Published : 23 Mar 2018 09:35 AM
Last Updated : 23 Mar 2018 09:35 AM

நீர் வளத்தைப் பெருக்க இந்தியா என்ன செய்ய வேண்டும்?

நீ

ரின் மகத்துவத்தையும், பொருளாதார வளா்ச்சியில் அதன் முக்கியப் பங்கை உணர்த்தும்வகையிலும், ஐ.நா. சபையில் எடுத்த முடிவின்படி, உலக தண்ணீர் தினம் 1993 முதல் ஆண்டுதோறும் மார்ச் 22-ல் நீர் தொடா்பான ஒரு தலைப்பைத் தெரிவுசெய்து கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான உலக தண்ணீர் தினத்தின் தலைப்பு, இயற்கையுடன் சேர்ந்து நீர் வளத்தைப் பெருக்குவது பற்றியதாகும்.

உலக சுகாதார அமைப்பின் 2012-ம் ஆண்டு அறிக்கை, ஏறக்குறைய 9.7 கோடி இந்திய மக்கள், பாதுகாப்பான குடிநீரின்றி அவதிப்படுவதாகக் கூறியுள்ளது. மத்திய நீர்வள அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரப்படி, மொத்தமாக ஓா் ஆண்டில் பயன்படுத்தக்கூடிய நிகர நீர் அளவு 1,121 மில்லியன் கியூபிக் மீட்டா்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மாறிவரும் மக்களின் வாழ்க்கை முறையாலும், விவசாயம் மற்றும் தொழில்துறை வளா்ச்சி யாலும், வரும் 2050 வாக்கில் மொத்த நீரின் தேவை 1,447 மில்லியன் கீயூபிக் மீட்டா்களாக உயர்ந்து, பெரியஅளவில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த மொத்தப் புள்ளிவிவரங்களைக் கொண்டு, தற்போது நம் நாட்டில் தண்ணீர்ப் பற்றாக்குறை இல்லை எனக் கருதிவிடக் கூடாது. எந்த நாட்டில் ஒரு ஆண்டில் தனி நபருக்குக் கிடைக்கின்ற நீரினளவு 1,700 கன மீட்டருக்குக் குறைவாக உள்ளதோ அங்கு நீர்ப்பஞ்சம் உள்ளதாகக் கூறலாம் என நீர்ப் பஞ்சம் பற்றிய அளவீடுகள் கூறுகின்றன. இந்தியாவில் மொத்தமாக 20 பெரிய ஆற்றுப்படுகைகள் உள்ளதாக மத்திய நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய நீர்க் குழு வகைப்படுத்தியிருக்கிறது. இவற்றில் வெறும் 9 ஆற்றுப்படுகைகளில் வசிப்பவர் கள் மட்டுமே நீர்ப் பஞ்சத்தைத் தற்போது சந்திக்காமல் வாழ்கிறார்கள். அதாவது, மொத்த மக்கள் தொகையில், தற்போது ஏறக்குறைய 76% மக்கள் கடுமையான நீர்ப்பஞ்சத்தில் வாழ்கிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை.

தண்ணீர்ப் பற்றாக்குறை என்ன செய்யும்?

தனி நபருக்குக் கிடைக்கின்ற நீரின் அளவுக்கும் ஒரு நாட்டின் வறுமையின் அளவுக்கும் நெருங்கிய தொடா்பு இருக்கிறது. பெண்கள் நீரைத் தேடி அலைவதாலும், பல மணி நேரம் காத்துக்கிடப்பதாலும் அவர்களின் உழைக்கும் நேரம் வீணடிக்கப்பட்டு, வருமானக் குறைவு ஏற்படுகிறது. நீரைத் தேடி அலைவதாலும், காத்துக்கிடப்பதாலும் ஏறக்குறைய 15 கோடிப் பெண்களின் வேலை நாட்கள் ஓா் ஆண்டில் மட்டும் வீணடிக்கப்படுவதாகவும், அதனால் ரூ. 1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கியால் 2016-ல் வெளியிடப்பட்டுள்ள ‘அதிகரிப்பும் பற்றாக்குறையும்: பருவநிலை மாற்றம், நீர் மற்றும் பொருளாதாரம்’ என்ற அறிக்கையில் இந்தியா உள்ளிட்ட நீர்ப் பற்றாக்குறை உள்ள நாடு கள் வரும் 2050 வாக்கில் ஏறக்குறைய 6% அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது. அதிகரித்துவரும் மக்கள்தொகை, தொழில்துறை விரிவாக்கம் மற்றும் நகா்ப்புற வளா்ச்சி ஆகிய காரணங்களால் தண்ணீருக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீராதாரங்கள் மேம்பாட்டுக் கான தேசிய ஆணையம் 2000-ம் ஆண்டுக்கும் 2050-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், நீா்த்தேவை 128% அளவுக்கு மொத்தமாக அதிகரிக்கக் கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில், வீட்டு உபயோகத்துக்கான தேவை 143%ம், தொழில்துறைக் கான தேவை 688%ம், விவசாயப் பயன்பாடு 98%ம் அதிகரிக்கும் எனக் கணித்துள்ளது. அதாவது, வரும் 2050 வாக்கில் நீர்த் தேவை மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும் எனக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

பற்றாக்குறைக்கு என்ன காரணம்?

ஒருபக்கம் நீர்த் தேவை அதிவேகமாக வளா்ந்து வரும் வேளையில், நீர் இருப்பைச் செம்மைப்படுத்துவதற்கும், புதிய நீராதாரங்களைப் பெருக்குவதற்கு மான வாய்ப்புகள் பல்வேறு காரணங்களால் குறைந்துகொண்டே வருகின்றன. முதலாவதாக, நீர் வரத்துப் பகுதிகளில் ஏற்படும் மண் அரிப்பால், அணைகளில் வண்டல் மண் சேர்ந்து அதன் கொள்ளளவு தொடா்ந்து குறைந்துவருகிறது.

இரண்டாவதாக, தென்னிந்தியாவின் உயிர்நாடி யாக இருக்கின்ற சிறிய நீராதாரங்களான குளங்கள், ஏரிகள், குட்டைகளைச் சரிவரப் பராமரிக்காத காரணத்தால், இவற்றின் மூலம் கிடைக்கும் நீர் தொடர்ந்து குறைகிறது. மத்திய அரசால் வெளியிடப்படும் சிறு பாசனக் கணக்கெடுப்பு, இந்தியாவில் மொத்தமாக 6.42 லட்சம் குளங்கள் மற்றும் சிறிய நீராதாரங்கள் உள்ளதாகக் கூறுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய 41,127 குளங்கள் உள்ளன. ஆனால், நாடாளுமன்ற நீர்வள நிலைக்குழு தனது 16-வது அறிக்கையில், பெரும்பாலான சிறிய நீர்நிலைகள் அரசுத் துறை தொடா்புடைய அமைப்புகளால் தொடா்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவருவதால், இவற்றின் மூலம் கிடைக்கும் நீரின் அளவு தொடர்ந்து குறைவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

மூன்றாவதாக, ‘ஐ.பி.சி.சி.’ என்று அழைக்கப்படுகின்ற உலகப் பருவ நிலை கண்டறியும் அமைப்பு கூறுவதுபோல, பருவ நிலை வேகமாக மாறி வருகின்ற காரணத்தால், மழை பொழியும் நாட்களும் அதன் அளவும் கணிசமாகச் குறையக் கூடும். இந்தியாவின் பல மாநிலங்களின் பருவ நிலை மாற்றத்தின் காரண மாக மழைபொழியும் நாட்கள் குறைந்துள்ளன என்பதை இந்திய வானிலை மையத்தால் வெளியிடப்படும் மொத்த மழை பெய்யும் நாட்களின் புள்ளிவிவரங்கள் உறுதிசெய்கின்றன.

சவால்களை எப்படிச் சமாளிப்பது?

இந்தியாவில் மொத்த நீரில் ஏறக்குறைய 85% விவசாயத் துறையால் பயன்படுத்தப்படுகிறது. நவீன நீர்ப்பாசன உத்திகளான சொட்டு மற்றும் தெளிப்பு முறைகளின் மூலமாகக் குறைந்தபட்சம் 50% நீரைச் சேமிப்பது மட்டுமல்லாமல், பயிர்களின் உற்பத்தியை 40-60% வரை உயர்த்த முடியும் என ஆந்திர முதலமைச்சா் சந்திரபாபு தலைமையில் 2004-ல் அமைக்கப்பட்ட குழுவும் மற்றும் 2006-ல் வேளாண் அறிஞா் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் உறுதிசெய்துள்ளன.

எனவே, இந்த நவீன நீர்ப்பாசனத்துக்கு உகந்ததாகக் கண்டறியப்பட்டுள்ள 70 மில்லியன் ஹெக்டோ் சாகுபடிப் பரப்பை இம்முறை கள் மூலமாகக் கொண்டுவர அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதேபோல, தொழிற்சாலை மற்றும் வீட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்தப்படும் நீரைத் திறம்படப் பயன்படுத்தும் வகையில், நீர் மீட்டா் பொருத்தி சரியான விலையை நிர்ணயிக்க நடவடிக்கை தேவைப்படுகிறது.

தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் மூலம் அதிகமாக வெளியிடப்படும் மாசுகலந்த கார்பன்டை ஆக்ஸைடால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. மழையளவில் மாற்றம் ஏற்படுவதற்கு இது ஒரு முக்கியக் காரணமாகும். இதனைச் சரிசெய்வதற்குப் புதிய மரங்களை நட்டுக் காடுகளை உருவாக்கி பச்சை அகக்கட்டுமானங்களை அதிகரிப்பது அவசிய மாகிறது.

சதுப்பு நிலங்கள் மற்றும் வெள்ளத்தைத் தாங்கக்கூடிய இடங்களைப் பாதுகாத்து, வேகமாகக் குறைந்துவரும் நிலத்தடி நீரை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சிறிய நீராதாரங்களையும் குளங் களையும் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுவித்து, துார்வாரி, நீரைச் சேமிப்பதால், சுற்றுச்சூழலோடு பல்லுயிர்களையும் பாதுகாப்பதோடு விவசாயம் மற்றும் வீடு களுக்கான நீர்த் தேவைகளைக் குறைந்த செலவில் பூர்த்திசெய்ய முடியும்.

- அ.நாராயணமூா்த்தி,

பொருளியல் மற்றும் ஊரகவளர்ச்சித் துறைப் பேராசிரியர்,

தொடர்புக்கு: narayana64@gmail.com

மார்ச் 22 உலக தண்ணீர் தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x