Published : 05 Sep 2014 08:34 AM
Last Updated : 05 Sep 2014 08:34 AM
இரண்டாவது உலகப் போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 'அச்சு நாடுகள்' தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆசையில் போரில் ஈடுபட்டன. பிரிட்டன், சோவியத் யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட 'நேச நாடுகள்' தவிர்க்க முடியாமல்தான் போரில் இறங்கின. போலந்து மீது ஜெர்மனி படையெடுத்ததைக் கண்டித்து, பிரிட்டனும் பிரான்ஸும் போரில் குதிப்பதாக அறிவித்தன. எனினும், போலந்தின் உதவிக்கு இரண்டு நாடுகளும் உடனடியாகச் சென்றுவிடவில்லை. ஹிட்லரின் பார்வை பிரான்ஸ் பக்கம் திரும்பிய பின்னர்தான், பிரிட்டன் முழு மூச்சில் போரில் இறங்கியது.
பதில் தந்த பிரிட்டன்
ஜெர்மனியின் தாக்குதலைத் தாங்க முடியாமல் அதனுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டது பிரான்ஸ். அதன்படி நாடு இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. ஜூன் 21-ல் இத்தாலியப் படைகள் தெற்கு பிரான்ஸைத் தாக்கின.
1940 ஜூலை 10-ல் இங்கிலாந்து மீது ஜெர்மானிய விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. ஆனால், பிரிட்டிஷ் விமானப் படையின் திறமையும் வீரமும் ஜெர்மானிய விமானப் படைக்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. பிரிட்டனுக்குள் கடற்படை மூலம் ஊடுருவும் முயற்சியை செப்டம்பர் 30-ல் ஜெர்மனி நிறுத்தியது. வட ஆப்பிரிக்காவில் அபிசீனியாவைக் கைப்பற்றிய இத்தாலி, அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் திணறியது.
இத்தாலியின் உதவிக்காகத் தனது பெரும்படையை ஆப்பிரிக்காவில் இறக்கியது ஜெர்மனி. அதே வேளையில், சூயஸ் கால்வாயைக் கைப்பற்றவும், கடல் வழியாக பிரிட்டனுக்கு எந்த வித சரக்குகளும் போர்க்கருவிகளும் தளவாடங்களும் துருப்புகளும் சென்றுவிடாமலிருக்க கடல் பரப்பில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது ஜெர்மனி.
போர் தொடங்குவதற்கு முன்னால் தன்னுடன் நண்பராக இருந்து, பிறகு எதிரியாக மாறிய சோவியத் யூனியனுக்குப் பாடம் கற்பிக்க அந்த நாட்டின் மீது படையெடுக்க உத்தரவிட்டார் ஹிட்லர். இதனால், ஆப்பிரிக்கக் கண்டத்தில் நேச நாடுகளால் எளிதில் வெற்றிபெற முடிந்தது. தன் மீதான வான் தாக்குதல் முடிவுக்கு வந்ததால் பிரிட்டன் நிம்மதியடைந்து பிரான்ஸை விடுவிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. தவிர, உலகின் மாபெரும் சக்திகளாக உருவெடுத்த சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவின் உதவியால் பிரிட்டன் பெரும்பலம் பெற்றது.
வென்றுகாட்டிய சோவியத் யூனியன்
ராணுவ வலிமை மிக்க நாடாக இருந்தாலும், சோவியத் யூனியன் முதலில் இந்தப் போரில் அக்கறை செலுத்தாமல் இருந்தது. ஆனால், ஜெர்மனி 1941 ஜூன் 22-ம் தேதி பால்டிக் கடற்கரையிலிருந்து கருங்கடல் வழியாக சோவியத் யூனியனின் தென் பகுதியில் நுழைந்தது. ஜெர்மனி ஒரு நாள் நம்மீது படையெடுக்கும் என்று எதிர்பார்த்திருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் நம்மை நோக்கி வந்துவிட்டதே என்று சோவியத் யூனியன் வியப்படைந்தது.
1942-ன் தொடக்கத்தில், தலைநகர் மாஸ்கோவை நெருங்கி விட்ட ஜெர்மானியப் படைகளை ரஷ்யக் குளிரும், அந்த நாட்டின் ராணுவ பலமும் சிதறடித்தன. ஜெர்மனி பின்வாங்கித் திரும்பும் வழியில், ஸ்டாலின்கிராட் என்ற இடத்தில் சண்டையிலும் அதன்பின் கர்ஸ்க் என்ற இடத்தில் நடந்த சண்டையிலும் ஜெர்மனிக்குப் பலத்த அடியைக் கொடுத்தது சோவியத் யூனியன்.
1945 ஏப்ரலில் பெர்லினில் ரஷ்யப் படை நுழைந்தது. தகவல் அறிந்த ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் தனக்கு நெருக்கமான அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நிலவறையில் இருந்தபடியே விஷம் குடித்தும், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும் தற்கொலை செய்துகொண்டார்.
சொல்லி அடித்த அமெரிக்கா
பேர்ல் ஹார்பர் மீது 1941 டிசம்பர் 7-ல் ஜப்பான் அதிரடித் தாக்குதல் நடத்தும்வரை, அமெரிக்கா நடுநிலைதான் வகித்தது. அதன் பின்னர்தான் போரில் குதித்தது. அமெரிக்காவின் மேஜர் ஜெனரல் டிவைட் டி. ஐசனோவர் நேச நாடுகளின் தலைமைத் தளபதியாக அறிவிக்கப்பட்டார். அமெரிக்கப் படைகள் பிரிட்டிஷ் படைகளோடு இணைந்து ஜெர்மனி, இத்தாலியப் படைகளுக்கு எதிராகப் போர் தொடுத்தன. தொடக்கத்தில் அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளுக்கு ஜெர்மனி கடும் நெருக்கடி கொடுத்தது. அந்த நேரத்தில் நேச நாடுகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து, அச்சு நாடுகளை கிழக்கு, மேற்கு என்று இரு திசைகளிலிருந்தும் தாக்கி நிலைகுலைய வைத்தன.
ஜெர்மனியின் பிடியிலிருந்து ஐரோப்பிய நாடுகளை விடுவிக்க இத்தாலிக்குள் நுழைய நேச நாடுகள் முடிவெடுத்தன. இத்தாலிக்குச் சொந்தமான சிசிலித் தீவு மீது முதலில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. பொருளாதார பலம், ராணுவ பலம் என்று பெரும் சக்தியாக உருவெடுத்திருந்த அமெரிக்கா, நேரடியாகப் போரில் இறங்கியதால், நேச நாடுகள் உற்சாகத்துடன் போரிட்டன.
பசிபிக் கடல் பகுதியில் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் நடந்த சண்டை தொடர்ந்தது. ஜப்பானியர்கள் இறுதிவரை மூர்க்கமாகச் சண்டையிட்டனர். நீண்ட காலமாகப் போர் செய்த களைப்பு, இந்தப் போர் மேலும் தொடர்கிறதே என்ற வெறுப்பு காரணமாக அணுகுண்டை வீசி அச்சுறுத்த அமெரிக்கா முடிவுசெய்தது. அந்தக் கொடூரச் செயலுக்கு இந்தக் காரணம் நியாயம் செய்யாது என்றாலும், இன்றும் பல தருணங்களில் தங்கள் முடிவு சரியானதுதான் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு. 1945 ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் பி-29 ரக பாம்பர் விமானம் ஹிரோஷிமா நகரின் மீது முதல் அணுகுண்டைப் போட்டது.
விளைவுகள் மிகக் கொடூரமானதாக இருந்தபோதிலும் ஜப்பான் சரண் அடைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. எனவே, நாகசாகி மீது இரண்டாவது அணுகுண்டு போடப் பட்டது. 1945 ஆகஸ்ட் 15-ல் ஜப்பான் முறைப்படி சரண் அடைந்தது. இரண்டாவது உலகப் போர் முடிந்தது.
இந்தப் போருக்குப் பிறகு அமெரிக்கா, சோவியத் யூனியன் இரண்டும் இரு பெரிய வல்லரசுகளாக உருவெடுத்ததும் அந்த நாடுகளுக்கு இடையில் பனிப்போர் தொடங்கியதும் தனி வரலாறு.
- சாரி, தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT