Published : 30 Sep 2014 09:28 AM
Last Updated : 30 Sep 2014 09:28 AM
கார்ப்பரேட் சூழலியலாளர்கள்தான் மனிதர்களை விலங்குகளின் எதிரிகளாக முன்நிறுத்துகிறார்கள்.
வன உயிர் பாதுகாப்புபற்றிப் பேசும்போது, மனிதர்கள் புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள். வனங்களில் மனிதர் களும் விலங்குகளும் இயைபான ஒரு வாழ்க்கையைக் காலம்காலமாக வாழ்ந்துவருகின்றனர். வனங்களில் மட்டுமல்ல, சமவெளிகள், ஆறுகள், கடல் என எங்கும் மனிதர்களும் விலங்குகளும் நெடுங்காலமாக இணைந்து வாழ்ந்துவந்திருக்கின்றனர். ஆனால், இன்றைய கார்ப்பரேட் சூழல்வாதமோ மனிதர்களை விலங்குகளின் எதிரிகளாக முன்நிறுத்துகிறது. மனிதர்கள் இல்லாத வனம் என்பதே விலங்குகளுக்குப் பாதுகாப்பானது என்ற வாதம் எழுப்பப்படுகிறது.
வனஉயிர்ப் பாதுகாப்புக்காகக் குரல்கள் ஒலிக்கும் போதெல்லாம் கூடவே வனங்களில் வாழும் பழங்குடி மக்களை அங்கிருந்து வெளியேற்ற உத்திகள் வகுக்கப் படுகின்றன. மனிதர்களற்ற காடுகளை அவர்கள் உருவாக்க விரும்புகின்றனர். அவர்கள் பார்வையில் காடு என்பது தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் மற்றும் இன்னபிற உயிரினங்கள் அடங்கிய தொகுப்பு. இந்தப் பட்டியலில் இயற்கையின் ஓர் அங்கமான மனிதர்கள் இல்லை.
இரண்டு கோடி மக்கள்
கானுயிர்ப் பாதுகாப்புக்காகக் குரல்கொடுக்கும் உலக வனவிலங்கு நிதியம் (டபிள்யு.டபிள்யு.எஃப்.) உள்ளிட்ட பெரும் கானுயிர் தொண்டுநிறுவனங்கள், வனத்தில் வாழும் மக்களை வெளியேற்றிவிட்டு அல்லது வேறு பகுதிக்கு மறு குடியமர்வு செய்து வனத்தைப் பாதுகாக்க அரசு மட்டத்தில், அதிகார மட்டத்தில் தொடர்ந்து அதற்கான கருத்தாக்கத்தை விதைத்துவருகின்றன. இதன் பின்னணியில் பெருநிறு வனங்களின் வணிக, பொருளாதார அரசியல் நலன்கள் உள்ளன. உலகின் மொத்தப் பரப்பில் 12% நிலம் கார்ப்பரேட் சூழல்வாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வனவிலங்குப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் தொடர்ந்து சுமார் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள், கடந்த நூறு ஆண்டுகளில் தங்கள் வாழ்வாதாரங்களிலிருந்தும் வாழிடங்களிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்பாளர்கள் யார்?
நம் நாட்டில் வனவிலங்குப் பாதுகாப்பு என்ற பெயரில் காடுகளிலிருந்து பழங்குடி மக்களை வெளியேற்ற தொடர்ந்து முயற்சிகள் நடைபெறுகின்றன. உச்ச நீதி மன்றத்தில் கோதவர்மன் திருமல்பாட் என்ற வழக்கு, வனத்தில் சட்டவிரோதமாக மரம் வெட்டப்படுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, காடுகளில் நிகழும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளைத் தடுக்க நீதிமன்றம் அரசைக் கேட்டுக்கொண்டது. ஆனால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பெரும் திட்டங்கள், கட்டுமானங்களால் ஏற்படும் ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்குப் பதிலாகப் பழங்குடி மக்களை ஆக்கிர மிப்பாளர்கள் என்று வெளியேற்ற முயன்றது. இந்திய வனப் பகுதியில் 2,690 வனகிராமங்களும், வனத்தை வாழ்வுக்காகப் பயன்படுத்தும் 1,70,379 கிராமங்களும் உள்ளன. 2002 முதல் 2004 வரை மூன்று லட்சத் துக்கும் மேற்பட்ட பழங்குடிகள் வனத்திலிருந்து வெளி யேற்றப்பட்டனர். சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்களும், வனவாழ் மக்களும் இதனால் பாதிக்கப்படும் நிலை உருவானது. நாடு முழுவதும் இந்த வெளியேற்ற அடக்குமுறைக்கு எதிரான போராட் டத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கொல்லப்பட்டனர்.
பழங்குடி மக்களின் தொடர் போராட்டத்தாலும், பழங்குடிகளுக்கான பல்வேறு ஜனநாயக இயக்கங் களின் தொடர் செயல்பாடுகளாலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அரசின் குறைந்தபட்சச் செயல்திட்டத்தில் பழங்குடி மக்களை வனத்திலிருந்து வெளியேற்றும் செயல் கைவிடப்படுவதாகவும், அந்த மக்களின் ஒத்துழைப்புடன் வனத்தைப் பாதுகாப்பதாகவும் உறுதிகூறியது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் ‘பழங்குடி மக்கள் மற்றும் வனத்தில் வாழ்வோரின் வன உரிமைச் சட்டம் 2006’ஐ இயற்றியது. நெடுங்காலமாகப் பழங்குடி மக்களுக்கு அரசு வரலாற்று அநீதியைச் செய்துள்ளதாகவும் அதனைப் போக்க இந்தச் சட்டத்தை இயற்றியுள்ளதாகவும் இந்தச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ளது. வனத்தில் வாழும் பழங்குடிகள் மற்றும் தொடர்ந்து வனத்தில் மூன்று தலைமுறைகள் (75 ஆண்டுகள்) வாழும் மக்களுக்கு இரண்டு ஹெக்டேர் நிலம் வழங்கச் சட்டம் வழிவகை செய்தது. மேலும், வனத்தின் ஆட்சி அதிகாரம் வனத் துறையினரிடமிருந்து கிராம சபைக்கு மாற்றப்பட்டது. இந்த ஜனநாயகக் கோட்பாட்டை வனத் துறை ஏற்க மறுத்தது. அந்த அதிகாரிகளுடன் கூட்டுசேர்ந்து சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்களும் எதிர்த்தனர். இந்தச் சட்டத்தைத் தடுப்பதற்காகச் சிலர் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். ஆனால், பிற மாநில நீதிமன்றங்களில் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தின.
14 லட்சம் பட்டா
நாடு முழுவதும் நில உரிமை கோரி 37 லட்சத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளைப் பழங்குடி மக்கள் அரசுக்குக் கொடுத்தனர். அதில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட நில உரிமைப் பட்டாக்கள் வன உரிமைச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழக உயர் நீதிமன்றத்தில் இன்னும் வழக்கு நிலுவையில் உள்ளது. வனத் துறையின் மறைமுக எதிர்ப்பினால் அரசு இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த உரிய அக்கறை காட்டவில்லை. வழக்கு நிலுவையில் உள்ள காலத்தில், நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் பழங்குடி மக்களுக்கு நில உரிமை ஆவணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் தமிழக அரசு ஒருவருக்குக்கூட நில உரிமைப் பட்டாவை வன உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க முன்வரவில்லை.
புலிகளின் சரணாலயம் மற்றும் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என சில வனவிலங்கு தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்து கின்றன. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின்படி வனவிலங்கு சரணாலயம் என்ற கோட்பாடே மனிதர் களும் வனவிலங்குகளும் இணைந்து வாழும் ஒரு சூழலை வனத்தில் உருவாக்குவதுதான். மேலும், புலிகள் சரணாலயம் அறிவிக்கப்படுவதற்கு முன், அந்த வனப்பகுதி மக்களின் ஒப்புதலைப் பெறுவதும் அவசியம். இந்த எல்லா விதிகளும் வசதியாக புறக்கணிக் கப்பட்டன. உதாரணமாக, தமிழகத்தில் சத்திய மங்கலம் வனப்பகுதி, புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படு வதற்கு முன்பு, அந்த மலையில் இருந்த 19 பஞ் சாயத்துகள் இந்த சட்டவிரோதச் செயலை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத் தக்கது.
சொந்த மண்ணின் அகதிகள்
பழங்குடி மக்கள் வனத்தை விட்டு நகரத்துக்கு வந்தால், அவர்களுடைய வாழ்வு செழிக்கும் என்று கார்ப்பரேட் சூழலியலாளர்கள் வாதிடுகிறார்கள். நம் நாட்டில் நகரங்களில் நடைபாதை ஓரங்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஏராளமான மக்கள் ஒரு காலத்தில் அவர்களின் கிராமங்களில் சுயமரியாதையுடன் வாழ்ந்தவர்கள்தான். சமூகத்துக்குச் சோறிட்ட விவசாயத்தில் ஈடுபட்டவர்கள் அவர்கள். இன்றோ, அவர்கள் நகரத்தின் அகதிகள். சொந்த மண்ணிலிருந்து வெளியேறுபவர்களின் சோகம் மிகவும் பெரியது. நகரங்களில் வாழ்வதாலேயே அதன் எல்லா வசதிகளும் எல்லா மக்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை.
எல்லா சமயத்திலும் வனவாழ் மக்களின் தலையீடு விலங்குகளுக்கு எதிராக இருந்ததில்லை. பல சமயம் அந்தத் தலையீடு நன்மையையும் செய்துள்ளது. வனவிலங்குகள் பாதுகாப்புக்குப் பழங்குடி மக்களின் பாரம்பரிய அறிவு முக்கியமானது. ராஜஸ்தானின் கியொலாதியோ தேசியப் பூங்காவில் புற்களைப் பிடுங்கவும் கால்நடைகளை மேய்க்கவும் உள்ளூர்வாசிகள் அனுமதிக்கப்பட்டபோது, அதனால் தேங்கும் நீரின் தடங்களைப் பார்த்து வலசைவந்த சைபீரிய நாரைகள் அங்கே வந்தன. சூழல்வாதிகளின் கானுயிர் பாதுகாப்பு முயற்சியால் இந்தச் செயல் களுக்குத் தடைவிதித்த பின், அங்கு புற்கள் புதராக வளர்ந்தபோது, அந்தப் பறவைகள் வராமல் போனது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இயற்கையின் வாழ்வாதாரங்களிலிருந்து அதன் குழந்தைகளை வெளியேற்றும் ஒரு பெரும் அரசியல் சதியை நாம் எதிர்கொண்டுவருகிறோம். இதன் பின்னே சர்வதேசப் பொருளாதார அரசியல் நலன் உள்ளது. காடுகளிலிருந்து பழங்குடி மக்களையும், கடற்கரையிலிருந்து மீனவர்களையும், விவசாய நிலங்களிலிருந்து விவசாயிகளையும், எல்லா எளிய மக்களையும் அவர்களின் தாய் மண்ணிலிருந்து அப்புறப்படுத்தும் சதியின் பின்னே வளர்ச்சித் திட்டம், பொருளாதாரக் கொள்கை, பாதுகாப்பு, வன விலங்குப் பாதுகாப்பு போன்ற சொல்லாடல்கள் சொல்லப்படுகின்றன. வரலாற்று அநீதி என்னென்ன பெயர்களில் தொடர்கிறது பாருங்கள்!
- ச. பாலமுருகன், ‘சோளகர் தொட்டி’ நாவலின் ஆசிரியர், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT