Published : 08 Mar 2018 10:15 AM
Last Updated : 08 Mar 2018 10:15 AM
சி
ல வாரங்களுக்கு முன்னர், சிரியா – இஸ்ரேல் எல்லையில் கோலன் ஹைட்ஸ் பகுதிக்கு (இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய பகுதி) சென்றிருந்தபோது, கொரிய தீபகற்பத்துக்குப் பிறகு, உலகின் மிக ஆபத்தான இரண்டாவது போர்ப் பிரதேசம் அந்த எல்லைப் பகுதிதான் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். மதிப்புக்குரியவர்களே, அந்தக் கட்டுரையில் முக்கியத் திருத்தம் செய்ய விரும்புகிறேன்.
சியோலில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில், வட கொரிய வீரர்களும் தென் கொரிய வீரர்களும் கொண்டாட்ட மனநிலையில் ஒன்றாகப் பேரணியாகச் சென்றதைப் பாரத்த பிறகு, சிரியாவிலிருந்து பறந்துவந்த ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியதையும் சிரியாவில் உள்ள ஈரான் விமானப் படைத் தளத்தின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதையும் சிரியாவின் ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேல் தனது எஃப் -16 போர் விமானத்தை இழந்ததையும் பார்த்த பிறகு, சிரியா வில் அமெரிக்கப் படைகளை நெருங்கிய ரஷ்ய கஸாக் படையினரை அமெரிக்க ஜெட் விமானங்கள் கொன்றதை யும் பார்த்த பிறகு, சிரியா – இஸ்ரேல் – லெபனான் எல்லை தான் உலகின் மிக ஆபத்தான முனை என்று கருதுகிறேன்.
கொதிக்கும் தேசம்
சிரியா, ரஷ்யா, அமெரிக்கா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகளின் துருப்புகளும், இராக், லெபனான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த ஈரான் ஆதரவு ஷியா படைகளும், வடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க ஆதரவு குர்து வீரர்களும், எஞ்சியிருக்கும் ஐஎஸ் படைகளும், சவுதி ஆதரவுப் படைகள், ஜோர்டான் ஆதரவுப் படைகள், சிரிய அரசுக்கு எதிரான படைகள் என்று பல்வேறு சன்னி ஆதரவுப் படையினரும், ‘பைத்தியக்காரக் காட்டுமிராண்டிகளிடமிருந்து ரஷ்யத் தாய்நிலத்தைக் காப்பதற்காக’ சிரியாவுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுப்பப்பட்டிருக்கும் கஸாக் படைகளும் (இதை நானாகச் சொல்லவில்லை!) நிலத்திலும் ஆகாயத்திலும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதை வேறு எங்கு பார்க்க முடியும்? ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் குறிப்பிட்டிருப்பதுபோல், ரஷ்யா, துருக்கி, ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் சிரியப் போரில் தங்கள் போர் விமானங்களை இழந்திருக்கின்றன.
‘பவுடர் கெக்’ (அரசியல், சமூகப் பொருளாதாரக் கொந்தளிப்புக்கு ஆளான பிரதேசத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பதம்) எனும் பதமே இந்தப் பிரதேசத்துக்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும். ‘3-டி யுத்த களம்’ எனும் வார்த்தையால்கூட இந்தப் போரின் சிக்கல்களைச் சித்தரித்துவிட முடியாது. இதில் பங்கெடுத்திருக்கும் எண்ணற்ற எதிராளிகளின் எண்ணிக்கையை, அவ்வப்போது அணிமாறும் தரப்புகளை, மோதல்களைக் கணக்கிட ஒரு குவாண்டம் கணினியே தேவைப்படும்.
ஒருவேளை இந்தக் கதை உங்களைப் பீடிக்கத் தொடங்கியிருக்கிறது என்றால்; இவ்விஷயத்தில் அமெரிக்காவின் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் – உங்களுக்காக அந்தக் குழப்ப முடிச்சை அவிழ்க்கிறேன்.
கூலிப் படைப் போர்
சிரியா போரைப் பொறுத்தவரை நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இதுதான்: இதில் பங்கேற்றிருக்கும் எல்லாத் தரப்புகளும் ஒற்றை இரும்பு விதியால் வழிநடத்தப்படுகின்றன. அது: “இந்தப் போர் நமது சொந்தப் போர் அல்ல”. அதாவது இந்தப் போர் ஒரு வாடகைப் போர். ஒவ்வொரு தரப்பும் தங்கள் ஆதாயங்களை விரிவுபடுத்த விரும்புகின்றன; அதேசமயம், தங்கள் சொந்த வீரர்களைக் காட்டிலும் கூலிப்படைகளையும் உள்ளூர் கிளர்ச்சியாளர்களையும் பயன்படுத்தித் தங்கள் எதிரிகளின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த விரும்புகின்றன.
ஆப்கானிஸ்தான் அனுபவத்திலிருந்து ரஷ்யாவும், ஈரான் – இராக் போர் அனுபவத்திலிருந்து ஈரானும், தெற்கு லெபனான் தந்த அனுபவத்திலிருந்து இஸ்ரேலும், இராக், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவும் ஏற்கெனவே ஒரு பாடம் கற்றிருக்கின்றன - மத்தியக் கிழக்கின் எந்த ஒரு நிலத்திலும் தங்கள் வீரர்கள் மரணமடைவதை இந்நாடுகளின் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ரஷ்யா மீண்டும் ஒரு வல்லரசாகிவிட்டது என்றும், சிரியா வில்தான் ஒரு ‘கிங்மேக்கர்’ என்றும் ரஷ்யர்களிடம் சொல்லிக்கொள்ள விளாதிமிர் புதின் விரும்புகிறார். ஆனால், ரஷ்ய வீரர்கள் யாரையும் அவர் ஆபத்துக்குள்ளாக்க வில்லை.
மாறாக, ஈரானிடமிருந்து தரைப்படையினரைத் தருவித்துப் பயன்படுத்திக்கொள்கிறார். ஒப்பந்த அடிப்படை யில் வீரர்களைத் திரட்டிப் பயன்படுத்துகிறார். ரஷ்யாவுக்காகப் போரிட்டு மடிய, அந்நாட்டிலுள்ள ‘வாக்னர்’ எனும் தனியார் நிறுவனத்திலிருந்து கஸாக் வீரர்களைத் தரைப் படைச் சண்டைக்குப் பயன்படுத்திக்கொள்கிறார். சமீபத் தில் அமெரிக்கத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட கஸாக் வீரர்கள் அந்தப் படையைச் சேர்ந்தவர்கள்தான்.
ஈரான் அரசு சமீபத்தில்தான் மக்கள் எழுச்சியைச் சந்தித்தது. அரசு தனது சொந்த மக்களின் நலனுக்குத்தான் பணம் செலவிட வேண்டுமே தவிர, சிரியாவில் அல்ல என்று ஈரான் மக்கள் போராடினர். இந்நிலையில், ஈரானுக்கு ரஷ்யா உள்குத்தகைக்கு விட்ட தரைப்படைப் போரை, தனது நிழல் யுத்தப் பிரதிநிதிகளான - (இராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட) ஹெஸ்புல்லா உள்ளிட்ட ஷியா கூலிப் படையினரிடம் ஈரான் உள்குத்தகைக்கு விட்டிருக்கிறது.
வடக்கு சிரியாவில் ஐஎஸ் அமைப்பினருக்கு எதிரான போரில், குர்து வீரர்களுக்கு ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் அமெரிக்க சிறப்புப் படைகள் வழங்கி வருகின்றன.
அதே குர்து வீரர்களுக்கு எதிராக, சன்னி கிளர்ச்சிப் படைகளைத் துருக்கி பயன்படுத்திக்கொள்கிறது. ஈரான் ஆதரவுப் படைகளுக்கும் ஷியா ஆதரவுப் படைகளுக்கும் எதிராகப் பல்வேறு சன்னி கிளர்ச்சிப் படைகளை சவுதி அரேபியா, கத்தார், ஜோர்டான் ஆகியவை பயன்படுத்திக்கொள்கின்றன. இஸ்ரேல் தனது விமானப் படையை முழுமையாகப் பயன்படுத்துகிறது.
பொறுப்பிலிருந்து நழுவும் நாடுகள்
2003-ல் இராக்கில் சதாம் உசேன் அரசை அமெரிக்கா கவிழ்த்தபோது அதை நான் ஆதரித்தேன். அப்போது எழுதிய கட்டுரையில் ஒரு எச்சரிக்கையும் விடுத்திருந்தேன்: “இராக் மீதான படையெடுப்புக்கு, பானைக் கடை விதிதான் பொருத்தமானது. பானையை ஒருவர் உடைத்துவிட்டால், அது அவருக்குச் சொந்தமானது என்றாகிவிடும் (அதை அவர் வாங்கித்தான் ஆக வேண்டும்). நாம் இராக்கை உடைத்துவிட்டோம், இனி அதற்கு நாம்தான் பொறுப்பு”
ஆக, இன்றைக்கு சிரியாவைப் பொறுத்தவரை மாறாத விதி இதுதான்: “நீங்கள்தானே பொறுப்பு? அப்படியெனில் நீங்கள்தான் சரிசெய்ய வேண்டும்.” ஆனால், சிரியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள யாருமே விரும்பவில்லை. அவர்கள் விரும்பு வதெல்லாம் தங்களது ஆதிக்கத்தை வாடகைக்கு விடுவதைத்தான்!
வலி தரும் விஷயம் இது. அடிப்படையில் சிரியாவில் சமரசத்தையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தும் அளவுக்கு போதிய அதிகாரமோ வளங்களோ உள்நாட்டைச் சேர்ந்தவர்களிடம் இல்லை. வெளியிலிருந்து போரிடுபவர்களோ சிரியாவில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த தங்கள் அதிகாரத்தையும் வளங்களையும் பயன்படுத்தத் தயாராக இல்லை.
இதில் குறைந்தபட்ச நல்ல செய்தி என்னவென்றால், இதில் ஈடுபட்டிருக்கும் எல்லோருமே இழப்புகளைத் தவிர்ப்பதில் மிகவும் கவனமாக இருப்பதுதான். எந்தத் தரப்புமே மிக மோசமாக, பொறுப்பற்றதன்மையுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை. ஈரானியர்களும் ஹெஸ்புல்லா படையினரும் தொடர்ந்து இஸ்ரேலைச் சீண்டிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், இஸ்ரேல் தனது முழு பலத்தை யும் காட்டித் திருப்பித் தாக்கும் அளவுக்கு அவர்கள் சென்றுவிட மாட்டார்கள்.
இஸ்ரேல் முழு பலத்துடன் தாக்கினால் லெபனானைச் சுற்றியுள்ள ஹெஸ்புல்லா படையினர் சின்னாபின்னமாகிவிடுவார்கள். ஈரான் மீது ராக்கெட் தாக்குதலும் நடக்கும். ஆனால், பதிலடியாக ஈரான் தொடுக்கும் ராக்கெட் தாக்குதல்களால் அதிநவீன நகரங் கள் கொண்ட தனது கடற்கரைப் பகுதிகள் சின்னாபின்னமாகும் என்பது இஸ்ரேலுக்கும் தெரியும். துருக்கியர்கள் அமெரிக்காவுடன் ஒரு போரை விரும்பவில்லை. அமெரிக்காவுக்கு ரஷ்யாவுடன் போர் புரிய விருப்பமில்லை. ரஷ்யர்களோ யாருடனும் வம்புவைத்துக்கொள்ளாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எண்ணெயை உறிஞ்சி எடுத்துக்கொள்வதற்கும், ‘ஈகோ’வை வளர்த்தெடுக் கும் இடமாகவும் சிரியாவைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள் – ஏனெனில், வெளிப்பார்வைக்குத் தெரிவதைப் போல் அல்லாமல் ரஷ்யா மிகவும் பலவீனமாக இருக்கிறது.
ஒருவேளை, 1989-ல் லெபனான் தனது உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அதிகாரப் பகிர்வு விஷயத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டதுபோல் இவர்கள் அனைவரும் ஒருகட்டத்தில் களைப்படைந்து ஓர் ஒப்பந்தத்தை எட்டலாம். ஆனால், அந்த நிலையை எட்டு வதற்கு லெபனானுக்கு 14 ஆண்டுகாலம் பிடித்தது. ஆக, சிரியாவிலிருந்து மேலும் பல செய்திகளுக்குத் தயாராக இருங்கள்!
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’
தமிழில்: வெ.சந்திரமோகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT