Published : 29 May 2019 08:54 AM
Last Updated : 29 May 2019 08:54 AM
ஒரு இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி, தினகரனின் மீது திடீரென்று ஒரு எதிர்பார்ப்பையும் தொடர் வெளிச்சத்தையும் உருவாக்கியிருந்தது. அதை, இந்த மக்களவைத் தேர்தல் இல்லாமலாக்கிவிட்டது. அதிமுகவின் வாக்குவங்கியைச் சிதறடித்து சரிபாதி தொகுதிகளிலாவது அதன் தோல்விக்குக் காரணமாக இருப்பார் என்று கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பேசினார்கள். ‘சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றிரண்டில் வெற்றி பெறுவார், தேனி மக்களவைத் தொகுதியில் தங்க.தமிழ்ச்செல்வனுக்கு வாய்ப்பு உண்டு, இல்லையென்றால் அதிமுக வாக்குகள் பிரிந்து, காங்கிரஸ் வெல்ல வாய்ப்பிருக்கிறது’ என்றெல்லாம் கணிக்கப்பட்டது. கடைசியில், எந்தத் தொகுதியிலும் வெல்லவில்லை என்பதோடு அதிமுகவின் வாக்குகளையும் தினகரனால் பிரிக்க முடியவில்லை.
கட்சியில் பழனிசாமியின் பிடி வலுவாக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றிருப்பதன் மூலம், தனது ஆட்சியைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார் பழனிசாமி. அதிமுகவுக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இழுபறியாக இருந்தபோதே, தினகரனின் பக்கம் வருவதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தயங்கினார்கள். இப்போது சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொண்டதோடு மத்தியில் ஆளும் பாஜகவோடும் நெருக்கம் காட்டிவருகிறது அதிமுக. இப்படியொரு நிலையில், ‘ஸ்லீப்பர் செல்கள்’ என்று தினகரன் சொல்லிக்கொண்டிருக்கலாமே ஒழிய யாரும் அவர் பக்கம் திரும்பிப்பார்க்க மாட்டார்கள். அவரது சிபாரிசில், சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட வாய்ப்பு கிடைத்தவர்கள், அவரை ஆதரிப்பார்கள் என்பதுதான் தினகரனின் ஒரே நம்பிக்கை. அதுவும் பொய்த்துப்போய்விட்டது.
தினகரன் அடுத்து என்ன ஆவார்?
தொண்டர்களில் பெரும்பான்மையினர் என்னோடுதான் இருக்கிறார்கள் என்று பேசினார் தினகரன். அவர் கூறியது உண்மையென்றால் அதிமுகவின் வாக்குவங்கியில் சரிபாதியாவது அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவரால் மக்களவைத் தேர்தலில் சுமார் ஐந்து சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்திருக்கிறது. தென்சென்னை உள்பட பல தொகுதிகளில் அமமுகவை முந்திக்கொண்டு மக்கள் நீதி மய்யம் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாமிடத்தில் இருக்கிறோம் என்பதோடு தினகரன் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
அதிமுகவுக்குள்ளேயே ஒரு எதிர்ப்பு அணியாக இயங்குவதற்குத்தான் ஆரம்பம் முதலே தினகரன் விரும்பினார். அதிமுக ஆட்சி முடிந்த பிறகு, தலைமைப் பதவியின் நெருக்கடிகளைச் சுமக்க யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். எதிர்ப்பே இல்லாமல் கட்சியைக் கைப்பற்றலாம் என்ற எண்ணத்தில் அவர் இருந்திருக்கலாம். ஆனால், அதற்கு பழனிசாமி - பன்னீர்செல்வம் வாய்ப்பளிக்கவில்லை. தினகரனைக் கட்சியைவிட்டு வெற்றிகரமாக நகர்த்திவிட்டார்கள்.
அப்போதும்கூட கட்சித் தலைவராகும் வாய்ப்பு தனக்கு இன்னும் இருக்கிறது என்றே அவர் நம்பினார். அதனால்தான், அமமுகவைத் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யாமல் தவிர்த்துவந்தார். கடைசியில், ஒரே சின்னத்தில் போட்டியிடுவதற்காகவே அவர் பதிவுசெய்துகொண்டார். ஒரே சின்னம் கிடைத்தது. ஆனால், வெற்றி வாய்ப்பை அவரால் உருவாக்க முடியவில்லை. அதிமுகவின் வெற்றி வாய்ப்பையும் பறிக்க முடியவில்லை. மக்களவைத் தேர்தலில் அதிமுக அடைந்திருக்கும் தோல்விக்குத் தமிழகத்தில் வீசிய மோடி எதிர்ப்பலையே முக்கியக் காரணம். தினகரனுக்கெல்லாம் அதில் பங்கே இல்லை. வேண்டுமானால், மோடி எதிர்ப்பலையை அதிமுகவோடு அவரும் கொஞ்சம் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம்.
விளைவாக, ‘அடுத்து தினகரன் என்ன செய்வார்?’ என்றிருந்த கேள்வியை இந்தத் தேர்தல் முடிவுகள், ‘இனி வருங்காலத்தில் தினகரன் என்ன ஆவார்?’ என்பதாக மாற்றிவிட்டிருக்கிறது. ஒருவேளை நடந்து முடிந்த தேர்தலில் அவர் தனது பலத்தைக் காட்டியிருந்தால், எதிர்காலத்தில் கட்சியைத் தன்னை நோக்கி நகரச்செய்திருக்கலாம். இப்போது எல்லாம் மாறிவிட்டது.
தேர்தல் சொல்லியிருக்கும் செய்தி
இந்தத் தேர்தல் தினகரனுக்கும் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லியிருக்கிறது. ‘மக்கள் ஒருபோதும் சசிகலா குடும்பத்தைச் சகித்துக்கொள்ள மாட்டார்கள்’ என்பதே அது. தினகரன் பேச்சு மீது ஒரு கவர்ச்சி இருப்பது உண்மைதான். ஆனால், சசிகலாவோ அவருடைய ஏனைய குடும்ப உறுப்பினர்களோ என்றைக்கும் அதை முதலீடாக மாற்றிக்கொள்ள முடியாது.
அதிமுக கடந்து வந்த பாதையில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரிந்துபோவதும் மீண்டும் வந்து இணைந்துகொள்வதும் வழக்கமான நிகழ்வுகள்தான். எம்ஜிஆர் தலைவராக இருந்த காலத்திலேயே, எஸ்.டி.சோமசுந்தரம், நெடுஞ்செழியன் தொடங்கி செம்மலை,
குழ.செல்லையா வரை கட்சியிலிருந்து விலகி, பிறகு மீண்டும் அதிமுகவில் இணைந்தவர்களைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். உள்ளுர் அளவில் நல்ல செல்வாக்கு இருக்கும் தலைவர்கள் வேறு கட்சிகளை நோக்கி போயிருக்கலாம், இல்லை சுயேச்சையாகவே தொடர்ந்திருக்கலாம். ஆனால், அவர்கள் ஒருபோதும் அதைச் செய்யவில்லை. அதிமுக வழியாகக் கிடைத்த அறிமுகமும் ஆதரவுமே அவர்களது செல்வாக்கு உயர ஒரே காரணம் என்று நம்பி மீண்டும் சொந்தக் கட்சியில் இணையவே முடிவெடுத்தார்கள்.
அவர்களையெல்லாம் எந்தத் தயக்கமும் இல்லாமலும் கட்சித் தலைமை சேர்த்துக்கொண்டது. அதேசமயம், அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது கட்சித் தலைவரின் நோக்கமாக இருக்கிறபோது உள்ளுர் அளவில் தங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு இருந்தது. அதை நிரூபித்தவர்கள் தமது பதவிகளைத் தக்கவைத்துக்கொண்டார்கள்.
கேள்விக்குறியாகியிருக்கும் எதிர்காலம்
ஆகையால், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்துகொள்வது அக்கட்சிக்குப் புதிதல்ல. இதையே பழனிசாமியும் பன்னீர்செல்வமும் மந்தையிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு விடுத்திருக்கும் அழைப்பு நினைவூட்டுகிறது. ஆனால், இந்த வரலாறு தினகரனுக்குப் பொருந்தாது. ஏனென்றால், அவர் இரண்டாம் நிலைப் பதவிகளை அல்ல; தலைமைப் பதவியைக் குறிவைக்கிறார். ஒருவேளை இப்போது, ‘பதவியே வேண்டாம்’ என்று சொல்லி உள்ளே நுழைந்தாலும் கட்சிக்குள் வந்த பிறகு மொத்தக் கட்சியையும் கபளீகரித்துவிடுவார் என்பதில் யாருக்குமே சந்தேகம் இல்லை. மேலும், இந்த ஒரு விஷயத்தில் பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவருமே சசிகலா குடும்பத்தைப் பொது எதிரியாகக் கருதுவதால் எதிர்காலத் தலைமைப் பிரச்சினை அந்த இருவருக்குள்தான் சுற்றுமே தவிர, தினகரனை நோக்கித் திரும்புவதற்கான சாத்தியங்கள் இப்போதைக்குத் தெரியவில்லை.
ஆக, இந்த மக்களவைத் தேர்தல் வெறும் தோல்விகளை மட்டும் தினகரனுக்குப் பரிசளிக்கவில்லை. அவருடைய எதிர்கால அரசியலின் மீதே கடும் இருட்டைப் போர்த்தியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT