Published : 03 Jun 2019 07:46 AM
Last Updated : 03 Jun 2019 07:46 AM
கருணாநிதியின் ஆட்சிக் காலகட்டம் நெடுகிலும், அவருக்கு மிக நெருக்கமான அதிகாரிகள் வட்டத்தில் இருந்தவர் ராஜமாணிக்கம் ஐஏஎஸ். திராவிட இயக்கப் பின்னணியிலிருந்து வந்தவர். 1969-ல் திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த அதே காலகட்டத்தில், அரசுப் பணியில் நுழைந்தவர். 2005-ல் பணி ஓய்வுக்குப் பின்னர், கருணாநிதியின் தனிச் செயலராகிவிட்டவர். ஒரு நிர்வாகியாக கருணாநிதியின் செயல்பாடுகளை விவரித்தார்.
ஒரு அதிகாரியாக நீங்கள் பார்த்த வரையில், கருணாநிதி முடிவெடுக்கும் திறன் எப்படி?
பிரமிப்பூட்டும். ‘அதான், தலைமைச் செயலாளர் கையெழுத்துப் போட்டிருக்கிறாரே!’ என்று படிக்காமல் ஒரு கோப்பில்கூட கையெழுத்துப் போட மாட்டார். கேள்வி கேட்பார். அதன் மூலமாகப் பிரச்சினையை உள்வாங்கிக்கொள்வார். அதிகாரப் படிநிலையை உடைத்து எல்லோரிடமும் பேசுவார். கீழே உள்ளவர் விஷயாதி என்று தெரிந்தால், அழைத்துப் பேசுவார். காவல் துறையை நிர்வகிக்கையில், நுண்ணறிவுப் பிரிவு சொல்கிற தகவல்களை அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டார். டிஜிபியே சொன்னாலும், சரிபார்ப்பார். உள்ளூர்க்காரர்களிடம் விசாரிக்கச் சொல்வார். “சில காரியங்களை நிதானமாகச் செய்ய வேண்டும்; சில காரியங்களை உடனடியாகச் செய்ய வேண்டும். மாற்றிச் செய்தால் மோசமான விளைவுகளே ஏற்படும்” என்பார். கோப்புகளைத் தேங்கவிட மாட்டார். ஒரே நாளில் 250 கோப்புகளில் கையெழுத்திட்ட நாட்கள் உண்டு.
அதிகாரிகள் அவரிடம் எதிர்கொள்ளும் சிரமம் என்ன?
அவர் வேகத்துக்கு ஈடுகொடுப்பது சிரமமாக இருக்கும். சட்டமன்றத்தில் தன் மானியக் கோரிக்கை வருகிறது என்றால், ஒரு வாரம் தயார் பண்ணுவார். சட்டமன்றத்துக்குப் போகும்போதுகூட “ராத்திரி ஒண்ணு படிச்சேன்யா. அதுல சந்தேகம்யா” என்பார். அவர் இப்படி இருக்கும்போது அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பார்! அரைகுறை வேலை பிடிக்காது. ஒரு உத்தரவு கடைசிவரை போய்ச் சேர்ந்திருக்கிறதா என்று பார்ப்பார். வரலாறு தெரியாமல் நடந்துகொண்டால், கடிந்துகொள்வார். ‘பிற்பட்டோர்’ என்றால் கோபம் வரும். “பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்” என்று திருத்துவார். அரசுப் பணியைச் சமூகத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்துவார். மக்களுக்குத் திட்டங்களைக் கொண்டுசெல்ல ஏதாவது தடைகளைச் சொல்லிக்கொண்டே இருந்தால் பிடிக்காது. தடைகளை உடைக்க வழி சொல்லுங்கள் என்பார்.
அவருக்குப் பிடித்தமாக இருந்த தலைமைச் செயலர் யார்?
அவர் வேகத்துக்கு ஈடுகொடுத்தவர்கள் என்றால், முதன்மையானவர் கே.என்.நம்பியார். அடுத்தது சபாநாயகம்.
அமைச்சர்களை எப்படிக் கையாள்வார்?
அமைச்சர்கள் அனுப்பும் கோப்புகளில் அவர்கள் எழுதும் குறிப்பை வைத்தே அவர்களது செயல்பாடுகளை எடைபோட்டு விடுவார். நிறையச் சொல்லிக்கொடுப்பார். ஆனால், சட்டமன்ற நடவடிக்கைகளில் தீவிர முனைப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். “சட்டமன்றத்தை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாதுய்யா, நாம ஆளுங்கட்சியே அதை முக்கியமா நினைக்கலைன்னா, ஜனநாயகம் செழிக்காதுய்யா” என்பார். தரக்குறைவாக யாராவது பேசினால்கூட, “ஜனநாயகத்தில் அதெல்லாம் அனுமதிக்கப்பட்டதுதான்” என்பார். எல்லாவற்றுக்கும் மேலாக நேரம் தவறாமை. இளைஞர்களை - அவர்கள் எதிர்க்கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி; தட்டிக்கொடுப்பார்.
அவர் கொண்டுவந்தவற்றில் அவர் மனதுக்கு நெருக்கமான திட்டங்கள் எவை?
சமூக நீதியோடு தொடர்புடையவை ஒவ்வொன்றுமே அவர் மனதுக்கு நெருக்கமானவை எனலாம். எல்லா சமுதாயத்தினரும் ஒரே இடத்தில் இணங்கி வாழும் இடமாக அவர் கொண்டுவந்த ‘பெரியார் நினைவுச் சமத்துவபுரம் திட்டம்’ அவர் இதயத்துக்கு மிக நெருக்கமான திட்டம். பெண்களுக்குச் சம சொத்துரிமையைக் கொண்டுவந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தார். 2006 முதல் அமைச்சரவைக் கூட்டம். ஒரு பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தார். “தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் வகையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்” என்று. பக்கத்திலிருந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும், இவை ஒவ்வொன்றுக்கும் பின்னிருந்த கனவுகள்!
அவர் தீவிரமாக முயன்றும் இழுத்தடித்தது எது?
காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்கள். தன் காலத்துக்குள் எப்படியாவது தீர்வு கண்டுவிட வேண்டும் என்று முயன்றார். இதற்காக அண்டை மாநில முதல்வர்களிடம் தன்னைக் குறைத்துக்கொண்டு பல முறை அவர் நடந்துகொண்டிருக்கிறார். இதெல்லாம் வெளியுலகுக்குத் தெரியாது. டெல்லியுடன் இணக்கமான உறவை அவர் தொடர்ந்து பராமரித்ததில் இந்தக் கணக்கெல்லாமும் உண்டு. நதிநீர் விவகாரங்கள் இழுத்தடிக்கப்படுவதில் பெரிய ஆதங்கம் அவருக்கு உண்டு.
நிர்வாகரீதியாக அவரைத் தொல்லைக்குள்ளாக்கும் பிரச்சினைகள் எவை? அதிக மனஉளைச்சலைக் கொடுத்த பிரச்சினை எது?
சாதி, மதக் கலவரங்கள் அவரை மிகவும் தொல்லைக்கு உள்ளாக்கும். “மக்கள் ஒற்றுமைக்காக எவ்வளவு உழைச்சாலும் கணத்துல சிலரால மோதல்களைத் தூண்டிவிட்டிட முடியுதேய்யா!” என்று வேதனைப்படுவார். சட்டபூர்வமாக எடுக்கும் நடவடிக்கைகள் தவிர, யாரெல்லாம் இதன் பின்னணியில் இருக்கிறார்களோ அதே சமூகத்தைச் சேர்ந்த திமுக தலைவர்களை விட்டு, பேசச் சொல்வார். மிகுந்த மனஉளைச்சலைக் கொடுத்த பிரச்சினை என்றால், இலங்கையில் நடந்த இறுதிப் போர்! அந்தக் காலகட்டம் முழுவதும் அவர் துடித்துக்கொண்டிருந்தார். தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுத்தார். எஸ்.எம்.கிருஷ்ணாவிடமும் மன்மோகன் சிங்கிடமும் சோனியாவிடமும் எவ்வளவு மன்றாடியிருக்கிறார்! ஆனாலும், தமிழ் மக்கள் அழிவைத் தடுக்க முடியவில்லை என்பதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
அப்போது என்ன நடந்தது என்பதைக் கொஞ்சம் விளக்க முடியுமா?
முதல்வர் பதவியிலிருந்தே விலகிவிட முடிவெடுத்தார். ஆனால், “பதவி விலகினால் நிலைமை மேலும் மோசமாகும்; எந்த அழுத்தத்தையும் இலங்கைக்குக் கொடுக்க முடியாது” என்று அந்த முடிவைக் கைவிட்டார். உண்ணாவிரத முடிவே அவர் கடைசியாக ஏதாவது செய்துவிட முடியாதா என்று நினைத்து எடுத்ததுதான். சில உண்மைகளை இப்போதாவது நான் சொல்லலாம் என்று நினைக்கிறேன். உண்ணாவிரதத்தின்போது பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் இருவரும் அவரிடம், “இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் நேரடியாகப் பேசிவிட்டோம். அழிவை ஏற்படுத்தும் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்று அவர் உறுதியளித்துள்ளார். இலங்கை அரசு தாக்குதலை நிறுத்திவிட்டது” என்று உறுதியாகப் பேசினார்கள். இந்திய அரசில், அன்றைக்குப் பிரதமருக்கு அடுத்த நிலையில் இருந்த இரு அமைச்சர்கள். அவர்கள் சொல்வதை எப்படி நம்பாமல் இருக்க முடியும்! இதை நம்பித்தான் அவர் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். ஆனால், அதற்குப் பின் நடந்த கதைகள் வேறு. காங்கிரஸார் அப்புறம் சொன்னார்கள், “நாங்கள் சொல்லியும் இலங்கை கேட்கவில்லை” என்று. இது எந்த அளவுக்கு உண்மை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
டெல்லி அரசியலில் அவர் நேரடியாகப் பங்கேற்க ஆர்வம் காட்டாமல் இருந்தது ஏன்? மொழி ஒரு பிரச்சினையாக இருந்ததா?
அப்படிச் சொல்ல முடியாது. அவருக்கு இந்தி தெரியாது. ஆனால், ஆங்கிலம் பேசுவார். என்ன நினைக்கிறாரோ அதை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த முடியும். பிரதமரே ஒரு விஷயத்தைச் சொன்னாலும், தனக்கு உடன்பாடு இல்லை என்றால் முகத்துக்கு நேரே சொல்லிவிடுவார். விரிவாகப் பேச வேண்டியிருந்தால் மட்டும்தான் “நீ பேசுய்யா” என்பார். அப்புறம், டெல்லி அரசியல் ஆர்வம் இருந்திருந்தால், எந்த மொழியையும் வசப்படுத்திக்கொண்டிருக்கக் கூடியவர்தான் அவர். கணினி கற்றுக்கொள்ளும்போது அவருக்கு 70 வயது. அவர் நினைப்பு முழுக்க தமிழ், தமிழர் என்றுதான் இருந்தது. டெல்லிக்குச் செல்வதைவிடவும் டெல்லிக்கு இணையான அதிகாரத்தை சென்னைக்குப் பெற வேண்டும் என்று செயல்பட்டவர் அவர்!
‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலிலிருந்து...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT