Published : 19 Jun 2019 07:50 AM
Last Updated : 19 Jun 2019 07:50 AM
“நான் வழக்கு விசாரணை நடத்திய மனிதர்களிலேயே நீங்கள் முற்றிலும் மாறுபட்ட வகையைச் சேர்ந்தவர். உங்கள் நாட்டைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் பார்வையில் நீங்கள் மாபெரும் தேசப்பற்றாளராகவும் தலைவராகவும் இருக்கிறீர்கள் என்ற உண்மையையும் புறக்கணிக்க முடியாது. ஆனால், சட்டம் என்பது மனிதர்கள் மீது எவ்வித மதிப்பும் கொண்டிராதது. ஆகவே, குற்றத்தை நீங்களே ஒப்புக்கொண்டபடியால், உங்களுக்கு ஆறு ஆண்டுகள் தண்டனையை மிகுந்த வேதனையுடன் வழங்குகிறேன். எனினும் காலப்போக்கில் இந்திய அரசு இந்தத் தண்டனையைக் குறைத்து உங்களை விடுவிக்குமென்றால் என்னைவிட மகிழ்ச்சியடைபவர் யாரும் இருக்க முடியாது” என்று காந்திக்குத் தீர்ப்பெழுதிவிட்டு, அவரைப் பார்த்துக் கூறினார் நீதிபதி ப்ரூம்ஃபீல்டு.
ஒத்துழையாமை இயக்கத்தின்போது ‘யங் இந்தியா’ இதழில் காந்தி எழுதிய மூன்று கட்டுரைகளுக்காக அவரும் அந்த இதழின் பதிப்பாளருமான ஷங்கர்லால் பாங்கரும் சபர்மதி ஆசிரமத்தில் மார்ச் 10,
1922-ல் கைதுசெய்யப்பட்டு, சபர்மதி சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அப்படி அந்த மூன்று கட்டுரைகளிலும் காந்தி என்ன எழுதியிருந்தார்?
முதல் கட்டுரை செப்டம்பர் 19, 1921 ‘யங் இந்தியா’ இதழில் வெளியானது. ‘விசுவாசத்தைத் துண்டித்துக்கொள்ளுதல்’ என்று தலைப்பிட்ட அந்தக் கட்டுரையில் காந்தி இப்படி எழுதினார்: “இந்த அரசின் கீழே சிப்பாயாகவோ குடிமக்களாகவோ இருப்பதென்பது பாவம் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை (பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குச் செய்யும்) தேசத் துரோகமே அதன் லட்சியம். ஒத்துழையாமை இயக்கமென்பது ஆன்மரீதியிலான, அறம்சார் இயக்கம் என்றாலும் அரசைத் தூக்கியெறியும் நோக்கத்தைக் கொண்டது என்பதால், இந்த இயக்கத்தின் செயல்பாடென்பது தேசத் துரோகமே.”
அடுத்தடுத்த கட்டுரைகள் எப்படியிருந்திருக்கும் என்பதை இதற்கு மேல் விளக்க வேண்டியதில்லை. மார்ச் 11, 1922 அன்று நடந்த விசாரணையின்போது காந்தி சொல்கிறார். “எனக்குக் கருணை காட்டும்படி கேட்டுக்கொள்ளப்போவதில்லை. சட்டப்படி குற்றமாகவும் குடிமகனாக எனது உச்சபட்ச செயலாகவும் கருதக்கூடிய இந்தக் குற்றத்துக்கு எந்த அளவுக்குக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்குக் கடுமையான தண்டனை கொடுங்கள் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னை நான் ஒப்படைக்கிறேன். ஒரு நீதிபதியாக உங்களுக்கு இருக்கும் ஒரே வழி உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப்போவது அல்லது நீங்கள் நிர்வகிக்கும் சட்டமும் அமைப்பும் மக்களுக்கு நல்லது என்று நீங்கள் நினைத்தால் எனக்குக் கடுமையான தண்டனையை வழங்குவது” என்று நீதிபதியிடம் கூறிவிட்டு, தான் கொண்டுவந்திருந்த அறிக்கையைப் படிக்கிறார் காந்தி.
பிரிட்டிஷ் அரசுக்குத் தீவிரமான விசுவாசியாக ஒத்துழைப்புக் கொடுத்துவந்த காந்தி, ஏன் இப்படி அதற்கு எதிரானவராக மாறினார் என்பதற்கான காரணங்களை அந்த அறிக்கையில் அடுக்குகிறார். முதலாவது, மனிதத்தன்மையற்ற ரௌலட் சட்டம். இரண்டாவது, ஜாலியன்வாலா பாக் படுகொலை. மூன்றாவது, இந்திய முஸ்லிம்களை கிலாஃபத் விஷயத்தில் ஆங்கிலேய அரசு கைவிட்டது. அது மட்டுமல்லாமல் பொருளாதாரரீதியில் இந்தியாவின் நலிவுக்குக் காரணம் பிரிட்டன் என்பதுவும் தனது மனமாற்றத்துக்குக் காரணம்” என்று காந்தி குறிப்பிடுகிறார்.
மலர்ந்த முகத்துடன்...
இப்படிப்பட்ட காரணங்களால்தான் ஒத்துழையாமை இயக்கம் தேவைப்பட்டது என்கிறார். “என் பார்வையில், தீமையுடன் ஒத்துழைக்காமல் இருப்பதென்பது நன்மையுடன் ஒத்துழைப்பது போன்றதொரு கடமையே” என்று இறுதியாகச் சொல்லிவிட்டுத் தன் குற்றத்துக்குத் தண்டனை கோருகிறார். காந்திக்கு ஆறு ஆண்டுகளும் பாங்கருக்கு ஓராண்டும் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. இருவரும் மலர்ந்த முகத்துடனேயே தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றனர்.
சபர்மதியில்தான் காந்தியின் ஆசிரமமும் குடும்பத்தினரும் இருக்கிறார்கள் என்பதால், சபர்மதிச் சிறையில் காந்தியை வைத்திருப்பது சரியில்லை என்று கருதிய அரசு, அவரை மார்ச் 21, 1922 அன்று பூனா சிறைக்கு மாற்றியது. காந்தி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே அவருக்குக் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டன. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு குழுவினர் அவரைப் பார்க்க வரலாம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு கடிதத்தை காந்தி எழுதலாம். அதுவும் தணிக்கை செய்யப்பட்டே அனுப்பப்படும். அரசியல் சாராத புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன என்றாலும் பத்திரிகைகள் அனுமதிக்கப்படவில்லை.
சிறைத் தண்டனையை தென்னாப்பிரிக்கக் காலத்திலிருந்தே இயல்பாக ஏற்றவர் காந்தி. அவரது பல்வேறு சிறைவாசங்களின்போது பெரும்பாலான நேரத்தை வாசிப்பிலும் எழுதுவதிலும் மொழிகளைக் கற்றுக்கொள்வதிலும் கழித்திருக்கிறார். இந்தத் தண்டனைக் காலத்திலும் அப்படித்தான்.
பகவத்கீதை, திருக்குரான், ராமாயணம், இயேசுவின் மலைப் பிரசங்கம், உருதுமொழி கற்றுக்கொள்வதற்கான நூல் ஆகியவை அவற்றுள் அடக்கம். இது தவிர, இந்தச் சிறைத் தண்டனையின்போது காந்தி படித்த முக்கியமான நூல்களில் சில: ‘ஸ்காட்லாந்தின் வரலாறு’, ‘ரோமானிய வரலாறு குறித்த கதைகள்’, ஆர்.எல்.ஸ்டீவன்சனின் ‘தி ஸ்ட்ரேன்ஜ் கேஸ் ஆஃப் டாக்டர் ஜெக்கைல் அண்ட் மிஸ்டர் ஹைட்’, கிப்ளிங்கின் ‘தி ஜங்கிள் புக்’, கதேயின் ‘பாஸ்ட்’, மாக்ஸ்முல்லர் மொழிபெயர்ப்பில் உபநிடதங்கள், ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகள், பெர்னார்ட் ஷாவின் ‘மனிதனும் அதிமனிதனும்’.
தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்
காந்தி பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியிருந்தாலும் நூல்கள் வடிவில் அவர் எழுதியது மூன்று புத்தகங்கள்தான். ‘இந்திய சுயராஜ்யம்’, ‘தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்’, ‘சத்திய சோதனை’. இரண்டாவது புத்தகமான ‘தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்’ இந்தச் சிறைவாசத்தின்போதுதான் எழுதப்பட்டது. கூடவே, உருதுமொழியைக் கற்றுக்கொள்வதில் ஒவ்வொரு நாளும் அதிக நேரத்தை காந்தி செலவிட்டார். ஆரம்பத்தில் இந்துஸ்தானியாக உருதுவும் இந்தியும் ஒன்றாக இருந்தது என்பதை அப்போது அவர் கண்டறிந்தார்.
1924-ம் ஆண்டு ஜனவரி மாதம் காந்திக்கு குடல்வால் அழற்சி காரணமாக ஒரு அறுவைசிகிச்சை நடைபெறுகிறது. தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாகிக்கொண்டே இருந்ததால் பிப்ரவரி 4, 1924 அன்று, கிட்டத்தட்ட 2 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு காந்தி விடுதலை செய்யப்பட்டார். சிறைக்கு வெளியே இருந்த அதே செயல்வேகத்துடன் சிறைக்கு உள்ளேயும் இருந்த அந்த மனிதர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் காற்றைச் சுவாசித்தார்.
(காந்தியைப் பேசுவோம்)
- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT