Last Updated : 22 Mar, 2018 09:55 AM

 

Published : 22 Mar 2018 09:55 AM
Last Updated : 22 Mar 2018 09:55 AM

கால்கள் உண்டு; கைகள் இல்லை: நம்பிக்கையுண்டு; சோர்வில்லை

‘வெ

றுங்கை என்பது மூடத்தனம்; விரல் கள் பத்தும் மூலதனம்’ என்ற புகழ்மிக்க கோஷத்தை நாம் கேட்டிருப்போம். ஆனால் பிறவியிலேயே இரண்டு கைகள் இல்லாமல், கால்களேயே மூலதனமாக்கி சாதிக்கிறார் திம்மராயப்பா.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் உள்ள எஸ்.திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இந்த திம்மராயப்பா (48). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு பிறவியிலேயே 2 கைகளும் கிடையாது. 4 சகோதரர்கள், ஒரு சகோதரி. கல்வியறிவு பெற முடியாத நிலையில், வீட்டில் இருந்து பெற்றோர், உறவினர்கள் செய்யும் விவசாயத் தொழிலைப் பார்த்து வளர்ந்து வந்த திம்மராயப்பாவுக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு விவசாயியாக உருவெடுத்தார்.

தனது தனித்துவமான திறமைகள் பற்றி அவர் கூறும்போது, “வீட்டில் உள்ளவங்க பள்ளிக் கூடத்துக்கு போனப் போ எனக்கு யார் உதவி செய்வாங்கனு நினைச்சு, நான் பள்ளிக்கு போகலை. கைகளால் செய்யும் விவசாய வேலைகளைச் கொஞ்சம் கொஞ்சமாக கால் மூலமாக செய்ய ஆரம்பிச்சேன். கூட இருக்கிறவங்க, கையால் தென்னை மரத்தில் கல்வீசி இளநீர் பறிச்சத பார்த்தப்ப, நான் கால் மூலம் 20 அடி உயரம் வரை உள்ள தென்னை மரத்தில் கல்வீசி தேங்காய் பறிப்பேன். பறிச்ச தேங்காய்களை எல்லாம் அரிவாள் மூலம் கால்களால உரிக்கவும் கற்றுக் கொண்டேன்.

இதேபோல், குடத்தின் கழுத்துப் பகுதியில் ஒரு கயித்தைக் கட்டி பல்லுல கடிச்சுக்கிட்டே செடிகளுக்கு தண்ணீர் ஊத்துவேன். ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று, மாலை வீடு திரும்புவேன். அரசு மூலம் இலவச கால்நடைகள் கொடுத்தால், பயனுள்ளதாக இருக்கும்” என தான் தனியாளாக செய்யும் பணிகளை பட்டியலிட்டார் திம்மராயப்பா.

தனது 50 சென்ட் விவசாய நிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயம் செய்து வந்த திம்மராயப்பா வறட்சியால் விவசாயம் பொய்த்து, இப்போது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் கூலி வேலை செய்கிறார்.

கிராமப்புற இளைஞர்கள் சிலர் கூறும்போது, ‘‘திம்மராயப்பா உண்மையாகவே ஒரு படிக்காத மேதைதான். அவர் கிணற்றில் ஆயில் இன்ஜினை காலால் ஆன் செய்தைப் பார்க்க வேண்டுமே, அத்தனை லாவகமாக வேலை செய்வார்’’ என்கின்றனர்.

திம்மராயப்பாவின் கவலை ஒன்றுதான். அது நமக்கும் கவலையை ஏற்படுத்துகிறது. கைகள் இல்லாத இவரால் ஆதார் கார்டு பெற முடியவில்லை. இதனால் நலத்திட்ட உதவிகள் இவருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. அனைத்துக்கும் ஆதார் கட்டாயம் எனக்கூறும் அரசு, திம்மராயப்பா போன்றவர்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வில்லை என்பதுதான் சோகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x