Published : 20 May 2019 08:12 AM
Last Updated : 20 May 2019 08:12 AM
ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான கடைசி வாய்ப்பு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்தான். மிகக் குறைவான கல்விக் கட்டணத்திலும் உதவித்தொகை பெற்றும் ஏதாவதொரு அரசு அல்லது அரசு உதவிபெறும் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்துவிடலாம். அதன் பிறகு அந்த மாணவர் தனது ஆர்வத்தையும் முயற்சியையும் துணையாகக் கொண்டு அடுத்தடுத்து கல்வித் துறையின் உயரங்களை எட்டிவிட முடியும். குறைவான கட்டணம் விதிப்பதால்தான் இன்னமும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் அடியெடுத்துவைக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலிப்பது, அந்த மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளைக் கொன்றழிக்கும் செயல்.
எனது முதுநிலைத் தத்துவப் பட்டப்படிப்பின்போது அரசு நிர்ணயித்திருந்த செமஸ்டர் கட்டணம் ரூ.450-யை மூன்றாவது செமஸ்டரிலிருந்து ரூ.650-ஆக உயர்த்தியது கல்லூரி நிர்வாகம். ‘ஏன் கூடுதலாக 200 ரூபாய்?’ என்று சாதாரணமாக எழுந்த கேள்வி எல்லா மாணவர்கள் மத்தியிலும் பரவியது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டோம். வகுப்புகளைப் புறக்கணிக்காமலேயே போராட முடிவெடுத்தோம். போராட்டத்தின் எட்டாவது நாள் எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நிர்வாகம்.
கல்லூரியின் முதல்வர், செயலர், தலைவர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அமர்ந்திருந்த அறையில் எங்களைச் சமமாக உட்காரவைத்து, “என்ன பிரச்சினை?” என்று கேட்டார் கல்லூரியின் தலைவர். ஏழைகள் அதிகம் படிக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்துவது சரியல்ல என்ற எங்கள் முறையீட்டைக் கேட்ட நிர்வாகம், எங்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்துக் கூடுதல் கட்டணத்தை வாபஸ் வாங்கியது.
கல்லூரிகளின் தயாளகுணம் என்னவாயிற்று?
இப்போது இப்படியான உரையாடல் சாத்தியமே இல்லை எனும் அளவுக்குக் கல்வி நிறுவனங்கள் வேறு பல ரூபங்கள் எடுத்திருக்கின்றன. கல்வி நிறுவனத்தின் ஒவ்வொரு நரம்பும் தனித்தனியே விவாதிக்கப்பட வேண்டியவை. மிக முக்கியமாக, பணவுறிஞ்சிகளாகிவிட்ட கல்வி நிறுவனங்களைக் கட்டுக்குள் கொண்டுவருவது காலத்தின் கட்டாயம். கல்வியைப் பரவலாக்க ஒருகாலத்தில் தயாள குணத்துடன் நிறுவப்பட்ட அரசுதவி பெறும் கல்லூரிகளும்கூட இன்று வசூல் வேட்டையில் இறங்கிவிட்டிருப்பது காலக் கொடுமை.
இன்றைய தேதியில் தமிழகத்தில் செமஸ்டருக்கு ஆயிரங்களுக்குக் குறைவாகக் கலைப் படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் இருக்கின்றனவா? சொல்லப்போனால், 2007-லிருந்து பிஏ, பிஎஸ்சி, பிகாம் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை மேலும் குறைத்தது மாநில அரசு. மருத்துவம், பொறியியல்போல அன்றி கலை, அறிவியல் படிப்புகள் ஏழை மாணவர்களை அதிகாரப்படுத்துவதற்கான முதல் படியாகக் கருதப்பட்டதன் அடிப்படையில் அந்த முடிவெடுக்கப்பட்டது.
அனைத்துக் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் தங்களது வலைத்தளத்தில் விண்ணப்பிக்கும் முறை, மாணவர்களுக்கான காலி இடங்கள் குறித்த தகவல், கல்விக் கட்டண விவரம், பேராசிரியர்கள் குறித்த தகவல், அரசு அங்கீகாரம் பெற்ற விவரம், மாணவர் நலனுக்காக முன்னெடுக்கப்படும் செயல்திட்டங்கள், கல்வியாண்டு நாள்காட்டி, மாணவர் குறைதீர்க்கும் மையத்தின் விவரம் ஆகியவற்றைக் கட்டாயமாக வெளியிட வேண்டும் என்ற அரசாணை 2015-ல் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், சில கல்லூரிகளுக்கு வலைதளமே இன்று வரை உருவாக்கப்படவில்லை. வலைத்தளத்தை முறையாகப் பராமரித்துவரும் கல்லூரிகள்கூட அரசு நிர்ணயித்திருக்கும் கல்விக் கட்டணத்தையோ, மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் ஒவ்வொரு துறையிலும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்கிற விவரத்தையோ வெளியிடுவதில்லை.
சட்டப்படிக் குற்றம்
கல்வி வணிகமயமாவதைத் தடுக்க நன்கொடைக் கட்டணம் வசூலிப்பது சட்டப்படிக் குற்றம் என்ற ஆணை தமிழகக் கல்வி நிறுவனச் சட்டம் 1992-ன் கீழ் பிறப்பிக்கப்பட்டது. இதை மீறுபவர்களுக்கு மூன்று முதல் ஏழாண்டுகள் சிறை தண்டனை விதிக்கலாம் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஊழலும் குறுக்குவழிகளும் மலிந்துகிடக்கும் துறைகளில் ஒன்றாகக் கல்வி நிறுவனமும் தன்னை இணைத்துக்கொண்டிருப்பது அவலமான உண்மை.
விண்ணப்பப் படிவத்திலிருந்தே வேட்டை தொடங்கிவிடுகிறது. இளநிலை படிப்புகளுக்கு ரூ.48 + ரூ.2, முதுநிலைக்கு ரூ.58 + ரூ.2 என்பதுதான் விண்ணப்பப் படிவத்துக்கும் பதிவுக்கும் அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணம். பட்டியலின மாணவர்களுக்குக் கட்டணமின்றி விண்ணப்பப் படிவம் விநியோகிக்கப்பட வேண்டும் என்பது விதி. அரசு, தனியார் என எல்லாக் கல்லூரிகளுக்கும் இது பொருந்தும். ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள் இந்த விதிகளை மீறி சுரண்டிக்கொண்டிருக்கின்றன. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய பல்கலைக் கழகங்களும் பல்கலைக்கழக மானியக் குழுவும் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது.
தொழில்நுட்பப் படிப்புகளில் நிகழும் கட்டணக் கொள்ளையைக் கண்டித்தே அவ்வப்போது எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. நாட்டின் பெருவாரியான மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள்தான் எனும் நிலையில் இங்கே நடைபெறும் வசூல் வேட்டைகள் இன்னும் பொது விவாதத்துக்கு வரவில்லை. இந்நிலையில், ‘உயர் கல்வி பாதுகாப்புக் குழு’ என்ற அமைப்பு தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிகழ்த்தப்பட்டுவரும் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும்படி கல்வி மானியக் குழுச் செயலர், தமிழக உயர் கல்வித் துறை செயலர், தமிழக உயர் கல்வி இயக்குநரகம் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி சார் அரசு அதிகாரிகளுக்கு சில கோரிக்கைகைளை முன்வைத்தது.
நம்பிக்கை அளிக்கும் தீர்ப்பு
அவற்றில் சில விஷயங்கள் கவனத்துக்குரியவை: 1) அரசு நிர்ணயித்திருக்கும் கல்விக் கட்டணத்தைவிடவும் கூடுதலாக வசூலிக்க முடியாதபடி ஒரு கண்காணிப்பு வழிமுறை நிறுவப்பட வேண்டும். 2) தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுப் பல்கலைக்கழகத்தின் கீழ் பொதுக் கலந்தாய்வின் மூலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் மாணவச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். 3) கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்துப் புகார் அளிக்கப் பொதுமக்களுக்குக் கட்டணமில்லா தொலைபேசி எண் அளிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு ஒன்றையும் தொடுத்தது ‘உயர் கல்வி பாதுகாப்புக் குழு’. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “அரசு கல்விக் கட்டணத்தை மீறும் கல்லூரிகள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற தீர்ப்பைக் கடந்த வாரம் வழங்கினார். இந்தத் தீர்ப்பு நீர்த்துப்போய்விடாமல் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT