Published : 12 Sep 2014 11:03 AM
Last Updated : 12 Sep 2014 11:03 AM
முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின், கடலோடிகள் சமூகத்தைச் சேர்ந்தவர். கடல் வளம் கற்பிக்கும் பேராசிரியர். சமூக ஆய்வாளர். தமிழகக் கடலோடிகளின் வாழ்க்கைப்பாட்டையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் உரக்கப் பேசும் ‘அணியம்’, ‘கரைக்கு வராத மீனவத் துயரம்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.
வறீதையா தான் எழுதுவதைத் தாண்டி இன்னொரு முக்கியமான காரியத்தைச் செய்கிறார். கடற்கரைச் சமூகத்தின் குரல்களைப் பேசும் 30-க்கும் மேற்பட்ட நூல்களைத் தன்னுடைய ‘நெய்தல் வெளி’ பதிப்பகம் மூலம் கொண்டுவந்திருக்கிறார். கடல், கடலோடிகளின் பிரச்சினைகளை வரலாற்றுப் பின்புலத்திலும் விஞ்ஞான அடிப்படையிலும் நேர்மையாக அணுகுகிறார் வறீதையா.
ஒரு சாதாரணப் பேராசிரியர் என்ற நிலையிலிருந்து உங்கள் சமூகத்துக்காகச் செயல்படுபவராக உங்களை மாற்றிய தருணம் எது?
ஊருல நல்ல சேலாளின்னு பேர் வாங்கினவரு எங்கப்பா. கடல் வாங்கலா, கொந்தளிப்பா இருக்குறப்போகூட பள்ளத்துலேர்ந்து ரெண்டு மரம் கடலுக்குப் போகுதுன்னா ஒண்ணு கான்ஸ்தந்தினோடதா இருக்கும்பாங்க. அப்பிடிப்பட்ட மனுஷனா இருந்தாலும், என்னோட சின்ன வயசுல பல நாள் பசியைப் பார்த்திருக்கேன். பஞ்ச காலம் கடல்புறத்தோட கூடப் பொறந்ததா இருந்துச்சு. பஞ்ச காலத்துல ஒரு நாளைக்கு ஒரு வேளை சமைக்கிறதே வீட்டுல பெரிய விஷயமா இருக்கும். எத்தனையோ அப்பாமார்கள் ஆழ்கடலுக்குத் தங்கலுக்குப் போய் மீன் கெடைக்காம, அவங்க சாப்பிடக் கொண்டுபோன கட்டுச்சோத்தைச் சாப்பிடாமத் திரும்பக் கொண்டுவந்து பிள்ளைங்களுக்குச் சாப்பிடக் கொடுக்குறதைப் பார்த்திருக்கேன்.
இந்த வறுமையெல்லாம் சின்ன வயசுல, ஏதோ நம்ம குடும்பச் சூழல்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன். பின்னாடி கொஞ்சம் கொஞ்சமாத்தான் புரிஞ்சுது நம்மளோட சகல கஷ்ட நஷ்டங்களும் நாம சார்ந்திருக்குற சமூகத்தோட, அரசியலோட, அரசாங்கத்தோட பின்னிப் பிணைஞ்சதுன்னு. கல்லூரி நாட்கள்ல என்னோட பேராசிரியர் சோபணராஜ் சொல்வார், ‘மனுஷன்னா சமூகத்துக்காக எதாவது செய்யுணும்டா’னு. சுனாமி என்னைத் தள்ளுற அந்தத் தருணமா அமைஞ்சுது.
எந்த வகையில் சுனாமி உங்களைப் பாதித்தது?
சுனாமி வந்தப்போதான் நம்மூர்ல பலருக்குக் கடக்கரையில கடல் மட்டும் இல்ல; மனுஷனும் இருக்கான்கிறதே தெரியவந்துச்சு. என்னைப் பொறுத்த அளவுல எங்க மக்கள் இந்தச் சமூகத்தோட எந்த விளிம்புல இருக்காங்கங்கிறதை சுனாமியைத் தொடர்ந்து நடந்த கூத்தெல்லாம் உணர்த்துச்சு. பசி தீர்க்கிறோம்னு சாம்பார் சாதமும் தயிர் சாதமும் கட்டிக்கிட்டு வந்தவங்க கடக்கரை மக்கள் அதைச் சாப்பிடலைன்னதும் கொந்தளிச்சுப்போனாங்க. ‘என்ன திமிர் பாருங்க, இவனுங்களுக்கு... இப்போகூட சாப்பிட மீன் கேட்குது’ன்னு வெளிப்படையா பேசினாங்க. அவங்க பக்கத்துலேர்ந்து பார்த்தா இது நியாயம். ஆனா, நியாயம் இந்தப் பக்கத்துலேயும் இருக்கு.
வீட்டுல அரிசி வாங்கக்கூட காசு இருக்காது. வெறும் கருவாட்டைச் சுட்டுத் தருவாங்க. அதாம் பஞ்ச காலத்துல சாப்பாடு. மீனுங்கிறது வெளியிலதான் விசேஷமான உணவு. கடக்கரையில அதைவிட மலிவானது எதுவுமில்ல. சொல்லப்போனா, எங்களுக்கு அரிசிச் சோறு ஆடம்பரமான உணவு. ஒரு கடலோடிக் குடும்பத்துல பொறந்தவனுக்கு, மரச்சீனிக்கிழங்கு போதும். ஆனா, தொட்டுக்கக் கருவாடாவது வேணும். இன்னைக்கு நேத்து இல்ல; பல ஆயிரம் வருஷங்களா இதுதான் சாப்பாட்டு முறை. எங்களோட உணவுப் பழக்கம் மட்டும் இல்ல இது; ஒரு சமூகத்தோட பண்பாட்டுக் கூறு.
பசியில வாடுற ஒரு ஐயர் குடும்பத்துக்கு அசைவத்தைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்ல மாட்டீங்க. அது தப்புன்னு உங்களுக்குத் தெரியும். ஆனா, கடலோடிகளுக்கு முழுச் சைவத்தைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னப்போ, அவங்க சங்கடப்பட்டது உங்களுக்குத் திமிரா தெரியுது. காரணம் என்ன? எங்களைப் பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாது. சாப்பாட்டுல மட்டும் இல்ல, இந்த அணுகுமுறை. எல்லாத்துலேயும் இருக்குது. கடலை மேலாண்மை பண்ணுறதைப் பரிந்துரைக்கிறதுக்கு எம்.எஸ். சுவாமிநாதனை நியமிச்சீங்களே... கடலுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?
அப்போ ஒரு சமூகவியலாளனா எனக்கு என்ன தோணுச்சுன்னா, தப்பு சமூகத்து மேல மட்டும் இல்ல; நம்ம பக்கமும் இருக்கு. மொதல்ல நாம நம்ம பக்கத்தைப் பத்தி வெளியே பேச ஆரம்பிக்கணும்னு முடிவுசெஞ்சேன். எறங்குனேன்.
அதற்கு நீங்கள் தேடிக்கொண்ட வழிதான் எழுத்தா?
ஆமாம். கருத்துதான் சமூகத்தைப் பொரட்டிப்போடும்னு உறுதியா நான் நம்புறேன். இன்னைக்கு உலகத்துல சமூக விடுதலையை நோக்கி நகர்ற எந்தச் சமூகமும் அது உருவாக்குற கருத்தாக்கங்களால்தான் முன் நகருது.
இன்றைக்குத் தமிழகக் கடலும் கடற்கரை மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் அடிப்படைக் காரணங்களாக எவற்றைப் பார்க்கிறீர்கள்?
ரெண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒண்ணு, கடலோடிகள் கடலுக்கு முகத்தையும் சமூகத்துக்கு முதுகையும் காட்டிக்கிட்டு இருக்குறது. தன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே சொரணையில்லாம கெடக்குது எங்க சமூகம். ரெண்டாவது, கடக்கரைக்கு வெளியிலேர்ந்து வர்ற கூட்டம் பெரிய மொதலீட்டோட ஆவேசமான பசியோட வருது. உலகம் முழுக்க இயற்கையோட வளங்களை வெறியோட பார்க்குற சந்தைப் பொருளாதாரத்தோட தாக்கம் அதுகிட்ட இருக்கு. இது ரெண்டுமா சேர்ந்து பொதுச் சமூகத்துக்கு வெளியிலேயே எங்களை வெச்சிருக்கு. முக்கியமா அரசியலுக்கு வெளியே நாங்க நிறுத்தப்பட்டிருக்கோம். அதுதான் இவ்வளவு பிரச்சினைங்களுக்கும் ஆணிவேரு.
அரசியல்தான் அடிப்படைக் காரணம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
ரொம்ப தூரம் போக வேணாம். கேரளத்தை எடுத்துக்கு வோமே. கேரளத்தோட கடக்கரை நீளம் 595 கி.மீ. கிட்டத்தட்ட நம்ம கடக்கரை நீளத்துல பாதி. ஆனா, நாட்டுலேயே மீன் உற்பத்தில மொத எடத்துல அவங்கதாம் இருக்காங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடியே நம்மளைவிடப் பத்து மடங்கு முன்னாடி இருந்தாங்க, துறைமுகம், தூண்டில் வளைவு, அணுகுசாலைன்னு கடல் தொழில் கட்டமைப்புகளை உருவாக்குறதுல. இன்னைக்குத் தமிழ்நாட்டுலேயே அதிகமான மீன்பிடி நடக்குறது கன்னியாகுமரி மாவட்டத்துல. ஆழ்கடல் மீன்பிடி இங்கேதான் அதிகம். ஆனா, அவங்க பிடிக்கிற மீன் கணக்கு எதுவும் தமிழ்நாட்டுக் கணக்குல வராது. கேரளத்துக் கணக்குலதாம் போவும். அவங்களுக்கான வசதி எதுவும் இங்கே இல்ல. அங்கெ இருக்கு. காரணம் என்ன?
2007 மார்ச்ல ராமேசுவரம் பகுதியில மீன்பிடிச்சுக்கிட்டிருந்த கிருஷ்ணாங்கிற படகு காணாம போகுது. அதுல பன்னெண்டு பேர் கடலோடிங்க இருக்காங்க. அதுல ஒரேயொருத்தர் மலையாளி. தன்னோட மாநிலத்தைச் சேர்ந்த அந்த ஒத்த ஆளுக்காக ஹெலிகாப்டரை அனுப்பித் தேடுது கேரள அரசாங்கம். டெல்லிக்கு நிர்ப்பந்தம் மேல நிர்ப்பந்தம் கொடுத்து இலங்கை அரசாங்கத்தோட பேசச் சொல்லுது. டெல்லியையே உலுக்குது. ஏன், இத்தாலிக்காரங்களால ஒரு கேரள மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச விவகாரம் ஆகிடுச்சே, காரணம் என்ன?
இலங்கைக் கடற்படை தமிழனைச் சுடுற மாரி ஒரு நாளும் ஒரு கேரளத்தவனைச் சுட முடியாது; நடக்குற கதையே வேற. காரணம் என்ன?
கேரளத்துல கடலோடிகள் சமூகத்தோட குரல் அரசியல்ல ஒலிக்குது. அங்கெ அவங்களோட பங்கேற்பு அரசியல்ல இருக்கு. இங்கெ இல்லை. அதாம் காரணம்.
ஆனால், கடல் சூறையாடப்படுவதெல்லாம் உங்கள் சமூகத்தின் பங்கேற்பு இல்லாமலா நடக்கிறது?
கடல் சூறையாடப்படுறதை எந்தவொரு பாரம்பரியக் கடலோடியும் நியாயப்படுத்த மாட்டான். அதே சமயம், ஒருத்தன் தப்பு செய்யிறான்னா எது அவனைத் தப்பு செய்ய வைக்குதுங்கிறதையும் நாம யோசிக்கணும்.
வெளிப்படையாகப் பேசுவோம். கரைக்கடலை நம்முடைய விசைப்படகுகளும் டிராலர்களும் சூறையாடுகின்றன. இதற்கு என்ன தீர்வை முன்வைக்கிறீர்கள்?
ஒரே தீர்வுதான். கரைக்கடல்ல கட்டுமரங்கள், வள்ளங்கள்னு பாரம்பரியக் கலங்களை மட்டும் அனுமதிக்கணும். விசைப் படகுகள், டிராலர்களை ஆழ்கடலை நோக்கித் தொரத்தணும்.
கச்சத்தீவு விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?
கச்சத்தீவு இந்திய நெலத்துலேர்ந்து 12 கல் தொலைவுல இருக்கு; இலங்கை நெலத்துலேர்ந்து 16 கல் தொலைவுல இருக்கு. அது யாரோடதுங்கிறதுக்கு இதைவிடப் பெரிய வியாக்கியானம் வேணாம்.
ஆனால், கச்சத்தீவை மீட்டுவிட்டால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்கிற நினைப்பு அபத்தமானது அல்லவா? ஒருபக்கம் இங்கே நம்முடைய பாரம்பரியக் கடலோடிகளைச் சுரண்டல் மீன்பிடி பாதிப்பதுபோலவே, அங்கே இலங்கை யின் பாரம்பரியக் கடலோடிகளும் பாதிக்கப்படுகிறார்கள். இதையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும் அல்லவா?
ஆமா. கச்சத்தீவை மீட்டா எல்லாம் மாறிடும்னு நெனைக்கிறது ஒரு மாயை. அரசியல் பிழைப்புக்கான வழிகள்ல ஒண்ணு. கச்சத்தீவு நமக்கு வேணும். ஆனா, கச்சத்தீவைத் தாண்டி நாம யோசிக்கணும். அங்கெ உள்ளவங்களும் மனுஷங்கதானே? கடலைச் சுரண்டறதைத் தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கணும். ஆழ்கடல் மீன்பிடி முறையை நவீனமாக்கி ஊக்குவிக்கணும்.
ஆனால், ராமேசுவரம் போன்ற பகுதிகளில் கடல் ஆழம் குறைந்த இடங்களில் ஆழ்கடல் மீன்பிடி முறை எடுபடுமா?
நிச்சயமா. அங்க உள்ளவங்க ‘பீட்டர் பேங்க்’னு சொல்லுவாங்க. அந்தப் பகுதி வழிய தாண்டினா, நாம ஆழ்கடல் மீன்பிடிக்குப் போகலாம். ஆனா, ராமேசுவரம் கடலோடிகள் பகல் பொழுதுல, பக்கத்துலேயே போய் தொழில் பண்ணிப் பழகிருக்காங்க. அந்தத் தொழில் கலாச்சாரத்தை மாத்த நாம நடவடிக்கை எடுக்கணும்.
இன்னும், கடலையும் கடக்கரையை ஆக்கிரமிக்குற ஏனைய தொழில்கள், கடலுக்குள்ள நடக்குற அக்கிரமங்கள் எல்லாத்தைப் பத்தியும் நாம பேசலாம், அடிப்படையில் ஒரே தீர்வுதான். கடலோடிகள்கிட்ட கடலை ஒப்படைச்சுடுங்க. கடல்ல என்ன செய்யணும்னு கடலோடிகளைக் கேட்டுச் செய்யச் சொல்லுங்க. எல்லாம் சரியாயிடும்!
(அலைகள் தழுவும்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT