Published : 05 Jun 2019 09:19 AM
Last Updated : 05 Jun 2019 09:19 AM
நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. கிராமப்புறக் குடிநீர்த் தேவைகளில் 85%, நகர்ப்புறக் குடிநீர்த் தேவைகளில் 50%, பாசனத் தேவைகளில் 65% மற்றும் தொழிலக நீர்த் தேவைகள் நிலத்தடி நீரையே நம்பியிருக்கின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் குடிநீர்த் தேவை மட்டுமின்றி, பாசனத் தேவையும் நிலத்தடி நீரையே நம்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய 56% பாசனம் நிலத்தடி நீரை நம்பித்தான் நடக்கிறது. பாசனத்துக்காகவும் குடிநீருக்காகவும் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதில் எந்தவிதமான வரையறைகளும் இல்லை. இதுவே இன்றைக்கு நாம் எதிர்கொண்டிருக்கும் தண்ணீர்ப் பஞ்சத்துக்குக் காரணம்.
முன்னுதாரண கிராமங்கள்
மகாராஷ்டிரத்தின் அஹ்மத்நகர் மாவட்டம் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் வறட்சி நிலவும் பகுதி. அம்மாவட்டத்தைச் சேர்ந்த ராலேஹான் சித்தி, நீர் சேமிப்புக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. அண்ணா ஹசாரே அதன் பின்னணியில் இருக்கிறார். கிராமத்தில் தனிநபர்கள் யாரும் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கிராமத்தின் நீர் சேமிப்பை அதிகப்படுத்த நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு எப்போதும் தயார்நிலையில் காத்திருக்கின்றன. மழைநீர் சேகரிப்புக்குச் சிறு குட்டைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நிலத்தடி நீர் மட்டத்தைப் பராமரிக்கக் கிராமம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
ராலேஹான் சித்தியை முன்னுதாரணமாகக் கொண்டு அஹ்மத் நகர் மாவட்டத்தின் மற்ற மாவட்டங்களிலும் இத்தகைய பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஹிவார் பஜார் கிராமத்தில் போபட்ராவ் பவார் முன்னின்று செயல்படுத்துகிறார். பாசனத்துக்கு ஆழ்துளைக் கிணறுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதோடு, கிராமக் காடு வளர்க்கும் திட்டத்தையும் செயல்படுத்திவருகிறார்.
மகாராஷ்டிரத்தின் துலே மாவட்டத்தின் ஷீர்பூர் கிராமம் அம்மாநிலத்துக்கே ஒரு முன்னுதாரணமாக மாறியிருக்கிறது. அக்கிராமத்தின் சுரேஷ் கானாபர்கர், பாசன நீரைக் கொண்டு கிணறுகளை நிரப்புவது, நீரோடைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி ஓடும் நீரை நிறுத்திவைப்பது, நீரோடைகளை ஆழப்படுத்துவது ஆகிய மூன்று திட்டங்களையும் ஒருங்கிணைந்த வகையில் பத்தாண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்திவருகிறார். நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்கும் இந்நடவடிக்கையை மகாராஷ்டிர அரசு மாதிரித் திட்டமாக ஏற்றுக்கொண்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் நீர் சேமிப்பதில் அக்கறையுள்ள ஏதோ ஒரு தன்னார்வலர்தான் நீர் சேமிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கிவைக்கிறார். ஆனால், அதை ஒட்டுமொத்த கிராமமே ஏற்றுப் பின்பற்றுகிறது.
தன்னார்வ நிறுவனங்களின் பங்களிப்பு
நிலத்தடி நீர்ப் பாதுகாப்பில் அரசுசாரா அமைப்புகளும் பங்கெடுத்துக்கொள்ள முடியும். நடிகர்கள் நானா படேகரும் மகரந்த் அனஸ்பூரும் இணைந்து 2015-ல் தொடங்கிய ‘நாம் பவுண்டேஷன்’ மகாராஷ்டிரத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் பணிபுரிந்துவருகிறது. இந்த அமைப்பு, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதியுதவி, வேலைவாய்ப்பு ஆகியவற்றைச் செய்தாலும் ஆறுகளைச் சீர்படுத்துவது, ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவது என நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் மண்வளத்தைப் பாதுகாக்கவும் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது.
நடிகர் ஆமிர் கான் பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சத்யமேவ ஜெயதே’ குழுவினரால் தொடங்கப்பட்டது பானி பவுண்டேஷன். 2016-ல் நீர்க் கோப்பைத் திட்டம் ஒன்றை அந்த அமைப்பு தொடங்கியிருக்கிறது. மகாராஷ்டிரத்திலுள்ள 3 மாவட்டங்களில் 116 கிராமங்களில் நிலத்தடி நீர் சேகரிப்பை மேம்படுத்தும் வகையில் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 850 பேருக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. 10,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பணிகளில் பங்கெடுத்துக்கொண்டார்கள்.
45 நாட்களில் 1,368 கோடி லிட்டர் நீரைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. வேலு என்ற கிராமம் முதலாண்டுக்கான வெற்றிக் கோப்பையை வென்றது. அடுத்து, 2017-ல் 1,321 கிராமங்கள், 65,000 பேர் பங்கேற்பு, 8,261 கோடி லிட்டர் பாதுகாப்புக்கான கட்டமைப்புகள் உருவாக்கம். 2018-ல் 4,025 கிராமங்கள், 1,50,000 பங்கேற்பு, 22,269 கோடி லிட்டரைப் பாதுகாக்க வழிசெய்யப்பட்டுள்ளது. இவற்றில் தொடர்புடைய கிராமத்தினர் மட்டுமே பங்கேற்கவில்லை. நகரங்களிலிருந்து இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும்கூடப் பெருமளவில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது
தமிழகத்திலும் இப்படிப்பட்ட முயற்சிகள் அவ்வப்போது முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த மே 2 அன்று சென்னையில் சிட்லபாக்கம் ஏரியைச் சீர்படுத்தும் பணியில் பொதுமக்களே இறங்கினார்கள். ஆயிரம் பேருக்கும் மேலாகப் பெருங்கூட்டம். பெண்களே பெருமளவில் பங்கேற்றார்கள். குடிநீர்ப் பிரச்சினையில் பெண்களே முதலில் பாதிப்பை அனுபவிக்கிறார்கள், குடிநீர்ச் சேகரிப்பைப் பெண்களின் பணியாகவே சமூக அமைப்பு சுமத்திவைத்திருக்கிறது என்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக ஏரியைச் சீர்படுத்தும் பணி ஒரு திருவிழாவைப் போலவே நடந்தது.
தமிழ்நாட்டிலும் நீர்நிலைகளின் பாதுகாப்பை மக்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அரசு நிர்வாகமே சமயங்களில் தடைக்கல்லாக நின்றுவிடுகிறது. சிட்லபாக்கம் ஏரியைச் சுத்தப்படுத்த மட்டுமே அனுமதி, தூர்வாரும் பணியில் ஈடுபடக் கூடாது என்று கூறிவிட்டது பொதுப்பணித் துறை. நீர்நிலைகளைப் பாதுகாக்கும் கடமையை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால், அந்தப் பணி ஒப்பந்ததாரர்களுக்காகவே காத்திருக்கிறது என்பது தண்ணீர்ப் பிரச்சினையில் அரசின் அலட்சியத்தை நமக்கு உணர்த்துகிறது. அரசும் பொதுமக்களும் கைகோத்தால் மட்டுமே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். தமிழகத்துக்கு சிட்லபாக்கம் மக்கள் ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இதைத் தொடரோட்டமாக மாநிலம் முழுவதும் கொண்டுசெல்ல வேண்டியது ஏனையவர்களின் கடமை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT