Published : 26 Sep 2018 09:01 AM
Last Updated : 26 Sep 2018 09:01 AM

காவிரிப் படுகையை கபளீகரிக்கும் மீத்தேன்

துரப்பணக் கொள்கைகளில் (என்இஎல்பி) மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதன் தொடர்ச்சியாக காவிரிப் படுகைப் பகுதிகளில், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ஓஎன்ஜிசி, கெயில் உள்ளிட்ட  நிறுவனங்கள் கையிலெடுக்கவிருப்பதாக அச்சம் எழுந்திருக்கிறது. காவிரிப் படுகையில் நூற்றுக்கணக்கான இடங்களில் துரப்பணங்கள் செய்யப்பட்டு எரிவாயு, கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் கடந்த 33 ஆண்டுகளாகவே நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், துரப்பணக் கொள்கையின் சமீபத்திய மாற்றங்கள் இந்தப் போக்கை இன்னும் தீவிரப்படுத்துகின்றன.

நிலத்துக்கு அடியில் உள்ள எரிபொருட்களை எடுப்பதற்குக் கடந்த 1998-லிருந்து பின்பற்றப்பட்டு வந்த துரப்பணக் கொள்கையை 2016-ல் மத்திய அரசு மாற்றியமைத்தது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மீத்தேன், ஷேல் எண்ணெய் எரிவாயு என்று வெவ்வேறான எரிபொருட்களுக்கு ஹைட்ரோகார்பன் என ஒரே பெயரிட்டு, அதற்காக ‘ஹெல்ப்’ கொள்கையை (Hydrocarbon Exploration Licensing Policy) அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஒருமுறை உரிமம் பெற்றால் போதும் நிலத்துக்குள் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் எனும் நிலை உருவானது.

திறந்தவெளி அனுமதி

இதையடுத்து, ஹைட்ரோகார்பன் எடுக்க தனியார் நிறுவனங்கள் பெருமளவில் அனுமதிக்கப்பட்டன. இந்தியா முழுவதும் கைவிடப்பட்ட எண்ணெய் வயல்களுக்கு (டிஎஸ்எஃப்) நெடுவாசல் உட்பட 34 வட்டாரங்களில் அனுமதி வழங்கப்பட்டது. மக்கள் எதிர்ப்பால் தமிழகத்தில் இத்திட்டம் நிறைவேறவில்லை. ஆனால், விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. ‘திறந்தவெளி அனுமதி’ என்ற பெயரில் தமிழகத்தில் மூன்று வட்டாரங்கள் உட்பட நாடு முழுவதும் 55 புதிய வட்டாரங்களில் எண்ணெய் எடுக்க அனுமதி வழங்கப்படவிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை நடத்துகின்ற வேதாந்தா நிறுவனத்துக்கு 41 வட்டாரங்கள் உட்பட உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கான அனுமதி ஒப்பந்தம் அக்டோபர் 1-ல் டெல்லியில் கையெழுத்தாக உள்ளது. மேலும், இதுவரை என்இஎல்பி கொள்கையின் கீழ் பணிகள் நடைபெற்றுவரும் எண்ணெய்க் கிணறுகளையும் ‘ஹெல்ப்’ கொள்கையின்கீழ் மாற்றி ஆகஸ்ட் 1-ல் முடிவெடுக்கப்பட்டது.

மன்னார்குடியை மையப்படுத்தி நிலத்துக்கு அடியில் சுமார் 697 சதுர கி.மீ. பரப்பளவில் நிலக்கரிப் படிமங்களின் மேல் அடுக்குகளில் படர்ந்துள்ள மீத்தேன் வாயுவை வெளிக்கொணருவதுதான் மீத்தேன் திட்டம். அதற்கு  சுமார் 450 அடி முதல் 1,500 அடி ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் வாயுவை எடுக்க வேண்டும். கீழடுக்குகளில் உள்ள கடின நீரை வெளியேற்றினால், தற்போது குடிநீருக்கும் விவசாயத்துக்கும் பயன்பட்டு

வருகின்ற மேல் அடுக்கு நீரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனை உணர்ந்துதான் மீத்தேன் திட்டத்துக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுவந்த ஜிஇஇசிஎல் நிறுவனத்தையே பணி செய்ய விடாமல் தமிழக அரசே நிரந்தரத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலத்தின் கீழடுக்குகளில் 10 ஆயிரம் அடி ஆழத்தில் வெளிவர முடியாத அடர்த்தியான படிமப் பாறைகளுக்கு இடுக்கில் படர்ந்துள்ள ஷேல் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டம் இது. இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தும்போது, நீரியல் விரிசல்  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள். அதற்காகப் பயன்படுத்தும் ரசாயனங்கள்  நிலத்துக்குள்ளேயே தங்கும், அல்லது கழிவுநீராக வெளியேறும். இதனால், மிகப் பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் உள்ளது.

மீத்தேன் எதிர்ப்பின் பின்னணி

மீத்தேன் திட்ட கருத்துக்கேட்புக் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2012-ல் நடந்தபோது, மீத்தேன் எடுப்பதால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலில் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது குறித்த அடிப்படை சந்தேகங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தாலும், உரிமம் பெற்றிருந்த ஜிஇஇசிஎல் நிறுவனத்தினராலும் வெளிப்படையாகப் பதில் கூற இயலவில்லை. அதனால்தான், இந்தத் திட்டம் காவிரிப் படுகை விவசாயத்தை அழித்துவிடும் திட்டம் என்ற புரிதலை அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்படுத்தியது. 

இந்தத் திட்டத்தை எந்த வழியிலாவது செயல்படுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான் ஓஎன்ஜிசி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், ஏற்கெனவே அமைத்துள்ள எண்ணெய்க் கிணறுகள் தொடர்பான அன்றாடப் பராமரிப்புப் பணிகளை செய்வதைக்கூட மக்கள் சந்தேகத்துடனே பார்க்கிறார்கள். தற்போது பழைய துரப்பணக் கிணறுகளையும் புதிய  ‘ஹெல்ப்’ கொள்கையின் கீழ் மாற்றி அமைத்து, நிலத்துக்கு அடியில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்ற நிலையை மத்திய அரசே உருவாக்கியிருப்பது பிரச்சினையை அதிகரித்திருக்கிறது.

ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் இந்தத் திட்டத்துக்குத் தடை உள்ளது. அமெரிக்கா, கனடாவின் பல மாகாணங்களும் இத்திட்டத்தைத் தடைசெய்திருக்கின்றன. இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ள நாடுகளிலும்கூட குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்கள் அருகில் ஷேல் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. நீரியல் விரிசல் (Hydro Fracking) ஏற்படுத்தும் பாதிப்பே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். ஷேல் எண்ணெய், எரிவாயு எடுப்பதற்காக  ஒரு முறை நீரியல் விரிசல் செய்ய 15 முதல் 20 கோடி லிட்டர் நன்னீர் தேவைப்படும். சில கிணறுகளுக்குப் பல முறை நீரியல் விரிசல் செய்ய வேண்டியிருக்கும்.

நீராதாரத்துக்கும் ஆபத்து

“இந்தியாவில் ஏற்கெனவே கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறை இருந்துவரும் சூழலில் நன்னீரைப் பாதிக்கும் ஷேல் திட்டங்கள் குறித்த கொள்கை முடிவுகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். காவிரிப் படுகையில் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக விவசாயம் பொய்த்துவருகிறது. குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தச் சூழலில், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதுடன், இருக்கும் தண்ணீரையும் நீரியல் விரிசல் முறைக்குப் பயன்படுத்துவது ஒட்டுமொத்த நீராதாரத்தையே அழித்துவிடும்” என்று எச்சரிக்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கருத்தாளர் வ.சேதுராமன்.

தமிழக அரசு உடனடியாக சட்ட மன்றத்தைக் கூட்டி, காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரியிருக்கும் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், “தமிழகக் காவிரிப் படுகையில் ஓஎன்ஜிசி, கெயில் நிறுவனங்களுக்குக் குத்தகைக்குக் கொடுத்துள்ள நிலங்களுக்கான குத்தகை உரிமையை ரத்துசெய்து அந்நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

இதனிடையே, செப்டம்பர் 19-ல் சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் பல்வேறு விவசாய சங்கங்கள் கூடி இந்தப் பிரச்சினையை விரிவாக விவாதித்திருக்கின்றன. அக்டோபர் 8-ல் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளன. விவசாயிகளின் இந்தக் கொந்தளிப்பையடுத்து செப்டம்பர் 23-ல்

மயிலாடுதுறையில் நடக்கவிருந்த கனிமவளப் பாதுகாப்புக் கருத்தரங்கத்துக்குக் காவல் துறை அனுமதி மறுத்திருக்கிறது. மத்திய அரசு திட்டமான ஹைட்ரோ கார்பன் குறித்து விவாதங்கள் நடப்பதைத் தமிழக அரசு விரும்பவில்லை என்பதற்கு வெளிப்படையான உதாரணம் இது. காவிரிப் படுகையை ஆபத்தான சூழலுக்குத் தள்ளுவது தமிழ்நாட்டையே குட்டிச்சுவராக்கிவிடும்!

- எஸ்.கோபாலகிருஷ்ணன்,

தொடர்புக்கு: gopalakrishnan.siva@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x