Published : 27 Jun 2019 08:25 AM
Last Updated : 27 Jun 2019 08:25 AM

3 கிணறுகள்… 317 வீடுகள்

கோவை மாநகரில் சிறுவாணி, பில்லூர்-1, பில்லூர்-2 என குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் குடிநீர்ப் பற்றாக்குறையும் இருக்கவே செய்கிறது. பில்லூர்-3குடிநீர்த் திட்டப் பணிகள் முடியும்தறுவாயில் உள்ளது. இருந்தாலும், ஏனைய உபயோகத்துக்கான நீர் என்பது கேள்விக்குறியாகிவருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் 700 அடி முதல் 1,000 அடி வரை ஆழ்குழாய்க் கிணறு அமைத்தாலும் நீர் கிடைப்பதில்லை. இந்நிலையிலும், ‘‘நாங்கள் 317 வீடுகள் இருந்தும் 1,000 மக்கள் வசித்தும் 450 அடி, 650 அடி, 700 அடி என மூன்று ஆழ்குழாய்க் கிணறுகளே வைத்துள்ளோம். 20 ஆண்டுகளாக இவை ஒரு நாளும் வற்றியதில்லை. அதற்கு நாங்கள் முறைப்படுத்தியுள்ள நீர் சேமிப்பு மட்டுமே காரணம்!’’ என்கிறார்கள் கோவையில் உள்ள ஸ்ரீவத்ஸா கார்டன் குடியிருப்புவாசிகள்.

இருபதாண்டு முயற்சி

கோவை துடியலூரில் 1998-ல் உருவாக்கப்பட்ட குடியிருப்பு வளாகம் ஸ்ரீவத்ஸா கார்டன். வரிசையாய் மரங்கள். இருபுறமும் மழைநீர் வழிந்தோட ஏற்படுத்தப்பட்ட சிமென்ட் வாய்க்கால்கள். அதற்குள்ளேயே அரையடி அளவிலான குழாய்கள். ‘‘இதிலிருந்தே ஆரம்பிக்குது எங்கள் மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு!’’ என நம்முடன் வந்து விளக்கினர் ஸ்ரீவத்ஸா கார்டன் தலைவர் சி.சுப்பிரமணியன், செயலாளர் சித்ரா சுப்பிரமணியன், முன்னாள் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர்.

‘‘இந்தக் காலனி ஆரம்பித்தபோதே மழைநீர் வடிய இப்படி சிமென்ட் வாய்க்கால்களும், அதனுள்ளே இன்னொரு அடுக்காக கழிவுநீர் செல்லும் குழாய்களும் போட்டுவிட்டார்கள். இந்தக் கழிவுநீர்க் குழாய்கள் 128 வீடுகள் உள்ள அபார்ட்மென்ட்களுக்கானது. 189 தனி

வீடுகளுக்குக் கழிவுநீர் செல்ல அந்தந்த வீடுகளிலேயே சோக்பிட் (நிலத்துக்குள்ளேயே கழிவுநீர் செலுத்தும் அமைப்பு), செப்டிக் டேங்க் போட்டிருக்கு. அதைத் தவிர, வரும் மழைநீர் மற்றும் கழிவுநீரைத்தான் இந்தக் குழாய்கள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் மூலம் ஒரு சொட்டுகூட வெளியே விடாமல் மூன்று முறைகளில் இதைச் சேமிக்கிறோம்!’’ என்றார்கள்.

இந்த நிலப்பகுதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சரிவாக அமைந்துள்ளது. மேற்குப் பகுதி மேடானது என்பதால், தண்ணீர் அங்கே துளியும் செல்வதில்லை. இந்தக் காலனியின் கீழ்ப் பகுதியில் சுமார் 5 ஆயிரம் சதுர அடியில் ஒரு பெரிய கிணறு உள்ளது. பொதுவாக, இப்படிக் குடியிருப்புகள் உருவாக்குபவர்கள் அங்கே ஏற்கெனவே கிணறுகள் இருந்தால், அதை மூடி அதில் வீட்டுமனைகள் உருவாக்கி விற்றுவிடுவார்கள். ஆனால், இவர்கள் அப்படிச் செய்யவில்லை. அந்தக் கிணறு, மழைநீர் வடிகாலாக மாற்றப்பட்டது. அதே கிணற்றை ஒட்டி ஒரு மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. குழாய்களில் வரும் கழிவுநீர் மொத்தமும் இந்தத் தொட்டிக்கு பம்ப் செய்யப்படுகிறது. அந்தக் கழிவுநீர் மறுசுழற்சி மூலம் (பிரத்தியேகமாக ஆர்.ஓ. சிஸ்டம் நிறுவப்பட்டுள்ளது) சுத்திகரிக்கப்பட்டு இதே கிணற்றில் விடப்படுகிறது.

மழைநீர் சேகரிப்பு

இதைவிடத் தாழ்வான பகுதிக்குச் செல்லும் மழைநீருக்காக மற்றொரு 15 அடி நீள, அகல, ஆழத்தில் ஒரு மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டியிருக்கிறார்கள். அந்தத் தொட்டியின் நடுவே 300 அடி ஆழத்துக்கு ஒரு ஆழ்குழாய்க் கிணறு தோண்டப்பட்டுள்ளது. அதற்குள் இந்தத் தண்ணீர் மொத்தமும் செல்கிறது. இது தவிர, கொஞ்சம் மழைநீர் வேறு ஒரு இடத்தில் தேங்குவதைச் சமீபத்தில் கண்டறிந்திருக்கிறார்கள். அங்கேயும் ஒரு சின்ன மழைநீர் சேகரிப்புத் தொட்டி ஏற்படுத்தி, அதற்குள் விட ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘‘கிணற்றுக்குள் மழை நீர் இறங்குவதால், எங்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் ஆழ்குழாய்க் கிணறு அமைப்பவர்களுக்கு 200 - 300 அடியிலேயே தண்ணீர் கிடைத்துவிடுகிறது!’’ என்று சொல்லும் காலனி நிர்வாகிகள், அன்றாடம் இங்கே சுத்திகரித்து விடும் கழிவுநீரின் லேப் டெஸ்ட் அறிக்கையையும் காட்டினார்கள்.

ஆயிரம் மரங்கள்

‘‘இங்கே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மூலம் தினசரி 70 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் வருகிறது. தனிவீடுகள் மூலம் வரும் கழிவுநீர் 1.50 லட்சம் லிட்டர் நிலத்துக்குள் இறங்குகிறது. 10 மிமீ மழை பெய்தால் ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். குறைந்தபட்சம் வருஷத்துக்கு 700 மிமீ மழை இருந்தா இந்த ஏரியாவின் 25 ஏக்கர் நிலத்தில் 7 கோடி லிட்டர் மழைநீர் கிடைக்குது. ஆக மொத்தம் சுமார் 15 கோடி லிட்டர் தண்ணியை எங்க நிலத்துக்குள்ளேயேதான் இறக்குகிறோம். அதில் தினசரி 1 லட்சம் லிட்டர் தண்ணீர்தான் ஆழ்குழாய்க் கிணறு மூலம் எடுக்கிறோம். அதனாலதான் எங்க காலனியில தண்ணி பிரச்சினையே வந்ததில்லை. இங்கே ஆயிரத்துக்கும் மேலான மரங்கள் இருக்கு. இது ஒரு வனாந்திரம்போல் அத்தனையும் பசுமையா இருக்கவும் அதுதான் காரணம். ஒவ்வொரு குடியிருப்புவாசிகளும் மழைநீர்ச் சேகரிப்புக்குத் தொடர்ந்து பங்களிப்பதால்தான் இது சாத்தியமாகியிருக்கு!’’ என்கிறார் குடியிருப்பின் செயலாளர் சித்ரா சுப்பிரமணியன்.

நீர் மேலாண்மை குறித்து ஸ்ரீவத்ஸா கார்டன் நமக்கு வழிகாட்டுவது மூன்றே விஷயங்கள்தான். ஒன்று, புதிய குடியிருப்புகள் உருவாக்கும்போது அங்கே புராதனக் கிணறு இருந்தால் அதை மூடக் கூடாது. அதை முழுக்க மழைநீர் சேகரிப்புத் தொட்டியாகவே பயன்படுத்த வேண்டும். மழைநீர் தேங்கும் இடங்களில் பெரிய மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை ஏற்படுத்த வேண்டும். கழிவு நீரைக்கூட விரயமாக்காமல் சுத்திகரித்து, அதையும் நம் பூமிக்குள்ளேயே இறக்க வேண்டும்.

- கா.சு.வேலாயுதன்,

தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x