Published : 09 Sep 2014 09:45 AM
Last Updated : 09 Sep 2014 09:45 AM
நாகப்பட்டினம் தொடங்கி ராமேசுவரம் வரைக்கும் நான் பார்த்தவர்களெல்லாம் என்ன பதிலைச் சொன்னார்களோ, அதே பதிலை எந்தத் தயக்கமும் இல்லாமல் சொன்னார் ஆறுமுகம்.
“ஆமா, எல்லயத் தாண்டியும் போறாங்க. என் மவனே போயிருக்காம். தெரியாம இல்ல, தெரிஞ்சே தான் போனாம். அவம் மட்டும் இல்ல, எல்லயத் தாண்டுற பலரும் தெரிஞ்சேதான் போறாங்க.”
“இது தப்பில்லீங்களாய்யா? நம்முடைய எல்லைக் குள்ளதானே நாம தொழில் செய்யணும்?”
“தம்பி, நான் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன். என் மவனும் அப்பிடித்தான். பொல்லாப்பு வேணாம், நமக்கு ஒட்டுறது போறும்னு நான் நெனைக்கிறேன். எல்லைக்குள்ளேயேதான் நம்ம தொழில். இது என்னோட மனோபாவம். இதுக்கு என் வயசும் ஒரு காரணம். என் மவன், பொல்லாப்பு வந்தாலும் பரவாயில்ல, இப்ப சம்பாரிச்சாதானே புள்ளகுட்டிங்களைத் தேத்திவுட முடியும்னு நெனைக்கிறான். இது அவனோட மனோபாவம். அதுக்கு அவனோட வயசும் ஒரு காரணம்.
இங்க நீங்க குறிச்சிக்கிட வேண்டியது என்னான்னா, அவன் எல்லயத் தாண்டிப் போறதும் நான் போவாததும் எங்களோட வயசு, உடம்பு நெலம, குடும்பச் சூழ்நில இதெல்லாம்தான் காரணமே தவிர, எல்லயத் தாண்டுறது சரியா, தப்பாங்கிறதுல்ல இல்ல. ஏன்னா, இந்த எல்லயெல்லாம் அரசியல்வாதிங்களும் அதிகாரிங்களும் தங்களோட வசதிக்கேத்த வாக்குல அறிவிக்கிறது. என் பாட்டன் பூட்டன் காலத்துலேந்து மீன் பிடிச்சுக்கிட்டிருந்த எடத்துல நான் மீன் புடிக்கப் போறேன். அது தப்புன்னா, எப்பிடி ஏத்துக்க முடியும்?
நீங்க எல்ல… எல்லன்னு எதச் சொல்லவர்றீங்க? கச்சத்தீவு வரைக்கும் போறதத்தானே? என் நாட்டோட சண்ட போட்டு, கச்சத்தீவப் புடிச்சுக்கிட்டு, ‘இது இனிமே என்னோடது; நீ வரக் கூடாது’ன்னு இலங்கைக்காரன் சொன்னா நான் கேட்டுக்குவேன். சத்தியமாக் கேட்டுக்குவேன். ரெண்டு நாட்டுத் தலைவருங்களும் பேசி, அவங்களோட நட்புக்காக இந்தத் தீவ வுட்டுக்கொடுத்துட்டு, நாளயிலேந்து நீ இங்க வரக் கூடாதுன்னு சொன்னா, அது எந்த ஊரு நியாயம்யா? ஒங்களுக்குத் தெரியுமா? 1974-ல கச்சத்தீவ இலங்கைக்குக் கொடுத்தப்ப, ‘தீவுதான் அவங்களுக்குச் சொந்தம்; நீங்க வழக்கம்போல அங்கெ போவலாம், மீன் பிடிக்கலாம், தீவுல போயி எளப்பாறலாம்’னெல்லாம் அரசாங்கம் சொன்னுச்சு. 1976-ல இன்னொரு ஒப்பந்தத்தப் போட்டுக்கிட்டு, அந்த உரிமயும் உங்களுக்குக் கெடயாதுன்னுட்டு. இன்னும் அம்பது வருசம் கழிச்சு, ‘மண்டபத்தோட நம்ம எல்ல முடிஞ்சிபோச்சு; ராமேசுவரத்தை இலங்கைக்குக் கொடுத்துட்டோம்; நீ எல்ல தாண்டக் கூடாது’ன்னு அரசாங்கம் சொன்னாலும் சொல்லும். அரசாங்கம் சொல்லுறதாலயே எல்லாம் நியாமாயிடுமா?”
ஆறுமுகம் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
சட்டங்கள் எல்லாமே நியாயமானவையா?
ஆறுமுகத்தின் வார்த்தைகள் ஒரு தனிப்பட்ட மனிதனின் வெளிப்பாடு அல்ல; தாங்கள் காலங்காலமாகப் புழங்கிய ஒரு இடம், தங்களிடமிருந்து பறிக்கப்படும்போது, அதைப் பாரம்பரிய பூர்வகுடிகளின் ஆன்மா எப்படிப் பார்க்கிறது என்பதன் வெளிப்பாடு. அரசாங்கத்தின் ஏடுகளில் ஏற்றினால், நமக்கு எல்லாம் சட்டபூர்வமாகிவிடுகிறது; சட்டபூர்வமானால், எல்லாமே சரியானதாகிவிடுகிறது. ஆனால், சட்டங்களுக்கும் நியாயங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை யார் நிரப்புவது? நாம் சட்டங்களை நம்புகிறோம், அதற்குக் கட்டுப்படுகிறோம். பூர்வகுடிகளோ நியாயங்களை மட்டுமே நம்புகிறார்கள், நியாயங்களுக்கு மட்டுமே கட்டுப்படுகிறார்கள்.
ஆறுமுகம் தொடர்ந்தார்.
“என்னாடா, இவம் இப்பிடிப் பேசுறானேன்னு பாக்காதீங்க. இலங்கைக்கு இந்தத் தீவு எதுக்காவ தேவப்படுது? அவங்களோட ராஜாங்கப் பெருமைக்கு, அதிகாரத்துக்கு. நாங்க எதுக்கு அங்கெ போறம்? பொழப்புக்கு, சோத்துக்கு. இங்கெ பொழப்பு இருந்தா ஏன் அங்கெ போறோம்? இங்கெ பொழப்பு போச்சு. சுத்தமாப் போச்சு.”
“இங்கெ கடல் வளம் அத்துப்போக யார் காரணம்? இங்கெ கடல் வளத்தை அழிச்ச அதே மீன்பிடி முறையோட அங்கெ போனா, அங்கேயும் கடல் வளம் அத்துப்போகாதா?”
“இப்போ சொல்லுறீங்களே, இத ஏத்துக்கிறேன். கடல இங்கெ அரிக்கிறது குத்தம், அங்கெ அரிக்கிறது நியாயம்னெல்லாம் இல்ல. கடல அரிக்கிறது பாவம், பெரிய பாவம். கடல அரிக்கிறவனுங்கள வுடக் கூடாது. புடி. அவம் என்ன புடிக்கிறது? நீயே புடி. நம்ம கடப்படைய வெச்சே புடி. அது மட்டு மில்ல. கடலுக்குள்ள கடத்தல் செய்யிறவம், கடல வெச்சுத் தப்புசெய்யிறவம் எல்லாத்தயும் புடி. அது நியாயம். ஆனாக்க, எல்லாம் தப்புசெய்யிறவம் இல்ல. எல்லைக்குள்ள புடிக்கிறவனெல்லாம் மேவாட்டுல புடிக்கிறவனும் இல்ல; எல்லய தாண்டிப் போறவனெல்லாம் அடிய அரிக்கிறவனும் இல்ல.
தம்பி, தமிழ்நாட்டுல மொத்தம் முப்பதாயிரத்திச் சொச்ச படகு இருக்கு. இதுல எத்தன படகு எல்லய தாண்டிப் போயி தொழில் செய்யுமின்னு நெனைக்
கிறீங்க. அதுல எத்தன படகு அடிமடிய அரிக்குமுன்னு நெனைக்கிறீங்க? நூத்துல ஒரு பங்குகூட இருக்காது. அதக்கூட நியாயமுன்னு நான் சொல்லல. ஆனா, விசயம் அது இல்லங்கிறதுக்குச் சொல்லுறன். இங்கெ நம்மாளு எப்பிடி எறாலைத் தேடிப் போறானோ, அதே மாரி அவிங்க ஆளு சூரை மீனத் தேடி நம்ம எல்லைக்குள்ள வருவான். ஆரம்ப காலத்துல இது பிரச்சினையா இல்ல. பின்னாடிதான் பிரச்சினையாச்சி.”
பின்னாளில், பிரச்சினையான கதையை ராமசாமி விவரித்தார்.
தம்பி சரக்கு
“இலங்கையில விடுதலப் புலிங்க தலையெடுக்க ஆரமிச்ச உடனேயே இங்கெ கடல்ல மீன்பிடிக்கப் போற ஒவ்வொருத்தனயும் புலின்னு நெனச்சிக் குறிவெக்க ஆரம்பிச்சுட்டான். அது அவம் மனசில அப்படியே வொறைஞ்சிக் கிடக்கு. எம்ஜிஆரு காலத்துல, விடுதலப் புலிங்களுக்குப் போவ வர்ற பாதையாவே கடல் பாதைதாம் இருந்திச்சுங்கிறது நெசம். எப்போம் ராஜீவ் காந்தியைக் கொன்னாங்களோ அப்பவே போக்குவரத்து கொறைஞ்சாச்சி. பெறகும் கொஞ்சம் பேரு டீசலு, மண்ணெண்ணெய்னு கெடச்சதைக் கடத்திக்கிட்டுதாம் இருந்தாம். கடக்கரயில ‘தம்பி சரக்கு’ன்னே ஒரு குறிச்சொல்லு உண்டு. ஆனா, இதயெல்லாம் செஞ்சவம் ரொம்பக் கொஞ்சம்.
இலங்கைக்காரன் புத்திசாலித்தனமா என்னாப் பண்ணான்னா, இங்கெருந்து கடல்ல மீன் புடிக்கப் போறவன் ஒவ்வொருத்தனும் படகுல தங்கமும் துப்பாக்கியும் பீரங்கியுமா கொண்டுபோயி விடுதலப் புலிங்களுக்குக் கொடுத்துக்கிட்டு இருக்கான்கிற கணக்கா கெளப்பிவுட்டான். அத நம்ம அரசாங்கத்தயே நம்பவெச்சான். அப்படியெல்லாம் கடத்தியிருந்தா ஏன், கடக்கரக் குப்பமெல்லாம் குடிசைக்குக் கூரை வேயக் காசில்லாமக் கெடக்கு? குண்டடி பட்டாலும் பரவாயில்லைன்னு நூறு எரநூறுக்காவ உசுர வுடத் துணியிறாம்? இத யோசிக்க நாதியில்ல.
ரொம்பப் பேருக்கு வெளிய தெரியாத ஒரு உண்மயச் சொல்லுறன், கேட்டுக்குங்க. புலிங்க கையில எப்போ முல்லத்தீவு போச்சோ, அப்பவே இந்தக் கடக்கர முழுக்க அவங்க கட்டுப்பாட்டுல வந்துடுச்சு. யாழ்ப்பாணத்துலேந்து திரிகோணமலை வரைக்கிம் அவங்க கையிலதாம் இருந்துச்சு. இங்கெருந்து மீன் பிடிக்கப் போன படகுங்களப் புலிங்க சுத்தி வளச்சிப் பிடிச்சிருக்காங்க. பல மொற. தண்டம் கட்டியெல்லாம் படிக மீட்டுக்கிட்டு வந்திருக்கோம். ஏன், கச்சத்தீவு நம்மளோடதுங்கிறதயே அவங்க ஏத்துக்கலயே? இதெல்லாம் இந்திய அரசாங்கத்துக்கும் தெரியிம், இலங்கை அரசாங்கத்துக்கும் தெரியிம். தெரிஞ்சேதாம் நம்மளக் கடத்தக்காரன்னு கத கட்டிவுட்டாம். சரி, போருக்குப் பின்னாடி விடுதலப் புலி இயக்கத்ததாம் அழிச்சிட்டியே... அப்புறமும் ஏன் எங்கள வெரட்டுற? ஏன் சுட்டுத்தள்ளுற?
தம்பி, கச்சத்தீவயும் நெடுந்தீவயும் சுத்தியுள்ள கடப் பகுதிலதாம் எறாலுங்க நெறையக் கெடைக்கும். நம்மாளுங்க அதைத் தேடித்தாம் அங்கெ போறது. ஆனா, இலங்கைக்காரனுக்கு இந்தப் பக்கம் தொழிலே கெடயாது. அங்கெ உள்ள தமிழ் ஆளுங்க கரக்கடல்ல தொழில் செஞ்சா அதிகம். பாதுகாப்பு, பந்தோபஸ்துன்னு சொல்லி அனுமதிக்க மாட்டாம். விசயம் என்னான்னா, அவம் கடக்கரயைச் சுத்திக் காசு வாங்கிக்கிட்டு சீனாக்காரனைக் கொண்டாந்து வுட்றான். இப்பம் இலங்கை தொறைமுகத்துல எங்கெ பாத்தாலும், சீனாக்காரன்தான். சீனாக்காரனைப் பூச்சாண்டி காட்டிதாம் காலாகாலமா நம்மாளுங்க தலையில அம்மி அரைக்கிறாம். இப்பவும் அதே கததான் ஓடுது.”
ராமசாமி சொன்னதில் நிறைய உண்மை இருந்தது. விசாரிக்க ஆரம்பித்தபோது, உண்மை அதைத் தாண்டியும் நீண்டது.
பெருவியாபாரப் பிசாசு நோக்கங்கள்
இங்கே கடலை சூறையாட எந்த ஏற்றுமதியும் வியாபார நோக்கங்களும் அடித்தளங்களோ, அதே ஏற்றுமதியும் வியாபார நோக்கங்களும் இலங்கை யையும் நகர்த்துகின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன் இலங்கையின் கடல் உணவு உற்பத்தி 2.93 லட்சம் டன். கடந்த ஆண்டு இது 4.45 லட்சம் டன். இந்த ஆண்டின் இலக்காக இலங்கை அரசு நிர்ணயித் திருப்பது 6.25 லட்சம் டன். இலங்கையின் ஏற்றுமதி இலக்குகளும் இதேபோல நேர்க்குத்தில் நிற்கின்றன. கடலோடிகளைப் பெருவியாபாரப் பிசாசு நோக்கங்கள் தள்ளுகின்றன. அரசியல்வாதிகளுக்குக் கப்பம் தேவைப்படுகிறது. அரசாங்கங்களுக்கு அந்நியச் செலாவணி தேவைப்படுகிறது. எல்லோரும் பின்னிருந்து நடத்தும் இந்த மாய விளையாட்டில், ஏழ்மையும் வறுமையும் கூடவே பேராசையும் சேர்ந்து கடலோடிகளைப் பகடைகளாக உருட்டுகின்றன.
“ ஊர் பேர் பலகயப் பாத்திருப்பீங்க, நாடு பேர்ப் பலகயப் பாத்திருக்கீங்களா? இந்தப் பேர்ப் பலகயப் பாருங்க...”
குரல் வந்த திசையில் திரும்பினால், தெரிகிறது அந்தப் பெயர்ப் பலகை. ‘இந்தியா’எனும் பெயர்ப் பலகை. “எங்களுக்கு எல்ல தெரியலியாம். எங்களோட உரிமயெல்லாம் இதோட முடிஞ்சிருச்சாம். அரசாங்கம் எங்கள ஏமாத்தல; தன்னையே ஏமாத்திக்குது.”
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட 13 மணல் தீடைகளில் 5-வது மணல் தீடையில் இந்திய அரசு வைத்திருக்கும் அந்தப் பெயர்ப் பலகை நம்முடைய சகல வரலாற்றுத் தவறு களுக்கும் பலவீனங்களுக்கும் ஒரு மௌன சாட்சியாக நிற்கிறது, பரிதாபமாக!
(அலைகள் தழுவும்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT