Published : 15 May 2019 08:18 AM
Last Updated : 15 May 2019 08:18 AM
மாநில வரலாறு
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி மக்கள் இமாசல பிரதேசத்தில் குடியேறியதாகத் தெரிகிறது. அதற்குப் பிறகு மங்கோலியர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது. மெளரியப் பேரரசின் ஆதிக்கம் அப்போது இமாசல பிரதேசம் வரை நீண்டிருந்தது. பின்னர் ஹர்ஷர், தாக்கூர், ராணாக்கள் ஆகியோர் இந்த மாநிலத்தை ஆண்டார்கள். அதன் பிறகு, இந்த மாநிலம் சுல்தான்கள், முகலாயர்கள் படையெடுப்புக்கு ஆளானது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு எதிராக அதிகம் எதிர்ப்பை வெளிப்படுத்தாத மாநிலம் இது.
30-க்கும் மேற்பட்ட சிறு பகுதிகளை ஒன்றுசேர்த்து 1948-ல் இந்த மாநிலப் பரப்பு உருவாக்கப்பட்டது. எனினும், 1971-ல்தான் இமாசல பிரதேசம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
புவியியல் அமைப்பு
வட இந்தியாவில் உள்ள இமாசல பிரதேசம், நாட்டின் 18-வது பெரிய மாநிலம். பரப்பளவு 55,673 சதுர கிமீ. (தமிழகத்தின் பரப்பளவு 1.30 லட்சம் சதுர கிமீ). 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இமாசல பிரதேசத்தின் மக்கள்தொகை 68.64 லட்சம். மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 123. (தமிழகத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 555).
சமூகங்கள்
இந்துக்கள் 95.17%, முஸ்லிம்கள் 2.18%, சீக்கியர்கள் 1.16%, பௌத்தம் 1.15%, கிறிஸ்தவர்கள் 0.18%. உட்பிரிவுகளில் பட்டியலின சமூகத்தினரின் எண்ணிக்கை 25.19%, பழங்குடியினர் 5.71%. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 13.52%. ராஜபுத்திரர்கள் 32.72%, பிராமணர்கள் 18%, இதர சமூகங்கள் 4.83%. பிராமணர்களும் ராஜபுத்திரர்களும் இணைந்து முற்பட்ட வகுப்பினர்கள் 50.72% இருப்பதால் அரசியலிலிருந்து அனைத்துத் தளங்களிலும் இந்த இரு சமூகங்களின் ஆதிக்கம் மிகவும் அதிகம்.
ஆறுகள்
சிந்து நதியின் முக்கியமான துணையாறுகளில் சினாப், ராவி, பியாஸ் ஆகியவை இமாசல பிரதேசத்தில் உள்ள இமயமலைப் பகுதியிலேயே உருவாகின்றன. திபெத்தில் உருவாகும் சத்லஜ் இமாசல பிரதேசத்தின் வழியே பாய்கிறது. கங்கையின் மிக முக்கியமான துணையாறுகளில் இரண்டாவது நீண்ட ஆறான யமுனையும் இமாசல பிரதேசத்தில் உள்ள இமயமலைப் பகுதியிலேயே உருவாகிறது.
காடுகள்
37,948 சதுர கிமீ பரப்பளவில் காடுகள் காணப்படுகின்றன. இது இம்மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் 68.16%. இமாசல பிரதேசத்தின் கழுத்தைப் போல இமயமலை செல்கிறது. எனவே, காடுகளின் ஆதிக்கம் இங்கு அதிகம். ஊசியிலைக் காடுகளும் அகன்றயிலைக் காடுகளும் இங்கே அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தியா முழுவதிலும் காணப்படும் 45 ஆயிரம் தாவர வகைகளில் இமாசல பிரதேசத்தில் மட்டும் 3,265 (7.32%) வகைகள் காணப்படுகின்றன. இவற்றில் 95 தாவர வகைகள் இமாசல பிரதேசத்தில் மட்டுமே காணப்படுபவை. இம்மாநிலத்தில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயங்களின் எண்ணிக்கை 26. இங்கு அமைந்துள்ள தேசியப் பூங்காக்களின் எண்ணிக்கை 5.
நீராதாரம்
சிந்து – கங்கை ஆகியவற்றின் துணையாறுகளாலும் கிளையாறுகளாலும் நிரம்பிய இமாசல பிரதேசத்தின் கணிசமான பகுதிகள் நீர் வளம் மிக்கவை. இமயமலையின் பனியாறுகளிடமிருந்து இந்த ஆறுகள் தங்கள் நீராதாரத்தைப் பெறுகின்றன. பைரா சியுல் அணை, பாஸி அணை, பாக்ரா அணை, சமீரா அணைகள் உள்ளிட்ட 16 அணைகள் இங்கு உள்ளன. அதிகபட்சமான அணைகள் ராவி ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கனிம வளம்
இமாசல பிரதேசத்தில் கிட்டத்தட்ட 37 கனிமங்கள் கிடைப்பதாகத் தெரிகிறது. சுண்ணாம்புக்கல், பாரைட், ஷேல், பாறை உப்பு, சிலிக்கா மண், மேக்னஸைட், ஜிப்ஸம், குவார்ட்ஸைட் உள்ளிட்ட கனிமங்கள் இவற்றில் பிரதானமானவை.
பொருளாதாரம்
2017-18-ல் இமாசல பிரதேசத்தின் ஜிடிபி சுமார் ரூ.1.36 லட்சம் கோடி. அதே ஆண்டுக்கான தனிநபர் வருமானம் ரூ.1,58,462. 2018-ம் ஆண்டைப் பொறுத்தவரை இந்திய அளவில் ஜிடிபிக்கான பங்களிப்பில் இமாசல பிரதேசத்தின் இடம் 22. கிட்டத்தட்ட 70% மக்கள் தங்கள் வேலைவாய்ப்புக்கு விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். மனிதவள மேம்பாட்டைப் பொறுத்தவரை கேரளத்துக்கு அடுத்த இடத்தில் இந்த மாநிலம் இருக்கிறது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக சுற்றுலா இங்கே பெரிய வருமானத்தை ஈட்டித்தரும் தொழிலாக இருக்கிறது. சிம்லா, குலு, மணாலி, தர்மசாலா போன்ற இடங்களுக்கு வெளிநாட்டுப் பயணிகளும் உள்நாட்டுப் பயணிகளும் வந்து குவிவதால் இம்மாநிலத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கியமான பங்கு வகிக்கிறது.
அரசியல் சூழல்
நெருக்கடிநிலைக்கு முன்பு வரையிலும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் சரி, சட்டமன்றத் தேர்தல்களிலும் சரி காங்கிரஸே ஆதிக்கம் செலுத்திவந்தது. 1977 தேர்தல்களில் காங்கிரஸுக்குப் பலத்த அடியைக் கொடுத்தது ஜனதா. ஆனால், ஜனதா கட்சியின் வெற்றி அந்தத் தேர்தலோடு முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் அதற்குப் பிறகு நாடாளுமன்றம், சட்டமன்றம் என்று இரண்டு வகைகளிலும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துவருகிறது. 1989-லிருந்து இமாசல பிரதேசத்தில் பாஜக எழுச்சிபெற்றுவந்து தற்போது அந்த மாநிலத்தில் நான்காவது முறையாக ஆட்சியையும் பிடித்துள்ளது.
முக்கியப் பிரச்சினைகள்
இமயமலைச் சாரலில் இயற்கை வளங்களுடன் இருந்தாலும் அந்த வளங்களுக்கேற்ப வளர்ச்சியைக் கொண்டிராத மாநிலம் இமாசல பிரதேசம். இந்த மாநிலத்தில் அதிகம் தொழிற்சாலைகள் இல்லையென்றாலும் உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் தாக்கம் இங்கும் தெரிகிறது. சுற்றுலாத் துறையின் காரணமாக சிம்லா உள்ளிட்ட நகரங்களில் சமீபத்தில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மலைப்பாங்கான மாநிலம் என்பதால் நிலச்சரிவும் இங்குள்ளவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சினைகளுள் ஒன்று. விவசாயம், சுற்றுலா தவிர பிரதானத் தொழில்கள் இல்லாததால் இந்த மாநிலம் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT