Published : 24 May 2019 08:35 AM
Last Updated : 24 May 2019 08:35 AM

ஆட்டம் ஆரம்பம்

இந்தத் தேர்தல் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் பல கேள்விகளுக்கான பதில்களை எதிர்நோக்கியிருந்தது. நம் காலத்தில், தமிழ்நாட்டில் இரு பெரும் ஆளுமைகளாக விளங்கிய கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் மறைவுக்குப் பின், தமிழ்நாட்டு மக்கள் யாரைத் தன்னுடைய அடுத்த நம்பிக்கையாகப் பார்க்கிறார்கள் என்ற கேள்வி அதில் பிரதானமான ஒன்று. திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் 37/38 தொகுதிகளையும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 13/22 தொகுதிகளையும் வழங்கியிருப்பதன் மூலம் மக்கள் தங்கள் பதிலைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்ற இந்த ஓராண்டு காலத்தில் கட்சியைத் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஸ்டாலின், இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம் மக்கள் தலைவராகவும் உயர்ந்திருக்கிறார்.

இந்தத் தேர்தலில் ஸ்டாலின் வகுத்த வியூகமும் அதில் கிடைத்திருக்கும் வெற்றியும் ஒட்டுமொத்த தேசத்தையும் தமிழகத்தை வியப்போடு திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. பாஜகவுக்கு மாற்றாக இவ்வளவு உறுதியாக ஒரு மாநிலக் கட்சிக்குத் தமிழக மக்கள் ஆதரவு அளித்திருக்கிறார்கள். கடந்த முறை 37 தொகுதிகளை இப்படி அதிமுகவுக்கு மக்கள் கொடுத்தபோது, திமுக ஒரு தொகுதியில்கூட வெல்லவில்லை. இம்முறை அதே 37 தொகுதிகளை திமுக கூட்டணிக்குக் கொடுத்திருக்கிறார்கள். திமுக அது போட்டியிட்ட 24 தொகுதிகளிலும் வென்றிருக்கிறது. ஆம், பூஜ்ஜியத்திலிருந்துதான் இவ்வளவு பெரிய வெற்றி நோக்கி திமுக கூட்டணியைக் கொண்டுவந்திருக்கிறார் ஸ்டாலின். தற்போதைக்கு, இந்தியாவைத் திரும்பிப்பார்க்க வைத்த தென்னகத்தின் முக்கியமான தலைவராக உருவெடுத்திருக்கிறார்.

ஐம்பதாண்டு பொது வாழ்க்கை, கால் நூற்றாண்டு சட்டமன்றப் பணி, பல ஆண்டுகளாகவே திமுகவில் கருணாநிதிக்கு அடுத்த இடம் என்றெல்லாம் பயணித்திருந்தாலும், கட்சியின் தலைவராக முன்னின்று ஸ்டாலின் எதிர்கொண்ட முதல் தேர்தல் இதுவே. அடுத்தடுத்த மூன்று பெரிய தேர்தல் தோல்விகளைச் சந்தித்திருந்த திமுகவுக்கு இது ரொம்பவே முக்கியமான தேர்தல். நாடு முழுக்கக் கிளை விரித்துவரும் பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகளை எதிர்கொண்டாலும், சித்தாந்தரீதியாக அது முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் கட்சிகளில் ஒன்று திமுக. இதைச் சரியாகவே புரிந்துகொண்ட ஸ்டாலின், தொடக்கத்திலேயே பாஜக எதிர்ப்புக் கொள்கையை உறுதியாக வெளிப்படுத்தினார். மாநிலத்தில் திமுகவைப் பிரதான இடம் நோக்கி நகர்த்தும் வகையில், கேரளத்திலும் வங்கத்திலும் எதிரெதிரே நிற்கும் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட்டுகளை திமுக தலைமையின் கீழ் ஓரணியில் கொண்டுவந்தார்.

தேர்தலில் ஸ்டாலின் கையாண்ட முக்கியமான வியூகம், தோழமைக் கட்சிகளின் பேரச் சக்தி மீறியும் தொகுதிகளை அவர் ஒதுக்கியது. காங்கிரஸுக்கு 10 இடங்களை திமுக ஒதுக்கியபோது, அரசியல் வட்டாரமே அதிர்ச்சிக்குத்தான் ஆளானது. அடுத்தடுத்து, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகியவற்றுக்கு இரு தொகுதிகளை அவர் ஒதுக்கியதும் அப்படியே. தோழமைக் கட்சிகள் மனம் கோணக் கூடாது என்று ஸ்டாலின் எண்ணினார். அதையே சாக்காக்கி சட்டமன்ற இடைத்தேர்தலில் முழு இடங்களிலும் திமுகவே நிற்க வழிவகுத்தார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொண்ட பிறகு திமுகவின் வெற்றி எளிதாகிவிட்டது. இரு அரசுகளுக்கும் எதிராக தமிழ்நாட்டில் நிலவிய அதிருப்தியைத் தனதாக்கிக்கொண்டிருக்கிறார் அவர்.

நாடு முழுவதும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியிருக்கும் தொகுதிகளோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மட்டுமே 37 இடங்களைக் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு சாதனைதான். ஆனால், மக்களவைத் தேர்தலில் வாகை சூடிய திமுக, இடைத்தேர்தலில் கொஞ்சம் பின்தங்கிவிட்டிருக்கிறது. ஏற்கெனவே தமிழக சட்டமன்றத்தில் திமுக கூட்டணிக்கு 98 இடங்கள் இருக்கும்நிலையில் 20 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றால், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ அது வழிவகுத்திருக்கும். ஆனால், 13 இடங்களில் மட்டுமே அது வென்றிருக்கிறது. இதிலும் ஒரு சாதகம் இருக்கிறது. 22 தொகுதிகளிலும் திமுக வென்றிருந்தாலும் காங்கிரஸின் 9 இடங்களின் உதவியுடனும் வெறும் ஒரு தொகுதி பெரும்பான்மையுடனும்தான் நிர்வாகத்தை நடத்த வேண்டியிருக்கும். திமுக விரும்பினாலும், பெரிய மாற்றங்கள், சீர்திருத்தங்கள் எதையும் அந்தச் சூழலில் செய்ய முடியாது. ஆனால், இப்போது கிடைத்திருக்கும் குறிப்பிட்ட அளவிலான வெற்றியானது திமுகவை மேலும் வலிய எதிர்க்கட்சி ஆக்கியிருக்கிறது. மேலும் பலத்தோடு சட்டமன்றத்தில் அது பணியாற்றலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x