Published : 27 May 2019 08:36 AM
Last Updated : 27 May 2019 08:36 AM
ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தபோது, பாஜகவை எதிர்த்து நின்ற மற்ற கட்சிகளின் தலைவர்கள் அதற்கு உடன்படவில்லை. முணுமுணுப்புகளும் எதிர்ப்புகளுமே எழுந்தன. பரிகாசங்களுக்கும் குறைவில்லை. இருந்தாலும், ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து ஸ்டாலின் கொஞ்சமும் பின்வாங்கவில்லை. தேர்தல் முடிவிலோ, ராகுலை ஏற்காமல் தேர்தலைச் சந்தித்த எதிர்க்கட்சிகள் இந்தியா முழுவதுமே படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றன. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. பாஜக மட்டுமே 303 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. ஆனாலும், தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஒரு தொகுதி நீங்கலாக அனைத்து இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது.
பலம் பொருந்திய ஆளுங்கட்சியை எதிர்க்கும்போது அதற்குத் தலைமையேற்பது யார் என்பதில் நீடித்த ஊசலாட்டமே இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளின் படுதோல்விக்கு முக்கியக் காரணம். எல்லோரும் குறைந்தபட்ச உடன்பாட்டுடன் இணைந்து நின்று தேர்தலைச் சந்தித்திருந்தால், வெற்றிபெற முடியாமல் போயிருந்தாலும் இந்த அளவுக்கு மோசமான படுதோல்வியைச் சந்தித்திருக்க மாட்டார்கள். ‘தந்திரங்கள் இல்லாத வியூகங்கள் வெற்றியைத் தாமதிக்கும் வழி, வியூகங்கள் இல்லாத தந்திரங்களோ தோல்விக்கு முந்தைய வெறும் வாய்க்கூச்சல்கள்தான்’ என்கிற சீன போர்க்கலை சூத்திரங்கள் ஜனநாயகத் தேர்தலுக்கும் பொருத்தமானதுதான். பாஜகவை எதிர்த்து நின்ற காங்கிரஸும் சரி, மற்ற மாநிலக் கட்சிகளும் சரி, தந்திரங்கள் இல்லாத வியூகங்களை வகுத்தார்கள் அல்லது வியூகங்கள் இல்லாத தந்திரோபாயங்களை மட்டுமே நம்பினார்கள்.
ஸ்டாலினுக்கு மட்டும் இந்த வெற்றி எப்படிக் கிட்டியது? அரசியலில் எதிர்முனையில் இருப்பது யார், தோழமைச் சக்திகள் யார் யார் என்பதில் தெளிவாக இருந்தார் ஸ்டாலின். மாநிலத்தில் அதிமுகவையும் மத்தியில் பாஜகவையும் எதிர்முனையில் நிறுத்தி, பாஜகவை எதிர்க்கும் அத்தனை கட்சிகளையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது அவரது வியூகம். அக்கூட்டணிக்குத் தலைமையேற்று வழிநடத்துவதற்குரிய கட்டமைப்பை ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்தார் ஸ்டாலின். எதிரியை அடையாளம் காண்பதும் படைகளை ஒருங்கிணைப்பதும்தானே போர்க்கலையின் முதல் அத்தியாயம். அப்புறம்தானே படையெடுப்பு, தாக்குதல் எல்லாமும்.
நமக்கு நாமே
2016 சட்டமன்றத் தேர்தலின்போது 89 தொகுதிகளில் மட்டுமே திமுகவால் வெற்றிபெற முடிந்தது. ஆனால், இன்னொருபுறம் தனது கட்சியைப் பலப்படுத்துவதற்கான அருமையான வாய்ப்பாக அத்தேர்தலைப் பயன்படுத்திக்கொண்டார். 2015-ல் மாநிலம் முழுவதும் சுற்றிச் சுழன்று அவர் மேற்கொண்ட ‘நமக்கு நாமே’ பயணம், கட்சியினரைத் தாண்டி பொதுமக்களிடம் அவருக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அரசியல்வாதிகளின் சீருடையாகவே மாறிவிட்ட வெள்ளைச்சட்டை, வேட்டியைத் தவிர்த்துவிட்டு, ஓர் இளைஞனுக்குரிய உற்சாகத்தோடு அவர் அந்தப் பயணங்களில் பங்கெடுத்துக்கொண்டார். நடைப்பயணம், சைக்கிள், ஆட்டோ, டிராக்டர் என்று எல்லா வாகனங்களிலும் ஏறி இறங்கினார். பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் வரைக்கும் கைகுலுக்கிப் பேசினார்.
பயணத்தின்போது தான் சந்தித்த ஒவ்வொருவரும் கூறிய விவரங்களை, அளித்த மனுக்களை, விடுத்த வேண்டுகோள்களை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டார். தங்களது வேண்டுகோள்கள் செவிமடுக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையே மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. விவசாயிகள், தொழில்முனைவோர், கல்லூரி மாணவர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் சந்தித்து உரையாடினார். அவர்களிடமிருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களைப் பெற்ற ஸ்டாலின், திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் அவற்றுக்கு இடம்கொடுத்திருக்கிறார். இன்னொருபக்கம், குடும்பத்துக்குள் சகோதரர் மு.க.அழகிரிக்கும் அவருக்கும் இடையிலான வருத்தங்கள் கட்சிக்குள் எதிரொலிக்காமல் அந்தத் தேர்தலிலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். சிவகங்கை திருக்கோஷ்டியூரில் பெருமாள் கோயிலுக்கு அவர் சென்றது, திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சியாகச் சித்தரிக்கும் பிரச்சாரங்களுக்கு ஒரு மறுப்பாகவும் அமைந்தது.
காவிரி நெடும் பயணம்
‘முடியட்டும், விடியட்டும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ‘நமக்கு நாமே’ பயணத்தை நடத்திமுடித்தார் ஸ்டாலின். அதிமுக ஆட்சி முடிவுக்கு வரவில்லை, ஆனால் திமுகவுக்கு அது விடிவுகாலமாக அமைந்தது. தொடர்ந்து மக்களைச் சந்திப்பதை ஒரு வழக்கமாகவே மாற்றிக்கொண்டார் ஸ்டாலின். கடந்த ஆண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அவர் காவிரிப் படுகையில் மேற்கொண்ட உரிமை மீட்புப் பயணம் தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிகவும் வித்தியாசமானது. நெடுஞ்சாலைகளைத் தவிர்த்துவிட்டு, முழுவதும் கிராமப்புற சாலைகளின் வழியாகவே காவிரிப் படுகையை வலம்வந்தார் ஸ்டாலின். திருச்சி முக்கொம்புவில் தொடங்கிய அவரது பயணம் ஆளுநர் மாளிகையில் முடிவடைந்தது.
காவிரி உரிமை மீட்புப் பயணத்தை திமுகவின் பயணமாக அல்லாமல் தோழமைக் கட்சிகளுடன் இணைந்தே ஸ்டாலின் நடத்திமுடித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் இந்தப் பேரணியில் ஆர்வத்தோடு பங்கேற்றார்கள். இந்தக் கூட்டணி வெறும் தேர்தலுக்கான கூட்டணி அல்ல, கருத்தியலின் அடிப்படையிலானது என்பதையும் அவர் மக்களுக்கு உணர்த்தினார். இத்தனைக்கும் மக்கள் நலக் கூட்டணியில், கடந்த தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்தவர் ஸ்டாலின். ஆனாலும், அவர்கள் மீது அவர் எந்தக் கசப்புணர்ச்சியையும் காட்டவில்லை என்பதே இன்று திமுக தலைமையிலான கூட்டணிக்கு வலிமை சேர்த்திருக்கிறது.
மக்களோடு மக்களாக
தற்போது கிராம சபைக் கூட்டங்களைக் கையிலெடுத்திருக்கிறார் ஸ்டாலின். தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகங்கள் முடங்கிக்கிடக்கும் நிலையில், ஸ்டாலின் அதையே தனது அரசியல் ஆயுதமாக மாற்றிக்கொண்டிருக்கிறார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்களுக்கு இடையிலும் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தியபடியிருந்தார். மக்களிடம் குறைகளைக் கேட்டார். அவற்றை நிவர்த்திக்க வாய்ப்பில்லை என்றாலும் நாங்கள் பொறுப்பேற்கும்போது கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று மக்களுக்கு உறுதிமொழிகளை அளித்துவருகிறார். ஆளுங்கட்சிக்கு எதிரான, வலுவான பிரச்சாரங்களாக கிராம சபைக் கூட்டங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன.
ஸ்டாலின் பெற்றிருக்கும் வெற்றி என்பது வெறும் கூட்டணிக் கணக்குகளால் கிடைத்த வெற்றியல்ல. தான் சிறுகச் சிறுகச் சேகரித்த வெற்றியைத் தனது தோழமைக் கட்சிகளோடும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதற்குத் தயாராக இல்லாத மற்ற மாநிலக் கட்சிகள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. ஸ்டாலின், தன்னைத் தனிப்பெரும் அரசியல் ஆளுமையாக நிறுவிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருக்கும் அபரிமிதமான செல்வாக்குக்கு ஒரே காரணம், அவர் மக்களைச் சந்திக்கிறார், அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிறார் என்பது ஒன்றேதான். மக்களாட்சியில் மக்களின் எதிர்பார்ப்பும் அது மட்டும்தான்.
ஆந்திர பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டி மேற்கொண்ட பாத யாத்திரை, அவரது வெற்றியில் முக்கியப் பங்காற்றியிருப்பதை இந்தியா முழுவதுமே ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுவரும் தொடர் பயணங்களும் அதற்கு இணையானது. ஜெகனின் யாத்திரை, மக்களவைத் தேர்தலில் மட்டுமின்றி மாநிலத்திலும் அவருக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலில் தன்னை நிரூபித்திருக்கிற ஸ்டாலின், மக்களவையிலும் திமுகவின் செயல்பாட்டை நிரூபிக்கும்பட்சத்தில், தமிழ்நாடு சட்டமன்றம் அவருக்காகக் காத்திருக்கும்; அதற்கான போதிய அவகாசம் நிறையவே இருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT