Published : 14 Mar 2018 09:59 AM
Last Updated : 14 Mar 2018 09:59 AM
மு
ம்பையிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது நாசிக் நகரம். மார்ச் 6-ல் நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகளின் பேரணி திங்கட்கிழமை அன்று, மும்பை வந்தடைந்தது. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும்; வனப் பகுதிகளில் காலம்காலமாக உழுது பயிரிட்டுவரும் விவசாயிகளுக்கு நில உரிமையை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பேரணியை நடத்தினார்கள் விவசாயிகள். வழியெங்கும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்த விவசாயிகளின் எண்ணிக்கை மும்பையை நெருங்கியபோது 50 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
பள்ளித் தேர்வுகள் நடக்கிற இந்த நேரத்தில் மும்பை மாநகரத்தில் பேரணி நடந்தால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும், அலுவலகங்களுக்கு உரிய நேரத்தில் சென்று சேர முடியாது. அதனால், மும்பைவாசிகள் எரிச்சல் அடைவார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்தீர்மானிக்கப்பட்ட இந்தக் கருத்துகளுக்கு மாறாக, பேரணியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்குக் குடிநீரும் பிஸ்கட் பாக்கெட்டுகளையும் வழங்கி, அவர்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்கள் மும்பை மக்கள்.
வெற்றிக்கு அச்சாரம்
பொதுமக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்று எல்லோருமாய் சேர்ந்து சாலையின் இருபுறமும் நின்று விவசாயி களுக்கு உணவுப் பொருட்களை வழங்கியிருக்கிறார்கள். கோடைகாலத்தில் குடிநீருக்கான தேவை அதிக மாக இருக்கும் என்று மும்பை குடியிருப்போர் நலச் சங்கம் ஒன்று, குடிநீர் டேங்கர்களையும் ஏற்பாடுசெய்திருந்தது. சில அமைப்புகள் காலில் செருப்பின்றி நடந்துவந்த விவசாயிகளுக்குக் காலணிகளைச் சேகரித்து வழங்கின. நாசிக்கில் தொடங்கிய பேரணி, நாளொன்றுக்கு 30 கிலோ மீட்டர் என்று தொடர்ந்து, மும்பையை வந்தடைந்தபோது காலையில் தொழிற்சங்கங்கள் விவசாயிகளுக்குக் காலை உணவை வழங்கின.
“எங்களோடு ஒரு டிரக்கையும் கொண்டுவந்தோம். கடைசி நாளில் பொதுமக்கள் அளித்த உணவுப் பொருட்களால் டிரக் நிரம்பிவிட்டது. இன்னும் நான்கு நாட்களுக்குப் போதுமான உணவு அது” என்று கூறி யிருக்கிறார், அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரான குஜார். பேரணியில் கலந்துகொண்டவர்களுக்குத் தேவையான உணவை வழங் கியபடி அந்த டிரக் பயணித்துக்கொண்டிருந்தது. டிரக்கில் கொண்டுவந்த சமையல் பொருட்களைக் கொண்டு, ஆங்காங்கே சாலையோரங்களில் சமையல் செய்து விநியோகிக்கப்பட்டது. “யாரிடமும் எந்த உதவி யையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களது தேவைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளுடனும் வந்திருந்தோம்” என்கிறார் குஜார். ஆனால், மும்பை மக்கள் எதிர்பாராத ஆதரவை அளித்து, விவசாயிகளின் போராட்டத்தை வெற்றிபெறச் செய்துள்ளனர்.
மக்கள் ஆதரவு
விவசாயிகளின் பேரணி சட்ட மன்றத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது, பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மகாராஷ்டிர அரசு. ஆசாத் மைதானத்தில் விவசாயிகள் காத்திருக்க.. அவர்களின் பிரதிநிதிகள், மாநில முதல மைச்சர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்ட அமைச்சர வைக் குழுவைச் சந்தித்தனர். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஆறு மாதங்களுக்குள் பழங்குடி விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று முதல்வர் பட்னவிஸ் எழுத்துபூர்வமாக அறிவித்திருக் கிறார். கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், விவசாயிகளின் பிரதிநிதிகளும் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள், நாட்டிலேயே மகா ராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதியில்தான் மிகவும் அதிகம். 2017 ஜூனில் ரூ.34,000 கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடிசெய்வதாக அறிவித்தது மகாராஷ் டிர அரசு. ஆனால், அதன் பயன் விவசாயிகளை உரிய முறையில் சென்றுசேரவில்லை. கடன் தள்ளுபடி தீர்வை அளிக்கவில்லை. இந்நிலையில்தான், விவசாயி கள் மும்பையில் உள்ள சட்ட மன்றத்தை நோக்கித் தங்களது நடைப்பயணத்தைத் தொடங்கினர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு உடனே செவிசாய்த்துவிடவில்லை. பேரணியில் கலந்துகொண்டவர்கள் விவசாயிகளே அல்லர், அவர்கள் பழங்குடி கள் என்றார் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ். பாஜக எம்.பி. பூனம் மகாஜன், இன்னும் ஒருபடி மேலேயே போனார். “நகர்ப்புற மாவோயிஸத்தால் திட்டமிட்டு நடத்தப்படும் பேரணி இது” என்றார். இப்படி விவசாயி களுக்கும் பழங்குடி விவசாயிகளுக்குமான உறவைத் துண்டிக்கும் முயற்சிகளும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்குமான உறவைத் துண்டிக்கும் முயற்சிகளும் நடந்தன. கடைசியில், விவசாயிகளின் போராட்டத்துக் குக் கிடைத்த மக்கள் ஆதரவு வெற்றிபெற்றிருக்கிறது. அரசு ஏற்பாடுசெய்திருக்கும் சிறப்புப் பேருந்து மற்றும் ரயில்களில் விவசாயிகள் நாசிக் நகரத்துக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
இங்கே ஏன் சாத்தியமில்லாமல் போனது?
மகாராஷ்டிர விவசாயிகள் பேரணி முன்வைத்த அதே கோரிக்கைகளுக்காகத்தான் தமிழ்நாட்டு விவசாயிகளும் நீண்டகாலமாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இங்கேயும் கடன்தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் துயரமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எனினும் விவசாயிகளால் பொதுமக்களின் ஆதரவைப் பெற முடியாமல் போனது ஏன்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் அமைப்பான அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் தான் மும்பைப் பேரணியை முன்னெடுத்தது. குறிப்பாக, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் மன்றத் தலைவரும், அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளரு மான விஜூ கிருஷ்ணன், இந்தப் பேரணியைத் திட்டமிட்டு வழிநடத்தினார். ஆனால், அது ஒரு அரசியல் கட்சியின் போராட்டமாக அல்ல, விவசாயிகளின் போராட்டமாகவே அது நடந்து முடிந்திருக்கிறது.
விவசாயிகளின் போராட்டத்தையும் யாரும் முன்னெ டுக்கலாம். அது அனைவரின் பங்களிப்போடும் நடைபெற வேண்டும். தமிழகத்தில் நடக்கும் விவசாயிகளின் போராட்டங்கள் அரசியல் வட்டங்களை விட்டு வெளியே வரவில்லை. அப்படி வந்து விவசாய அமைப்புகள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும், அரசியல் கட்சிகள் ஆதரவளிக்கத் தயாராக இல்லை. அரசியல் கூட்டல், கழித்தல் கணக்குகளை மனதில்கொண்டு விலகியே நிற்கின்றன. போராட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டாலும் அது பெயரளவுக்குத்தான் இருக்கிறது.
மும்பை ஒரு முன்னுதாரணம்
மும்பை விவசாயிகளின் போராட்டம் பழங்குடி இனங்களைச் சேர்ந்த விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுத்திருக்கிறது. பழங்குடி விவசாயிகளின் நில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், அவர்களை நிலங்களிலிருந்து வெளியேற்றக் கூடாது என்ற கோரிக்கையும் இந்தப் போராட்டத்தில் முன்னிறுத்தப்பட்டது. விவசாயிகளுக்குள்ளேயே ஒருங்கிணைப்பு இருந்தால்தான், அவர்களுக்கான ஆதரவும் வலுப் பெறும். காவிரி டெல்டா விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக வைகை நதிக் கரையிலிருந்தும் பொருநை நதிக் கரையிலிருந்தும் ஆதரவு எழுவதில்லை. பிறகு, நம் விவசாயிகளின் கோரிக்கைகள் எப்படிக் கண்டுகொள்ளப்படும்?
முக்கியமாக, பொதுமக்களுக்குத் தங்களது போராட்டத்துக்கான நியாயத்தை விளக்கி, அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். மும்பைப் பேரணி அதைச் சாதித்திருக்கிறது. போக்குவரத்து பாதிக்கப்படக் கூடாது என்ற கவனத்தோடு தங்களது பேரணியை இரவு நேரத்தில் திட்டமிட்ட விவசாயிகள், மாணவர் களுக்குத் தேர்வு நேரம் என்பதால், இரவு நேரத்திலேயே மும்பை எல்லைக்குள் நுழைந்தார்கள். இந்த ஒத்திசைவு, பொதுமக்கள் ஆதரவைப் பெற்றுத்தந்திருப்பதோடு, பேரணி குறித்துப் பரப்பப்பட்ட அவதூறு களையும் பொய்யென்று நிரூபித்திருக்கிறது.
தமிழ்நாட்டிலோ, அரசு அலுவலகங்களின் வாசல்களில் விவசாய அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும்போது, பொதுமக்கள் நின்று என்னவென்றுகூடப் பார்க்காமல் தங்கள் வேலைகளில் மும்முரமாக கடந்துபோய்க்கொண்டிருப்பதுதான் வழக்கமான காட்சியாக இருக்கிறது. இங்கிருக்கும் மக்களிடமே நமது கோரிக்கைகளின் நியாயத்தைப் புரிய வைக்க முடியாதபோது, தலைநகரங்களில் மையம்கொண்டு போராட்டம் நடத்தி கவனம் ஈர்த்து எதைச் சாதிக்கப்போகிறோம்? விவசாயிகளின் கோரிக்கைகள் எதையும் அரசு தாமாகவே முன்வந்து ஏற்கப்போவதில்லை. ஆனால், மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றால், அரசு அதை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும். மும்பை விவசாயிகளின் வெற்றிகரமான பேரணி அதற்கு ஒரு முன்னுதாரணமாய் அமையட்டும்.
- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT