Published : 22 Sep 2014 09:03 AM
Last Updated : 22 Sep 2014 09:03 AM
மரபணு மாற்றப் பயிர்கள் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது சரியல்ல.
உலகம் மக்களால் ததும்பி வழிகிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உலகம் காலியாக இருக்கிறது. நம்ப முடியவில்லையா? இந்த உதாரணத்தைப் படியுங்கள். தென்னிந்தியாவின் பரப்பளவு சுமார் 64,000 கோடி சதுர மீட்டர்கள். உலக மக்கள்தொகையை 700 கோடி என்று வைத்துக்கொண்டால், ஒவ்வொருவருக்கும் 90 சதுர மீட்டருக்கும் மேல் இடம் இங்கு இருக்கிறது. 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு 450 சதுர மீட்டர். கிட்டத்தட்ட இரண்டு கிரவுண்டுகள்! ஒருவரை ஒருவர் இடித்துக்கொள்ளாமல் தாராளமாக இருக்கலாம். இந்தியா மற்றும் உலகத்தின் மற்ற எல்லாப் பாகங்களையும் காலியாக விட்டுவிடலாம்.
ஆனால், மொத்த மனித குலத்தையும் தென்னிந் தியாவில் அடைத்துவிட முடியாது என்பது நமக்குத் தெரியும். நமக்கு உணவு, உடை வேண்டும்; பிற வசதிகள் வேண்டும். தென்னிந்தியாவின் நிலப் பரப்பளவால் இவை அனைத்தையும் எல்லோருக்கும் தர முடியாது. காலியிடங்கள்தான் நம்மை வாழ வைக்கின்றன. காலியிடங்கள் என்றால் காடுகள் இல்லாத இடங்கள்; விளைநிலங்கள், மேய்ச்சல் நிலங்கள். இன்று, இவை அனைத்தும் சேர்த்து சுமார் 49,00,000 கோடி சதுர மீட்டர்கள் இருக்கும். ஒருவருக்கு 7,000 சதுர மீட்டர்கள். ஏக்கர் கணக்கில் சொல்ல வேண்டுமானால், சுமார் 1.7 ஏக்கர். எனவே, திருவல்லிக்கேணி சந்துகளில், தாராவிச் சேரிகளில் ஒருவர் சுவாசத்தை மற்றவர் மீது விட்டுக்கொண்டு வாழ்வதற்கு எங்கோ ஓரிடத்தில் ஒருவருக்கு 1.7 ஏக்கர் வீதம் காலியிடம் இருந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இல்லையென்றால், சாப்பிட உணவும் உடுக்க உடையும் கிடைக்காது.
விவசாயம் இயற்கையானதா?
காடுகள் இயற்கையானவை. காலியிடங்கள் பெரும்பாலும் நம்மால் உண்டாக்கப்பட்டவை. ‘காடு திருத்திக் கழனியாக்கியது’ மனிதத் தலையீட்டால் ஏற்பட்டது. இன்று விளையும் பயிர்களில் பல, மனிதத் தலையீடு இல்லாவிட்டால் பிழைக்க முடியாது. உலக நிலப் பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதி விளைநிலங்கள் அல்லது மேய்ச்சல் நிலங்கள். இவை, மனிதர்களால் இயற்கையை அழித்து உருவாக்கப்பட்டவை. ‘விவசாயம் மனித குலம் செய்த மிகப் பெரிய தவறு’ என்று ஒரு வல்லுநர் கூறுகிறார். நான் அவ்வாறு நினைக்கவில்லை. விவசாயம் இல்லாவிட்டால், இன்று நாம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. மனிதர்கள் தங்கள் அறிவினால் இயற்கையை வசப்படுத்திக் கொள்ள எடுத்த முயற்சிகளில் தலையாயது விவசாயம். ஆனால், அது இயற்கையாக நிகழ்ந்தது அல்ல, மனிதர்கள் இயற்கையோடு போராடி மாற்றம் செய்த தால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏட்டில் எழுத்தாணியால் எழுதிக்கொண்டிருந்தவர்கள், இன்று பேனாவால் தாளில் எழுதுவது போல, கணினியில் தட்டச்சு செய்வதுபோல, விவசாய முறைகளும் படிப்படியாக முன்னேறி இன்றைக்கு இருக்கும் நிலைமையை அடைந்திருக்கின்றன. எனவே, பழைய முறைகளை - அவை நமது மூதாதையரிட மிருந்து வந்தவை என்பதற்காகவே - பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்க வேண்டிய எந்தக் கட்டாயமும் இல்லை. ‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்றாலும், புவிவெப்பமாதலின் முழுமுதற் காரணம் விவசாயம் என்பதை மறந்துவிடக் கூடாது. விவசாயத்தால் உண்டாக்கப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு விமானங்கள், கார்கள் மற்றும் புகைவண்டிகளால் வெளியிடப்படும் வாயுக்களின் மொத்த அளவை விட அதிகம். நமது தண்ணீர் வளத்தை மிக அதிக அளவில் பயன்படுத்துவதும் விவசாயம்தான். ஆனால், விவசாயத்தை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
ஆயிரம் கோடி மனிதர்கள்
இந்த நூற்றாண்டு முடிவடையும்போது உலகத்தில் ஆயிரம் கோடி மனிதர்கள் இருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லோருக்கும் உணவளிக்க வேண்டிய கட்டாயம் மனித குலத்துக்கு இருக்கிறது. அதே சமயத்தில், மாசுக் கட்டுப்பாடும் தேவை. இதற்காக ஐந்து வழிகளை நேஷனல் ஜியாக்ரஃபிக் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை சொல்கிறது.
• விளைநிலங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் அதிகரிக்கக் கூடாது.
• இருக்கும் நிலங்களில் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்.
• எஞ்சிய இயற்கை வளங்களைத் திறமையாகப் பயன்படுத்த வேண்டும்.
• தானியங்களைக் கால்நடைகளுக்குக் கொடுப்பது குறைக்கப்பட வேண்டும்.
• உணவுப் பொருட்களை வீணாக்குவது குறைக்கப்பட வேண்டும்.
விவசாயம் உலகமயமாக்கப்படுவதும் பெருமுதலாளிகள் கையில் போய்ச் சேர்வதும் தடுக்கப்பட்டாலே பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று மற்றொரு தரப்பினர் சொல்கின்றனர். இவர்கள்
சொல்வது சரிதான் என்றாலும், இவர்களில் பலரிடமிருந்து வந்திருக்கும் மரபணு மாற்றம் குறித்த எதிர்வினைகள் அறிவியலுக்கு மட்டுமல்ல, பொதுப்புத்திக்கும் புறம்பானதாக இருக்கின்றன.
மரபணு மாற்றம்
சமீபத்திய நியூயார்க்கர் பத்திரிகையில் வந்தனா சிவாவைப் பற்றிய கட்டுரை ஒன்று வந்துள்ளது. அந்தக் கட்டுரை, மரபணு மாற்றம்குறித்த விமரிசனங்களை இவ்வாறு எதிர்கொள்கிறது: “செயற்கை இன்ஸுலின் தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட முதல் மருந்து. கோடிக் கணக்கானவர்கள் இன்று இந்த மருந்தால் உயிரோடு இருக்கிறார்கள். பாக்டீரியாவில் மனிதப் புரதங்களைச் செலுத்தி உருவாக்கப்படும் இந்த மருந்து எப்படிச் செய்யப்படுகிறது என்று யாரும் கேட்பதில்லை.”
ஆனால், மரபணு மாற்றம் செய்த பயிர் என்றால் புரட்சி வெடிக்கும் என்று பயமுறுத்துகிறார்கள்!
விவசாய நிலங்களைக் கைவசப்படுத்தும் முயற்சியில் பெரும் சக்திகள் உலகெங்கும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது உண்மை. உலகம் முழுவதும் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்துக்காகவே இயங்குகின்றன என்பதிலும் ஐயம் இல்லை. ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் சோதனைச் சாலைகளில் பிறந்தவை என்பதனாலேயே அறிவியல் கண்டுபிடிப்புகள் பொய்களாகிவிடாது. எனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் நிலம் பாழாகி, நச்சுத்தன்மையை அடைந்துவிடும், விவசாயிகள் பேரிழப்பை ஏற்க நேரிடும் போன்ற பிரச்சாரங்கள் விவசாயிகளுக்கு நன்மை செய்யப் போவதில்லை. மாறாக, அவர்களைக் குழப்பத்துக்கு உள்ளாக்குகின்றன.
மூன்று பசிகள்
எம்.எஸ். சுவாமிநாதன் மூன்று விதமான பசிகளைக் குறிப்பிடுகிறார். முதலாவது, உணவுக்கான பசி. இது தேவையான கலோரிகளை உண்பதால் தீர்கிறது. இந்தப் பசி தீர்க்கப்பட்டுவிட்டது என்று சொல்லலாம். இரண்டாவது, புரதப் பசி. இது புரதச் சத்து மிக்க உணவுகள் உண்பதால் தீர்கிறது. மூன்றாவது, மறைந்திருக்கும் பசி. இது கனிமங்கள் மற்றும் விட்டமின்கள் குறைபாட்டினால் ஏற்படுவது. மூன்றாவது பசியை மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களால் நிச்சயம் நீக்க முடியும். அத்தகைய உணவுப் பொருட்கள், வெளிப்படையான, அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே மக்களிடம் கொண்டுசெல்லப்பட வேண்டும். ஆனால், மரபணு மாற்றமே இயற்கைக்கு விரோதமானது; எனவே, அவை மக்களைச் சென்றடையக் கூடாது என்பவர்களிடம் விவாதம் செய்வது கடினம்.
அறிவியல் மக்களுக்குச் சொந்தமானது. அதை மக்களிடம் சென்றடையச் செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது என்பதை அறிவுஜீவிகள், பன்னாட்டு நிறுவனங்களை எதிர்க்கும் வேகத்தில் மறந்துவிடக் கூடாது.
- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை',
‘கலங்கிய நதி' ஆகிய நாவல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT