Published : 23 Mar 2018 09:43 AM
Last Updated : 23 Mar 2018 09:43 AM
சூ
டானைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சூடான் கென்யாவில் வசித்தது. சூடான் - ஆப்பிரிக்க நாடொன்றின் பெயர் என்றாலும், சமீப நாட்களாக அந்தப் பெயர் அதிகம் பேசப்படுவதற்குக் காரணம், ஒரு காண்டாமிருகம். வடக்கு வெள்ளை காண்டாமிருக வகையில் உலகின் கடைசி ஆண் இதுவே. ஒரு மாத காலமாகவே உடல்நலம் குன்றியிருந்த சூடான், மார்ச் 20-ல் இறந்தது. இன்னும் இரண்டு வடக்கு வெள்ளை பெண் காண்டாமிருகங்கள் மட்டுமே உலகில் எஞ்சியிருக்கின்றன. சூடானின் மகள் நஜின், சூடானின் பேத்தி ஃபதுவும் அதனுடன் வாழ்ந்துவந்தன.
45 வயதுடைய சூடானின் பின்னங்கால்கள் சமீபத்திய மாதங்களாக பலவீனமடைந்து வந்தன. அதன் கால்கள் 3,000 கிலோ உடல் எடையைத் தாங்கும் வலுவை இழந்துவிட்டிருந்தன. ஒரு கண் பார்வை பறிபோயிருந்தது.
எஞ்சியுள்ள இரண்டு பெண் காண்டாமிருகங்களுடன் இயற்கையாக இனப்பெருக்கம் செய்யும் ஆற்றலை அது இழந்திருந்தது. தெற்கு சூடானில் உள்ள ஷாம்பே வேட்டைக் காப்பிடத்தில் 1975-ல் குட்டியாக சூடான் பிடிக்கப்பட்டது. பிறகு, கென்யாவில் உள்ள ஓல் பெஜெடா காப்பிடத்தில் இது வாழ்ந்துவந்தது. சமீப காலத்தில் உலகில் பரவலாக அறியப்பட்ட உயிரினமாக சூடான் மாறியது. ஹாலிவுட் நடிகர்கள் லியனார்டோ டிகாப்ரியோ, எலிசபெத் ஹர்லி உள்ளிட்டோர் அதை நேரில் பார்த்துச் சென்றுள்ளனர்.
அழிவின் விளிம்பில்..
வடக்கு வெள்ளை காண்டாமிருகம் எதிர் காலத்தில் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பை சூடான் தரும் என்று காட்டுயிர் ஆராய்ச்சி யாளர்கள் நம்பினார்கள். அது இயல்பாக வாழ்வதற்காக காட்டில் விடப்பட்டிருந்தால், அதன் வாழ்நாள் முன்கூட்டியே முடிந்துபோயிருக்கலாம். காப்பிடத்தில் வாழ்ந்ததாலேயே இவ்வளவு காலம் வாழ முடிந்திருக்கிறது.
தற்போது சூடான் தானாகவே இறந்திருக்கிறது என்றாலும், கள்ள வேட்டைக்காரர்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதால், கடைசிவரை ஆயுதக் காவலர்களின் பாதுகாப்புடனே வாழ்ந்துவந்தது. 1960-ல் இந்த காண்டாமிருக வகை 2,000 எண்ணிக்கையில் இருந்தது. 2008-க்குப் பிறகு ஒரு வடக்கு வெள்ளை காண்டாமிருகம்கூடக் காட்டில் இல்லை. கள்ள வேட்டை - உயிரினக் கடத்தல் வணிகமே இந்த இனம் அழிவதற் கான முதன்மைக் காரணம். போர், வாழிட அழிப்பு, காடு ஆக்கிரமிப்பு போன்றவற்றின் காரணமாக வடகிழக்கு ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்த காண்டாமிருக வகை, அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டது.
சாத்தியம் குறைவு
இந்த காண்டாமிருக வகை முற்றிலும் அற்றுப்போவதற்கு முன்னதாகச் செயற்கைக் கருவூட்டுதல் முறை மூலம் இந்த இனத்தைக் காப்பாற்ற ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்துவருகிறார்கள். நஜினும் ஃபதுவையும் செயற்கையாகக் கருத்தரிக்க வைக்க முடியவில்லை. இப்போது சோதனைக் குழாய் மூலம் கருத் தரிப்பை மேற்கொண்டு, வாடகைத் தாய் முறைபோல தெற்கு வெள்ளை காண்டாமிருகங்களின் கருவறையில் கருவைச் செலுத்தி குட்டிகளை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். இப்படி வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களை மீட்டெடுக்க பிரம்மப் பிரயத்தனம் நடந்துவந்தாலும், இன்னும் இரண்டு பெண் காண்டாமிருகங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், அந்த இனம் முற்றிலும் அற்றுப்போவ திலிருந்து காப்பாற்றுவதற்கான சாத்தியம் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது.
கவனம் பெறாத இன அழிப்பு
இந்தப் பூவுலகில் 1.5 கோடி ஆண்டுகளுக்கு முன் பரிணாம வளர்ச்சியில் முட்டி மோதித் தோன்றி, எத்தனையோ இடர்களுக்கு மத்தி யில் வாழ்ந்துவந்த காண்டாமிருக இனம், கடந்த சில நூற்றாண்டுகளில் மனிதர்கள் ஏற்படுத்திவரும் செயற்கை நெருக்கடிகளால் பூவுலகை விட்டே அற்றுப்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.
உலகின் பல பகுதிகளில் அரங்கேறிவரும் மனித இன அழிப்பு பற்றி குறைந்தபட்சம் பேசவாவது செய்கிறோம். ஆனால், உயிரின அழிப்பு நம் கவனத்தை ஈர்க்கவில்லை.
பல்லூழிக் காலமாக இந்தப் பூமி ஏற்படுத்திய அனைத்து நெருக்கடிகளையும் தாங்கி உயிர் பிழைத்திருக்கும் சில உயிரினங்கள் மனிதச் செயல்பாடுகளால் ஒற்றை, இரட்டை இலக்கங்களுக்குள் சுருக்கப்படுவது காட்டுயிர் இனப்படுகொலை இல்லையா? இந்த பூமிக்கும் உயிரினங்களுக்கும் மனித இனம் இழைத்துவரும் பெரும் அநீதியின் சின்னமாக வெள்ளை காண்டாமிருகம் இப்போது மறைந்திருக்கிறது.
‘தலைக்கு மேல் தொங்கும் கத்தி’யாக அடுத்துவரும் ஆண்டுகளில் இன்னும் எத்தனை அரிய உயிரினங்களைப் பலி கொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை.
- ஆதி வள்ளியப்பன்,
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT