிரடிக்கும் விவசாயிகள்... இதுவா ஒரு மாபெரும் துறைமுக நகரம் இருந்த இடம்? ஆம். இன்றைக்கு ஒரு சின்னக் கிராமமாகச் சுருங்கிவிட்ட இந்த ஊர்தான், அன்றைய பெரும் துறைமுக நகரம் என்கிறார்கள். கொற்கையில் கடல் இல்லை. “கடலு கொற்கய கொண்டுருச்சு. பின்னாடி அப்பிடியே இங்கிருந்து மூணர மைலு அந்தாண்ட ஓடிருச்சி. கடலு பின்வாங்கிட்டதால, கொற்க இப்ப வெறும் வயக்காடா மாறிடுச்சு” என்கிறார்கள். அதற்கு மேல் எதைக் கேட்டாலும், “புள்ளை முத்து புள்ளை ஐயாவைப் பாருங்க” என்கிறார்கள்.
கொற்கையைப் போலவே ஒருகாலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து, தேய்ந்த ஒரு வீட்டின் திண்ணையில் தனிமையில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடக்கிறார் பிள்ளை முத்து பிள்ளை. முதுமையும் தள்ளாமையும் வார்த்தைகளை முடக்குகின்றன. கொற்கையைப் பற்றிக் கேட்டால், ஒரு பாடலை முணுமுணுக்கிறார்.
“ஆல மரம் அரச மரம் ஆனதிந்த நாடு
அதன் பிறகு புளியமரம் ஆனதிந்த நாடு
நாலாய் உகுந்தன்னில்.... (தேம்புகிறார்)...
(குரல் புரியா வார்த்தைகள் கரைகின்றன)
கோலமாகாளி வெற்றிவேல் அம்மன்
கொலுவிருந்து அரசு செய்யும்
கொற்கை வள நாடு...” (மீண்டும் தேம்பல்)
பாண்டியர்கள் ஆட்சியின்போது மதுரையில், எப்படியான கட்டமைப்புகள் இருந்ததோ, அதேபோன்ற கட்டமைப்புகள் கொற்கையிலும் இருந்ததாகக் கூறுகிறார்கள். வீதிகளின் பெயர்கள்கூட மதுரையை ஒத்து இருந்ததாகச் சொல்கிறார்கள். கொற்கையின் பல இடங்களில் மண்ணைத் தோண்டும்போது, கடல் சிப்பிகளும் சங்குகளும் நாணயங்களும் கிடைத்ததாகச் சொல்கிறார்கள். அப்படிக் கண்டெடுக்கப்பட்ட விவரங்கள் எல்லாம் பிள்ளை முத்து பிள்ளைக்குத் தெரியும் என்கிறார்கள். இந்தத் தகவல்களையெல்லாம் புறந்தள்ள முடியாது. கொற்கையிலிருந்து பத்து மைல் தொலைவில்தான் ஆதிச்சநல்லூர் இருக்கிறது. பெரியவரிடம் பேசினால், எல்லாவற்றையும் சொல்லிவிட அவருடைய இதயம் துடிக்கிறது. முதுமையோ அழுத்திப் பிடித்து நெரித்து வார்த்தைகளைச் சிதைக்கிறது.
பொட்டவெளித் துறைமுகம்
பிள்ளை முத்து பிள்ளை வீட்டிலிருந்து வெளியேறி, அந்தச் சின்ன கிராமத்தின் மையப் பகுதியைத் தாண்டிச் சென்றால், துறைமுகம் இருந்த இடம் என்று ஒரு கோயிலைச் சுட்டிக்காட்டுகிறார்கள். கோயில் வாசலில் ‘பழமை வாய்ந்த துறைமுகம் கொற்கை’ எனும் எழுத்துகள் பொறிக்கப்பட்ட தமிழக அரசின் வளைவு நிற்கிறது. சுற்றியுள்ள பொட்டல்வெளியில் ஆடுகள் மேய்கின்றன. சுட்டெரிக்கும் அந்த வெயிலில், ஓடும் ஆடுகளின் போக்குக்கேற்ப சத்தம் கொடுத்துக்கொண்டே ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் இரு கீதாரிகள். ரொம்ப நேரமாக அங்கேயே நின்று கவனிப்பதை உணர்பவர்கள் அருகே வருகிறார்கள்.
“ஐயா யாரு? ஊருக்குப் புதுசுங்களா?”
கதை தொடர்கிறது. களம் மாறுகிறது. ஆம். நாம் நீரிலிருந்து நிலத்தை நோக்கிப் பயணமாகப்போகிறோம். நம்முடைய நிலப் பழங்குடிகள் விவசாயிகளின் கதைகளைக் கேட்கப்போகிறோம். விரைவில். இடையில் ஒரு சின்ன இடைவெளி.
(பயிர்கள் தழுவும்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT