Last Updated : 03 Sep, 2014 12:00 AM

 

Published : 03 Sep 2014 12:00 AM
Last Updated : 03 Sep 2014 12:00 AM

பாசிசத்தின் தந்தை பெனிடோ முசோலினி

உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள் பட்டியலில், ‘பாசிசம்' என்ற சித்தாந்தத்துக்குச் சொந்தக்காரரான பெனிட்டோ முசோலினிக்கு நிரந்தர இடம் உண்டு. 1922 முதல் 1943 வரை இத்தாலியை ஆண்ட முசோலினி, ஹிட்லருடன் இணைந்து இரண்டாவது உலகப் போரில் இறங்கியவர். வட மத்திய இத்தாலியின் பிரிடாபியோ பகுதியில் 1883 ஜூலை 29-ல் பிறந்தார் முசோலினி. அவரது தந்தை அலெசாந்த்ரோ முசோலினி, சோஷலிசத்தால் ஈர்க்கப்பட்டவர். மெக்ஸிகோ அதிபர் பெனிடோ யுவரோஸ், இத்தாலிய சோஷலிஸ்டுகளான ஆமில்கேர் சிப்ரியானி, ஆண்ட்ரியா கோஸ்டா ஆகியோரின் பெயர்களை இணைத்துத் தனது மகனுக்கு ‘பெனிடோ ஆமில்கேர் ஆண்ட்ரியா முசோலினி' என்று பெயர் சூட்டினார்.

1902-ல் வேலை தேடி சுவிட்சர்லாந்து சென்றார் முசோலினி. அங்கு சோஷலிஸ்ட் இயக்கத்தில் ஆர்வம் ஏற்பட்டது. 1904-ல் மீண்டும் இத்தாலிக்குத் திரும்பி, சோஷலிஸ்ட் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தார். சிறிது காலம் ஆசிரியராகவும் பணி யாற்றினார். 1915-ல் இத்தாலியின் ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் அதில் பணிபுரிந்தார். அபாரமான தனது பேச்சுத் திறமையால் அறிவுஜீவியாகக் கருதப்பட்டார்.

கருஞ்சட்டைப் படை

1919 மார்ச் மாதம் இத்தாலிய பாசிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். வேலையற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் அதில் சேர்ந்தனர். அவர்களைக் கொண்டு ‘கருஞ்சட்டைப் படை' ஒன்றை உருவாக்கினார். கருஞ்சட்டை வீரர்களுடன் ரோம் நகருக்கு மாபெரும் பேரணியாகச் சென்று ஆட்சியைக் கைப்பற்றப்போவதாக மேடைகள்தோறும் முழங்கினார் முசோலினி. அப்போது பிரதமராக இருந்த லூகி ஃபேக்டா இவர்களை ஒடுக்கத் தவறினார்.

சிறந்த நிர்வாகியாக இருப்பார் என்று கருதியோ என்னவோ, 1921-ல் முசோலினியிடம் ஆட்சியை ஒப்படைத்தார் மன்னர் விக்டர் இம்மானுவேல். முசோலினி பிரதமரானதும் நீதித் துறையின் செல்வாக்கைக் குறைத்தார். பத்திரிகைச் சுதந்திரத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். தன்னை ‘இல் டூச்சே' (நாட்டின் தலைவர்) என்று அழைக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார்.

இத்தாலியப் பேரரசு

‘இத்தாலியப் பேரரசை’ ஏற்படுத்த விரும்பிய முசோலினி, 1923-ல் கோர்ஃபு என்ற கிரேக்கத் தீவின் மீது குண்டுமாரி பொழிந்து அதைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இத்தாலியின் காலனியான லிபியாவில் அரசியல் கைதிகளுக்கு உடலுழைப்பு முகாம்களைத் திறந்து

வைத்தார். கைதிகளை விஷ வாயுவைச் செலுத்திக் கொல்லுமாறும் கட்டளையிட்டார். 1935, 1936-ல் அபிசீனி யாவைக் கைப்பற்றியபோதும் விஷவாயு முகாம்களில் பலர் கொல்லப்பட்டனர். தனது ஆட்சியை “பாசிசப் பேரரசு, சமா தானப் பேரரசு, நாகரிகம் – மனிதாபிமானம் கொண்ட பேரரசு” என்று மெச்சிக்கொண்டார் முசோலினி.

உலகப் போரில் வாங்கிய அடி

வாய்ச் சவடால் அடித்து வந்தாலும், உலகப் போரில் தீவிரம் காட்டாமல் 1940 ஜூன் வரையில் ஒதுங்கியே இருந்தார். அதற்குள் ஜெர்மானியப் படைகள் ஐரோப்பா முழுவதையும் கதிகலங்க வைத்திருந்தன. அடிக்கடி போர் திட்டங்களை மாற்றிக்கொண்டே இருந்து ராணுவத்தைக் குழப்பினார் முசோலினி. பிரான்ஸ் மீது அவர் நடத்திய தாக்குதல் ஜவ்வாக இழுத்தது. அதற்குள் ஜெர்மனியோடு போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டுவிட்டது பிரான்ஸ்.

கிரேக்க நாட்டின் மீது படையெடுத்த இத்தாலிய ராணுவம், அந்நாட்டு வீரர்கள் திருப்பி அடித்ததைத் தாங்க முடியாமல் அல்பேனியாவுக்குள் நுழைந்தது. அல்பேனியாவை இத்தாலி கைப்பற்றியதன் ரகசியம் அதுதான். வடக்கு ஆப்பிரிக்காவில் நடத்திய படையெடுப்பும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இழுபறியாகிவிட்டது. நல்ல வேளையாக ஜெர்மானியப் படைகள் வந்து இத்தாலியப் படைகள் களத்திலிருந்து சேத மில்லாமல் விலக உதவின.

கோர முடிவு

லிபியாவையும் அபிசீனியாவையும் மீட்ட நேச நாடுகள், 1943-ல் இத்தாலி மீது படையெடுத்தன. ரோம் நகரின் மீது குண்டுகளை வீசின. அந்த ஆண்டு ஜூலை 25-ல் மன்னர் விக்டர் இம்மானுவேல், முசோலினியைக் கைது செய்து பல்வேறு ஊர்களில் சிறை வைத்தார். ஜெர்மானிய கமாண்டோக்கள் அவரை மீட்டுத் தங்கள் ஆக்கிரமிப்பில் இருந்த வடக்கு இத்தாலியில் தங்க வைத்தனர். அங்கிருந்துகொண்டு பொம்மை (இத்தாலிய) அரசின் அதிபராகத் தன்னைக் காட்டிக்கொண்டார் முசோலினி. 1945 ஏப்ரல் 27-ல் ஜெர்மானிய ராணுவ அதிகாரியைப் போல மாறுவேடமிட்டு, சுவிட்சர்லாந்துக்குச் செல்ல முயன்றபோது, இத்தாலியைச் சேர்ந்த அரசு எதிர்ப்புப் படை வீரர் ஒருவரால் அடையாளம் காணப்பட்டார்.

அடுத்த நாளே மிலன் நகருக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மக்கள் கூடும் சதுக்கத்தில் பெரிய கம்பத்தில் கட்டித் தொங்க விடப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி கிளாரா பெட்டாசி, அவளுடைய தம்பி மார்செலோ பெட்டாசியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவரது அமைச்சர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. முசோலினிக்கு ஏற்பட்ட இந்தக் கதி ஹிட்லரின் காதுகளை எட்டியது. பெர்லின் நகருக்குள் சோவியத் துருப்புகள் நுழைந்துவிட்டன என்று கேள்விப்பட்டதும் மனைவி இவா பிரௌனைச் சுட்டுக்கொன்றுவிட்டு, விஷம் குடித்ததுடன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார் ஹிட்லர். இரு சர்வாதிகாரிகளின் வாழ்வும் இப்படியாக முடிவுக்கு வந்தது.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x