Last Updated : 04 Mar, 2018 12:11 PM

 

Published : 04 Mar 2018 12:11 PM
Last Updated : 04 Mar 2018 12:11 PM

சிரியா எனும் நரகம்!

தறவைக்கின்றன சிரியாவிலிருந்து வரும் புகைப்படங்கள். பச்சிளங் குழந்தைகளின் உடல்கள் கிடத்தப்பட்டிருக்கும் காட்சிகளும், ரத்தக் காயங்களுடன் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடும் பெற்றோரின் படங்களும், உருக்குலைந்து கிடக்கும் கட்டிடங்களும் நரகத்தை நினைவுபடுத்துகின்றன. கடந்த 11 நாட்களில் மட்டும் 602 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 185 பேர் குழந்தைகள், 109 பேர் பெண்கள். தலைநகர் டமாஸ்கஸுக்குக் கிழக்கில் உள்ள கிழக்கு கூட்டா நகரில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது சிரிய ராணுவம், ரஷ்ய விமானப் படைகளின் உதவியுடன் கடும் தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், இந்தத் தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாதிகளை விடவும் அப்பாவிப் பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகைப் பதறவைத்திருக்கும் சிரியா மரணங்களுக்குக் காரணம் என்ன?

எழுச்சியும் அடக்குமுறையும்

கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொடரும் உள்நாட்டுப் போர்தான் இதற்கு முக்கியக் காரணம். 2011-ல் பல்வேறு அரபு நாடுகளில் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே திரண்டு தாங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை 'அரபு வசந்தம்' என்றனர். இதனால் துனீசியா, எகிப்து, லிபியா, யேமனில் ஆட்சியாளர்கள் பதவி இழந்தனர். பஹ்ரைன், சிரியாவில் மக்கள் எழுச்சி வலுவாக இருந்தது. அல்ஜீரியா, இராக், ஜோர்டான், குவைத், மொராக்கோ, ஓமானில் பெரிய போராட்டங்கள் நடந்தன. லெபனான், மௌரிடானியா, சூடான், சவுதி அரேபியா, மேற்கு சகாரா நாடுகளில் மக்கள் போராட்டம் வலுவில்லாமல் வெறும் அடையாளமாக நிகழ்ந்தது.

சிரியாவைப் பொறுத்தவரை இந்தப் போராட்டங்களை அடக்குமுறையுடன் எதிர்கொண்டது அதிபர் பஷார் அல் அஸ்ஸாத் தலைமையிலான அரசு. ராணுவத்தின் மூலம் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அது பின்னர் அலையலையாகப் பரவி பெரிய போராட்டமாக மாறியது. இதற்கிடையே அதிபரை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுப் படை ஒருபுறம், ஐஎஸ் பயங்கரவாதிகள் ஒருபுறம், அமெரிக்க ஆதரவிலான குர்துகள் ஒருபுறம் என்று எல்லாத் தரப்பிலிருந்தும் கடும் தாக்குதல்கள் நடக்கின்றன. அதிபரை எதிர்ப்பவர்கள் இடையே ஒற்றுமை இல்லை என்பதுடன் நோக்கங்களும் வெவ்வேறானவையாக இருப்பதால் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வராமலே இழுத்துக் கொண்டிருக்கிறது. மக்களிடையே செல்வாக்கை இழந்துவிட்ட அதிபர் ராணுவத்தின் விசுவாசத்தாலும் ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளின் உதவியாலும் பதவியில் தொடர்வதாலும் போர் ஓய்வதாக இல்லை. அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற அதிபர் தவறியதால் அந் நாடு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. போரிடும் குழுக்களை ஆதரிக்கும் நாடுகளும் எண்ணெய் வளத்தைக் குறிவைத்தும், சிரியாவில் அமைதி வந்துவிடக்கூடாது என்று திட்டமிட்டும் காய்களை நகர்த்துகின்றன. இவற்றுக்கு நடுவில் ஏதுமறியா அப்பாவிகள் பலியாவதுதான் கொடுமை.

சிக்கல்களின் பின்னணி

மேற்காசியாவில் முக்கியமான நாடு சிரியா. சிரிய அரபுக்கள், கிரேக்கர்கள், ஆர்மீனியர்கள், அசிரியர்கள், குர்துகள், சர்காசியன்கள், மண்டியாக்கள் சேர்ந்து வாழ்கின்றனர். மதங்களும் பலதரப்பட்டவை. சன்னிகள், ஷியாக்கள், சலாஃபியர்கள், இஸ்மாயீல்கள், அலாவைட்டுகள், ட்ரூஸ்கள், மண்டியாக்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், யாஜிதிக்கள் என்று பலர்.

இந்நாட்டுக்கு மேற்கில் லெபனான், மத்தியத் தரைக்கடல், வடக்கில் துருக்கி, கிழக்கில் இராக், தெற்கில் ஜோர்டான், தென்மேற்கில் இஸ்ரேல் உள்ளன. 1967-ல் நடந்த மத்திய கிழக்குப் போரில் சிரியாவின் கோலான் குன்றுப் பகுதிகளில் மூன்றில் இரண்டு மடங்கைக் கைப்பற்றிய இஸ்ரேல், 1981-ல் தனது நாட்டு எல்லையுடன் அதைச் சேர்த்துக்கொண்டுவிட்டது. வளமான சமவெளி, உயர்ந்த மலைகள், எண்ணெய் வளம் மிக்க பாலைவனம் கொண்டது சிரியா. யூப்ரடிஸ் நதி பாயும் பள்ளத்தாக்கு செழிப்பானது. எண்ணெய் ஏற்றுமதி, சுற்றுலா, விவசாயம் ஆகியவை நாட்டுக்கு வளம் சேர்த்தன.

நாட்டின் வருமானத்தில் 40% எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைத்தது. வேளாண்மை மூலம் ஜிடிபியில் 20% கிடைத்தது. சுற்றுலாத் துறை 20% வருவாயைப் பெற்றுத் தந்தது. இப்போது உள்நாட்டுப் போர் காரணமாக பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் பெருந்தொகையைக் கடன் வாங்கி சமாளிக்கிறது சிரிய அரசு. எண்ணெய் ஏற்றுமதி மட்டும் மூன்றில் இரண்டு மடங்கு வீழ்ச்சியடைந்தது. அதனால் வேலைவாய்ப்பும் குறைந்துவிட்டது.

2010-ல் 12 பில்லியன் டாலர்களாக இருந்த ஏற்றுமதி மதிப்பு, 2012-ல் 4 பில்லியன் டாலர்களாகச் சரிந்துவிட்டது. ஜிடிபி யில் மட்டும் 2011-ல் ஏற்பட்ட 3% சரிவு, 2012-ல் 20% ஆகக் குறைந்திருப்பது சரிவின் வேகத்தைக் காட்டுகிறது. 1995-ல் ஒரு நாளைக்கு 6 லட்சம் பீப்பாய்கள் கச்சா பெட்ரோலிய எண்ணெய் எடுத்த சிரியா, 2012-ல் 1,82,500 பீப்பாய்களைத்தான் எடுக்க முடிந்தது. இப்போது இதுவும் குறைந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் எண்ணெயின் தரமும் குறைந்துவிட்டது. புதிய வயலில் எண்ணெய் இருப்பு அடையாளம் காணப்பட்டாலும் எடுத்து விற்க முடியவில்லை. உள்நாட்டுப் போரால் நாட்டு மக்களில் 30% வறியவர்களாகிவிட்டனர். 11.4% பேர் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர். குழந்தைகள் விளையாட்டு, படிப்பு என்று ஏதுமில்லாமல் அன்றாடம் போர்ச் சூழலிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். ஏழெட்டு வயது குழந்தைகள்கூட துப்பாக்கிகளுடன் பெரியவர்களுக்குத் துணையாகக் களத்தில் நிற்கின்றனர்.

இதற்கிடையே நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றிய ஐ.எஸ். சிரியாவின் எண்ணெய் வயல்களிலும் பெரும் பகுதியைக் கைப்பற்றி, எண்ணெயை விற்று தனது எதேச்சாதிகார அரசை வலுப்படுத்திக்கொண்டிருந்தது. ஆயுதங்களுக்குப் பெரும் பகுதியைச் செலவிட்டது. 2013-ல் மட்டும் உள்நாட்டுப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். அவர்களில் 11,000 பேர் குழந்தைகள். இரண்டாவது உலகப் போர்கூட இத்தனை ஆண்டுகள் நடந்ததில்லை. சிரியாவின் நரக நாட்கள் அத்தனை நீண்டவை!

ஐநா தீர்மானம்

போரை ஒரு மாதத்துக்கு நிறுத்துங்கள் என்று ஐநா சபை கடந்த பிப்ரவரி 24-ல் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் சிரிய அரசு இந்தப் போர் நிறுத்தத்தை பகலில் அதுவும் சில மணி நேரங்களுக்கு மட்டும்தான் கடைப்பிடிப்போம் என்கிறது.

அரசை எதிர்க்கும் படைகளிடம் ஆபத்தான ஆயுதங்கள் இருப்பதால் போர் நிறுத்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாது என்கிறது. அரசை எதிர்ப்போர் ஆயுதங்களுடன் சரண் அடைந்தால்தான் இது சாத்தியம் என்கிறது. அத்துடன் முற்றுகைக்குள்ளான பகுதியில் உள்ள மக்களுக்கான உணவுப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் போன்றவை 40 லாரிகளில் டமாஸ்கஸில் தயாராக இருக்கின்றன. அரசுப் படைகள் அனுமதி தராததால் அவை காத்துக்கிடக்கின்றன.

சிரியாவே நாசமானாலும் பரவாயில்லை, எதிரிக்கு அடங்கிவிடக் கூடாது என்பதே எல்லோருடைய முடிவாகவும் இருக்கிறது. சிரிய அரசுக்கு இப்போது ரஷ்யா பக்கபலமாக இருக்கிறது. அரசை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் படைகளுக்கு அமெரிக்கா துணையாக இருக்கிறது. 30,000 பேரைக் கொண்ட எல்லை பாதுகாப்புப் படையை உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இது சிரிய அரசுக்கு மிகப் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிரிய அரசுப் படைகள், சிரிய ஜனநாயக ஆதரவுப் படைகள், சிரிய எதிர்க்கட்சிகளின் ஆதரவுப் படைகள், ஐஎஸ் படைகள், தாஹிர் அல் ஷாம் என்ற படை என்று களத்தில் ஐந்து வெவ்வேறு அணிகள் இருக்கின்றன.

ஐநா சபை மட்டும் முயற்சி எடுத்தால் போதாது, அரபு நாடுகளும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் தீவிர முயற்சி மேற்கொண்டால்தான் இந்த அர்த்தமற்ற போர் ஓய்ந்து இருப்பவர்களாவது நிம்மதியாக வாழ முடியும். போர் ஓய்ந்தாலும் சிரியாவைச் சீரமைத்து பழைய நிலைக்குக் கொண்டுவர குறைந்தது இருபது முதல் ஐம்பது ஆண்டுகள் தேவைப்படும். வெகு விரைவில் உள்நாட்டுப் போர் ஓய்ந்து சிரியாவில் அமைதி நிலவ வேண்டும். அதுதான் மனிதம் மிச்சமிருக்கும் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் பிரார்த்தனை!

- வ.ரங்காசாரி,

தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x