Published : 02 Mar 2018 09:35 AM
Last Updated : 02 Mar 2018 09:35 AM
க
டந்த 25 ஆண்டுகளாகக் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக இருக்கிறது திரிபுரா. அங்கு இடதுசாரி முன்னணியின் முகமாக இருப்பவர் மாணிக் சர்க்கார். நான்கு முறை முதல்வராக இருந்திருக்கிறார். 1981 இடைத்தேர்தலில் தொடங்கிய அவரது தேர்தல் பயணத்தில், தற்போது அவர் எதிர்கொண்டிருப்பது ஏழாவது தேர்தல். நாட்டிலேயே மிக எளிமையான முதல்வர் என்று போற்றப்படுபவர் அவர். திரிபுராவின் அரசியல் களத்தில் பாஜக ஏற்படுத்தியிருக்கும் சவால்கள்குறித்து இந்தப் பேட்டியில் மனம் திறக்கிறார். அவரது பேட்டியிலிருந்து...
திரிபுராவில் இடது முன்னணி ஆட்சியில் தொடர முடியும் என்று நினைக்கிறீர்களா?
எங்களுடைய அரசால், தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்டு, மாநிலத்தில் மீண்டும் அமைதியைக் கொண்டுவரவும், ஒருமைப்பாட்டைப் பலப்படுத்தவும் முடிந்திருக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, மாநிலத்தை மேம்பாடு காணச் செய்திருக்கிறோம்.
வலதுசாரிகள் அல்லது அடிப்படைவாதிகளின் கருத்துகளை உலகத்தின் பெரும்பகுதி மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் இக்காலத்தில் மார்க்ஸியத்துக்கான பொருத்தப்பாடு என்ன?
மார்க்ஸியம்தான் மிக மிக பொருத்தமானது. உழைக்கும் மக்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களிடத்தில் ஒரு புதிய அலை உருவாகியிருக்கிறது. அதனால் சங்கப் பரிவாரம் சிக்கல்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இப்படியொரு பிற்போக்குத்தனமான மத்திய அரசை நாம் கண்டதில்லை. அவர்கள் மார்க்ஸியம், கம்யூனிஸம் மற்றும் இடதுசாரித் தத்துவங்களின் மீது குறிவைத்திருக்கிறார்கள். நம் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் மக்களுக்கு எதிரான, வறியவர்களுக்கு எதிரான, அதேநேரத்தில் செல்வந்தர்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் ஆதரவான அரசியல் கட்சியைத் தொடர்ந்து எதிர்க்கும் சித்தாந்த, அரசியல் மற்றும் செயல்திட்ட வலிமை எங்களிடம் இருக்கிறது என்பதில் பெருமிதம் அடைகிறோம். அதனாலேயே அவர்கள் எங்களைக் குறிவைக்கிறார்கள்.
1993-ல் தொடங்கி திரிபுராவில் தொடர்ந்து வெற்றியடைந்துவரும் இடது முன்னணி, தற்போது கடும் போட்டியைச் சந்தித்திருக்கிறது என்ற கருத்து நிலவுகிறதே?
நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்கள்தான் எங்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். பிரதமர் அவருடைய கேபினட் அமைச்சர்களையும், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களையும், தேசியத் தலைவர்களையும் அழைத்துவந்து கடந்த இரண்டாண்டுகளாக இங்கு தேர்தல் பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார். ஆனாலும்கூட, அவர்கள் கவலைப்படவே செய்கிறார்கள். இடது முன்னணி அரசு மிகவும் சிறியதாக இருக்கலாம், ஆனால் போராடிக்கொண்டிருக்கும் இந்த நாட்டு மக்களுக்கு மாற்றுவழியைக் காட்ட முடிந்திருக்கிறது. இந்தச் சிறிய மாநிலத்தின் மக்களை எதிர்கொள்வதற்கு பிரதமர், உள் துறை அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் பலரின் தலைமையின் கீழ் பணப்பட்டுவாடா, அதிகாரம் மற்றும் ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸோடு இடது முன்னணி தேர்தல் உடன்பாடு செய்துகொண்டிருப்பதாகப் பிரதமர் சொல்லியிருக்கிறாரே?
காங்கிரஸோடு இடது முன்னணி அப்படி ஏதேனும் உடன்பாடு கண்டிருப்பதன் அறிகுறிகள் உங்களுக்குத் தென்படுகின்றனவா? பாஜகவினர் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள். அந்த அமைப்பு, திரிபுரா தேசிய விடுதலை முன்னணி என்ற தீவிரவாத அமைப்பால் உருவாக்கப்பட்டது. தற்போது மத்தியில் ஆண்டுகொண்டிருக்கும் அரசு, இப்போதும்கூட திரிபுரா தேசிய விடுதலை முன்னணியைச் சட்ட விரோதமானது என்றுதான் அறிவித்திருக்கிறது. அந்த அமைப்பு, திரிபுராவுக்கு விடுதலை வேண்டும், அயல்நாட்டவர்கள் வெளியேற வேண்டும் என்று கோரிவருகிறது.
மூன்று மாதங்களுக்கு முன்னால், திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, திரிபுரா பூர்வீக மக்கள் முன்னணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது. தன்னைத் தேசியக் கட்சியாகவும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமை, இறையாண்மையைப் பாதுகாப்பதாகவும் சொல்லிக்கொள்ளும் பாஜக, திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணியின் வாயிலாகப் பிரிவினைவாத அமைப்பான திரிபுரா தேசிய விடுதலை முன்னணியுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறது.
இதுகுறித்து மக்களிடமிருந்து எழும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத நிலையிலிருக்கும் பாஜக, கவனத்தைத் திசைதிருப்புவதற்காக காங்கிரஸுடன் நாங்கள் சமரசம் செய்துகொண்டிருப்பதாகக் கூறுகிறது.
தணிக்கை அறிக்கைகள், மத்திய நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் திரிபுரா சிறந்து விளங்குவதாகக் கூறுகின்றன. ஆனால், உங்களது அரசில் ஊழல்கள் நடந்திருப்பதாக பாஜக குற்றம்சாட்டுகிறதே?
நமது நாடு, ஒரு கட்சியின் தலைவராக மட்டுமே செயல்படும் பிரதமரைக் கொண்டிருக்கிறது. அவருடைய கட்சியிடமிருந்து இத்தகைய மட்டரகமான அணுகுமுறையைத் தவிர்த்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? உண்மையில் அவர், தவறான தகவல்களின் அடிப்படையில் திரிபுராவின் மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
© ‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில்: புவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT