Published : 02 Mar 2018 09:32 AM
Last Updated : 02 Mar 2018 09:32 AM
இ
ந்திய அரசியல் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் முன்னோடித் தீர்ப்புகளில், மண்டல் கமிஷன் பரிந்துரைகள் குறித்த இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பும், மாநில ஆட்சியைக் கலைக்குமாறு பரிந்துரைப்பதில் ஆளுநரின் அதிகாரத்தை வரையறுக்கும் எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பும் மிக முக்கியமானவை. முதலாவது தீர்ப்பு, சமூக நீதியை நிலைநாட்டியது. இரண்டாவது தீர்ப்பு, மாநிலங்களின் அதிகாரத்தில் மத்திய அரசு மட்டுமீறித் தலையிடுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. மேற்கண்ட இரண்டு தீர்ப்புகளையும் எழுதிய நீதியரசர்களுள் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த ரத்தினவேல் பாண்டியன்.
திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர் கிராமத்தில் 1929-ல் பிறந்த ரத்தினவேல் பாண்டியன், அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் 1954-ல் சட்டப் படிப்பை முடித்து, நெல்லை மாவட்டத்தில் கே.நாராயணசுவாமியிடம் ஜூனியராகச் சேர்ந்தார். அவரது இளமைக் காலம் துயர் மிகுந்தது. பிறந்த மூன்றாவது நாளிலேயே தாய் காலமானார். இதுகுறித்து அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஒரு கவிதையில், அந்த வேதனையைப் பதிவுசெய்திருக்கிறார். தினந்தோறும் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்குச் செல்வார். சிறுவயதிலேயே திராவிட இயக்கத்தின்பால் ஈர்ப்பு. பின்னாளில் அவர் வழங்கிய சமூக நீதித் தீர்ப்புகளில் இது எதிரொலித்தது.
அரசியல்வாதிகள் நீதிபதி ஆகலாமா?
சட்டம் படித்து வழக்கறிஞர்களாகப் பணிபுரிபவர்கள் நேரடி அரசியலில் ஈடுபடலாமா, அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படலாமா என்ற விவாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நீதி கிடைக்கும்படி சட்டங்களை இயற்ற வேண்டும் என்று அரசியல் களத்திலும் சட்டப்படி நீதி கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றத்திலும் ஒருசேரப் போராடி வெற்றித்தடம் பதித்த முன்னோடி வழக்கறிஞர்களில் ரத்தினவேல் பாண்டியனும் ஒருவர்.
1960-களில் திருநெல்வேலி மாவட்டத்தின் திமுக மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்தார் ரத்தினவேல் பாண்டியன். 1967 தொடங்கி நெல்லை மாவட்டத்தின் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தனது பியட் காரில் சென்று, நெல்லைக் கிராமங்களில் கட்சிப் பணியாற்றியவர் அவர். அதே காலகட்டத்தில், சீவலப்பேரி பாண்டி தொடர்பான வழக்கு உள்ளிட்ட முக்கியமான குற்றவியல் வழக்குகளில் வாதாடினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதி கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோது ரத்தினவேல் பாண்டியன் தினமும் அவரைச் சந்தித்துப் பேசுவார். அவரிடம் ஜூனியர் வழக்கறிஞர்களாகப் பணியாற்றியவர்களில் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவும் ஒருவர்.
திமுக சார்பில் 1971-ல் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்ட ரத்தினவேல் பாண்டியன், 193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார். அந்தத் தேர்தல் தோல்வி, இந்திய நீதித் துறைக்கு ஒரு நற்பேறு என்றுதான் சொல்ல வேண்டும். அதே ஆண்டில், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1974-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியானார். அப்போது அவருக்கு வயது 39.
அரசியல் பின்னணி உள்ளவரை நீதிபதியாக்கலாமா என்றும், மாவட்ட அளவில் மட்டும் வழக்கறிஞர் தொழில் நடத்தியதால் அவரால் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்ற முடியுமா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றையெல்லாம் பொய்யாக்கும் வகையில் சிறப்பாகப் பணியாற்றினார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி வகித்தபோது, ஆராய்ச்சி மணி அடித்து நீதிகேட்ட பசுவுக்காகத் தன் மகனைப் பலி கொடுத்த சோழ மன்னன் தொடர்பான காட்சியை உயர் நீதிமன்றத்தில் நிறுவச்செய்தார். சமநீதிச் சோழன் என அதில் பெயர் பொறித்தது அவரது தமிழ்ப் பற்றுக்கு ஒரு சாட்சி.
சமூக நீதி காத்த தீர்ப்பு
இளம்வயதிலேயே உயர் நீதிமன்ற நீதிபதியானதால், பணிமூப்பு அடிப்படையில் அவருக்கு உச்ச நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 1988-ல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், 1994 வரை பதவி வகித்தார். அப்போது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் சிறப்பான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
1990-களில் வி.பி.சிங் அரசு அமல்படுத்திய மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்து வட மாநிலங்களில் கிளர்ச்சிகள் நடந்தன. மேலும் மண்டல் பரிந்துரைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டன. அவ்வழக்கில் தமிழகம் மற்றும் உத்தர பிரதேசம் தவிர, மற்ற மாநில அரசுகள் மண்டல் பரிந்துரைகளை ஆதரித்து வாதாடவில்லை. 1992-ல் அவ்வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நீதிபதி ரத்தினவேல் பாண்டியனும் ஒருவர்.
பிற்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது அரசியல் சட்டரீதியாகச் செல்லும் என்றும், பிற்படுத்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க மண்டல் குழு கையாண்ட அளவீடுகள் விஞ்ஞானரீதியானவை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. நாடு முழுவதையும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக திருப்பிய உணர்ச்சிக் குவியல்களை கட்டுப்படுத்தியது அந்தத் தீர்ப்பு (இந்திரா சஹானி–1992).
மாநில உரிமையைக் காத்த தீர்ப்பு
பிடிக்காத மாநில அரசுகளை குடியரசுத் தலைவர் மூலமாக வீட்டுக்கு அனுப்பும் அரசியல் சட்டக் கூறு 356, ஒன்பது நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அந்த அமர்வில் ரத்தினவேல் பாண்டியன் அங்கம் வகித்தார். குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவை நீதிமன்றச் சீராய்வுக்கு உட்படுத்த முடியாது என்பதுதான் அதற்கு முந்தைய நிலை. ஆனால் ஒரு மாநில அரசைக் கலைக்க குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவு சட்டத்துக்கு உட்பட்டதா என்று பார்ப்பதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது (எஸ்.ஆர்.பொம்மை–1994). அந்தத் தீர்ப்பில் பெரும்பான்மை நீதிபதிகளில் ஒருவராக அவர் அளித்த தீர்ப்பு, இன்று வரை எல்லோராலும் பேசப்பட்டுவருகிறது.
உண்மையின் பக்கம் நின்றவர்
“உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ரத்தினவேல் பாண்டியன், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்குத் தலைவராகப் பணியாற்றினார். காஷ்மீரில் பரக்புரா பகுதியில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியான சம்பவம்குறித்து விசாரிக்க நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. காவல் துறையினர் மீது குற்றம் இருப்பதாக அந்த ஆணைய அறிக்கை கூறியது. இதனால் அவரது மதிப்பு அகில இந்திய அளவில் மிகவும் உயர்ந்தது” என அவரது நீதித் துறை சாதனைகளை நினைவுகூர்ந்திருக்கிறார் நீதியரசர் சந்துரு.
தென் மாவட்டங்களில் சாதிய வன்முறைகள் வெடித்த காலக்கட்டத்தில், தென் மாவட்டங்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிகுறித்து ஆராய்ந்து விரிவான அறிக்கையை தர அமைக்கப்பட்ட குழுவுக்கும் ரத்தினவேல் பாண்டியனே தலைவராக இருந்தார். 1998 மே 16-ல் இந்த ஆணையத்தின் அறிக்கை வெளியானது. ரத்தினவேல் பாண்டியனின் பரிந்துரைகள் தென் தமிழகத்தையே தூக்கி நிறுத்திவிடக்கூடியவை. அவரது பரிந்துரைகளை நிறைவேற்றுவதுதான் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்!
- என்.சுவாமிநாதன்,
தொடர்புக்கு:
swaminathan.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT