Last Updated : 19 Mar, 2018 09:04 AM

 

Published : 19 Mar 2018 09:04 AM
Last Updated : 19 Mar 2018 09:04 AM

சாதியக் கட்டமைப்பின் தாக்கம் பெண்கள் மீது அதிகம்!

ரண்டாண்டுகளுக்கு முன்னால் உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் நடந்த அந்த ஆணவப் படுகொலையை யாரும் மறந்துவிட முடியாது. கலப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கர் - கவுசல்யா தம்பதி மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் சங்கர் உயிரிழந்தார். வெட்டுக் காயங்களுடன் அந்தக் காட்சியைப் பார்த்துத் துடித்த கவுசல்யா இன்று ‘சங்கர் சமூகநீதி அறக்கட்டளை’யை நிறுவி, நம்பிக்கை தரும் சமூகச் செயல்பாட்டாளராகியிருக்கிறார். இந்த ஆணவப் படுகொலை தொடர்பாக, ‘இந்தியாஸ் ஃபர்பிடன் லவ்: என் ஹானர் கில்லிங் ஆன் ட்ரையல் - விட்னஸ்’ எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார் லண்டன் பத்திரிகையாளர் சாதனா சுப்பிரமணியம். அவருடனான பேட்டி:

சங்கர் ஆணவக்கொலை சம்பவம் உங்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?

லண்டனில் இருந்தபோது, சங்கர் - கவுசல்யா மீது நடத்தப்பட்ட தாக்குதல் காணொலியைச் சர்வதேச செய்தித் தொலைக்காட்சிகளில் பார்த்தேன். இந்தியச் சமூகத்தில் வேரூன்றியிருக்கும் சாதிய அடக்குமுறைகளையும் அதற்கு எதிரான இளம் தலைமுறையினரின் எண்ணங் களையும் பதிவுசெய்ய வேண்டும் என்று விரும்பினேன். முதலில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கான ஆவணப் பட புராஜெக்டாகத்தான் இதைத் திட்டமிட்டேன். ஆனால், இது சிறு குழுவுக்கான ஆய்வுத் தயாரிப்பாக முடிந்து விடாமல் உலக மக்களைச் சென்றடைய வேண்டும் என்று தோன்றியது. எனவே, ஆஸ்கர் விருது வென்ற ஆவணப் பட இயக்குநர் ஆர்லாண்டோ வான் எயின்சீடலின் தலைமையில் இப்படத்தை உருவாக்கினேன். அல்ஜஸீரா இதை யூடியூபில் வெளியிட்டிருக்கிறது.

உங்கள் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்…

நான் பிறந்தது கோயம்புத்தூரில். படித்து வளர்ந்தது மைசூரில். லண்டனில் ஏழாண்டுகள் வங்கி நிர்வாகியாகப் பணிபுரிந்த பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் புலனாய்வு இதழியல் மற்றும் எம்.ஏ. ஆவணப்படத் தயாரிப்பு படித்தேன். அதிலிருந்து மனித உரிமை மற்றும் முரண்பாடுகள்குறித்த ஆய்வில் ஈடுபடத் தொடங்கினேன். பி.பி.சி., அல்ஜஸீரா, சேனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஒளி பரப்பு நிறுவனங்களுக்காகப் பல புலனாய்வு சார்ந்த ஆய்வுப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினேன்.

கவுசல்யாவின் பார்வையிலிருந்து மட்டுமே படத்தை நகர்த்தாமல் அவருடைய பெற்றோர், தம்பி உள்ளிட்ட எதிர்த் தரப்பினரையும் உங்களுடைய படத்தில் கொண்டுவந்தது எதனால்?

பாதிக்கப்பட்டவரின் குரலை மட்டுமே படம்பிடிப்பது தான் சரி என்று செயல்பாட்டாளர்கள் கருதலாம். ‘எதிர்த் தரப்பைப் பதிவுசெய்தால் கவுசல்யாவின் நியாயம் அடி பட்டுப்போகாதா?’ என்று பலரும் என்னிடம் வாதிட்டனர்.

சாதியத்தைப் பொறுத்தவரை பொறுப்பேற்க வேண்டிய நிலையில் ஒட்டுமொத்தச் சமூகமும் இருப்பதால், ஒரு தரப்பை மட்டும் காட்டுவதில் நியாயம் இல்லை என நம்பினேன்.

இரு தரப்பினரையும் எப்படிச் சம்மதிக்கவைத்தீர்கள்?

இங்கு பாதிக்கப்பட்ட சங்கரின் குரலாக கவுசல்யா ஒலிக்கிறார். அவருடைய தாய் அன்னலட்சுமி, தம்பி கவுதம், உறவினர்கள், அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் ஏ.பி.ஜெயசந்திரன் ஆகியோரிடமும் நான் என்ன செய்யவிருக்கிறேன் என்பதை விரிவாக விளக்கினேன்.

கவுசல்யாவின் தாய் எடுத்த எடுப்பில், ‘அவளிடம் கேட்க என்னவிருக்கிறது?’ என்றுதான் கேட்டார். ‘நீங்கள் சொல்ல நினைப்பதையும் சொல்லுங்கள். என்னுடைய படத்தில் விவரணைக் குரல் கிடையாது. அதனால், நீங்கள் சொல்வதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க மாட்டேன்’ என்றேன். அனைவரிடமும் சம்மதம் பெற எட்டு மாதக் காலம் பிடித்தது.

ஆவணப்படத்தில், கவுசல்யாவின் தம்பி மெளனமாக இருக்கும் காட்சி, சாதியம் தோற்கடிக்கப்படக்கூடாது என்கிற பதற்றத்தை வெளிப்படுத்துகிறது இல்லையா?

உண்மைதான். குறிப்பாக கவுதமுடன் உரையாடும் போது பல நேரங்களில் இறுக்கமாகவும் சில நேரம் கடுமையான கொந்தளிப்போடும் பேசுவார். சாதியப் பெருமை பேசி அவர் கவுசல்யாவின் திருமணத்தை மறுப்பதைப் படத்தில் இடம்பெறச்செய்வது என்பது அவர் களுடைய குற்றத்தை வெட்டவெளிச்சத்துக்குக் கொண்டுவரலாம். ஆனால், அதன் வழியாக மீண்டும் சாதிய வன்மத்தைத்தான் என்னுடைய படைப்பும் விதைத்துவிடும் என்பதால் அதுபோன்ற காட்சிகளைத் தவிர்த்துவிட்டேன்.

ஏன் சங்கரின் குடும்பத்தாரை இதில் இடம்பெறச் செய்யவில்லை?

மொத்தம் 20 மணி நேரம் எடுக்கப்பட்ட படத்தில் தற்போது 25 நிமிடங்களைத்தான் வெளியிட்டிருக்கிறேன். செப்டம்பர் மாதம் மேலும் 45 நிமிடங்களுக்கான பதிவை யும் வெளியிடுவேன். அதில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரின் கருத்துகளும் அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதமும் முன்வைக்கப்படும். அதில் சங்கர் குடும்பத்தாரின் குரலும் இடம்பெறும்.

கவுசல்யாவின் பாட்டி, தாய் பேசும் காட்சிகளில், வலுவாகத் தொடரும் பாரம்பரியமான மரபுகளைப் பெண்களால் ஒருபோதும் மாற்ற முடியாது என்கிற இயலாமையும்தான் மேலோங்குகிறது. இதன் மூலம் சாதியத்துக்குப் பொறுப்பேற்க வேண்டியது தனிநபர்கள் அல்ல சாதியச் சமூகம்தான் என்கிறீர்களா?

சாதியக் கட்டமைப்பின் தாக்கம் பெண்கள் மீது அதிக மாக இருக்கிறது. ஒரு வகையில் கவுசல்யாவின் குடும்பமும் சாதியத்துக்குப் பலியானவர்கள்தான். தங்களுடைய மகள் தலித் சாதியைச் சேர்ந்தவரை மணந்துகொண்டபோது, அவர்கள் சார்ந்த சமூகமே அவர்களைத் தூற்றுவதையும், எதிர்வினையாற்ற நிர்ப்பந்திப்பதையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். தங்களுக்கு ஏற்பட்ட சங்கடத்தை நேர்செய்வதற்காக ஈடுகட்ட ஆணவக்கொலை என்ற கொடூரத்தை நியாயப்படுத்தவே முடியாது. இருப்பினும் அப்படிப்பட்ட நிலைக்குத் தள்ளப்படும் குடும்பங்கள் தங்களுடைய சொந்தபந்தங்களுக்கு முன்பாக வெட்கித் தலைகுனிந்து நிற்கவைக்கப்படும் சூழ்நிலையையும் விவாதத்துக்குள்ளாக்க வேண்டுமென்று கருதுகிறேன்.

கவுசல்யாவின் மன உறுதியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலம் கவுசல்யாவுடன் தொடர்ந்து பயணித்திருக்கிறேன். சாதி மறுப்புக் கூட்டங்களில் உரைநிகழ்த்தும்போது அவரிடம் இருந்து போர்க்குணம் வெளிப்படுவதைக் கண்டு வியந்திருக்கிறேன். பல இரவுகளில் நானும் கவுசல்யாவும் பேருந்துகளில் பயணித்திருக்கிறோம். அப்போதெல்லாம் மனமுடைந்து வாடும் அவரை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். ஆனால், அதில் அமிழ்ந்துவிடாமல் அவரை உந்தித்தள்ளியது தன்மீது அளவுகடந்த அன்பைப் பொழிந்த சங்கருக்காகப் போராட வேண்டும் என்கிற எண்ணம்தான். பெரியாரிய இயக்கங்களும் ஊடகங்களும் அவரது மன உறுதியை அதிகரித்திருக்கின்றன. வலி, வேதனை, எப்போதும் நொறுங்கும் மனநிலையோடு அனுதினமும் போராடும் உண்மையான போராளி அவர்!

- ம.சுசித்ரா,

தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x