Published : 01 Mar 2018 09:15 AM
Last Updated : 01 Mar 2018 09:15 AM
மா
லத்தீவு நாட்டின் உள்விவகாரம் சர்வதேச அரங்கில் கதையாகப் பேசப்படுகிறது. சர்வதேச அரசியல் என்பது சில வேளைகளில் கோமாளித்தனம்போலத் தோற்றம் கொள்வது; தேச நலன் - பாதுகாப்பு என்ற போர்வையில், தான் என்ற அகம்பாவத்துடன் தலைவர்கள் தங்கள் அதிகாரங்களைப் பறைசாற்றிக்கொள்ளும் களமாகத் திகழ்வது. பக்கத்து நாடொன்றில் சீனா ஆதிக்கத்தை நிலைநாட்டும்போது நாம் அதீதமாகக் கவலைப்பட்டு கேலிப்பொருளாகிவிடுகிறோம்.
பாகிஸ்தான், சீனா மீது மட்டும் கவனம் செலுத்துவதால் பிற நாடுகள் நம்முடைய பார்வையில் பெரிதாகத் தெரிவதே இல்லை. தெற்காசியாவின் எதிர்காலக் கற்பனையாகத் திகழ வேண்டிய இந்தியா, மாலத்தீவில் சீனா தலையிடுகிறது என்றதும் ஜன்னிக்கு ஆளாகிவிடுகிறது. மாலத்தீவுகள் குறித்து நமக்கு சரியான ஞானமில்லை. அதன் அரசியல் தலைவர்கள் புரட்சிக்காரர்களாக மாறிய பிறகும் அவர்களை அடிமைப்பட்டவர்களாகவே கருதுகிறோம். மாலத்தீவுகள், மொரீஷியஸ் போன்ற நாடுகளை அரசியல் முக்கியத்துவம் குறைந்த சிறு நாடுகளாகவே பார்க்கிறோம். தெற்காசிய அரசியல் என்பது நாம் சிக்கிமைச் சேர்த்துக்கொண்டதைப் போலத்தான் என்று கருதிவிடுகிறோம்.
வரையறைக்குட்பட்ட கட்டமைப்பு
இப்போதுள்ள கொள்கைக் கட்டமைப்பில் நாம் இதைவிடச் சிறந்த செயல்பாட்டை அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. தெற்காசியா என்பது எண்ணற்ற இயற்கைச் சூழல்கள் நிறைந்தது. தீவுகள், மலைகள், வெவ்வேறு நாகரிகங்களின் சங்கமங்களைக் கொண்டது. இந்தியா வலிமையான நாடு. ஆனால், அதைச் செல்வாக்காக மாற்றிக்கொள்ளாமல் அச்சுறுத்திப் பணியவைக்கும் போக்கே தென்படுகிறது. சில உதாரணங்களைப் பார்ப்போம். சமீபத்தில் நாட்டின் தென்கோடி முனையை ஒக்கி புயல் கடுமையாகத் தாக்கியது. மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். பெரும்பாலான நேரம் கடலிலேயே இருக்கும் மீனவர்கள் உதவி வரும் என்று பெரு நிலப்பரப்பைப் பார்த்து நின்றார்கள். உச்சபட்ச அதிகாரமோ நிலத்தால் சூழப்பட்ட பகுதியில் இருக்கிறது. தீவுகளின் புவியமைப்பியலை அரசு புரிந்துகொண்டால் சூழலைப் பற்றிய கற்பனையும் விரியும். இது கரையோரம் வாழும் நம் பரதவர்களைப் பற்றிய பார்வையை மட்டுமல்ல, தீவு நாடுகளைப் பற்றிய புரிதலையும் மேலும் தெளிவுபடுத்தும்.
தெற்காசியாவைப் பார்க்கும்போது, தன்னுடைய பக்கத்து நாடுகளின் பிரதேசங்கள் எப்படிப்பட்டவை என்ற புரிதலோ - உணர்தலோ இந்தியத் தலைமைக்கு இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. நேபாளத்தையே எடுத்துக்கொள்வோம். நமக்கும் நேபாளத்துக்கும் ஒற்றுமைகள் அதிகம். இருந்தும் நாமும் இந்தியாவும் ஒன்றே என்ற எண்ணத்தை நேபாளத்துக்கு ஏற்படுத்த இந்தியா தவறிவருகிறது. ‘பெரியண்ணன்’ மனோபாவத்தோடு நடந்துகொண்டு அச்சத்தையும் ஐயத்தையுமே வளர்க்கிறது. சீனாவின் செல்வாக்குக்கு இரையாகாதீர்கள் என்று மாலத்தீவுகளுக்கும் நேபாளத்துக்கும் இந்தியா எச்சரிக்கைகளைத்தான் விடுக்கிறது. இவ்விரு நாடுகளுடனான உறவில் பரஸ்பர கொடுக்கல் - வாங்கல்களையோ, சுயாதிகாரத்தையோ தொடர ஏதும் செய்வதில்லை. உத்தியை மாற்றுவது மட்டும் போதாது; வியூகமே மாற வேண்டும். புதிய தெற்காசியா உருவாக கற்பனை சக்தியுடன் கூடிய கொள்கை மாற்றம் அவசியம்.
புதுப்பிக்கும் நேரம்
தன்னைப் புதுப்பித்துக்கொள்ள தன்னையே புதிய ஆளாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டும் என்பது தென்னாப்பிரிக்கப் பழமொழி. தான் பழைய ஆள் அல்ல, புதியவர் என்று தன்னைப் பற்றி நினைக்கத் தொடங்கினால் பக்கத்து நாடுகளுக்கும் நமக்கும் பொதுவாக இருக்கும் விஷயங்கள் கண்ணில் படும். அது பேதங்களைவிட ஒற்றுமைகளை அதிகம் காட்டிப் பரஸ்பரம் உதவிக்கொள்ள வழியேற்படுத்தும். தன்னை ஒரு தேசிய அரசாகவே கருதுவதால் யாரும் வேற்றுமைப்படக் கூடாது, ஒரே தேசம் - ஒரே கலாச்சாரம் என்று பொதுமையைக் கட்டாயப்படுத்தத் தோன்றுகிறது. இது 19-வது நூற்றாண்டு மனப்பான்மைக்கு இரையாவதின் விளைவு. இந்நிலையில் மிகவும் உற்சாகத்தை அளிக்கும் ஒரு முடிவுதான் தெற்கு ஆசியப் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்துவது. இதில் எல்லா நாடுகளும் ஒரு துறையை நிர்வகிக்கும். நம்மிடம் துறை இருக்கிறது ஆனால் தெற்காசியக் கலாச்சாரமும் ஞானமும் போதவில்லை. எனவே, தெற்காசியப் பல்கலைக்கழகம் என்பது ஏற்கெனவே உள்ள பல்கலைக்கழகங்களைப் போலவே இருக்கிறது. தெற்காசியா என்ற கருத்தியலை மையமாகக் கொண்ட செயல் திட்டம் அதற்குத் தேவை. அது சுற்றுச்சூழல், கலாச்சாரம் ஆகியவற்றைத் தெற்காசியாவின் பன்மைத்துவமாகவும் வேற்றுமையாகவும் சித்தரிக்க உதவும்.
எல்லைப்புறம், தீவு, ஆற்றுப்படுகைச் சமுதாயம் என்று அனைத்துமே உள்ளூர் அடையாளமும் தெற்காசியப் பொதுமையும் கொண்டதாகத் திகழ வேண்டும். சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய உணர்வு உருவாக வேண்டும். அது உலக அரங்கில் ஒரு பகுதியை அரசின் அங்கமாகப் பார்க்கும் வழக்கத்தை மாற்றும். சூழலியல் அடிப்படையில் தெற்காசியா முழுக்க ஒரே பிரதேசமாகிவிடும்.
கருத்து முரண்பாடுகள், மாற்று வழிகள், சிறுபான்மையினர் என்று அனைத்தையும் அரசியல்சட்டரீதியாகவே மாற்றி உருவாக்க வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் அடிப்படையில் இல்லாமல் மக்களுடைய நியாயமான குரல்களையும் விருப்பங்களையும் எதிர்கொள்ளும் வகையில் கருத்துகளைப் பிணைக்க வேண்டும். சுற்றுச்சூழல், மதங்கள், பிராந்திய மொழிகள் தொடர்பான பரஸ்பரப் பேச்சுகளுக்கு தெற்காசியப் பல்கலைக்கழகம் களமாக வேண்டும். தெற்காசியா என்ற கொள்கை ஆக்கபூர்வமாகவும் தொடர்ச்சியாகவும் வளர அதற்கு உயிரூட்டம் தேவை.
தெற்காசியா என்ற கனவுக்கு அதன் வேறுபட்ட அம்சங்களே அச்சாகத் திகழ முடியும். மக்கள் திரள் அடர்த்தியும், இன பன்மைத்துவமும் மதங்களுக்கு இடையே உரையாடல் நிகழ்த்த வாய்ப்பாக இருக்கிறது; மக்கள் அமைப்புகளின் ஆக்கப்பூர்வ சிந்தனைகளும் சமூக இயக்கங்களும் இப்பிராந்தியங்களின் வளர்ச்சிக்குக் காரணங்களாக இருக்கின்றன. மனித உரிமைகள், கலாச்சாரப் பன்மைத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான அடிப்படைவாதக் கருத்துகளுக்கான மோதல் களமாகவும் தெற்காசியா இருக்கப்போகிறது.
மறு சிந்தனை அவசியம்
தெற்காசியா பல்வேறுவகை சிறுபான்மையினங்களைக் கொண்டிருக்கிறது. எல்லை, எல்லை தாண்டுதல் குறித்து மறு சிந்தனை அவசியம். இது ரோஹிங்கியாக்களைப் பற்றிய கவலை மட்டுமல்ல; வெளிப்படையான விருந்தோம்பல் கொள்கை நமக்கு அவசியம். பழங்குடிகள், மேய்ச்சல் நிலம் தேடிச் செல்வோர், நாடோடிகள், இனக்குழுக்கள் தெற்காசியாவின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இடம்பெயரவும் தொடர்ந்து செல்லவும் எல்லை என்ற வரையறை தடையாக இருக்கக் கூடாது.
சீனாவின் ஊடுருவல்களோ, பாகிஸ்தானின் போர்ப் பரணியோ புதிய தெற்காசிய அடையாளத்தையும் சிந்தனையையும் உடனடியாகத் தோற்றுவித்துவிடாது. எல்லை அடிப்படையிலான பாதுகாப்பு என்ற கருத்து மிகவும் குறுகியது. மாலத்தீவில் காணப்படும் அரசியல் குழப்ப நிலை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகங்கள், பல்கலைக்கழகக் கல்விமான்கள் இணைந்து புதிய தெற்காசிய அடையாளத்தையும் ஜனநாயகத்தையும் உருவாக்க வேண்டும். உலகமயமாதல் என்ற கருத்து வண்ணமிழந்து வெளுத்துவிட்ட நிலையில் இது அவசியப்படுகிறது. படைபல ஆதரவிலான ராஜதந்திர உத்தியிலிருந்து விலகி, பன்மைத்துவ பண்பின் அடிப்படையிலான ராஜதந்திரத்துக்கு மாற வேண்டும். தெற்காசியா முழுவதற்கும் ஜனநாயகத்தை விரிவுபடுத்தாமல் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்க முடியாது. தெற்காசியா என்ற அடையாளத்துடனான இந்தியாவால் தேசிய அரசு, தேசப் பாதுகாப்பு என்ற மந்தமான கற்பனையிலிருந்து புதிய இடத்துக்கு இடம் பெயர முடியும்!
சுருக்கமாகத் தமிழில்: சாரி.
© தி இந்து ஆங்கிலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT