Published : 04 Sep 2014 11:08 AM
Last Updated : 04 Sep 2014 11:08 AM
பெரியவர் சொன்னது சத்தியம்! இந்திய ஏற்றுமதி உலகத்தில் விசாரித்தால், கொட்டுகின்றன உண்மைகள். 2013 -14 நிதியாண்டில், இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி எவ்வளவு தெரியுமா? 5.1 பில்லியன் டாலர். அதாவது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 60% அதிகம். கடந்த ஆண்டு 9.83 லட்சம் டன் கடல் உணவை ஏற்றுமதிசெய்திருக்கிறது இந்தியா. இந்த நிதியாண்டின் இலக்கு 6 பில்லியன் டாலர். "இந்த இலக்கை அடைவது பெரிய கஷ்டம் இல்லை" என்கிறார் கடல் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் (எம்பெடா) தலைவர் லீனா நாயர். இலக்கை அடைவதற்கு அவர் முக்கியமான வழியாகக் குறிப்பிடுவதும் நம்புவதும் இறால் ஏற்றுமதியை.
அமெரிக்காவும் இறாலும்
இந்தியக் கடல் உணவு ஏற்றுமதியில் தெற்காசியச் சந்தைக்கே முதலிடம் (26.38%). அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தை நோக்கி நகர்கிறது (25.68%). அடுத்தடுத்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் (20.24%), ஜப்பான் (8.21%), சீனா (5.85%), மேற்கு ஆசியா (5.45%) சந்தைகள் வருகின்றன.
இந்தியக் கடல்சார் ஏற்றுமதி நிறுவனங்களின் கண் அமெரிக்காவை நோக்கியே இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவுக்கான இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 19% அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவுக்கான இந்த ஏற்று மதியில் முக்கிய இடம் இறாலுக்கானது. அமெரிக்காவுக்கு நாம் ஏற்றுமதி செய்யும் கடல் உணவில் 64.12% இறால். கடந்த ஆண்டு மட்டும் இந்தியா 95,927 டன் இறாலை அனுப்பியிருக்கிறது. அமெரிக்காவின் மிகப் பெரிய இறால் ஏற்றுமதியாளர் இன்றைக்கு இந்தியாதான். இந்தியா தனது இறாலில் அமெரிக்காவுக்கு 51%; தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 16%; ஐரோப்பிய நாடுகளுக்கு 16%; ஜப்பானுக்கு 5% அனுப்புகிறது.
தாய்லாந்தைத் தாண்டும் இலக்கு
"தாய்லாந்து பிடித்துவைத்திருந்த இடம் இது. அவர்கள்தான் இறால் ஏற்றுமதியில் முன்னே நின்றார்கள். இப்போது தாய்லாந்து கடலில் வளம் குறைந்து விட்டதால், இந்தியா அந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. நாம் பிடித்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள இதுதான் தருணம். அதனால், இறால் அறுவடையை அதிகரிக்க முடிந்த முயற்சிகளையெல்லாம் எடுத்துக்கொண்டிருக்கிறோம்" என்கிறார்கள் ஏற்றுமதியாளர்கள்.
ஒருகாலத்தில் தாய்லாந்திலிருந்து மட்டும் ஆண்டுக்கு 5 லட்சம் டன் இறால் ஏற்றுமதி ஆகும். அதேபோல, வியட்நாம், மலேசியா, தாய்வானிலிருந்தும் பெரிய அளவில் இறால் ஏற்றுமதியாகும். இப்போது அங்கு கடல் வளம் காலி. வெறித்தனமான மீன்பிடி முறைகள், நோய்த் தாக்குதல் காரணமாக அங்குள்ள கடல் உணவுப் பதனீட்டு ஆலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
இதனிடையே, ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒப்பந்தப்படி இறாலை ஏற்றுமதிசெய்ய கிழக்காசிய நாடுகளின் கடல் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங் களும் இந்தியாவிடம் இறாலை எதிர்பார்க்கின்றன. சீனா, வியட்நாம், தாய்வானைச் சேர்ந்த பல நிறுவனங்கள் கடந்த ஆண்டு இந்தியாவிடமிருந்து இறாலை வாங்கி, அமெரிக்காவுக்கு மறு ஏற்றுமதி செய்திருக்கின்றன. இறால்பாடின் வீழ்ச்சி அதன் விலையையும் உயர்த்தியிருக்கிறது. இந்தச் சூழலை இந்தத் தொழிலில் உள்ள இந்தியப் பெருநிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கின்றன. ஆக, ஏற்றுமதி உலகம் ஒவ்வோர் ஆண்டும் கடல் உணவின், இறாலின் ஏற்றுமதி இலக்கை அதிகரிக்கிறது.
தமிழ்நாட்டின் பங்களிப்பு
இந்த அழுத்தம் தமிழகக் கடலோடிகள் மீதும் விழுகிறது. நாட்டின் 13% கடற்கரையையும் 9.4% பிரத்யேகப் பொருளாதார மண்டல கடல் பகுதியையும் பெற்றிருக்கும் தமிழகம், நாட்டின் மொத்தக் கடல் உணவுக்கு 12.62% பங்களிக்கிறது. ஓர் ஆண்டுக்கு இப்போது தமிழகக் கடலிலிருந்து நடக்கும் கடல் உணவு அறுவடை 4.32 லட்சம் டன். இதில் பாதி 50 மீட்டர் ஆழத்துக்கு உள்பட்ட கடல் பகுதி யிலும் மீதி 50 மீட்டர் ஆழத்துக்கு மேற்பட்ட பகுதியிலும் பிடிக்கப்படுகின்றன. தமிழகக் கடல் பகுதியில் 7 லட்சம் டன் அளவுக்கு ஆண்டுக்கு அறுவடை செய்யலாம் என்று மதிப்பிடுபவர்கள் அதற்கேற்பக் கணக்குப் போடுகிறார்கள்.
பொதுவாக, கடலில் இப்படி அறுவடையை அதிகரிக்கத் திட்டமிடும்போது எல்லோரும் பரிந்துரைக்கும் இடம் ஆழ்கடல். அரசும் ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்கும் நோக்கத்திலேயே நவீன மீன்பிடிக் கொள்கைகளை வகுத்தது; டிராலர்களுக்கு அனுமதி அளித்தது. ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளையும் போல, இங்கும் பெரும்பாலான டிராலர்கள் ஆழம் குறைந்த பகுதியிலேயே ஓடி, முறையற்ற மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இன்னொரு முக்கியமான பிரச்சினை, இந்த ஏற்றுமதி இலக்கு கடலில் கிடைக்கும் ஒட்டுமொத்த வளத்துக்கானது அல்ல; இறாலைக் குறிவைத்தது. இந்த இறால் வேட்டையில் கடலடியை நொறுக்கிப் பிடிக்கப்படும் இறாலின் மொத்த எடையைக் காட்டிலும், குறைந்தது இரண்டு மடங்கு தங்களுக்குத் தேவைப்படாத இனங்களையும் பிடித்து அழிக்கிறார்கள்.
ஏற்றுமதியின் இன்னொரு முகம்
"ஆரம்பத்துல தன்னோட சொந்த மக்கள் வலுவா இருக்கணும்னு அரசாங்கம் நெனைச்சுச்சு. புரதச் சத்துக்குக் கடல் உணவு முக்கியம்னு நெனைச்சுதான் மீன்பிடித் தொழில்ல, நவீன முறைகளை அரசாங்கம் கொண்டாந்துச்சு. ஆனா, ஏத்துமதி கொடுத்த அந்நியச் செலாவணி நம்ம ஆட்சியாளருங்களோட நோக்கத்தை மாத்த ஆரம்பிச்சுடுச்சு.
ஒலகம் முழுக்க இந்த மாரி டிராலருங்கள வெச்சி, கடல அரிக்கிற வேல நடக்குது. பல நாடுகள்ல கடல் வளத்தையே இன்னிக்கு இழந்துட்டு உட்கார்ந் திருக்குங்க. நாளைக்கு இங்கேயும் அப்பிடி நடக்கும். ஒவ்வொரு வருசமும் ஏத்துமதியை ஏத்துறோம், அந்நியச் செலாவணியை ஏத்துறோம்னு பேசி, சாதனை போலச் சித்திரிக்கிறாங்க. நடப்புல, இங்கெ உள்ளூர்க்காரனுக்குக் கெடைக்க வேண்டிய நல்ல மீனு எறாலைப் பறிச்சுதாம் வெளிய அனுப்புறாங்க. கேட்டா, கடல் தொழிலுக்குப் போறவங்களுக்கும்தானே வருமானம்னு பேசுவாங்க. கடலோடிங்களுக்குத் தேவை சரியான வருமானம். அதை வெளிநாட்டுக்காரன் கிட்டதான் வாங்கிக் கொடுக்கணும்னு யாரு கேக்குறா? உள்நாட்டுலயே நல்ல வெல கெடைக்க வழி பண்ணலாமே?
உண்மையான பின்னணி என்னான்னா, உள்நாட்டுல இதை வித்தா கெடைக்குற காசுல பெரும் பகுதி எங்களுக்கு நேரடியா வந்துரும். அதே ஏத்துமதின்னா, கடலோடிங்களுக்குச் சொற்பம். இத வாங்கி ஏத்துமதி செய்யிற ஆளுங்க கோடிக் கோடியா அள்ளுறாங்க. அந்த வெறிதான் மேல மேல வாரிக்குவிக்கணும்னு கடலைச் சூறையாடச் சொல்லுது. தடை செஞ்ச உயிரைக்கூட வெட்டி டப்பியில அடைச்சி அனுப்பச் சொல்லுது. கரைக் கடலுல ஓடும்போது, டிராலரோட அடிக் கதவு பவளப் பாறைங்கள அடிச்சு நொறுக்கும், தரையையே உழுதுறும்னு ஊருக்கே தெரியும். இந்திய அரசாங்கத்துக்குத் தெரியாதா? ஆனா, ஒண்ணும் நடக்காது. கட்சி வேறுபாடுங்களைக் கடந்து, பல அரசியல்வாதிகளோட மொதலீடு இந்த டிராலருங்கள்ல இருக்குது. நம்மூரு அரசியல்வாதிங்க எத்தன பேருக்கு, இந்தியா முழுக்க டிராலரு, கப்பலு ஓடுதுன்னு தெரியுமா? எல்லாம் பினாமி ராஜ்ஜியம்."
- கடலோடிகளுக்கு எதுவும் தெரியாமல் இல்லை.
ஆழ்கடலில் அந்நியக் கைகள்
இந்தத் தொடர் உரையாடலின் தொடர்ச்சியாக டிராலர் முதலாளிகளிடம் பேசினேன். அவர்கள் தரப்பு நியாயங்களை அடுக்கினார்கள். போகிற போக்கில் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் பெரும் அதிர்ச்சியைத் தரக் கூடியது. "நம்மளோட கடல் எல்லையில தாய்வான்காரனும் வியட்நாம்காரனும் கப்பல்ல வந்து வேட்டையாடுறான். எல்லாம் பெரிய அளவுள்ள, எல்லா வசதியும் கொண்ட நவீனக் கப்பலுங்க. சுறாவைப் புடிக்கிறான். கப்பலுக்குள்ளேயே வெட்டுறான், தூவிய எடுத்துக்கிட்டு, ஒடம்பத் தூக்கி வீசுறான். எறாலைப் புடிக்கிறான். கண வாயைப் புடிக்கிறான். எல்லாத்தையும் கப்பலுக்குள்ளேயே சுத்தம் பண்ணி, பதப்படுத்தி, டப்பாவாக்கிட்டு, கழிவெல்லாம் கடல்லயே வுட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கான். யாரும் அவனை ஒண்ணும் பண்ண முடியலை."
"அதெப்படி அந்நியக் கப்பல்கள் நம்முடைய எல்லைக்குள் அத்துமீறி வந்து மீன்பிடிக்க முடியும்?"
"ம்... கப்பல் அவன் பேருல இருந்தாத்தானே? கப்பலோட உரிமம் நம்மாளுங்க பேருலல இருக்கும்? டெல்லி ராஜ்ஜியத்துல செல்வாக்குள்ள ஆளுங்க கையும் அதுல இருக்குதே? இத யார் கேக்க?"
இங்கே என்ன நடந்தாலும் கடைசியில் அது அரசியலைப் போய் அடைகிறது. அரசியல்வாதிகளோ தங்கள் தொழில் போட்டிக்கான எல்லையை விரித்துக் கொண்டே போகிறார்கள். ஆழ்கடலுக்குள்ளேயும்.
அறைக்குத் திரும்புகிறேன். டிவியில் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகக் கடலோடிகள் மீதான இலங்கை ராணுவத்தின் வெறியாட்டம்...
(அலைகள் தழுவும்...)
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT