Published : 07 May 2019 07:55 AM
Last Updated : 07 May 2019 07:55 AM
கடும் வெயிலுக்குப் பழக்கமான சென்னைவாசிகளே பகலில் பதங்கமாகி, அலுவலகக் குளிர்சாதன வசதியிலும் மாலைக் கடற்காற்றிலும்தான் தங்களை மீண்டும் சேகரித்துக்கொள்ளும் நாட்கள் இவை. இப்படிப்பட்ட ஒரு நாளில் முட்டுக்காடு முதலைப் பண்ணைக்கு ஏன் சென்றேன்? வெயிலுக்கு எதிராகப் போரிடும் ஏதோ ஒன்றுதான், ‘மெட்ராஸ் முதலைப் பண்ணை’யில் தண்ணீரில் இருக்கும் முதலைகளை நோக்கி ஈர்த்திருக்க வேண்டும். சென்னையிலிருந்து 40 கிமீ தொலைவிலுள்ள இப்பண்ணை ஆசியாவின் முதல் முதலை இனப்பெருக்க மையம். தோலுக்காகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் முதலைகள் வேட்டையாடப்படத் தொடங்கிய நிலையில், அருகிவந்த முதலை இனங்களைப் பாதுகாக்கவும் அவைகுறித்து ஆராய்வதற்காகவும் தொடங்கப்பட்டது இது.
குழந்தைகளை ஈர்க்கும் வண்ணங்கள், சித்திரங்களுடன் வழிகாட்டுத் தகவல் பலகைகள், அடிக்கத் தொடங்கிவிட்ட வெயிலையும் தாண்டிப் பசிய மரங்களின் நிழலும் நீரின் சத்தமும் மெத்தென்ற மணலும் ஆறுதலைத் தருகின்றன. அழியாமைக்கு அருகே இருப்பவை கற்கள்; அந்தக் கற்களின் முதல் குழந்தைகள் நாங்கள் என்று முதலைகளும் ஆமைகளும் என்னிடம் கோஷித்ததுபோல இருந்தது. ஆமாம்! அவை தண்ணீருக்கு வெளியே புராதனமாகக் கற்களுக்கு அருகே, கற்களைப் போல கல்லோடு கல்லாக இந்தக் கோடையில் சலித்து உலர்ந்து ஒன்றன் மேல் ஒன்றாகக் கரடுமுரடாக லட்சம் ஆண்டுகள் போட்ட திரைக்குப் பின்னால் படர்ந்திருக்கின்றன.
நாம் ஊர்வனவாக இருந்ததன் தொல்நினைவு
முதலைகளின் கொட்டாவியோ, நீர் - நில நகர்வோ எதுவும் மனிதர்கள் சூழ இருக்கும் சகவாசப் பிரக்ஞையிலிருந்து வருவதுபோலத் தெரியவில்லை. மனிதனிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன முதலைகள். மனிதனை நோக்கி எழுந்துவர ஆரம்பித்தபோதுதான் முதலைகளுக்குக் கால்கள் நீண்டிருக்க வேண்டும். முரட்டுத்தோற்றம் கொண்ட செதில்கள் மறைந்திருக்க வேண்டும். பிறகு, கண்களுக்கு அழகான குதிரைகளாக, செல்ல நாய்களாக அவற்றிலிருந்து பரிணாமப் பயணம் பெருகியிருக்க வேண்டும்.
கொள்ளிடத்து முதலைகளைப் பற்றி கவிஞர் ஞானக்கூத்தன் எழுதியதுபோல ஒன்றிரண்டு நான்கைந்து பத்துப் பத்தாய் நூறு நூறாக அவை நான் பார்க்கும் சிறு குளங்களில் மட்டுமல்ல; எனக்குள் எங்கேயோ இருக்கும் ஊர்வனவாக இருந்ததின் தொல்நினைவுக்குள்ளும் ஊர்கின்றன. ஊர்வன விட்டுச்சென்ற உணர்வுப் பகுதி இன்னும் நம்மிடம் மூளையில் எஞ்சியிருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். கொந்தளிப்பு, ஆதிக்கம் செலுத்துதல், பாலியல் வேட்கை, பீடிப்பு, வழிபாட்டுணர்வு, அச்சம், ஒப்படைப்பு, பேராசை போன்ற அடிப்படை உணர்வுகளின் மீது அவை ஊர்கின்றன. பறவையாய்ப் பாம்பாகி என்று மாணிக்கவாசகர் அடுக்கும் காரணம் துலங்கத் தொடங்குகிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று இரையளிப்பவை - இருப்பதற்கும் கடப்பதற்கான கனவுக்கும்.
மணற்கரையின் நடுவே பாசி பூத்த பச்சை நிற நீருக்குள் நகராமல் இருக்கும்போது முதலைகள் நம் கண்ணுக்கு முன் தோன்றாமலேயேதான் இருக்கின்றன. இரவு நேரத்திலும் இரையைச் சாப்பிடும்போதும் அவற்றின் நகர்வும் வேகமும் ஆச்சரியப்படும்படி இருக்குமாம். இரவில் அவை மணல் கரைகளில் காலால் எழுதிய கோடுகள் குறுக்கும் நெடுக்குமாகத் தெரிந்தன. அதைத்தான் ஞானக்கூத்தன் மருமமொழித் தீர்மானம் என்கிறார். இன்னும் அது பெயர்க்கப்படாமல் உள்ளது. இரவில் முதலைகளின் புகைப்படத்தைப் பார்த்தேன். நீரில் கார்த்திகை தீபங்கள் எரிவது போன்ற கோலாகலம் அவற்றின் கண்களில் தெரிகின்றன.
முதலையின் முதுகில் ஆமை
மகர் என்ற சதுப்பு நிலத்து முதலை நீருக்குள் கிடக்கிறது. அதன் முதுகில் கூர்ந்து பார்த்தால் ஒரு ஆமை உட்கார்ந்திருக்கிறது. ஆமையும் முதலையும் ஓரிடத்தில் பரஸ்பரம் ஊறுசெய்யாமல் சக வாழ்வை அனுசரிக்கக்கூடிய உயிர்கள். முதலைக்குப் பக்கவாட்டில் வாழ்வு இருக்கிறதெனில், ஆமையோ தலையை நீட்டினால் வானம் பார்க்கிறது. சிறு கற்களும் தெரியும் தெள்ளத்தெளிந்த தண்ணீருக்குள் நீட்டிக் கிடந்த கரியால் எனும் முதலையின் மேல் ஒரு ஆமை நீரின் மேல்பரப்புக்குப் பறந்துகொண்டிருந்தது. ஐந்தவித்தானே!
முதலைப் பண்ணைக்குள் நுழையும்போது நீர்த்தொட்டியில் நுட்பமாக நெசவுசெய்யப்பட்ட பட்டுப்புடவையைப் போல இருந்த பச்சை நிறப் பாம்பைப் பார்த்து ஒரு குட்டிப்பெண் ‘இது உண்மையா?’ என்று கேட்டாள். நைல் முதலைகள் இருக்கும் பகுதியில் தோழர் தோழிகளோடு வந்த கல்லூரி மாணவி ஒருத்தி, ‘இது பொம்மையா, பொம்மையா?’ என்றாள். அவர்கள் உண்மையைத்தான் அனுமதிச் சீட்டு பெற்றுப் பார்க்க வந்திருக்கிறார்கள். பொம்மையா, உண்மையா என்று கேட்டுக்கொண்டே நிஜத்தை அனுமதித்துக்கொண்டுமிருக்கிறார்கள். யதார்த்தம் விழுங்கத் தொடங்கும் பருவத்தில் அந்த யுவதி தன் தோழமைகளை நோக்கி ‘பொம்மையா, பொம்மையா?’ என்று கேட்கிறாள். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை ஆண் பார்வையாளர்கள் அப்படிக் கேட்பதைப் பார்க்க முடியவே இல்லை.
பொன்போல பராமரிக்கப்படும் முதலைகள்
அர்ப்பணிப்பு இருந்தால் எத்தனை தொலைவில் இருந்தும் எத்தனை தொலைவிலுள்ளதையும் குழந்தைகளாக ஆக்கிக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த முதலைப் பண்ணையைப் பராமரித்துப் பாதுகாத்துவரும் ரோமுலஸ் விட்டேகர் ஒரு உதாரணம். ஈராயிரம் முதலைகளும் இன்னும் சில ஊர்வனவும் பொன்போல இங்கு பராமரிக்கப்படுகின்றன.
இந்தியாவின் முதல் பெண் ஊர்வன ஆராய்ச்சியாளரும் 28 வயதில் காரணம் புரியாத நிலையில் அவர் நேசித்த வனத்திலேயே இறந்துபோனவருமான ஜே.விஜயாவின் நினைவாக இங்கே ஆமைகள் வங்கிக்கு அருகிலேயே ஒரு நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது. பங்குனி ஆமைகள் என்று சொல்லப்படும் ஆலிவ் ரிட்லியைப் பாதுகாப்பதற்கான முன்னோடி முயற்சிகளை எடுத்தவர் அவர். நினைவுத் தூண் மேல் கவிதை என்று தோன்றிய வாசகங்கள் என்னைக் கவர்ந்தன. ‘களைப்பூட்டும் கடலைவிட்டு வெளியேறி/ கரையில் உறைவிடம் கொள்ளட்டும்/ மண்ணில் புகலிடம் இல்லையென்றால்/ குறைந்தபட்சம்/ காட்டுச்சுனையின் நீரைப் பருகி, பசிய மூலிகைகளைப் பறித்துண்ணட்டும்.”
தனது சிறுவயதிலேயே இயற்கையுடன் நெருங்கி வாழத் தொடங்கிய வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைதான் அந்த நினைவுத்தூணில் எடுத்தாளப்பட்டுள்ளது. இயற்கையை நோக்கி, அடிப்படைகளை நோக்கிச் செல்பவர்கள், மெய்யான புகலிடத்தைத் தேடும் அனைத்துத் திணையினரும் விஜயாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த வாசகங்களில் தங்களை அடையாளம் காண முடியும். தொடர்புபடுத்திக்கொள்வது மனிதர்களைத் தவிர வேறெதற்கும் இன்னும் சாத்தியமாகவில்லை இல்லையா? அதனால்தானே, முதலை நம்முடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவில்லை.
தொடர்புக்கு:
sankararamasubramanian.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT