Published : 24 Mar 2018 09:16 AM
Last Updated : 24 Mar 2018 09:16 AM
கா
விரிப் படுகை முப்போகம் விளையும் பூமியாக இருந்ததெல்லாம் கதையாகிப் போனது. இனிமேல் கடைமடை வரைக்கும் காவிரி நீர் வந்து சேருமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில், படுகையின் அடியிலிருக்கும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுக்கும் திட்டங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டுவருகின்றன.
காவிரிப் படுகையில் மீத்தேன் திட்டமும் அதைத் தொடர்ந்து ஷேல் கேஸ் எனப்படும் படிமப் பாறையி லிருந்து எரிவாயு எடுக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டு, அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்குப் பிறகு அத்திட்டங் கள் கைவிடப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரிப் படுகைளைத் துளைத்து எடுக்கப்படுவது மீத்தேன், படிமப்பாறைகளைத் துளைத்து எடுக்கப் படுவது ஷேல் கேஸ், இரண்டு திட்டங்களுக்கும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், ஹைட்ரோ கார்பன் என்ற புதிய வார்த்தை புழக்கத்துக்கு வந்திருக்கிறது. ஹைட்ரோ கார்பன் என்பது நிலக்கரிப் படுகை மீத்தேன், படிமப்பாறை எரிவாயு இரண்டையும் உள்ளடக்கியதே. ஆனால், இந்த வார்த்தையில் உள்ளடங்கியுள்ள எரிபொருட்களை அரசின் அறிவிப்புகள் விவரிப்பதில்லை.
ஏற்கெனவே, காவிரிப் படுகையில் பெட்ரோல் எடுக்கப்பட்டுவரும் நிலையில், இப்போது மட்டும் ஏன் எதிர்ப்புக் கிளம்புகிறது? விவசாயிகள் ஏன் அச்சத்துக்கு ஆளாகிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும்வகையில், விவசாயிகளின் போராட்டங்களைத் தலைமையேற்று நடத்துபவர்கள், பத்திரிகையாளர்கள், அறிவியலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று பலதரப்பினரும் எரிபொருட்களை அகழ்ந்தெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களின் சாதக பாதகங்களை விளக்கி புத்தகங்களை வெளியிட்டுவருகின்றனர்.
வரலாற்றுத் துறைப் பேராசிரியரும், மீத்தேன் எதிர்ப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான த.செயராமன் எழுதியுள்ள ‘மீத்தேன் அகதிகள்’ புத்தகத்தில், மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் திட்டங்களுக் காக மேற்கொள்ளப்படும் நீரியல் விரிசல் முறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பட்டியலிட்டிருக்கிறார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நீரியல் விரிசல் செய்யப்பட்ட பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டதையும் மேலை நாடுகள் இம்முறையைக் கைவிடத் தொடங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். த.செயராமன் வரலாற்றுத் துறை பேராசிரியர் என்பதால், அரசியல் சூழல்களின் காரணமாகவும் சூழலியல் பாதிப்புகளின் காரணமாகவும் உலகம் முழுவதும் அகதிகளாக இடம்பெயர்பவர்களின் துயரக் கதைகளையும் விவரமாக எழுதியிருக்கிறார். சுற்றுச்சூழல் பாதிப்புகள் புலம்பெயர்வுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிப்பதாகவே இந்நூல் அமைந்துள்ளது.
பத்திரிகையாளர் கா.அய்யநாதன் எழுதியுள்ள ‘ஹைட்ரோ கார்பன் அபாயம்’ புத்தகம், ஓஎன்ஜிசி நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டுள்ள அறிக்கை களையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது. எவ்வகையிலேனும் மக்களைச் சமாதானப்படுத்தி, திட்டங்களைத் தொடர்வதே அதன் நோக்கமாக இருக்கிறதேயொழிய, இத்திட்டங்கள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைப் பற்றி முன்னறிவிப்பதாக இல்லை என்பதை ஆதாரங்களோடு விளக்கியிருக் கிறார். கச்சா எண்ணெய் இறக்குமதியால், தொடர்ந்து அந்நியச் செலாவணியை இழந்துவரும் இந்தியா, ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் மூலமாக அதை ஈடுகட்ட முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையைக் காரணம் காட்டித்தான், தாராளமயம் அனுமதிக்கப்பட்டது. ஆனால், தாராளமயம் அனுமதிக்கப்பட்டு, 25 ஆண்டுகளாகியும்கூட அந்நியச் செலாவணியை நம்மால் ஈடுகட்ட முடியவில்லை என்பதே நிலை. இந்நிலையில் அந்நியச் செலாவணி, கச்சா எண்ணெய் ஆகியவற் றைக் காரணம்காட்டி, விவசாயிகளின் வாழ்வாதார மான நிலங்களைத் தகுதியிழக்கச் செய்வது சரியா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது கா.அய்ய நாதனின் ‘ஹைட்ரோ கார்பன் அபாயம்’ புத்தகம்.
தமிழில் தொடர்ந்து அறிவியல் சார்ந்த நூல்களை வெளியிட்டுவரும் அறிவியல் வெளியீடு, ‘அறிவியல் பார்வையில் ஹைட்ரோ கார்பன்’ என்ற நூலை வெளியிட்டுள்ளது. கேள்வி-பதில் வடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம், ஹைட்ரோ கார்பன் குறித்த சந்தேகங்களைக் கேள்விகளாக்கி அறிவியல்பூர்வ மான பதில்களை முன்வைக்கிறது. நெடுவாசல் ஒப்பந் தப் பின்னணி, காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருட்கள் உருவான வரலாறு உள்ளிட்ட பின்னிணைப்புகள் இப்பிரச்சினையை அறிவியல்பூர்வமாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கண்ணோட்டத்திலும் அணுகியிருக்கின்றன.
எரிபொருட்களை அகழ்ந்தெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களைப் போல, நியூட்ரினோ போன்ற ஆய்வுத் திட்டங்களும் இப்போது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. கோலார் சுரங்கத்தில் கை விடப்பட்ட நியூட்ரினோ ஆய்வுகளை இப்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தேனி, இடுக்கி மாவட்டங்களில் தொடர்வதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. அறிவியல் ஆய்வுகளுக்கான அவசியங்கள் இருந்தபோதும், அதன் விளைவுகள் மக்களையும் அவர்களது வாழ்வாதாரங்களையும் பாதித்துவிடக் கூடாது என்பதில் அக்கறை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். செயற்கையாக ஆய்வகங்களில் நியூட்ரினோக்களை உருவாக்கும்போது அங்கு உருவாகும் கதிர்வீச்சுகள், அருகிலிருக்கும் பகுதிகளில் எத்தகைய சூழல் கேடுகளை உருவாக்கும் என்பதைப் பற்றி கவனம் செலுத்தப்படவில்லை. மாநில அரசுகளின் அனுமதி பெறுவதில்கூட வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை.
தங்களது அனுமதி பெறாமல் இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று கேரள அரசு கூறியிருப்பதும் இந்தக் காரணத்தால்தான். இதுகுறித்து அணுசக்தி விஞ்ஞானி வி.டி.பத்மநாபன் எழுதிய கட்டுரைகள், அதற்கு இந்திய நியூட்ரினோ ஆய்வகம் தெரிவித்த மறுப்பு, வி.டி.பத்மநாபனின் விளக்கங்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்து ‘இந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்’ என்ற தலைப்பில் பூவுலகின் நண்பர்கள் - தமிழ்நாடு & புதுச்சேரி அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
ஏற்கெனவே, காவிரிப் படுகையில் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. எண்ணெய்க் குழாய்களில் ஏற்படும் கசிவுகளைப் பற்றி ஓஎன்ஜிசி போதிய அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்று விவசாயிகள் குறைபட்டுக்கொள்கிறார்கள். ஆனால், கச்சா எண்ணெய் எடுப்ப தால் நிலத்தடிநீர் பாதிப்படையவில்லை என்பதால் அதுகுறித்து விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்களில் கையாளப்படும் நீரியல் விரிசல் முறையால் நிலமும் வளமும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, அதை எதிர்க்கிறார்கள்.
விவசாயிகளையும் அவர்களை ஒருங்கிணைத்துப் போராடும் தலைவர்களையும் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் போக்கு ஒன்றும் உருவாகி யிருக்கிறது. உண்மையில் உணவு, எரிபொருள் இரண்டுமே அத்தியாவசியத் தேவை என்பதை விவசாயிகள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இரண்டில் எதற்கு முக்கியத்துவம் என்பதில்தான் கருத்து மாறுபாடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment