Published : 24 Sep 2018 08:59 AM
Last Updated : 24 Sep 2018 08:59 AM
சமஸ்மத்திய லண்டன் பகுதியைக் கடக்கும்போதெல்லாம் டிரஃபால்கர் சதுக்கம் தன்னை நோக்கி இழுத்தது. பிரெஞ்சு, ஸ்பானிய கடற்படைகளை 1805-ல் ஸ்பெயின் நாட்டின் டிரஃபால்கர் முனையில் பிரிட்டிஷ் கடற்படை தளபதி நெல்சன் தோற்கடித்ததன் ஞாபகார்த்த சதுக்கம் இது. நெல்சனுக்கு ஒரு பெரிய நினைவுத் தூணும் அமைத்திருக்கிறார்கள். பீடத்தில் நான்கு பிரமாண்ட சிங்கங்கள் சுற்றி அமர்ந்திருக்க 169 அடி உயரத்தில் நிற்கிறார் நெல்சன்.
குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. இருவரும் சதுக்கத்தை நோக்கி நடந்தோம். சதுக்கக் கதைகள் சொன்னபடி வந்தார் ஹெலன். “இந்த இடத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. மக்கள் கூடும் ஒரு கலாச்சாரத் திடலாக இது இருக்க வேண்டும் என்று 1812-ல் இதைப் பொது இடமாக மேம்படுத்தினார் கட்டுமானவியலாளர் ஜான் நாஷ். 1830-ல் இதற்கு டிரஃபால்கர் சதுக்கம் என்று பெயரிட்டார்கள். 1838-ல் நெல்சனுக்குச் சிலை அமைக்கும் பணி தொடங்கியது. பீடத்தின் நான்கு புறங்களிலும் சிங்கங்களைச் சேர்க்கும் பணி 1867-ல் முடிந்தது. இந்தச் சிங்கங்கள் ஒவ்வொன்றின் எடையும் ஏழு டன்கள். சிங்கத்தின் கால் விரல்களைக் கவனியுங்கள். வித்தியாசமாக இருக்கும். இவை சிங்கத்தின் கால்கள் அல்ல; பூனையின் கால்கள் என்ற பேச்சு இங்குண்டு. உலகப் போரில் லண்டனைக் கைப்பற்றினால் இந்தச் சிலைகளை அப்படியே ஜெர்மனிக்குக் கொண்டுசெல்லும் திட்டம் ஹிட்லரின் படைகளுக்கு இருந்திருக்கிறது.”
பூனைக்கால் சிங்கங்களைப் பார்த்தேன். ஏனோ அவை மிகுந்த பரிதாபத்துக்குரியவையாகத் தோன்றின. வருடிக்கொடுத்தேன். பரிச்சயமான தமிழ் முகம் ஒன்றை அப்போது கண்டேன். இயக்குநர் கே.வி.ஆனந்த். நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் படப் பணிகளுக்காக வந்திருப்பதாகச் சொன்னார். கொஞ்ச நேரம் அளவளாவிவிட்டு கலைந்தோம். சதுக்கத்தில் ஒரு இளைஞர் குழு நடனமாடி காசு வசூலித்துக்கொண்டிருந்தது. ஹல்க் வேஷத்தில் தரையில் கால்கள் படாமல் நின்றபடி காசு வாங்கிக்கொண்டிருந்தார் ஒரு பெண். எல்லா நாட்டுக் கொடிகளையும் தரையில் வரைந்திருந்தார் ஒரு இளைஞர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவரவர் நாட்டு கொடிக்கு அருகில் காசு போட்டார்கள்.
டிரஃபால்கர் சதுக்கம் அமைந்திருக்கும் இடம் பல நூற்றாண்டு காலம் அரசக்குடியினர் வாழிடமாக இருந்திருக்கிறது. பிற்பாடு போர் வெற்றியை நினைவுகூரும் சதுக்கம். இன்று அது ஜனநாயகக் குரல்கள் ஓங்கி ஒலிக்கும் களம். நகரில் ஜனசந்தடி மிக்க இங்கு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இணையாகப் போராட்டங்களும் கொண்டாட்டமாக நடக்கும் என்றார் ஹெலன்.
“பிளடி சண்டே பேரணி, முதலாவது ஆல்டர்மாஸ்டன் பேரணி, போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் என்று பிரிட்டனின் வரலாற்றுப் புகழ் மிக்க பல போராட்டங்கள் இங்கேதான் நடந்தன. எப்போதெல்லாம் போராட்டங்கள் நடக்கின்றனவோ அப்போதெல்லாம் நெல்சனையும் போராட்டக்காரர்கள் தங்கள் ஆளாக மாற்றிவிடுவார்கள். நெல்சன் சிலையின் கைகளில் தங்கள் போராட்டப் பதாகையைக் கட்டிவிடுவார்கள். அவர் மீது போராட்டக் கொடியைப் போர்த்திவிடுவார்கள். லண்டனில் காற்று மாசைத் தடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நெல்சன் சிலைக்கு சுவாசக்கவசத்தை அணிவித்துவிட்டார்கள்.” தன்னுடைய செல்பேசியிலிருந்து அப்போது எடுக்கப்பட்ட படங்களை ஹெலன் காட்டினார்.
“போராட்டக்காரர்களை பிரிட்டன் அரசாங்கம் எப்படி எதிர்கொள்ளும்?”
“இரு தரப்புகளுமே கூடுமானவரை கண்ணியம் காப்பார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் இறங்குவது இங்கே அரிது. அதேபோல, மக்களுடைய போராட்ட உரிமையில் அரசும் குறுக்கிடாது. ஒருமுறை இளவரசர் சார்லஸின் காரை ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்துவிட்டார்கள். சார்லஸின் கார் மீதே ஒருவர் பாய்ந்தார். அப்போதும்கூட காவல் துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை விலக்கி அகற்றினார்களே தவிர வன்முறையைப் பிரயோகிக்கவில்லை. நெல்சன் சிலைக்கு சுவாசக் கவசம் அணிவித்தார்கள் என்று சொன்னேன் இல்லையா, அந்தச் சமயத்தில் நீங்கள் வந்திருக்க வேண்டும். நகரத்திலுள்ள பெரும்பான்மை தலைவர்களின் சிலைகள் அப்போது போராட்டக்காரர்கள் அணிவித்த சுவாசக் கவசத்தோடு நின்றன. சர்ச்சில் முகத்தைப் பார்க்க பெரிய வேடிக்கையாக இருந்தது. எங்கும் சுற்றிலும் பெருங்கூச்சல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் இடத்தில் ஆட்சியாளர்களை அசைக்க சாமானிய மக்களுக்கு இப்படியான அணுகுமுறைகளைத் தாண்டி வேறு என்ன வழி இருக்கிறது? சரி, உங்கள் ஊரில் எப்படி?”
மக்களில் ஒரு பிரிவினர்தான் போராட வருகிறார்கள். போராட்டக்காரர்கள் வேறு; மக்கள் வேறு என்பதுபோல இரு தரப்புகளாகப் பிரித்து, மக்கள் கூடும் இடங்களில் போராட்டங்கள் கூடாது என்று சொல்லி, போராட்டங்களுக்கு என்று ஒதுக்குப்புறமான இடங்களை ஒதுக்கி, போராட்டக்காரர்களை அந்நியப்படுத்தி, அவர்களை சமூகவிரோதிகளாகவும் சித்திரித்து, அச்சத்தை நிறுவனமயமாக்கிக்கொண்டிருக்கும் நம்மூரின் இன்றைய கலாச்சாரத்தைப் பற்றி பெருமையாகப் பேச என்ன இருக்கிறது? மௌனமானேன். என்னுடைய மௌனத்தை உடைப்பதுபோல “காந்தி நடத்திய சத்தியாகிரகப் போராட்டங்கள் இன்றும் பிரிட்டனில் நினைவுகூரப்படுகின்றன” என்றார்.
“ஒரு நாடு ஜனநாயகத்தைப் பழகக்கூட ஒரு நீண்ட பயணம் தேவைப்படுகிறது இல்லையா?”
“உண்மைதான், பிரிட்டனில் இன்று நிலவும் ஜனநாயகச் சூழலுக்குப் பின் ஆயிரம் வருஷப் பயணம் இருக்கிறது. 1215-ல் இங்கு ‘மாக்னா கார்டா’ மகா சாசனம் வெளியிடப்பட்டது. மன்னரிடத்தில் குவிந்திருந்த அதிகாரங்களைப் பரவலாக்கி ஜான் மன்னர் விஸ்தரித்தது முக்கியமான முதல் படி. 1376-ல் மக்களவையைப் பிரதிநிதிப்படுத்துவதற்கு நிரந்தரமாக முதல் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, 1688 பெரும் புரட்சி. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் போராட்டம் முடியாட்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கியிருந்தது. அதைத் தொடர்ந்து, அதன் மிக பலவீனமான வடிவத்தை, அதாவது அரசியலமைப்பில் மட்டுமே பெயரளவுக்கு முடியாட்சியை ஏற்றுக்கொண்டது படிப்படியாக இன்று நாட்டின் உண்மையான அதிகாரத்தை நாடாளுமன்றத்திடம் கொண்டுவந்திருக்கிறது.”
“நாம் அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம். பிரிட்டனில் தொழில் புரட்சி நிகழ்ந்த அந்த அரை நூற்றாண்டு காலகட்டம் எவ்வளவு முக்கியமானது? பிரிட்டனில் தொழில் புரட்சி நடந்துகொண்டிருக்கும் அதே காலகட்டத்தின் இடையில்தான் உங்களுக்கு மிக அருகில் பிரெஞ்சு புரட்சி நடக்கிறது. தொழில் புரட்சியினூடாகவே பிரிட்டனில் அறிவொளி புரட்சியும் நடந்தது முக்கியமான ஒரு சேர்க்கை. எல்லாவற்றுக்கும் மேல் உலகெங்கிலுமிருந்து நீங்கள் சேர்த்த செல்வம், பெரும் உபரி உங்களிடம் இருந்தது. பிழைப்பிக் கவலையைத் தாண்டும்போதுதானே ஒரு சமூகம் விழுமியங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறது?”
ஹெலன் ஆமோதிப்பதுபோல தலையசைத்தார். “வரலாற்றில் எல்லாம் ஒன்றோடு ஒன்றாகத்தான் பிணைந்திருக்கின்றன. எங்கள் ஜனநாயக வரலாற்றைப் பேசும்போது ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் வரலாற்றையும் பேசத்தான் வேண்டும். சரி, இந்தியாவில் சுதந்திரப் போராட்டக் காலத்தினூடாகவே ஜனநாயகத்துக்கான போராட்டங்களும் நடந்தன அல்லவா?”
“அப்படி இரண்டையும் ஒன்றாக்கிவிட முடியாது. விரிவான பொருளில் நாம் பேச வேண்டும் என்றால், ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் நடந்தன. ஆனால், சுதந்திரம், சுயாட்சி என்ற முழக்கங்கள் சென்றடைந்த அளவுக்கு ஜனநாயகத்துக்கான குரல்கள் சாமானிய மக்களைச் சென்றடையவில்லை. சொல்லப்போனால், 1951 தேர்தலுக்குப் பிறகுதான் பெரும்பான்மை மக்களை ஜனநாயகம் என்ற சொல்லே சென்றடைந்தது. ஒரு பத்தாண்டு காலம் நல்ல முன்னகர்வு இருந்தது என்று சொல்லலாம். 1963-ல் கொண்டுவரப்பட்ட பிரிவினைவாதத் தடைச் சட்டம், 1975-ல் கொண்டுவரப்பட்ட நெருக்கடிநிலை இரண்டும் காலாகாலத்துக்குமான பாதிப்புகளை உண்டாக்கிவிட்டன. அரசியல் கட்சிகளின் சுதந்திர வெளியையும், கற்பனைகளையும், உரிமைக் குரல்களையும் இவை இரண்டும் சுருக்கிவிட்டன. 1991-ல் கொண்டுவரப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கை ஜனநாயகத்தை வேறொரு தளத்துக்கு நகர்த்தியது. இந்தப் புதிய தொழில்மயமாக்கல் காலகட்டம் அமைப்புரீதியாக ஜனநாயக விழுமியங்களை வளர்த்தெடுப்பதற்கான காலகட்டமாக அமைந்திருக்க வேண்டும். நேர் எதிராக நடந்தது துயரம். ஆனால், இப்போது ஒரு புதிய காலகட்டத்துக்குள் நுழைந்திருக்கிறோம். புதிய தலைமுறை ஜனநாயகத்தை வேறொரு இடம் நோக்கிக் கொண்டுசெல்கிறது!”
ஒரு சிறுமி எங்கள் கைகளில் ஒரு துண்டறிக்கையைக் கொடுத்துவிட்டு நின்றாள். “நீங்கள் விரும்பினால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் ஏன் விலகக் கூடாது என்பதை உங்களுக்கு விளக்குவேன்” என்றாள். அவள் பேச முழுமையாகக் கேட்டேன். “நான் உலகமே ஏன் ஒரு ஒன்றியமாக இருக்கக் கூடாது என்று யோசிப்பவனம்மா” என்று சொல்லி அவளுக்கு விடை கொடுத்தேன்.
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
(திங்கள்தோறும் பயணிப்போம்...)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT