Last Updated : 20 Mar, 2018 09:42 AM

 

Published : 20 Mar 2018 09:42 AM
Last Updated : 20 Mar 2018 09:42 AM

திராவிட நாடு கோரிக்கை ஏன் எழுந்தது? எதனால் கைவிடப்பட்டது?

‘அ

டைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு’ என்ற முழக்கம் 1938-லிருந்து ஒலிக்கத் தொடங்கியது. 1962 அக்டோபரில் வேலூர் சிறையிலிருந்து விடுதலையடைந்த அண்ணா, இந்திய- சீனப் போரினைக் கருத்தில்கொண்டு நாட்டின் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்று திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ‘வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில் நாம் பிரிவினை பேசுவது அயலானுக்கு இடம் கொடுத்துவிடுவதாகும். நாம் அப்படி நடந்துகொண்டால் வருங்காலத்துத் தலைமுறை நம்மைச் சபிக்கும்' என்று தங்கள் நிலையைத் தெளிவுபடுத்தினார் அண்ணா.

ஓராண்டுக்குப் பிறகு, நேரு தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் பிரிவினைக்கு எதிராகச் செயல்படும் கட்சிகளையும் அமைப்புகளையும் தடைசெய்யும் வகையில் அரசியல் சட்டத்தில் 16-வது திருத்தத்தைக் கொண்டுவந்ததன் மூலமாக, திராவிட நாடு கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்தி எதிர்ப்பு தந்த முழக்கம்

1937-ல் சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையிலான அரசு இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியபோது, பெரியார் தலைமையிலான நீதிக் கட்சி ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் முழக்கத்தைக் கையிலெடுத்தது. 1938-ல் நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும்போது பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டம் காரணமாக சிறைப்படுத்தப்பட்டிருந்தார். சிறையிலிருந்து வெளிவந்தவுடன் சென்னைக் கடற்கரையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றும்போது இம்முழக்கத்தை அறிவித்தார்.

அப்போதைய சென்னை மாகாணத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகளும் உள்ளடங்கி இருந்தமையால், 1940-ல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று அம்முழக்கம் மாற்றம் கண்டது. இப்பிரிவினைக் கோரிக்கைக்கு முக்கியக் காரணம், இந்தியா பிரிட்டிஷாரிடம் விடுதலை அடைந்தாலும் நாடு ஆதிக்கச் சாதியினர், பணமுதலைகளின் கைகளில் சென்றுவிடும், வடவர்கள் தென்னாட்டு மக்களைச் சுரண்டிவிடுவார்கள் என்ற அச்ச உணர்வுதான். பெருமளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த வேளையில் இரண்டாவது உலகப் போர் தொடங்கியதால் அக்கோரிக்கை கைவிடப்பட்டது.

திராவிடஸ்தான்?

பெரியார், ஊ.பு.அ. சௌந்தரபாண்டியன், முத்தையா, சாமியப்பன் ஆகியோர் 1942-ல் கிரிப்ஸ் குழுவின் முன்பாக திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தினர். ஆனால், அத்தகைய கோரிக்கையைச் சட்ட மன்றத்தில் தீர்மானமாகவோ அல்லது பொது வாக்கெடுப்பின் மூலமாகவோதான் எழுப்ப முடியும் என்று கிரிப்ஸ் குழு அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. பெரியார், திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு கேட்டு முகமது அலி ஜின்னாவைச் சந்தித்தார். திராவிடஸ்தான், இந்துஸ்தான், பாகிஸ்தான், பெங்களிஸ்தான் என்று நாடு நான்காகப் பிரிக்கப்பட வேண்டும் என்று ஜின்னா கருத்து தெரிவித்தார். காந்தி இத்தகையத் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

1947-ல் நாடு விடுதலையாகி, பாகிஸ்தான் பிரிந்துசென்றபோது ஜின்னா அவருக்கிருந்த பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் திராவிடஸ்தான் கோரிக்கையைப் பற்றி சிந்திக்காததில் வியப்பேதும் இல்லை. பெரியார் சுதந்திர நாளைத் துக்க நாளாக அறிவித்தார். அண்ணா அதற்கு உடன்படவில்லை. 1949-ல் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா தலைமையில் உருவான பிறகும் திராவிட நாடு கோரிக்கை திமுகவின் முக்கிய கொள்கையாகவே இருந்தது.

காரணங்கள் அப்படியே உள்ளன...

திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடும்போது, “ கோரிக்கைதான் கைவிடப்பட்டது, ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன” என்றார் அண்ணா. அடுத்த கட்டமாகத்தான் மாநில சுயாட்சிக்கு இந்தியாவிலேயே முதலில் குரல் எழுப்பியது திமுக. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதைத் தேசிய முழக்கமாக்க முயன்றது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் எத்தகைய உறவு அமைய வேண்டும் என்பதை ஆராய 1969-ல் ராஜமன்னார் குழுவினை திமுக அமைத்தது. பின்னர் 1983-ல் மத்திய அரசு இதே நோக்கத்துக்காகவும் மத்திய-மாநில அரசுகளிடையே சமமான அதிகாரப் பகிர்வு குறித்தும் ஆராய்வதற்கு சர்க்காரியா குழுவை அமைத்தது.

இவையெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க மறுபுறம் மாநில அரசுகளின் உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசு தன்னுடைய உரிமைகளாக்கிக்கொள்ளத் தொடங்கியது. 1975-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட நெருக்கடிநிலைக் காலத்தில் மாநில அரசின் பல்வேறு அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மத்திய அரசின் கைகளுக்குச் சென்றன.

உதாரணத்துக்கு, மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலில் கொண்டுவரப்பட்டு மத்திய-மாநில அரசுகளின் அதிகாரத்தில் வந்தது. நெருக்கடி நிலை திரும்பப் பெறப்பட்டபோதும், பறிக்கப்பட்ட மாநில உரிமைகள் மீண்டும் திரும்பத் தரப்படவில்லை. இன்றைக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வுக்கும், அறிமுகப்படுத்தும் புதியக் கல்விக் கொள்கைகளுக்கும் கல்வி பொதுப்பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டதுதான் காரணம்.

மத்திய அரசு, மாநிலங்களுடன் தொடர்புகொள்வதற்கான அலுவல் மொழியாக உட்புகுந்த இந்தியை, தேசிய மொழி என்கிற அந்தஸ்தில் திணிப்பதற்கான வேலைகள் தீவிரம் பெற்றுள்ளன. இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரம், மொழி பண்பாடு கொண்ட இனக்குழுக்களின் தொகுப்பு. எல்லோரையும் அணைத்துச் செல்லும் தாயுள்ளம் மத்தியில் உள்ளோருக்குத் தேவை. வேற்றுமையில் ஒற்றுமை என்பது வெறும் வார்த்தைகளாக இல்லாமல், செயல்வடிவில் வர வேண்டும்.

மீண்டும் ஒலிக்கும் உரிமைக் குரல்

தென் மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியிலிருந்து கிடைக்கும் வருமானம் மொத்த வருவாயில் 30% ஆகும். அதே நேரத்தில் மத்திய அரசிடமிருந்து இவர்கள் திரும்பப்பெறுவது 18 % மட்டுமே. இம்மாநிலங்களின் மொத்த மக்கள் தொகை, நாட்டின் மக்கள் தொகையில் 20% மட்டுமே. வளர்ச்சி பெறாத, வளர்ந்துகொண்டிருக்கும் வடமாநிலங்களின் வளர்ச்சிக்குக் கூடுதலாகச் செலவிடுவது தென்மாநிலங்களின் வளர்ச்சியைப் பெருமளவில் பாதிக்கிறது.

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது, ஆந்திரத்துக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை எதிர்பார்த்தே மத்தியில் ஆளும் பாஜகவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளித்தது. இருந்தபோதும் அக்கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம், நீட் போன்ற தமிழகம் சார்ந்த பிரச்சினைகளிலும் மத்திய அரசு பாராமுகமாய் இருப்பது கவலைகொள்ள வைக்கிறது. பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் கன்னடத்தைப் புறந்தள்ளி இந்திக்கு முதலிடம் கொடுத்தபோது அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பு எழுந்தது. 1937-ல் தமிழகத்தில் தார்ச்சட்டியைத் தூக்கியதைப் போல பெங்களூரிலும் நடந்தது. கடந்த ஆண்டு மாடுகளை வெட்டத் தடையும் அதைத் தொடர்ந்து மாட்டுக்கறி உண்ண சிக்கலும் எழுந்தபோது கேரளம் அதைத் தீவிரமாக எதிர்த்தது.

இன்றைய சூழலில் திராவிட நாடு முழக்கம், மத்திய அரசிடமிருந்து இழந்த உரிமைகளை மீட்பதற்குப் பயன்படுத்தும் ஒரு உத்தி மட்டுமே! மாநிலங்களின் உரிமைகள் பாதிக்காத வகையில் நடந்துகொள்ளவேண்டியது மத்திய அரசின் கடமை.

-கோ. ஒளிவண்ணன்,

பதிப்பாளர்,

தொடர்புக்கு: olivannang@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x