Last Updated : 07 Mar, 2018 10:29 AM

 

Published : 07 Mar 2018 10:29 AM
Last Updated : 07 Mar 2018 10:29 AM

குறைந்துவருகின்றன குழந்தைத் திருமணங்கள்!

மூகச் சீர்திருத்தவாதியான ராஜாராம் மோகன் ராய் இன்று இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். 18 வயதை எட்டாத இளம் சிறுமிகளைத் திருமணம் செய்துகொடுக்கும் வழக்கம் கடந்த பத்தாண்டுகளில் வெகுவாகக் குறைந்து, பாதியாகிவிட்டது என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நலனுக்கான அமைப்பு யுனிசெஃப் தந்துள்ள அறிக்கை அவரை நிச்சயம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதுமே 2.5 கோடிச் சிறார் மரணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதில் கணிசமான எண்ணிக்கை தெற்காசியாவில் அதிலும் குறிப்பாக இந்தியாவில் என்பது குறிப்பிடத் தக்கது.

உலக அளவில் வளரிளம் பருவ இளைஞர்களில் 20% பேர் இந்தியாவில் உள்ளனர். எனவே, தெற்காசியாவில் சிறார் திருமணங்களில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 27% சிறுமிகள், அதாவது சுமார் 15 லட்சம் சிறுமிகள் 18 வயதுக்கு முன்னதாகவே திருமணம் செய்துவைக்கப்படுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்னால் இது 47% ஆக இருந்தது. 18 வயதுக்கு முன்பு திருமணம் செய்துகொள்வதால், பெண்களின் உடல் நலமும் கல்வியும் பாதிக்கப்படுகின்றன. தாய்க்கும் சேய்க்கும் ரத்தசோகை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாகப் பிரசவத்தின் போது தாயின் மரணம், சிசு மரணம் ஆகியவற்றின் எண்ணிக்கையும் அதிகரிக்க முக்கியக் காரணங்களாகத் திகழ்கிறது. கல்வி யைப் பாதியிலேயே கைவிட நேர்வதால், குடும்பத்தின் பொருளாதார நிலை முன்னேறாமல் தொடர்ந்து அடுத்த தலைமுறைகளிலும் ஏழைகளாகவோ, நடுத்தரக் குடும்பத்தவர்களாகவோ தொடர நேர்கிறது.

இப்போது அரசின் பிரச்சாரமும், சமூகத் தில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், பெண் குழந்தைகளின் கல்வியறிவு பரவுவதும் சிறார் திருமணங்களின் எண்ணிக்கை குறைய உதவுகிறது.

குடும்பத்தார் திருமணத்தை ஏற்பாடு செய்தாலும் சிறுமிகளே அதை நண்பர்கள் அல்லது காவல் துறை உதவியுடன் தடுத்து நிறுத்திவிடுகின்றனர். சிறார் திருமணத்தை நடத்துவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் ரொக்க அபராதமும் விதிக்க வகைசெய்யும் சட்டமும்கூட இது குறைய முக்கியக் காரணமாகத் திகழ்கிறது.

சட்டபூர்வமான திருமண வயது பெண் களுக்கு 18, ஆண்களுக்கு 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறார் திருமணம் பற்றிய தகவல் கிடைத்தால், அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று புரோகிதர்கள், திருமணக் கூடங்களை அலங்கரிப்பவர்கள் போன்றோரிடமும் காவல்துறை கேட்டுக்கொண்டிருப்பதால் இந்த வகைத் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அப்படியே தப்பித்தவறி 18 வயது நிரம்பாத பெண்ணுக்குத் திருமணம் செய்தால் அத்திருமணமே செல்லாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

18 வயது நிரம்பாத பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு உடலுறவு கொண்டாலும் அது வல்லுறவாகவே கருதப்படும் என்ற சட்டப் பிரிவும்கூடப் பலரையும் அச்சப்படுத்தியிருக்கிறது. ஆயினும், இது இன்னும் தீவிரப்படுத்தப்பட்டு, சிறார் திருமணமே நடக்கவில்லை என்ற நிலை ஏற்படுவதுதான் நமக்கெல்லாம் பெருமை.

பழமைவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த காலத்தில் வாழ்ந்த ராஜாராம் மோகன் ராய், கணவனின் இறப்புக்குப் பிறகு மனைவியை யும் உயிரோடு சிதையில் வைத்து எரிக்கும் ‘சதி’ என்ற கொடுமையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். அதற்காக அரசு சட்டமியற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அதில் வெற்றியும் பெற்றார்.

கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் வற்புறுத்தினார். ஆண்களுக்குச் சமூகம் அளித்த அந்த உரிமையைப் பெண்களுக் கும் கேட்டுப் போராடினார். பால்ய விவாக முறையையும் அவர் கடுமையாக எதிர்த்தார். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அது சரியல்ல என்று வாதாடினார். அவரைப் பின்பற்றி உருவான பல சீர்திருத்தவாதிகளுக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சி தரும் செய்திதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x