Published : 08 Sep 2014 09:21 AM
Last Updated : 08 Sep 2014 09:21 AM
வான்இயற்பியல் துறையில் காலங்காலமாக இந்தியா கோலோச்சிவந்ததன் தொடர்ச்சிதான் ஹன்லே தொலைநோக்கி.
வானவியல் அறிவிலும் ஆய்விலும் நாம் எப்போதுமே சளைத்தவர்களில்லை. ஆர்யபட்டா, பாஸ்கரா, பாணினி, வராகமிகிரர் போன்ற சான்றோர்கள் துல்லியமான வானியல் தகவல்கள் பலவற்றை அறிந்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, வானியல் துறையிலும் வான் இயற்பியலிலும் இந்தியா உன்னத நிலையை எட்டியிருக்கிறது. நமது ஆய்வுப் பணிகளுக்காகப் பல்வகை தொலைநோக்கிகள் தற்போது நாட்டின் பல பாகங்களில் நிறுவப்பெற்றுள்ளன. இவற்றைக் கொண்டு வெவ்வேறு வித ஆய்வுப் பணிகள் தொடர்கின்றன.
இந்தத் தொலைநோக்கிகளில் மிகவும் முக்கியமானது இமயமலைச் சிகரம் ஒன்றில் அமைந்திருக்கும் ஹன்லே தொலைநோக்கி மையம். எப்போதும் பனிபொழியும் மலைமுகடுகளையும், எளிதாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல முடியாத சரிவு களையும் அதீதமான குளிரையும் கொண்டது இமய மலைப் பகுதியில் இருக்கும் லடாக் மாவட்டம். லடாக்கின் தலைநகரம் லே. இதற்குத் தென்கிழக்கில் சிந்து நதியும் ஹன்லே நதியும் பாயும் சிற்றூர்தான் ஹன்லே. கடல் மட்டத்திலிருந்து நாலரை கிலோ மீட்டர் உயரம் - சரியாகச் சொன்னால் 4,517 மீட்டர் உயரம் கொண்டது அங்கிருக்கும் சரஸ்வதி சிகரம். அதன் முகட்டில்தான் இந்தியாவின் மிகச் சிறந்த தொலை நோக்கி நிறுவப்பெற்றிருக்கிறது.
தெளிவான வானவெளி
இந்த உயர்ந்த பகுதி தேர்வுசெய்யப்பட்டக் காரணம்? இந்த இடத்திலிருந்துதான் மாசு - தூசு இல்லாத வானவெளியை இரவிலும் நாம் காண முடி யும். மேலும், பூமியிலிருந்து உயரே செல்லச் செல்ல விண்வெளியிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் ஈர்க்கப்பெறும் தன்மையையும் குறைக்க ஏதுவாகிறது. வானுயர்ந்த சிகரங்களில்தான் செயற்கை வெளிச்சமும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் மிகவும் குறைந்து காணப் படும் என்பது இன்னொரு சாதகமான அம்சம்.
மிகவும் குறைவாக ஈரப்பதம் கொண்ட காற்று, அமைதியான சூழல், இடையூறு இல்லாத இரவுப் பொழுதுகள், வான்வெளியிலிருந்து கிடைக்கப்பெறும் சமிக்ஞைகளைத் துல்லியமாக அளிக்கும் கட்டுமானம் என்பதெல்லாம் இந்தப் பகுதியைத் தேர்வு செய்வதற்கான காரணங்கள்.
பேராசிரியர் கவுசிக் இட்ட அடித்தளம்
‘இந்திய வானியல் நிறுவன’த்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ராம்நாத் கவுசிக். ஹன்லே தொலைநோக்கி நிறுவப்பட்டதன் பின்னணியில் இவரது பெருமுயற்சி இருக்கிறது. பல ஊர்களைச் சுற்றிப்பார்த்து 1990-களில் ஹன்லேயைத் தேர்வுசெய்தது இவர்தான். கட்டிட அமைப்பு, 20 டன்களுக்கு மேல் எடையுள்ள உபகரணங்கள் என்று அவற்றை நிர்மாணிக்கச் சந்தித்த இன்னல்கள் பல. அந்த நேரத்தில் இந்திய ராணுவம் நமது அறிவியல் ஆர்வலர்களுக்கு அளப்பரிய உதவிகளைச் செய்துகொடுத்தது. தற்போதும் இந்த மையத்தை அணுகும் பாதையின் பராமரிப்பை இந்திய ராணுவ எல்லைப்புறச் சாலைப் பிரிவினர்தான் ஏற்றுக்கொண்டுள்ளனர். (அடிக்கடி பனிப்பொழிவு, பாறைச் சரிவு என்று இடையூறுகளுக்குப் பஞ்சமே இல்லை)
சந்திரா தொலைநோக்கி
ஹன்லே அமைப்பில் மிகவும் முக்கியமானது இரண்டு மீட்டர் விட்டம் கொண்ட சந்திரா தொலைநோக்கியே. வான் இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற தமிழரான சந்திரசேகரின் நினைவாக ‘சந்திரா தொலைநோக்கி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சந்திரா தொலைநோக்கி தவிர, மிகச் சிறு ‘சலனம்’ எனச் சொல்லப்படும் வான்வெளிப் பொருட்கள், காமாக்கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள் முதலியவற்றைப் படமெடுக்கும் புகைப்படக் கருவிகளும் பொருத்தப்பெற்றுள்ளன. கருவிகளின் இயக்கத்துக்கு அடிப்படையான மின்னாற்றலுக்காகவும், இயக்கு வோருக்குக் கதகதப்பு கொடுப்பதற்காகவும் சூரிய ஒளியில் இயங்கும் சாதனங்களும் ஹன்லேயில் நிறுவப்பெற்றிருக்கின்றன.
தொலைஇயக்கி மூலம்
எங்கோ இமயத்தின் சிகரத்தில் அமைந்திருக்கும் இந்தத் தொலைநோக்கி அமைப்பை இயக்கித் தகவல் களைச் சேகரித்துத் தொகுத்து ஆய்வுசெய்வது பெங்களூரு அருகே ஹொசகோட் என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்திய வான்இயற்பியல் மையம்தான். ஹன்லே தொலைநோக்கியின் முழுக் கட்டுப்பாட்டையும் இந்த மையம் ஏற்றுள்ளது. கணிப்பொறி மூலம் சேமிக்கப்பெறும் தகவல்கள், படங்கள் தவிர, தொலை நோக்கி இயக்கம் குறித்த உத்தரவுகள் யாவுமே தொலை இயக்கிகள் மூலம்தான் தரப்படுகின்றன.
இதற்காகவே இந்திய விண்வெளிக் கழகத்தின் செயற்கைக் கோள்கள் 24 மணி நேரமும் தொடர்புகளை ஏற்படுத்தித்தருகின்றன.
2000-ல் செப்டம்பர் மாதம் 26, 27 தேதிகளில் இரவுப் பொழுதில் பன்னாட்டுத் தரங்களுக்கேற்பத் தகவல் படங்களை ஹன்லே மையம் மூலம் முதன்முதலாக நாம் பெற்றோம். இந்திய வான்இயற்பியல் மையத்தின் (ஹொசகோட்) 228 ஆண்டு சேவையில் ஹன்லே அமைப்பு ஒரு இமாலய சாதனைதான். பெறப்படும் படங்கள், நகல்கள், தகவல்கள் யாவுமே துல்லியமாகப் பன்னாட்டுத் தரத்துக்கு இணையாக இருக்கின்றன என்று இந்திய வான்இயற்பியல் நிறுவனத்தின் தற்போதைய இயக்குநர் ஜே.எச். சாஸ்திரி கூறுகிறார். நவீன செயற்கைக் கோள்கள், விண்வெளியில் நிறுவப்படும் தொலைநோக்கிகள் போன்றவை இருந்தாலும்கூட கீழே பூமியில், தரையில் பொருத்தப்படும் தொலைநோக்கிகளின் பயன்பாடு எப்போதும் தேவைதான் என்கிறார்கள் புகழ் மிக்க அறிவியலாளர் சி.என்.ஆர். ராவ் போன்றவர்கள்.
கொடுங்குளிரிலும்…
ஹன்லே தொலைநோக்கி மையம் இருக்கும் இடத்தில் மிகவும் குறைவாகவே ஆக்ஸிஜன் காணப் படுகிறது. வெப்பநிலையும் மைனஸ் 25-லிருந்து மைனஸ் 30 வரை இருக்கும். இப்படிப்பட்ட சூழலிலும் ஹன்லே மையத்தில் பணியாற்றும் நிபுணர்கள் மிகுந்த ஊக்கத்துடன் செயல்பட்டுவருகிறார்கள். இதனால்தான், ஹன்லே தொலைநோக்கி விண்வெளி ரகசியங்கள், பல கிரகங்களின், நட்சத்திரங்களின் தன்மைகள், அண்டத்தின் செயல்பாடுகள் எனப் பல வகையில் மனித மேம்பாட்டுக்காகத் தகவல்களை அளித்துவருகின்றன.
வானத்தை நோக்கி நின்றால் என்ன கிடைக்கும் என்ற ஓர் எதிர்மறை எண்ணம் தோன்றிய காலமும் இருந்தது. ஆனால், தற்போதைய நிலவரம் என்ன தரியுமா? ஹன்ஸ்லே போலவே ஒரு நெடிய மலை முகட்டில் தொலைநோக்கி ஒன்றை (இமயமலைப் பகுதிகளில்) நிறுவ சீனா முயற்சி செய்கிறது. அதைப் போலவே பூமியின் மற்ற பாகங்களுக்கும் இதுபோன்ற அமைப்பு ஒன்று தேவை எனக் கருதி, தென்அமெரிக்க நாடான சிலியில் ஆண்டிஸ் மலைத் தொடர்களில் பொருத்தமான பகுதியைத் தேடும் முயற்சியில் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
- பி. சௌந்தரராஜன், தலைவர், அஞ்சல்தலை சேகரிப்போர் சங்கம், திருச்சி, தொடர்புக்கு: sounderr2000@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT