Published : 28 May 2019 07:14 AM
Last Updated : 28 May 2019 07:14 AM
தேர்தலின் தோல்விகள் ஒவ்வொரு கட்சியையும் ஒவ்வொரு தலைவரையும் ஒவ்வொரு திசைக்குத் தூக்கி அடித்திருக்கிறது; தேசிய அளவில் பாஜகவின் எழுச்சி காங்கிரஸின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது என்றால், தமிழக அளவில் திமுகவின் எழுச்சி பழனிசாமியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா என்று பிம்ப அரசியலாலேயே கட்டமைக்கப்பட்ட கட்சி அதிமுக. எந்த பிம்பங்களுமே இல்லாமல் ஒரு கட்சித் தொண்டராக அடித்தளத்திலிருந்து தலைவராக உருவெடுத்தவர் பழனிசாமி. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவுக்குள் நடந்த அடுத்தடுத்த திருப்பங்களின் விளைவாக முதல்வர் பதவியில் அமரும் வரை அப்படி ஒரு வாய்ப்பு அவரை வந்தடையும் என்று பழனிசாமியே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால், அரசியலின் விசேஷமே அதுதான். ஜெயலலிதாவுக்குப் பின் முதல்வர் பதவி நோக்கி நகர முற்பட்ட சசிகலா குடும்பத்தின் மீதான வெறுப்பே முதல்வர் பதவியேற்ற கையோடு அவர்களிடமிருந்து விலகிய பழனிசாமிக்கான மக்களின் ஆதரவாக உருமாற்றம் கண்டது.
பதவியேற்ற வேகத்தில் மத்தியில் ஆளும் பாஜகவின் துணையோடு கட்சியைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பழனிசாமி. அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற காலத்தில் கட்சியைப் பிளந்திருந்த பன்னீர்செல்வத்தைத் தன்னுடைய தலைமைக்குக் கீழ் வெற்றிகரமாகக் கொண்டுவந்தார். பன்னீர்செல்வத்தோடு ஒப்பிட கட்சியினரோடும், மக்களோடும் ஒன்றுகலப்பதில் பழனிசாமி பெரும் இடைவெளியைப் பராமரித்தார். எதிர்க்கட்சிகளையும், மக்கள் குழுக்களையும், போராட்டக்காரர்களையும், போராட்டங்களையும் அணுகுவதில் பழனிசாமி காட்டிய கடுமை எல்லாத் தரப்பினரையுமே திடுக்கிடவைத்தது – குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.
ஆனால், உறுதியான தலைவர் – வழிபாட்டு கலாச்சாரத்துக்குப் பழகிப்போன அதிமுகவினருக்கு இவற்றால் எல்லாம் பெரிய பாதிப்புக்குள்ளாகிவிடவில்லை; சொல்லப்போனால், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தோடு ஒப்பிட பழனிசாமியை அணுகுவது தங்களுக்கு எளிதாக இருக்கிறது என்று சொல்லி ஆறுதல் அடைந்தனர். ஆனால், கட்சியினரிடம் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இருந்த அதிகாரத்துக்கான ஆற்றலை அவர்கள் மக்களிடமிருந்து பெற்றனர்; அந்த இடத்தில் இப்போது பழனிசாமி சறுக்கி விழுந்திருக்கிறார்.
பழி தீர்த்த மாநில உரிமைகள்
ஜெயலலிதா மறையும் சூழலில் விட்டுச்சென்ற அதிமுக மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்கிற செல்வாக்கைப் பெறும் அளவுக்குப் பெருவெற்றியை அதற்கு அளித்திருந்தனர் தமிழ்நாட்டு மக்கள். காரணம் என்ன? தமிழ்நாட்டின் உரிமைகளில் அவர் காட்டிய உறுதிப்பாடும் அதற்கான மத்திய அரசுடன் அவர் தொடர்ந்து நடத்திவந்த போர்களும். தன்னுடைய கடைசி ஆண்டில் மாநிலங்களின் இடைமன்றக் கூட்டத்தில் வாசிப்பதற்காக ஜெயலலிதா அனுப்பி வைத்த உரையையோ, அதே ஆண்டில் அவர் கடைசியாக ஆற்றிய சுதந்திர தின உரையையோ வாசித்தவர்கள் மாநில சுயாட்சியில் அவர் காட்டிய அக்கறையைப் புரிந்துகொள்ள முடியும். மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரத்தை முடக்கி அவற்றை வெறும் நிர்வாக அலகுகள் ஆக்கிவிடும் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு எதிராக “உண்மையான சுதந்திரம் என்பது பொருளாதாரச் சுதந்திரத்தில் இருக்கிறது” என்று கர்ஜித்தார் ஜெயலலிதா. தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிரான ஜெயலலிதாவின் எதிர்ப்பும் மாநிலங்களின் உரிமையில் இது மிகப் பெரிய தலையீடு என்பதும் கல்வி அடிப்படையில் மாநிலங்களின் உரிமை என்பதுமே ஆகும்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அவரது பெயரில் ஆட்சி நடப்பதாக மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லும் பழனிசாமியும் அவரது சகாக்களும் ஜெயலலிதாவின் மாநில உரிமைக் குரலைத் தொடராமல் போனது மட்டுமல்ல, அவருக்கு எதிர்திசையிலேயே பயணிக்க ஆரம்பித்தார்கள். பழனிசாமியின் தலைமை மீது மக்களிடம் அவநம்பிக்கை ஏற்பட்டதற்கு இதுவே அடிப்படையான காரணம். மத்திய அரசின் அனுமதியோடும் அருளாசியோடும்தான் எந்தக் காரியத்தையும் தொடங்கி நடத்துகிறார் என்ற விமர்சனமே பழனிசாமியின் தோல்வியை எழுதியது.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வோடு கலந்த எந்தப் பிரச்சினையையும் உரிய வகையில் அதிமுகவினர் டெல்லிக்கு எடுத்துச்செல்லவில்லை. தமிழக அரசு இந்த விஷயத்தில் மிகுந்த பொறுப்பற்றதனத்துடன் செயல்பட்டது; மக்களவையில் 37 உறுப்பினர்கள் இருந்தும் தமிழ்நாட்டின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை. அப்படி ஒலித்திருந்தால், பாஜகவேகூட பிரச்சினைகளின் தீவிரத்தைக் கொஞ்சம் புரிந்துகொண்டிருக்கலாம்; அப்படி புரிந்துகொண்டிருந்தால் அதிமுக மட்டுமல்லாது; பாஜகவும்கூட இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் கரை சேர்ந்திருக்கலாம்.
தன் நலன் முன்னே… கட்சி நலன் பின்னே
ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே பாஜகவுடனான கூட்டணிக்கு உடன்பட்டார் பழனிசாமி. பாஜக நிர்ப்பந்தத்துக்கு ஏற்பவே ஏராளமான தொகுதிகளை அவர் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கும் நிலை ஏற்பட்டதாகவும் சொன்னார்கள் அதிமுகவினர். ஆனால், மாநிலத்தில் அதிமுக மீதான ஆட்சி மீதான அதிருப்தியைக் காட்டிலும் மத்திய பாஜக ஆட்சி மீதான அதிருப்தியே கூடுதல் விலையைப் பழனிசாமியிடம் கேட்டிருப்பதையும் அவர் தேர்ந்தெடுத்த கூட்டணிக் கட்சிகள் எந்த வகையிலும் அதிமுகவைத் தோல்வியிலிருந்து தவிர்க்க உதவவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மேலும், தேர்தல் கூட்டணிக்குள்ளேயே இரு ஆட்டங்களை பழனிசாமி ஆடியிருப்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
மக்களவைத் தொகுதிகளைப் பகிர்ந்துகொள்வதில் கூட்டணிக் கட்சிகளிடம் தாராளம் காட்டினார் பழனிசாமி. ஆனால், கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் அவர்களின் வெற்றிக்காக அவர் தீவிரக் கவனம் செலுத்தவில்லை என்பதும் இப்போது தெரியவருகிறது. “திருச்சியில் என்னுடைய அபரிதமிதமான வெற்றிக்குக் காரணம் அதிமுகவினரின் வாக்குகள்தான்” என்று காங்கிரஸ் வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் நன்றி சொல்லும் அளவுக்கு இது அப்பட்டமாகவே வெளிப்பட்டிருக்கிறது. அதிமுகவின் கோட்டை என்று கருதப்படும் திண்டுக்கல் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதும், அங்கு எல்லோராலும் கணிக்கப்பட்டது மாதிரியே மிக மோசமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை அது தழுவியிருப்பதும் கூடுதல் உதாரணம்.
எல்லாவற்றிலும் மோசம், தமிழ்நாட்டின் எல்லாத் தரப்பு மக்களுக்குமான பிரதிநிதிகளாகத் தங்களையும் கட்சியையும் வைத்துக்கொண்டிருந்த திராவிடக் கட்சிகளின் பாரம்பரியத்துக்கு மாற்றான ஒரு அரசியலை பழனிசாமி முயன்றது; ஒரு குறிப்பிட்ட சமூகம், குறிப்பிட்ட பிராந்தியம் சார் அரசியலை பழனிசாமி நம்பியதும் முன்னெடுத்ததும் அதிமுக உள்வட்டங்களிலேயே அதிர்ச்சியோடும் கலக்கத்தோடும் பார்க்கப்பட்டது; வெளிப்படையாகவே மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்ட இந்த அரசியலுக்கு அதே சமூக, பிராந்திய மக்களும் சேர்ந்தே இன்று அடி கொடுத்திருக்கிறார்கள்; அந்த வகையில் தமிழ்நாட்டின் பெருமை காக்கப்பட காரணமாக இருந்திருக்கிறார்கள்.
இன்னொரு வாய்ப்பு
கோடிக்கும் மேற்பட்டோரின் நம்பிக்கையை வெகுசீக்கிரத்தில் இழந்தாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் அளித்திருக்கும் ஆறுதல் வெற்றியால் இன்னும்கூட இன்னொரு வாய்ப்பை பழனிசாமிக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். மாநிலத்தில் அதிமுக ஆட்சி தொடர்வதில் எந்தச் சிக்கலுமில்லை. முக்கியமாக, கட்சிக்கு வெளியிலிருந்து அவரது தலைமைக்கு மிகப் பெரிய நெருக்கடியை உண்டாக்கிக் கொண்டிருந்த தினகரனின் வீழ்ச்சி அதிமுகவுக்கு அவர் போட்டியல்ல, அவரால் இப்போதைக்கு பழனிசாமிக்கு எந்தச் சவாலும் கிடையாது என்று காட்டியிருக்கிறது இந்தத் தேர்தல்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டாண்டுகள் இருக்கின்றன. இந்த இடைப்பட்ட கால அவகாசத்துக்குள் பழனிசாமி தன்னைச் சரிசெய்துகொள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. தமிழ்நாட்டில் தனக்கென்று ஒரு களத்தை உருவாக்கிட முனையும் பாஜகவிடம் இந்தத் தேர்தல் சமயத்தில் பழனிசாமி வாக்காளர்களிடம் சொன்னபடி தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளை விளக்கி, வலியுறுத்தலாம்; பாஜகவுக்குத் தமிழ்நாட்டினரின் உரிமைகளைப் புரியவைக்க முயற்சிக்கலாம்; மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்க முயற்சிக்கலாம்.
மக்களுக்கு பழனிசாமி மீது ஏற்பட்டிருக்கும் பெரும் அதிருப்தி, சொந்த நலனுக்காக அவர் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கிறார் என்பதுதான். அதைப் பொய்யாக்கி தன்னை நிறுவிக்கொள்ள காலம் மேலும் ஒரு வாய்ப்பை அவருக்கு வழங்கியிருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகள் தொடரும் ஆட்சியில் தன்னை எப்படி மறுபரிசீலனை செய்துகொள்ளப்போகிறார் என்பதிலேயே அதிமுகவின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT