Last Updated : 19 Mar, 2018 07:50 AM

 

Published : 19 Mar 2018 07:50 AM
Last Updated : 19 Mar 2018 07:50 AM

காலத்தை வென்ற கான சரஸ்வதி: டி.கே.பட்டம்மாள் 100

பெ

ண்ணாகப் பிறந்துவிட்டால், பேசுவதற்குக்கூட வாய் திறக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு நிறைந்த ஒரு சமூகத்தில் பிறந்தவர் டி.கே.பட்டம்மாள் (1919 மார்ச் 19 - 2009 ஜூலை 16). குடும்பத்திலேயே பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், இசையில் கவனம் செலுத்தி, மேடைகள் பல ஏறி, சாதனைகள் பல புரிந்து வெற்றி வரலாறு படைத்தவர். 90 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்தவர். பெண் மும்மணிகளில் ஒருவராக, காலத்தை வென்று இன்றும் போற்றப்படுகிறார். (எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் எம்.எல்.வசந்தகுமாரி மற்ற இருவர்.)

டி.கே.பட்டம்மாளுக்கு இது நூற்றாண்டு வருடம். காஞ்சிபுரத்தில் பிறந்தவர். தந்தை கிருஷ்ணசுவாமி தீட்சிதர். தாமல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிக்கூட ஆசிரியர். காஞ்சிப் பெரியவர், பகவான் ரமணரின் தீவிர பக்தர். தாய் காந்திமதி என்கிற ராஜம்மாள். கிருஷ்ணசுவாமி - ராஜம்மாள் தம்பதிக்கு முதல் 3 குழந்தைகளும் ஆணாகப் பிறந்துவிடவே, பெண் குழந்தைக்காக திருப்பதி சென்று வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். பெண் குழந்தை பிறந்தது. அலமேலு என்று பெயரிட்டார்கள். குழந்தையை ‘பட்டா’ என்று செல்லமாக தந்தை அழைக்க, ‘பட்டம்மாள்’ என்ற பெயர் நிலைத்துவிட்டது.

ஒருமுறை, பட்டாவை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் கிருஷ்ணசுவாமி. குழந்தையின் நாவில் தேன் தடவி, ‘குழந்தை பெரிய இடத்துக்கு வருவா’ என்று அருளாசி வழங்கியிருக்கிறார் ரமண மகரிஷி.

இன்னொரு சமயம், காஞ்சி மாமுனிவரை தரிசிக்க பட்டம்மாளையும் உடன் அழைத்துச் சென்று பாட வைத்தார் தந்தை. ‘‘உங்க பொண்ணுக்கு சரஸ்வதி கடாட்சம் நிறைய இருக்கு. பாட்டுல அவ பிரபலமாகப் போறதை யாராலும் தடுக்க முடியாது..’’ என்று சொல்லி பிரசாதம் வழங்கியிருக்கிறார் மகா பெரியவர். சத்தியவாக்கு ஒருபோதும் பொய்ப்பதில்லை. ‘கான சரஸ்வதி’ என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்படும் அளவுக்கு பாட்டுலகில் உச்சம் தொட்டார் பட்டம்மாள்!

காஞ்சிபுரத்தில் நடக்கும் தியாகராஜ உற்வசத்துக்கு சிறுமி பட்டா தனது சகோதரர்களுடன் செல்வார். அங்கு பாடப்படும் கீர்த்தனைகளை உள்வாங்கிக்கொண்டு, வீட்டில் அவற்றைப் பாடி பயிற்சி செய்வது பட்டாவுக்குப் பிடித்த பொழுதுபோக்கு. மெட்ராஸ் கார்ப்பரேட் ரேடியோவுக்காக முதல்முறை யாக பாடியபோது, அவருக்கு 10 வயது. அதன்பிறகு, சமூக எதிர்ப்புகளை மீறி மேடைக் கச்சேரிகள் செய்யத் தொடங்கினார்.

‘‘உங்க மகளுக்கு சங்கீதத்தில் அபூர்வ ஞானமும், அசாத்திய திறமையும் இருக்கு. அவளை நீங்க ஊக்கப்படுத்தணும்’’ என்று சொல்லி, கிருஷ்ணசுவாமியை சம்மதிக்க வைத்தவர் இருவர். ஒருவர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் ஐயர். மற்றொருவர், பட்டம்மாள் படித்த பள்ளிக்கூடத் தின் தலைமை ஆசிரியை அம்முகுட்டி.

பட்டம்மாள் 8-வது வரை படித்திருக்கிறார். குடும்பம் சென்னைக்கு புலம்பெயரும் வரையில், காஞ்சியில் ஆசிரியையாகவும் பணிபுரிந்திருக்கிறார்.

பால்ய விவாகம் பரவலாக நடைபெற்று வந்த காலகட்டம் அது. என்றாலும், பட்டம்மாளுக்குத் திருமணம் ஆனபோது அவருக்கு 21 வயது. திருச்சானூரில் கல்யாணம் நடந்தது. மணமகன் ஈஸ்வரன், பொறியியல் பட்டதாரி.

திருமணத்துக்குப் பிறகும், மனைவி தொடர்ந்து கச்சேரிகள் செய்வதற்கு ஊக்கம் கொடுத்தார் ஈஸ்வரன். கச்சேரிகளை ஒழுங்குபடுத்துவதற்கும், பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்வதற்கும் மிகவும் உதவியாக இருந்தார். கணவர் தொடர்ந்து பணிக்குச் செல்வதா, அல்லது மனைவியின் இசை வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பதா என்ற கேள்வி எழுந்தபோது, அரசு வேலையை உதறினார் ஈஸ்வரன். ‘‘பணம் முக்கியம்தான். ஆனால், குடும்பப் பெண்மணி ஒருவர் சாதனையாளராகத் திகழ்வது அபூர்வ நிகழ்வு. அது தடங்கலின்றி தொடர வேண்டும் என்பதற்காகவே வேலையை உதறினேன்..’’ என்பார் ஈஸ்வரன். பட்டம்மாள் - ஈஸ்வரன் இடையிலான பந்தம் அலாதியானது. மனைவியின் இறுதி மூச்சு வரை அன்புடனும், பாசத்துடனும் அவரது தேவைகளை எல்லாம் கவனித்துக் கொண்டவர் ஈஸ்வரன்.

அந்த நாளில் முதன்முதலில் மேடையேறிப் பாடிய பிராமணப் பெண் என்ற பெயர் பட்டம்மாளுக்கு உண்டு. அதுபோலவே, மேடையில் ராகம் - தானம் - பல்லவி பாடிய முதல் பெண்மணியாகவும் திகழ்கிறார். இன்னும் சொல்லப்போனால், இன்று ஏராளமான பெண்கள் இசையுலகில் பாட்டிலும், பக்கவாத்தியக் கலையிலும், இசைக் கருவிகள் கையாள்வதிலும் சிறப்பானதொரு இடம் பெற்று வருவதற்கு முன்னோடி டி.கே.பட்டம்மாள்தான்!

ஒருகட்டத்தில், பட்டம்மாள் தொடர்ந்து மேடையேறி கச்சேரிகள் செய்ய வேண்டும் என்கிற தன் விருப்பத்தை கிருஷ்ணசுவாமி வெளிப்படுத்தியபோது, அவரது 8 சகோதரிகளும் அதை தீவிரமாக எதிர்த்திருக்கிறார்கள். ஆனால், விதி வேறு வகையில் தீர்மானித்து, பட்டம்மாளை பாட்டம்மாளாக வெற் றிப் பாதையில் பயணிக்க வைத்துவிட்டது.

தனது இறுதிக்காலம் வரை தேசபக்தி நிரம்பியவராகத் திகழ்ந்தார். ‘பாருக்குள்ளே நல்ல நாடு.. எங்கள் பாரத நாடு..’ என்று பாடும்போதெல்லாம் அவர் முகம் பூரிப்பில் மிதக்கும். தேச நலன் தொடர்பான எந்தக் கச்சேரிக்கும் சன்மானம் வாங்கிக்கொள்ள மாட்டார். ‘‘இது என்னுடைய நாடு..’’ என்பார் பெருமையுடன்.

கச்சேரி மேடையில் எந்தப் பாடலையும் பேப்பர், நோட்புக் பார்த்து பாடக்கூடாது என்பதில் இறுதிவரை வைராக்கியமாக இருந்தார். 80 வயதைக் கடந்த நிலையில், சற்றே ஞாபகமறதி ஏற்பட்டபோதும்கூட, பாடல் வரிகளை எழுதி எழுதிப் பார்த்து, மனப்பாடம் செய்துகொள்வாரே தவிர, கையில் பேப்பர் எதுவும் எடுத்துச் செல்ல மாட்டார்! ரேடியோ கச்சேரிகளாக இருந்தாலும், பார்த்துப் பாடினால் அது நம் கவனத்தை சிதறடிக்கும் என்பார்.

விருத்தங்களை உருக்கமாகப் பாடுவதில் நிகரற்றவராகத் திகழ்ந்தார். இதுதொடர்பாக அவரது பேத்தி நித்யஸ்ரீ ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்திருக்கிறார்: ஒரு கச்சேரியில் பாட்டியுடன் என் அம்மா லலிதா பாடியிருக்கிறார். நான் தம்புரா போட்டுக் கொண்டிருந்தேன். ‘புல்லாகி, பூண்டாகி’ என்ற வரிகளை பாட்டி, விருத்தமாகப் பாடி முடிக்க, என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. திரும்பினேன். வயலின் வாசித்த டி.ருக்மணி அழுதுகொண்டிருந்தார். மிருதங்கம் வாசித்தவரும் கண்களை துடைத்துக் கொண்டிருந்தார். பாட்டி சற்று இடைவெளி கொடுத்தார். ஒரு நிமிடத்துக்கு அரங்கில் பூரண அமைதி. உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் இருந்து விடுபட்டு, கச்சேரியைத் தொடர்ந்தார் பாட்டி. ரசிகர்கள் பரவசமானார்கள்!

நேரம் தவறாமையில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் பட்டம்மாள். கச்சேரிக்குப் புறப்பட, ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே தயாராகிவிடுவார். அன்று, மியூசிக் அகாடமியில் கச்சேரி. வழக்கமாக காரில் அழைத்துச் செல்லும் மகன் சிவக்குமார், ஊரில் இல்லை. டாக்ஸியும் கிடைக்கவில்லை. ‘‘நீங்கதான் அழைத்துப் போகணும்..’’ என்று கணவருக்கு அன்புக் கட்டளையிடுகிறார். ஈஸ்வரனுக்கு அப்போது 85 வயது. அவர் கார் ஓட்டியே பல வருடங்கள் ஆகிவிட்ட நிலை. தவிர, ‘சவர்லே’ கார் ஓட்டித்தான் அவருக்குப் பழக்கம். ‘தீப்பெட்டி சைஸ்’ என்று அவர் தமாஷாக குறிப்பிடும் ‘மாருதி 800’ காரை எப்படி ஓட்டுவார்?

பட்டம்மாள் விடவில்லை. ‘‘இதுவும் கார்தானே? உங்களால் ஓட்ட முடியும்..’’ என்றபடி காரில் ஏறி உட்கார்ந்துவிட்டார். குறிப்பிட்ட நேரத்துக்குள் அகாடமிக்கு போய் சேர்ந்துவிட்டார்.

‘‘பட்டா.. உன்னை கவனமா அழைத்து வந்துட்டேன்..’’

‘‘நீங்க அப்படி செய்வீங்கன்னு எனக்குத் தெரியும்..’’ என்று சிரித்தபடியே கணவரிடம் சொல்லிவிட்டு, கச்சேரி மேடை நோக்கி நடந்தார் டி.கே.பி.

ஒரு சமயம், வீணை தனம்மாளின் நினைவாக, டி.கே.பட்டம்மாள் - டி.கே.ஜெயராமன் கச்சேரிக்கு மியூசிக் அகாடமியில் ஏற்பாடு செய்திருந்தார் டி.பிருந்தா. கச்சேரிக்கு செம்மங்குடி, எம்.எஸ்., எம்எல்வி போன்றவர்களையும் அழைத்திருக்கிறார். ‘‘எனக்கு பயமா இருக்கு. டி.பிருந்தா எதிரில் உட்கார்ந்தாலே எனக்கு குரல் நடுங்கும். இசைக் கலைஞர்களுக்கு மத்தியில் அவர் சிங்கம் மாதிரி’’ என்று, தனக்கு மிருதங்கம் வாசிக்க இருந்த ஜெ.வைத்தியநாதனிடம் (டி.கே.ஜெயராமனின் மகன்) கூறியிருக்கிறார் பட்டம்மாள்.

கச்சேரி முடிந்ததும், ‘‘கச்சேரியில் தவறுகள் இருப்பின், மன்னித்துவிடுங்கள்’’ என்று பிருந்தாவிடம் டி.கே.பி. சொல்ல, ‘‘கச்சேரி ஓஹோன்னு இருந்தது’’ என்று பாராட்டினார் பிருந்தா. ‘‘பிருந்தா அப்படி சொன்னபோது, பொதுத் தேர்வில் ஃபெயிலாகிவிடுவோமோ என்று பயந்துகொண்டிருந்த மாணவர், இறுதி யில் அதிக மார்க் எடுத்து பாஸான நிலையில் இருந்தேன்..’’ என்று வைத்தியநாதனிடம் கூறினாராம் டி.கே.பி.

செ

ன்னையில் ‘டி.கே.பி. 100’ நூற்றாண்டு விழாவை கடந்த சனிக்கிழமை தொடங்கிவைத்த குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தனது உரையில் நகைச்சுவை கலந்து கலகலப்பாக்கினார். பட்டம்மாளின் பெயரில் உள்ள அம்மாவை நூலாகப் பிடித்து, ‘‘பெற்றோரை குழந்தைகள் ‘அப்பா’, ‘அம்மா’ என்று அழைக்க வேண்டும். ‘மம்மி என்றால் உதடுகள் குவிவதோடு நின்றுவிடும். ‘அம்மா’ என்பது நாபியில் இருந்து வரும்..’’ என்று வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டபோது, அரங்கம் அதிர்ந்தது!

விழாவில் பேசிய கிருஷ்ணராஜ் வானவராயர், பட்டம்மாள் பற்றி குறிப்பிட்ட ஒரு சம்பவம் நெகிழவைத்தது..

ஒரு சமயம், மேடையில் பாரதியாரின் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார் பட்டம்மாள். இவர் பாடப் பாட, முதல் வரிசையில் இருந்த பெண்மணி ஒருவர் தொடர்ந்து அழுத நிலையில் இருந்திருக்கிறார். கச்சேரி முடிந்ததும், அவரை அணுகி, ‘‘யாரம்மா நீ? எதற்காக என் பாட்டைக் கேட்டு அழுதபடி இருந்தாய்?’’ என்று விசாரித்திருக்கிறார் டி.கே.பி.

‘‘அதுவா.. இத்தனை நேரம் நீங்கள் சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைப் பாடினீர்களே, அந்த பாரதியின் மனைவி செல்லம்மாள் நான்!’’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x